2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: கட்சிகளின் பலத்தைக்காட்டும் காலக்கண்ணாடி

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகியுள்ளன. இரு முக்கிய கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தங்கள் கூட்டணி கட்சிகளை தவிக்க விட்டுள்ளன என்பதை இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆளுங்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (அ.தி.மு.க.) கடந்த சட்டமன்ற தேர்தல் செல்வாக்கு அப்படியே நீடிக்கிறது. சமச்சீர் கல்வி குழப்பம், மின்வெட்டு பிரச்சினை, கூட்டணி இல்லாமை போன்ற காரணங்கள் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஐந்து மாத அரசின் செயல்பாட்டிற்கு மக்கள் அளித்த வாக்கெடுப்பு போன்றே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.விற்கு அமைந்துள்ளன. அதுவும் கூட்டணிக் கட்சியின் தயவு இல்லாமல் திருச்சி மேற்கு இடைத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் அ.தி.மு.க. பெற்ற வெற்றி- அக்கட்சியின் அடுத்த கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.

வாக்காளர்களோ தங்கள் பகுதியின் வளர்ச்சி முக்கியம் என்பதையும் அதற்கு மாநிலத்தில் உள்ள ஆளுங்கட்சிக்கு வாக்களிப்பதே சிறந்த வழி என்பதையும் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த அளவுகோலின் அடிப்படையில் இந்த உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, இதற்கு முன்பு நடைபெற்ற 1996, 2001, 2006 போன்ற உள்ளாட்சி தேர்தல்களிலும் ஆளுகின்ற கட்சிக்கே மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஆனால் இந்தமுறை டொக்டர் சோ. அய்யர் தலைமையிலான தமிழக தேர்தல் ஆணையம் சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு வழிவகுத்தது. இதற்கு முன்பு இருந்த தேர்தல் ஆணையர்கள் போல் இல்லாமல், உள்ளாட்சி தேர்தலை வெளிப்படையாக நடத்தி முடித்திருப்பதால், இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு கட்சியின் வாக்கு வங்கி பற்றியும் ஒரு சரியான கணக்கை வைத்துக்கொள்ள உதவும். தமிழக தேர்தல் ஆணைய வரலாற்றில் எதிர்கட்சி வரிசையில் இருக்கும் தலைவர்களில் ஒருவரான வைகோ -'தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்தியது' என்று அறிக்கை விட்டிருப்பது இதுதான் முதல் முறை. இப்படி நடந்த தேர்தலில் பத்து மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் முதன் முதலாக அக்கட்சியின் மேயராக சைதை துரைசாமி பதவியேற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய சேவைகளுக்கு இலவச பயிற்சி வழங்கி வரும் இவர் இளம் வாக்காளர்கள் மத்தியில் பிரபல்யமானவர். இப்படி பிரமிக்கத்தக்க வெற்றி பெற்றதன் மூலம், அ.தி.மு.க. தமிழகத்தில் முதல்தர அரசியல் கட்சியாகியிருக்கிறது.

இரண்டாவது பெரிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகமே (தி.மு.க.) என்ற நிலை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் படி பத்து மேயர் பதவிகளிலும் தோல்வியடைந்துள்ளது மட்டுமின்றி பாரம்பரியமாக வெற்றி பெற்று வந்த தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சியையும் பறி கொடுத்திருக்கிறது. வழக்கமாக தி.மு.க. நகர வாக்காளர்கள் மத்தியில் பிரபல்யமாக இருக்கும் கட்சி. அதை 2006 சட்டமன்ற தேர்தலில் இருந்தே அக்கட்சி கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இப்போது 124 நகரசபை தலைவர் பதவிகளில் 23இல் மட்டும் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் 121 பேரூராட்சி தலைவர் பதவிகளை பிடித்திருக்கிறது. மாநகர வாக்கு வங்கி, நகர்ப்புற வாக்கு வங்கி போன்றவற்றில் இருந்து தி.மு.க மெதுவாக விலகிச் செல்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் படி 'பேரூராட்சி வாக்கு வங்கி' உள்ள கட்சி போல் மாறியிருக்கிறது. தமிழக அரசியலில் அ.தி.மு.க.விற்கு மாற்று தி.மு.க. என்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன. அ.தி.மு.க.வின் ஐந்து மாத ஆட்சி பற்றி தி.மு.க. கூறிய குற்றச்சாட்டுகளை பெரிய அளவில் மக்கள் ஏற்கவில்லை. குறிப்பாக சென்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் மீது வாக்காளர்களுக்கு ஏற்பட்ட கோபம் இன்னும் தணியவில்லை என்பதையே அ.தி.மு.க.விற்கு கிடைத்துள்ள அமோக வெற்றி எடுத்துக் காட்டுகிறது.

இவ்விரு கட்சிகளுக்கும் போட்டியாக உருவாகியுள்ள கட்சி தே.மு.தி.க.வா? அல்லது காங்கிரஸா? என்ற கேள்வி எழுகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால் தே.மு.தி.க. இரு நகராட்சிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் அப்படி எதிலும் வெற்றி பெறவில்லை. அதேபோல் 24 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. ஆனால் தே.மு.தி.க.வோ மூன்றே பேரூராட்சிகளில் மட்டுமே வெற்றி வாகை சூடியிருக்கிறது. அதே சமயத்தில், மொத்த உள்ளாட்சி பதவிகளில் காங்கிரஸ் 708 வார்டுகளிலும், தே.மு.தி.க. 840 வார்டுகளிலும் ஜெயித்துள்ளன. தமிழக அரசியலில் தே.மு.தி.க.தான் மூன்றாவது சக்தி என்பதை நிரூபித்துள்ளது இந்த உள்ளாட்சி தேர்தல். சென்ற முறை 2006இல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெறும் 610 உள்ளாட்சி பதவிகளை பிடித்த தே.மு.தி.க. இந்த முறை 840 பதவிகளை பிடித்திருப்பதே இதற்கு தகுந்த சான்றாக அமைந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளையும் ஒரே கூட்டணியில் தங்களுடன் வைத்துக் கொண்டு தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்ற தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ முனையலாம். அப்படியொரு அணி மாற்றத்திற்கு இந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், தே.மு.தி.க. பெற்ற வெற்றி அடித்தளம் போட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே காங்கிரஸ்தான் தமிழகத்தில் பெரிய கட்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் நாடாளுமன்ற அணி அமைப்பதில் சிக்கலை தோற்றுவிக்கும். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க போட்டி போடலாம். பா.ஜ.க.வை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போதுமே 'எங்களால்தான் வெற்றி பெற்றீர்கள்' என்று அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் அக்கட்சிகள் ஆட்சிக்கு வரும் நேரங்களில் எல்லாம் கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்களின் பலம் என்ன என்பதற்கு உள்ளாட்சி தேர்தல் ஒரு காலக்கண்ணாடியாக அமைந்திருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) தனித்தே போட்டியிட்டது. ஆனால் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இவ்விரண்டில் சி.பி.எம். 152 உள்ளாட்சி பதவிகளில் வெற்றி பெற்றதோடு, மூன்று நகரசபை தலைவர் பதவிகளையும் பிடித்திருக்கிறது. வெறும்  97 உள்ளாட்சி பதவிகளில் மட்டுமே வெற்றி பெற்ற சி.பி.ஐ. - நகரசபை தலைவர் பதவி எதையும் பிடிக்க முடியவில்லை. அப்படியேதும் வெற்றி பெறவில்லை என்பதால் இரு கம்யூனிஸ்டு கட்சிகளில் சி.பி.எம். முன்னணிக் கட்சி என்ற தகுதியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.  

உள்ளாட்சி தேர்தலில் மிகவும் பாதிக்கப்பட்ட கட்சிகள் என்றால் டாக்டர் ராமதாஸ் தலைமையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் (பா.ம.க) வைகோ தலைமையில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் (ம.தி.மு.க.) தான்! பா.ம.க. 488 உள்ளாட்சி பதவிகளில் வெற்றி பெற்று ம.தி.மு.க.வை விட முன்னணி வகிக்கிறது. அதே நேரத்தில் அக்கட்சியால் நகரசபை தலைவர் பதவியை ஒன்றைக்கூட பிடிக்கமுடியவில்லை. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இக்கட்சிக்கு மவுசு உண்டு என்ற பேச்சு பத்திரிகைகளில் இருக்கின்றன. ஆனால் கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே தேர்தல் வெற்றி வாயிலாக அது வெளிப்படவில்லை. ம.தி.மு.க. 184 உள்ளாட்சி பதவிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஒரு நகரசபை தலைவர் பதவியை பிடித்தது அக்கட்சிக்கு சாதகமான அம்சம். எப்படியிருந்தாலும் - ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரு கட்சிகளில் பா.ம.க.வே பலமுள்ள கட்சி என்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பறைசாற்றுகின்றன. அதே சமயத்தில், திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை நடந்த 2006 உள்ளாட்சி தேர்தலை ஒப்பிடும் போது, அவசர அவரமாக தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து விடுதலை சிறுத்தைகள் பெற்றது 23 உள்ளாட்சி பதவிகள். ஆனால் இப்போது அக்கட்சி பெற்ற உள்ளாட்சி பதவிகளோ 36. திருமாவளவனுக்கு இது சற்று ஆறுதல் அளிக்கும் விடயம்.

உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் முதல் மூன்று கட்சிகள் எவை என்பதை உறுதிசெய்து விட்டன. அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய மூன்று கட்சிகளுமே அவை! நான்காவது இடத்தை காங்கிரஸ் கட்சி பிடித்திருக்கிறது. ஐந்தாவது இடம் பா.ம.க.விற்கும், ஆறாவது இடம் பா.ஜ.க.விற்கும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு தேவையான கட்சிகளை ஆளும் அ.தி.மு.க.வும், எதிர்கட்சி வரிசையில் இருக்கும் தி.மு.க.வும் இழுக்கத் தொடங்குவார்கள். ஆகவே, உள்ளாட்சி தேர்தல்கள் முடிந்து விட்டன. கூட்டணி எதிர்காலத்தில் எப்படி அமைய வேண்டும் என்ற சிந்தனை முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் மனதில் துளிர் விடத் தொடங்கிவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X