2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு பயன்படும் உள்ளாட்சி தேர்தல்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.காசிநாதன்

தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் தனியாக போட்டியிடுகிறார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு மாற்றாக உருவான இவருடைய கட்சியான தே.மு.தி.க. 2011இற்கு முன்பு வரை தனித்தே தேர்தல்களை சந்தித்தது. ஏழாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் அக்கட்சி அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து தானாகவே விலகி உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. சென்ற 2006 உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலர் முதல் பஞ்சாயத்து யூனியன் வார்டு மெம்பர் வரை 810 இடங்களில் தனித்தே போட்டியிட்டு வெற்றி பெற்றது தே.மு.தி.க.

இதுவரை முழு அளவிலான உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நான்காவது முறையாக நடக்கப் போகிறது. எம்.ஜி.ஆர். இருந்தபோது மாநகராட்சிகளை தவிர்த்து விட்டு மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தினார். அதன்பிறகு 1996இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முதன்முதலாக தேர்தலை நடத்தியது. பிறகு 2001, 2006 இப்போது 2011 மீண்டும் அதே மாதிரி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

முதல் முறையாக இவ்வளவு கட்சிகள் தனித்தனியாக உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. ஆறு கட்சிகள் இதுவரை தனியாக போட்டி என்று அறிவித்து விட்டன. அ.தி.மு.க., தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய இந்த ஆறு கட்சிகள் தவிர இன்னும் கம்யூனிஸ்டுகள் எஞ்சியிருக்கின்றன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் தனித்துப் போட்டி என்று அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. மீதி மாவட்டங்களுக்கு அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி சோதனையை சந்தித்து விட்டது. 'நாங்கள் கேட்கும் சீட்டுகளுக்கும், அ.தி.மு.க. தருவதாகச் சொல்லும் சீட்டுகளுக்கும் இடைவெளி ரெம்ப தூரம் இருக்கிறது' என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான ஏ.எம்.கோபுவே கூறிவிட்டார். இப்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பிலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து அவர் தலைமையில் தனி அணி என்று கொள்கையளவில் முடிவு எடுத்துள்ளார்கள். இனி இவர்களுக்குள் தொகுதி பங்கீடு செய்து கொள்வார்கள். ஆகவே இதுவரை உள்ள நிலவரப்படி உள்ளாட்சி தேர்தலில் ஆறு முனை போட்டி உறுதியாகி விட்டது. எஞ்சியுள்ள புதிய தமிழகம் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.

பரமக்குடி கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூடு அக்கட்சியை அ.தி.மு.க.கூட்டணியில் இருந்து வெளியேற வைத்திருக்கிறது. ஏனென்றால் அங்கு பாதிக்கப்பட்டது புதிய தமிழகத்தின் முக்கிய வாக்கு வங்கிக்கு சொந்தக்காரர்களான தேவேந்திர குள வேளாளர்கள் சமுதாயத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வும், கொங்கு முன்னேற்றக் கழகமும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அவர்களும் தனியாக நிற்கும் பட்சத்தில், தமிழக உள்ளாட்சித் தேர்தல் எட்டுமுனைப் போட்டியாக மாறியுள்ளது.
 
முக்கிய கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அதிரடியாக தங்கள் கூட்டணிக் கட்சிகளை கழற்றி விட்டிருப்பதும் இதுவே முதல் முறை. 2014 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தேசிய அளவில் களம் தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்த இரு கட்சிகளுமே தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு 'அக்னிப்பரீட்சை' வைத்திருக்கின்றன. உள்ளாட்சி தேர்தலில் இக்கட்சிகள் வாங்கும் வாக்கு சதவீதமே அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிகளுக்கு உரிய மரியாதையை கூட்டணி அமைக்கும் போது பெற்றுத்தரும். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 33 இடங்களில் போட்டியிட்டது. அப்போது பி.ஜே.பி.க்கு வெறும் ஆறு நாடாளுமன்ற தொகுதிகளை மட்டுமே விட்டுக் கொடுத்தது. அதேபோல் இனி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட விரும்புகிறது அ.தி.மு.க. அப்போதுதான் மத்திய அரசின் நேரடி ஆதரவைப் பெற்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்பது ஒரு புறமிருக்க, மத்தியில் கூட்டணி ஆட்சி என்ற நிலை வரும் போது அ.தி.மு.க. முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா நினைக்கிறார்.

இதேபோல் தி.மு.க.வும் மாநிலத்தில் ஆட்சி புரியும் அ.தி.மு.க.வை சமாளிக்க அதிக எம்.பி.க்களை பெற வேண்டும் என்பது அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வியூகம். இதை மையமாக வைத்துத்தான் தங்கள் கூட்டணிக் கட்சிகளை இரு கட்சிகளுமே கழற்றி விட்டு 'தனியாக உங்கள் பலத்தை நிரூபியுங்கள்' என்று பரீட்சை வைத்துள்ளன. இப்பரீட்சையில் வெற்றிபெறப்போவது கூட்டணிக் கட்சிகளா? கழற்றி விட்ட தி.மு.க.வும் அ.தி.மு.க.வுமா? என்பது ஒக்டோபர் 17, 19 ஆகிய திகதிகளில் இரு கட்டங்களாக நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் தெரிந்து விடும். அடுத்து 2014இல் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதற்கு முன்னோடியே இந்த உள்ளாட்சி தேர்தல் என்பதே தமிழக அரசியலின் சிறப்பம்சம்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X