2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பூச்சிக்கூடு: 'இல்லை'களால் நிரம்பிய வாழ்க்கை!!

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 14 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

•    மப்றூக்

பூச்சிக்கூடு என்பது அந்தக் கிராமத்தின் பெயர். 'உங்கள் ஊருக்கு இந்த பெயர் எப்படி வந்தது?' என்று கேட்டால், ஆளுக்கொரு கதை சொல்கிறார்கள் அங்குள்ளவர்கள்! அது ஓர் ஒதுக்குப் புறமான கிராமம். சுற்றிவரவும் நெற் காணிகள். அவைகளுக்கு அப்பால் காடுகள். பூச்சிகளின் கூடுகளில் கூட - அவைகளுக்குத் தேவையான வசதிகளெல்லாம் இருக்கக் கூடும். ஆனால், பூச்சிக்கூட்டில் வசிப்போரின் வாழ்வில் எதுவுமேயில்லை!! ஒரே வரியில் சொன்னால், பாவப்பட்ட வாழ்க்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரைதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இந்தக் கிராமம் பழமையானது. 1950களில் இங்கு - தான் வாழ்ந்ததாக பூச்சிக்கூட்டின் மூத்த பிரஜையொருவர் கூறுகின்றார். இது - நூறுவீதம் தமிழ் மக்களைக் கொண்டதொரு கிராமமாகும்.

பூச்சிக்கூடு மக்களின் கடந்த கால வாழ்வு அலைச்சலானது! யுத்தம் மற்றும் இன முரண்பாடுகள் நிலவிய காலங்களில் இங்கிருந்த மக்கள் - தங்கள் கிராமத்திலிருந்து பல தடவைகள் இடம்பெயர்ந்துள்ளார்கள். இறுதியாக, இக் கிராம மக்கள் தமது மண்ணை விட்டும் 1990களில் வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது.

பூச்சிக்கூடு கிராமத்தில் இப்போது சுமார் 75 குடும்பங்களே உள்ளன. முன்னர் 250 குடும்பங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால், மீதிக் குடும்பங்களுக்கு என்ன ஆனது? அவர்கள் எங்கே போனார்கள்? என்கிற நமது கேள்விகளுக்கு விடை சொன்னார் - பூச்சிக்கூடு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மனோகரன்!

'இனப் பிரச்சினை தீவிரமடைந்திருந்த 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பூச்சிக்கூடு வாசிகள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறியிருந்தோம். எமது கிராமத்தைச் சுற்றியிருந்த பிரதேச மக்களும் அப்போது இடம்பெயர்ந்தனர். பிரச்சினைகள் தீர்ந்த பின்னர் - எல்லா ஊரவர்களும் அவர்களின் சொந்த இடங்களில் அரசாங்கத்தால் மீள் குடியமர்த்தப்பட்டார்கள். ஆனால், பூச்சிக்கூடு மற்றும் அதன் அருகாமையிலுள்ள 16ஆம் கொலனி மக்கள் மட்டும் கடைசிவரை மீள்குடியேற்றப்படவேயில்லை.

நாங்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இன்று, நாளை நாங்கள் மீளவும் குடியேற்றப்படுவோம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால், எதுவுமே ஆகவில்லை. கடைசியில், நாங்களே சுயமாக மீள்குடியேறுவதென முடிவெடுத்து இங்கு வந்தோம். ஆனாலும், எல்லாக் குடும்பங்களும் குடியேறவில்லை. முன்பிருந்த குடும்பங்களில் மூன்றிலொரு பங்கினரே இப்போது இங்கு உள்ளோம்' என்றார் மனோகரன்!

பூச்சிக்கூட்டில் - எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. சுத்தமான குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லை, வசதியாகப் பயணம் செய்வதற்குரிய பாதைகள் இல்லை. இப்படி... இந்தக் கிராம மக்களின் வாழ்வு முழுக்க 'இல்லை'களே நிரம்பியுள்ளன. 1950களில் இந்தக் கிராமம் எப்படியிருந்ததோ அப்படியேதான் இன்னுமிருப்பதாக – ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட பூச்சிக்கூட்டின் மூத்த பிரஜை கவலையோடு கூறினார்.

'இரவில் மின்சாரமில்லை. இருள் மயம். சுற்றியுள்ள காடுகளிலிருந்து வரும் யானைகளின் தொல்லை ஒருபுறம். பாம்பு, பூச்சிகளின் அச்சுறுத்தல் இன்னொரு புறம்! சிலவேளை, இவைகளால் ஆகக் கூடாதவை ஏதும் ஆகிவிட்டால்... ஆபத்துக்குள்ளானவருக்கு சிசிச்சை வழங்க - ஓர் அரசாங்க மருந்தகம் கூட இங்கில்லை. வைத்தியசாலைக்குச் செல்வதென்றால் ஒன்றில் கல்முனைக்குச் செல்ல வேண்டும். அல்லது களுவாஞ்சிக்குடிக்குச் செல்ல வேண்டும். இரண்டும் 20 கிலோமீற்றர்களுக்கு அப்பால்தான் உள்ளன! அநேகமாக, வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்பு உயிர் போய்ச் சேர்ந்து விடும். இதுதான் எங்கள் வாழ்க்கை' என்கிறார் பார்வதியம்மா. இவர் பூச்சிக்கூட்டின் இன்னொரு மூத்த பிரஜை!

மீள்குறியேறிய மக்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் நிறையவே உதவிகள் செய்து வருகின்றன. உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா - என்று, கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மனோகரனிடம் கேட்டோம். அவர் பதிலளித்தார்.

'இங்குதான் ஐயா பிரச்சினையுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களிடம் சென்று எமது கிராமத்துக்கு ஏவாவது உதவிகள் செய்யுமாறு கேட்டால், அவர்களின் உதவித் திட்டத்துக்கமைய குறிப்பிட்டதொரு தொகைக்கு மேல் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குத்தான் அவர்களால் உதவி புரிய முடியும் என்கிறார்கள். பூச்சிக்கூடுக் கிராமத்தின் தற்போதைய சனத்தொகைக்கு அவர்களின் திட்டத்துக்கமைவாக எதுவும் செய்ய முடியாதாம்! அதாவது வீடு, பாதை போன்றவற்றினை அவர்களால் நிர்மாணித்துத் தர முடியாது என்கின்றனர். எனவே, சமையல் உபகரணம், நுளம்புவலை போன்ற சிறிய பொருள் உதவிகள் மட்டுமே அவர்களிடமிருந்து எமக்குக் கிடைத்தன' என்றார்.

இதனால், மற்றவர்களை நம்பிப் பயனில்லை எனும் முடிவுக்கு வந்த - இக்கிராம மக்கள், தமக்கான தேவைகளைத் தாமே பூர்த்தி செய்வதெனத் தீர்மானித்தனர்.

உதாரணமாக, பூச்சிக்கூட்டிலிருந்த கோயில் யுத்த காலத்தின்போது முற்றாக அழிவடைந்து போனது. எனவே, தற்போது ஒரு தற்காலிக இடத்தில் தகரக் கூரையொன்றை நிர்மாணித்து அதன்கீழ் - கோயிலை அமைத்து தமது மதக் கடமைகளில் மக்கள் ஈடுபட்டுவருகின்றார்கள். அதேவேளை, புதியதொரு கோயிலை நிர்மாணிப்பதற்காக – பூச்சிக்கூடு மக்கள் தமக்கிடையே நிதியினைச் சேர்த்தனர். அந்தத் தொகை – கோயிலை முழுமையாக நிர்மாணிக்கப் போதவில்லை. ஆயினும் முடிந்தவரை புதிய கோயிலைக் கட்டியெழுப்பிருக்கின்றார்கள்.

இதுபோலவே, இங்குள்ள வீதிகளில் சிலவும் இந்த மக்களினாலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நிர்மாணிக்கப்பட்டவைகளில் பூச்சிக்கூட்டின் பிரதான வீதியுமொன்று! கடந்த வெள்ளத்தின் போது இந்த வீதி கடுமையான பாதிப்புக்குள்ளாகியதால் இடிந்து போய்க் கிடக்கிறது. போதாக்குறைக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரும் இந்த வீதியினை சேதப்படுத்தி வருகிறது. இதனால், எப்போது இந்த வீதி முற்றாக இடிந்து போகுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர் இங்குள்ள மக்கள்! இந்த வீதி இல்லையென்றால் கிட்டத்தட்ட பூச்சிக்கூடு மக்கள் வெளியிடங்களுக்குப் போய்வர முடியாமல் போய்விடும் என்று மக்கள் கவலையோடு கூறுகின்றனர்.

இவை ஒருபுறமிருக்க, பூச்சிக்கூடு கிராமத்தின் நிர்வாக முறைமையும் சிக்கலுக்குரியது. அதாவது, இக்கிராமத்தின் நிருவாக செயற்பாடுகள் மட்டக்;களப்பு மாவட்டத்தின் போரைதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் உள்ளபோதும், காணி தொடர்பான விடயங்களை அம்பாறை மாவட்டத்தின் உகணை பிரதேச செயலகமே கவனித்து வருகின்றது.

நமது தேசத்திலுள்ள மக்களில் ஒரு சாரார் - ஆடம்பரங்களின் உச்சங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, இன்னொரு மக்கள் தொகையினர் வாழ்வின் அடிப்படைத் தேவைகளாவது தமக்குக் கிட்டாதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது எத்தனை பெரிய துயரம்.

முதலில், பூச்சிக்கூடு கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுதல் வேண்டும். அடுத்து, இங்கு வாழ்ந்த மக்கள் அனைவரையும் மீளவும் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் ஏக்கமாகும்!!!

பூச்சிக்கூட்டிலிருந்து திரும்பும் போது, கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரான மனோகரன் கூறிய வார்த்தைகள் மிகவும் நெருடலானவை. 'ஐயா, எங்கள் பிரச்சினைகளைத் தேடி – எமது கிராமத்துக்கு வந்த ஊடகத்துறை சார்ந்த முதலவாது நபர் நீங்கள்தான். எங்கள் கிராமத்தின் பிரச்சினைகளை ஊடகங்கள் மூலம் வெளியுலகுக்குக் கொண்டு வருவதற்காக கடந்த காலங்களில் நாம் கடுமையாக முயற்சி செய்தோம். பணம் கொடுத்தாவது, ஊடகவியலாளர்களை அழைத்து வருவதற்கு நாம் தயாராக இருந்தோம். ஆனால், எவருமே இங்கு வரவில்லை. இந்த நிலையில், நீங்கள் இங்கு வந்தமையானது எமக்கு மகிழ்சியைத் தருகின்றது. உங்களின் மூலமாவது எங்கள் துயர வாழ்க்கை - வெளி உலகத்துக்குத் தெரிய வர வேண்டும். வருமா ஐயா?'

மனோகரனின் தோளில் கை வைத்து – நட்புடன் அழுத்திச் சொன்னோன்; 'வரும்'!

(பூச்சிக்கூடு என்கிற கிராமம் பற்றி நமக்குக் கூறியதோடு, அங்குள்ள மக்களின் பிரச்சினைகளைச் செய்தியாக்கும்படி வேண்டி - பூச்சிக்கூட்டுப் பயணத்தில் நம்மோடு இணைந்திருந்த ஊடக நண்பர் நடன சபேஷனுக்கு நன்றிகள்!)


You May Also Like

  Comments - 0

  • t-vijayaraja 13-7- sangar puram mandur riyadh Thursday, 15 September 2011 10:06 PM

    எமது கிராமத்துக்கு சென்று மக்களின் குறையை பார்வையிட்ட ஊடகவியாளர் சபேசன் அண்ணன் அவருக்கு எனது நன்றிகள். கிராம மக்களின் குறையை ஊடகங்களுக்கும் விரிவுபடுத்தி அது சம்மந்தபட்ட உயரதிகாரிகளிட நடவடிக்கை எடுக்கப்பட உதவி புரிய உதவுமாறு கிராம மக்கள் சார்பாக நன் வேண்டுகிறேன்.

    Reply : 0       0

    t-vijayaraja 13-7- sangar puram mandur riyadh Thursday, 15 September 2011 10:19 PM

    இது போன்று இன்னும் நமது கிராமம் வளர்ச்சி பிற வேண்டும். இதுக்கு கிராம மக்கள் onrukuda வேண்டும். கிராம மக்களுக்கு இனது பாராட்டுக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X