Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 27 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
• மப்றூக்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படுமானால், கப்பல் அனுப்பி வைத்து முஸ்லிம் மக்கள் அனைவரையும் கடாபி தன்னுடைய நாட்டுக்கு எடுத்து விடுவார் என்று எங்களூர் பெரிசுகள் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் பேசிக் கொண்ட கதைகள் இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன.
பச்சை நிறத்திலான அரபு எழுத்துக்களுடன் லிபியத் தலைவர் கடாபியின் (அவரின் சரியான முழுப் பெயர் முஅம்மர் முஹம்மது அபு மின்யார் அல் - கதாஃபி என்பதாகும்) உருவம் கொண்ட வெள்ளை நிற ரீ சேட்களை எங்கள் கிராமத்தின் அப்போதைய இளைஞர்களில் சிலர் அணிந்து கொண்டு வலம் வந்த நினைவுகள் மறக்க முடியாதவை!
சில தசாப்தங்களுக்கு முன்னர் தேசங்கள் கடந்து லிபியத் தலைவர் கேணல் கடாபி – ஒரு ஹீரோவாக முஸ்லிம் மக்களால் நேசிக்கப்பட்டார், மதிக்கப்பட்டார். கடாபி என்கின்ற சொல் - விடுதலையை விரும்பும் முஸ்லிம் வீரர்களின் அடையாளமாகக் கொண்டாடப்பட்டது.
ஆனால், அதே கடாபி – அவரின் தேசத்து மக்களாலேயே அடித்து இழுத்துக் கொண்டு சென்று கொல்லப்பட்டுள்ளார் என்பதை – நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் தங்கள் இதயங்களில் கடாபியை ஒரு ரோசாப்பூவைப் போல் சூடியிருந்த லிபிய மக்கள் - இன்று ஒரு எச்சில் இலை போல தூக்கி எறிந்திருக்கின்றார்கள் என்றால், இதற்கு என்னதான் காரணம்??
நம்மில் அநேகமானோர் நம்பிக் கொண்டிருப்பது போல் கடாபி அத்தனை நல்லவரில்லை! ஆனால், கேணல் கடாபி அத்தனை கெட்டவருமில்லை!!
லிபியாவை ஜனநாயகமற்றதொரு நாடாகவே கடாபி ஆட்சி செய்தார். அங்கு கட்சிகள் இல்லை, தேர்தல்கள் இல்லை, நாடாளுமன்றம் என்று எதுவுமேயில்லை! ஆனாலும், லிபியர்களை கடாபி தனது ஆட்சிக் காலத்தில் செல்வந்தர்களாக மாற்றினார். அந்த மக்களுக்கு - அதிக பொருளாதார சலுகைகளை வழங்கினார். நம்பினால் நம்புங்கள், லிபிய மக்கள் 'கரண்ட் பில்' கட்டுவதேயில்லை. லிபியர்களுக்கு மின்சாரத்தைக் கூட கடாபி இலவசமாகவே வழங்கினார்.
பிறகேன் கடாபிக்கு எதிரான புரட்சி வெடித்தது என்கிறீர்களா? எல்லாமே கடாபிதான் - கடாபிதான் எல்லாமே என்கிற 40 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதிகாரம் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், ஆத்திரமுமே புரட்சியாக வெடித்தது! இந்தப் புரட்சிக்கு எண்ணெய் ஊற்றி உசுப்பேத்தி விட்டன அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும்!
ஒருவரின் மரணத்தின் பிறகுதான்- அவர் அதிகம் பேசப்படுவார், விமர்சிக்கப்படுவார். கடாபியின் மரணம்தான் அவரின் எல்லாக் கோணங்களையும் பேசச் செய்கிறது!
கடாபி ஒன்றும் ராஜ வம்சத்து ஆளில்லை! ஆடுகளையும், ஒட்டகைகளையும் மேய்த்துத் திரிந்த நாடோடிப் பெற்றோருக்குப் பிறந்தவர்தான் இந்த மனிதர். ஆனால், தனது 27ஆவது வயதில் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றி – சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு சக்கரவர்த்தியைப் போல் ஆண்டு அனுபவித்தார்!
இயற்கையில் கடாபி ஒரு ரசனையாளர். தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அலாதிப் பிரியங் கொண்டவர். ஒரு நாளில் ஏராளமான தடவைகள் ஆடைகளை மாற்றிக் கொள்வார். தன்னைச் சந்திக்க விருந்தினர்கள் வந்து காத்துக் கொண்டிருக்கும் போதும், தனது அறைக்குச் சென்று மீண்டும் ஆடைகளை மாற்றிக் கொண்ட பிறகுதான் சந்திக்க வருவார். அதிலும், வெள்ளை நிறம் சார்ந்த ஆடைகளில் கடாபிக்கு நிறையப் பிரியம்.
லிபிய அதிபர் கேணல் கடாபி பற்றி அவரின் மருத்துவத் தாதிகளில் ஒருவராகப் பணியாற்றிய உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய ஒக்சானா பலின்ஸ்கயா எனும் யுவதி கூறும் தகவல்களைக் கேட்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.
'எனக்கு அரபு மொழியில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அதிபர் கடாபிக்கு எங்களிடையே 'பபிக்' என்று ஒரு செல்லப் பெயர் வைத்திருந்தோம். 'பபிக்' என்றால் ரஷ்ய மொழியில் சிறிய தந்தை என்று அர்த்தம்.
நான் தாதியாகக் கடமையாற்றிய காலத்தில் எனக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. இரண்டு படுக்கையறை கொண்ட வீடு, அழைத்தவுடன் ஆஜராகும் சாரதி என்று எல்லாமே சௌகரியமாகத்தான் இருந்தன. ஆனால், என்னுடைய நடத்தைகள், செயற்பாடுகள் என்று - எனது தனிப்பட்ட வாழ்க்கையின் அத்தனை விடயங்களும் கண்காணிக்கப்பட்டன' என்கிறார் ஒக்சானா!
அதிபர் கடாபி 1942ஆம் ஆண்டு பிறந்தவர். மரணிக்கும் போது 69 வயது. ஆனால், அவரின் உடல் ஆரோக்கியம், குறிப்பாக - இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை எப்போதும் ஓர் இளைஞனுடையவை போன்று மிகவும் சிறப்பாக இருக்கும் என்கிறார் மருத்துவத்தாதி ஒக்சானா.
'உக்ரேன் நாட்டு ஊடகங்கள் எங்களை கடாபியின் 'அந்தப்புரத்துப் பெண்கள்' என்றுதான் எழுதும். உண்மையில் அது முட்டாள்தனமானதொரு கூற்றாகும். கடாபியின் மருத்துவத் தாதிகளாகப் பணியாற்றிய எங்களில் எவரொருவரும் அவரின் காதலியாகவோ, அந்தப்புரத்து நாயகியாகவோ இருந்ததில்லை! இன்னும் சொன்னால், அவரின் இரத்த அழுத்தத்தைப் பார்ப்பது போன்ற மருத்துவக் கடமைகளின் போது மட்டும்தான் அவர் மீது எங்கள் கைகள் படுவதுண்டு!
கடாபி கவர்ச்சியான உக்ரேன் பெண்களையே அவரின் தாதியர்களாகத் தெரிவு செய்து வைத்திருந்தார். எங்களுடைய தோற்றம் அதற்கு முக்கியமானதொரு காரணமாக இருந்திருக்கலாம். தன்னைச் சுற்றி அழகிய பொருட்களும், அழகிய மனிதர்களும் இருப்பதை அவர் பெரிதும் விரும்பினார்' என்கிறார் ஒக்சானா!
கடாபியிடம் விசித்திரமான பழக்க வழக்கங்கள் இருந்தன. அரபுப் பாடல்களை பழைய 'கசற் பிளேயர்'களில் கேட்பதில் அவருக்கு அலாதிப் பிரியம்.
ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் வேளைகளில் ஏழைச் சிறுவர்களைக் கண்டால் கடாபி தனது வாகனத்திலிருந்தபடியே காசையும், இனிப்புப் பண்டங்களையும் வெளியில் வீசி எறிவார். அவரின் வாகனத்தைத் துரத்தியபடியே சிறுவர்கள் அவற்றினைப் பொறுக்கிக் கொள்வார்கள். ஆனால், ஒருபோதும் அந்தச் சிறார்களின் அருகில் கடாபி சென்றதேயில்லை. காரணம், அவர்களிடமிருந்து தனக்கு நோய்கள் ஏதாவது தொற்றி விடுமோ என்கிற பயம்தான்.
இவை மட்டுமல்ல, கடாபி வெளிநாடுகளுக்குச் சென்றால், அங்கு தனது பெண் மெய்ப்பாதுகாவலர்களால் சூழப்பட்ட கூடாரத்தினுள்தான் தூங்குவாராம் என்றும் கூறப்படுகிறது.
இப்படி லிபியத் தலைவரிடம் நிறையவே விந்தையான பழக்க வழங்கங்கள் இருந்தன!
கடாபி வெளிநாடு செல்லும் போது, நல்ல 'மூட்'டில் இருந்தால், தன்னுடன் வருகின்ற தனது அலுவலர்கள் அனைவரையும் கடைகளுக்குச் சென்று விரும்பியவைகளையெல்லாம் வாங்கிக் கொள்ளுமாறு கூறுவார். எதிர்பாராத நேரங்களில் போனஸ் கொடுப்பார். தனது உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் கடிகாரங்களை ஒவ்வொரு ஆண்டும் தனது அலுவலர்களுக்கு பரிசளிப்பதை கடாபி ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார்.
கடாபியின் மருத்துவத்தாதி ஒக்சானா - கடாபி பற்றியும் அவருக்கெதிராக நிகழ்ந்த புரட்சி பற்றியும் இப்படிக் கூறுகின்றார். 'லிபியாவின் எல்லாமாக கடாபியே இருந்தார். அவருக்கு ஸ்ராலினை (ரஷ்ய நாட்டு சர்வதிகாரி ஜோசப் ஸ்ராலின்) ரொம்பப் பிடிக்கும். கடாபி அனைத்து அதிகாரங்களையும், சௌபாக்கியங்களையும் கொண்டிருந்தார். எகிப்தில் இடம்பெற்ற புரட்சியை முதன் முதலாக தொலைக்காட்சியில்தான் நான் பார்த்தேன். ஆனால், அவ்வாறானதொரு புரட்சியை எங்கள் 'பபிக்'குக்கு (கடாபி) எதிராக எவராவது மேற்கொள்வார்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. ஆனால், ஒரு சங்கிலித் தொடர்ச்சியாக அந்தப் புரட்சி துனூசியா, எகிப்து என்று – லிபியாவையும் தொற்றிக் கொண்டு விட்டது'!
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் கடாபிக்கும் வரலாற்றில் எப்போதும் முறுகல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. 1986ஆம் ஆண்டு பேர்லின் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் குண்டு வெடிப்பொன்று நிகழ்ந்தது. இதில் இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். இந்தக் குண்டு வெடிப்பின் பின்னணியில் லிபியா செயற்பட்டதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, லிபியாவின் தலைநகரான திரிப்போலியிலும் மற்றும் பெங்காசி நகரிலும் கடுமையான விமானத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில் கடாபியின் வளர்ப்பு மகளொருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லிபியா மீது அந்த அமெரிக்க வான்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் றீகன் பதவி வகித்தார். கடாபியோடு மிகக் கடுமையாக மோதிப் பார்த்த அமெரிக்கத் தலைவர்களில் றீகன் குறிப்பிடத்தக்கவர். ஒருமுறை கடாபியை 'மத்திய கிழக்கின் பைத்தியக்கார நாய்' (Mad dog of the Middle East) என்று மிகக் கேவலமான வார்த்தைகளால் றீகன் சாடியிடிருந்தமையை உலகு அத்தனை இலகுவில் மறந்திருக்காது. இதை வைத்தே – கடாபி மீது அமெரிக்கா கொண்டிருந்த குரோதத்தை ஓரளவேனும் நாம் புரிந்து கொள்ள முடியும். அந்தக் குரோதங்களின் நீட்சியும், உச்சகட்டக் காட்சியும்தான் - நேட்டோவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட புரட்சியும், கடாபியின் கறை படிந்த மரணமுமாகும்!
கடாபியின் சரி – பிழைகளுக்கப்பால், வரலாற்றின் அதிக பக்கங்களில் அவர் - இனி ஒரு கொடுங்கோலனாகவே நமது குழந்தைகளால் வாசிக்கப்படுவார். ஏனெனில், துரதிர்ஷ்டவசமாக கடந்த சில தசாப்தங்களாய் வரலாறுகளை - அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளுமே தமக்கு ஏற்றாற் போல் புனைந்து வருகின்றன.
கடாபி ஒரு வரலாற்று நாயகன் என்பதில் இரண்டு கதைகள் இல்லை. ஆனால், அந்த நாயகன், நம்மில் அநேகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது போல் - அத்தனை நல்லவருமில்லை, அத்தனை கெட்டவருமில்லை!!!
rasseen hassan Friday, 28 October 2011 11:28 AM
தமிழில் உலகை விளங்க முடியாது என்பதுக்கு இது மாதிரி விபரம் தெரியாமல் எழுதுபவர்கள் தான் காரணம்.
Reply : 0 0
Dr. Rumi - London Thursday, 24 November 2011 03:12 PM
we worked in Libya and I have seen with our own eyes how he treated his countrymen with terror. He can't be called as a human first before from being called as a muslim - most of the readers are unaware of the Libyan's past history. he was a venomius snake. Who said that the libyans were not paying electricity bills, all these are concoted stories. He once said no need to say salawath when the holy prophets name is called. He is rogue, meniac, saddist - he is a typical mulleriyawa case.
Reply : 0 0
azeez Wednesday, 23 November 2011 06:57 AM
கடாபி உலகை அனுபவிக்க வேண்டும் என்பதில் வெறியாய் இருந்தவர். தனக்கு விதிக்கப்பபட்ட மரணத்தை 42 வருடம் ஆட்சி புரிந்து பெற்றுக் கொண்ட புதுமை மனிதன்.
Reply : 0 0
fowqey Friday, 18 November 2011 05:11 PM
இஸ்லாத்தின் பார்வேயில் கடாபி ஒரு கெட்டடவன். ஆகவே கடாபியின் அழிவு ஒரு பாடமாகவே காணப்படும்.
Reply : 0 0
sajuu Monday, 07 November 2011 03:50 PM
சானோ வின் கருத்து தப்பானது முஸ்லிம்களால் கொள்ளப்படவில்லை, முனாபிக்குஹளால் தான் கொல்லப்பட்டார்.
Reply : 0 0
m.i.m.musadique Thursday, 03 November 2011 05:13 PM
பிறப்பும் இறப்பும் இறைவனின் கையில். வாழ்வை நிர்ணையிப்பது நமது கையில். மறுமையில் தண்டனை வழங்குவது இறைவனின் பொறுப்பில் உள்ளது. இஸ்லாம் கூறும் மனித உரிமை, போரியல் ஒழுக்கம் என்பன நேட்டோவின் முகவர்களிடம்; லிபியாவின் இறைவனின் அடியார்களிடம் இல்லை. இவர்கள் முஸ்லிம்கள் என்ற நாமத்தில் வாழும் காட்டுமிராண்டி - ஜாஹிலியாக்கள் என்பதை உலகத்துக்கு உணர்த்தியுள்ளனர்.
Reply : 0 0
sahabdeen Wednesday, 02 November 2011 08:00 AM
உண்மையை எழுதினால் ஒரு சிலருக்கு பிடிப்பதே இல்லை. பொய்யை எழுதினால் அதுதான் உண்மை என்று மனதை திருப்திகொள்ளுவர்கள். இவர்களும் கிணற்று தவளைகளும் ஒன்றுதான்.
Reply : 0 0
ibnu aboo Monday, 31 October 2011 04:36 PM
மப்ரூக் ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தில்தான் இதை எழுதியுள்ளார். அறியாத தகவல்களை தந்துள்ளார். இது பாராட்டுக்குரியது. விமர்சனம் என்பது உரியவறது தகவல். கணிப்பு,கருத்து , அவரது ஆய்வுக்குட்பட்டது. அது பிறர் கருத்துக்கு ஏற்றதாகவும் இருக்கலாம் மருப்புக்குரியதாகவும் இருக்கலாம் .விமர்சகரது வெளிப்படுதல் சுதந்திரம் எவ்வாறோ அதே சுதந்திரம் அதை ஆய்பவர்களுக்கும் உண்டு. எனவே விமர்சகரை நியாயமான எடுகோள்களின் அடிப்படையில் கேள்வி எழுப்பலாமே தவிர, அவரைக் கண்டிக்க உரிமையில்லை.
Reply : 0 0
RISVI HUSSAIN Saturday, 29 October 2011 09:50 PM
அவர் எப்படிப்பட்டவரா இருந்தாலும் அமெரிக்கா வழிநடத்தி நேட்டோ மூலம் அவரை கொன்றது மிகவும் வேதனைக்குரியது.
Reply : 0 0
Mujahid Saturday, 29 October 2011 07:21 AM
எங்களில் பலருக்கு அவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறோம் என்றே தெரியாது. லிபியா எங்கே உள்ளது என்பதே அவர்களுக்கு இந்த லிபிய புரட்சி வந்த பின்புதான் தெரியும். அங்கு இருக்கும் மக்கள் 42 வருடமாக என்ன கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
ஏதோ பெரிய புரட்சி வீரனாக தன்னை காட்டிக்கொண்ட கடாபி, உண்மையில் ஒரு மனித மிருகம் என்றே சொல்லவேண்டும். அங்கு யாருக்கும் இஸ்லாத்தைப் பேச முடியாது, முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. யாராவது தொடர்ந்து தொழுது வருவது அவதானிக்கப்பட்டால் அடுத்த நிமிடம் அவர் இஸ்லாமியப் போராளி என்ற சந்தேகத்தின் பெயரில் சிறையில் அடைக்கப்படுவார்.
நாட்டின் சனத்தொகையில் 20% பேர் கடாபியின் உளவுப் படைக்கு தகவல் கொடுப்பவர்களாகப் பணிபுரிந்தார்கள். அனைத்து மக்களும் அச்சத்திலேயே அங்கு காலம் கடத்தினார்கள். அங்கு அரசு பத்திரிகை தவிர வேறு எந்த பத்திரிகை நிறுவனங்களும் கிடையாது. எல்லாம் கடாபியின் விருப்பப்படி தான் நடக்க வேண்டும்.
இந்தப் புரட்சியின் போது ஆபிரிக்க கருப்பர்களைக் கொண்ட கூலிப்படையை வைத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றான். தானே வீடு வீடாகச் சென்று புரட்சியில் ஈடுபடும் மக்களை எலிகளைக் கொல்வது போல் கொல்வேன் என சத்தம் போட்டான். இதை எல்லாம் இப்போது பலருக்கு நினைவில்லாமல் போனதுதான் வியப்பு.
அவன் குர்ஆனையே மாற்ற வேண்டும் என்று பகிரங்கமாக பிரச்சாரம் செய்தவன். நபியவர்களின் ஹதீஸ் தொகுப்புக்களை இட்டுக்கட்டப்பட்டவை என இழிவுபடுத்தியவன். அவனைப் பற்றி எமக்குத் தெரிந்ததைவிட அதிகம் அங்கு வாழ்ந்த மக்களுக்குத் தெரியும். அதனால்தான் கடாபி மிகக் கேவலமான முறையில் கொல்லப்பட்டான்.
Reply : 0 0
AJMAL FROM THMABALA Friday, 28 October 2011 08:25 PM
தம்பி மப்ரூக்..நான் இப்படி உம்மை அழைக்க காரணம், நீர் சிறு பிள்ளை தனமான கட்டுரை ஒன்றை கிறுக்கியதுதன்..
மவ்த் ஆகின ஒருவரை பற்றி நன்றாக எழுத விட்டாலும், அவரின் மறுபக்கத்தை சொல்லாமல் விட்டிருக்கலாமே.... கேர்னல் கடாபி தொடர்பான தரவுகளை தேடி படித்துப்பாரும்.......
Reply : 0 0
faris Friday, 28 October 2011 05:12 PM
உலக அழிவுநாள் வரும்போது இப்படி ஒரு மாபெரும் இஸ்லாமிய புரட்சி நடக்கும் எண்டு குரான் சொல்லிடிச்சு. அதனால இந்த புரட்சி எல்லாம் உலகம் பழையபடி முஸ்லிம்கள் ஆள்றதுகுதான் .....அதனால கவலைய விடுங்க.
Reply : 0 0
Rmohamed Friday, 28 October 2011 05:07 PM
கடாபி இஸ்லாத்தில் மருத்தவைகளில் சிலவற்றை பாருங்கள்.
- பெண்களின் ஹிஜாப் கடமையானதொன்றல்ல.
- ஹஜ் கடமையில் பலவற்றை மருத்திருக்கின்றான்.
- மிஹ்ராஜ் சம்பவத்தை கற்பனை என்கிறான்.
- பலதார மனம் ஹராம் என்கிறான்.
இப்படி நிறையவே இருக்கின்றன. இப்படி இஸ்லாத்தின் அடிப்படைகளோடு முரண்படும் ஒருவரை முஸ்லிம்கள் முன்மாதிரியாக எடுக்க முடியாது.
Reply : 0 0
pasha Friday, 28 October 2011 03:18 PM
reemco, இஸ்லாமிய சரித்திரத்தில் பெண்களை மெய் பாதுகவலர்களாக கொண்டு ஆட்சி செய்த வரலாறும் உண்டா?
Reply : 0 0
UMMPA Friday, 28 October 2011 02:15 PM
இதனைப்பார்கவும் , ஏன் கத்தாபி , சதாம் கொல்லப்பட்டார்கள் !
http://silverunderground.com/2011/09/gaddafis-gold/
http://www.indybay.org/newsitems/2011/07/29/18686382.php
Reply : 0 0
thinesh Friday, 28 October 2011 12:06 PM
அவன் அடைந்தது மரணம் அல்ல வரலாறு.
Reply : 0 0
Mohammed Hiraz Thursday, 27 October 2011 07:00 PM
காந்தி கூட சொந்த நாட்டு மகனால் அதுவும் தன் இனத்தவன் ஒருவனாலேயே கொலை செய்யபட்டார் .எனவே சொந்த நாட்டு மக்களால் கொல்லப்படுவது அரசியல் தலைவர்களுக்கு கேவலமாகாது.
Reply : 0 0
H.M.M.Irshad Faizi Friday, 28 October 2011 04:28 AM
நாட்டுமக்களுக்கு நிறைய நலவுகள் செய்திருக்கிறார் என்ற வகையில் கடாபி நல்லவர்.
இஸ்லாத்தைப் பற்றியும் இஸ்லாமிய ஷரீஆவைப் பற்றியும் அவரது கருத்துக்கள் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்கவில்லை என்ற வகையில் கடாபி கெட்டவர்.
மப்ரூக் குறிப்பிட்டதுபோல "கடாபி நல்லவருமில்லை கெட்டவருமில்லை" என்பது ஓரளவு சரியாகவே படுகிறது.
கடாபி ஒரு வித்தியாசமான கதாபாத்திரம்.
Reply : 0 0
mubarak Hassan Friday, 28 October 2011 03:38 AM
the evil that men do lives after them .
Reply : 0 0
vaasahan Friday, 28 October 2011 03:19 AM
யூத வாதம் இவரை ஏன் எதிரியாகப் பார்க்கிறது? அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் இஸ்ரேல் செய்த அக்கிரமங்களை கண்டுகொள்ளாது அவர்களை தட்டிக்கொடுத்த வண்ணம் இருப்பது உலக மனச்சாட்சியின் கண்களுக்கு ஏன் தெரிவதில்லை. அது ஏன் மக்கள் புரட்சியின் பின்னர் பெற்றோலிய வளத்தை பகிர்ந்து கொள்ள படாத பாடுபடுவது.
Reply : 0 0
சிறாஜ் Friday, 28 October 2011 03:16 AM
சிறப்புக்கட்டுரை கொடுத்திருக்கும் மப்றூக் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
M.B.M.Nazeem Friday, 28 October 2011 03:06 AM
அரபு நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றால் அல்லா காப்பாத்துவான் ஆனால் நடப்பது என்ன? ஆட்சியாளர்களின் குடும்பம் மட்டும் செல்வந்தர்கள். அங்கும் வறியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அது எப்படி?
Reply : 0 0
reemco Friday, 28 October 2011 02:19 AM
மௌனி அவர்களே உங்கள் வீட்டுக்குள் ஒரு பிரச்சனை வரும் போது நீங்களும் உங்கள் மனைவி மக்களை விட்டு ஓடி விடுவீர்கள் போலிருக்கிறது உங்கள் கருத்து. கதாபி நல்லவர் என்றோ அல்லது கேட்டவர் என்றோ கருத்துக்கூற யாராலும் முடியாது. அந்த அந்தஸ்த்தை அல்லா எப்போது உங்களுக்கு வழங்கினான்? இஸ்லாமிய சரித்திரத்தில் நல்லவர்களுக்குத்தான் அதிகம் சோதனைகள் உண்டு. இஸ்லாமியர்களின் ஆரம்பகால சரித்திரத்தை நன்கு உற்று கவனியுங்கள். எத்தனை அல்லல்கள் பட்டுள்ளோம் என்று. வெள்ளைக்காரனின் அடக்குமுறைக்கு அடங்காத கதாபி. ஹி இஸ் எ கிரேட் மேன்.
Reply : 0 0
anilar Friday, 28 October 2011 01:42 AM
மப்றூக் அவர்களே உங்களது கட்டுரை '' வரும் ஆனா வராது '' என்று கூறுவது போல் உள்ளது.
Reply : 0 0
மௌனி Thursday, 27 October 2011 10:45 PM
கடாபி நல்லவரில்லை என்பதை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடிகிறது. இஸ்லாமிய ஷரீஆவுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதமானவராகவே கடாபி தனது வாழ் நாளைக் கழித்திருக்கிறார். அவர் பெயரளவில் ஒரு முஸ்லிம் அவ்வளவுதான். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நேசிக்கும் ஒருவர் இதனை நன்கு புரிந்து கொள்வார். தனது மக்களால் கொல்லப்படுவதற்கு வழியமைத்தவரே கடாபி தான். துனிசியாவில் பின் அலி செய்தது போல் நாட்டை விட்டு ஓடியிருக்கலாம் தானே. 70 ஆயிரம் மக்கள் கொல்லப்படவும் லட்சக் கணக்கான மக்கள் காயப்படவும் காரணம் கடாபி தானே. அவருக்கு நேர்ந்தது இறைவனின் தீர்ப்பு என்பதை கவனத்தில் கொள்க. கடாபி பிழையாக வாசிக்கப்படப் போகும் சரித்திரம் அல்ல. மிகப் பிழையான ஒரு சரித்திரம். அவர் கொல்லப்பட வேண்டியவர் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை.
Reply : 0 0
riswan Thursday, 27 October 2011 08:49 PM
ஒரு பக்கத்துக்கு மறு பக்கம் உண்டு. இது முஸ்லிம் நாடுகளின் ஆட்சி மாற்றம் ஒரு பக்கம். அதன் மறு பக்கம் இஸ்லாமிய எழுச்சி.
அதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஆடிப்போகும் நிட்சயம். இஸ்லாம் ஐரோப்பாவில் மிக வேகமாக பரவுகிறது என்பதே உண்மை.
Reply : 0 0
nilam Thursday, 27 October 2011 08:05 PM
well said mabrook.
Reply : 0 0
kalu Thursday, 27 October 2011 08:04 PM
மப்றூக்கின் விமர்சனம் சரியானது அல்ல. .................... இவர் எப்படி சொல்லுவது. கடாபி நல்லவரும் இல்லை கெட்டவரும் இல்லை என்று.
Reply : 0 0
anas Thursday, 27 October 2011 08:00 PM
கருத்து சொல்வது எளிமை நாடாள்வது கடினம் ...
Reply : 0 0
sano Thursday, 27 October 2011 07:59 PM
இதல்லாம் என்னங்க, இஸ்லாமிய ஆட்சியின் தூண்களாக சொல்லப்படுபவர்களில் உஸ்மான் மற்றும் அலி அவர்கள் கூட முஸ்லிம்களால்தான் கொல்லப்பட்டனர்.
Reply : 0 0
xlntgson Thursday, 27 October 2011 07:32 PM
மல்லிகை மலர்ப் புரட்சி என்றார்கள் அரபு வசந்தம் என்றார்கள். பார்ப்போமே யாருக்கு மலர்ச்சி யாருக்கு வசந்தம் என்று!
நைகர் நாட்டில் தஞ்சமாகியிருக்கும் அவரது மனைவி மக்களையும் கேட்டு நைகரை தாக்குவார்களோ சொல்ல இயலாது!
கோஷ்டி சேரா நாடுகளின் நாயகனுக்கு அனுதாபம் தெரிவித்த நாடுகள் மிகச் சொற்பமே, வெனிசூலாவின் சாவேஸ் அறிக்கையை மட்டும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடுகின்றனவோ?
ஈரான் கடாபியை சர்வாதிகாரி என்றே சித்திரிக்கிறது. அதனால் இஸ்லாமிய எழுச்சி உருவாகும் என்றும் அதற்காக அமெ நேடோ கூட்டுப் படைகளுக்கு நன்றி என்றும்.
Reply : 0 0
Razik Thursday, 27 October 2011 07:07 PM
இந்த நிலைமைக்கு அவரே முழுக் காரணம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago