2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'தொல்லை தரும் துரோகத்தை வெற்றி கண்டாக வேண்டும்' -தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையின் 'நிஜ' பின்னனி

A.P.Mathan   / 2011 நவம்பர் 01 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'தொல்லை தரும் துரோகத்தை வெற்றி கண்டாக வேண்டும்.' 'கையிலே காசு இல்லாத போது கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளை சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு அதைக் காத்திடுவதற்கு கழகத்தையே காட்டிக்கொடுக்க முயலுகின்றனர்' என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி காட்டாமாக தன் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து விட்டு வந்த பிறகு இப்படியொரு அறிக்கை விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு பல சோதனைகளில் சிக்கிக்கொண்டது. அக்கட்சியில் இருந்தவர்கள் சிலர் விலகிச் சென்றார்கள். அப்படியில்லையென்றால் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்கள். முதல் பிரச்சினை என்பது கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்கு 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கல்! அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் கலாநிதி மாறன் மீதே கூட புகார்கள் எழுந்தன. அதற்காக விசாரணைக்கு வரும்படி சென்னை மாநகர காவல் நிலையம் ஒன்றிலிருந்து சம்மனே அனுப்பப்பட்டது. அதன்பிறகு அரசு கேபிள் கோர்ப்பரேஷன் தொடங்கப்பட்டதாலும் மாறன் சகோதரர்களுக்கு பிரச்சினை எழுந்தது. இந்த காலகட்டங்களில் எல்லாம் தி.மு.க. தொண்டர்கள் யாரும் மாறன் சகோதரர்களுக்காக குரல் எழுப்பவில்லை. தி.மு.க. தரப்போ, 'அவர்களுடைய பிரச்சினைகளை அவர்களே சமாளித்துக் கொள்ளும் திறமை படைத்தவர்கள்' என்ற விதத்திலேயே கருத்துச் சொல்லி வந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் கைது செய்யப்பட்டதற்கு 'உள்கட்சி சதி'யும் காரணம் என்றே தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் எண்ணினார்கள். இப்படியொரு சூழ்நிலையில், மாறன் சகோதரர்களின் பிரச்சினை பற்றி தி.மு.க.வோ அல்லது அதன் தலைவர்களோ பெரிதாக கையிலெடுத்து போராடவில்லை. பேட்டி எதுவும் கொடுக்கவி்ல்லை. இந்நிலையில் சென்னை மாநகர பொலிஸால் கலாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட 'சம்மன்' பிரச்சினை எப்படியோ பிசுபிசுத்துப் போனது. பிறகு கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரின் இல்லங்கள் 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யால் ரெய்டு பண்ணப்பட்டது. அப்போது மருந்துக்குக்கூட தி.மு.க.வினர் யாரும் அந்தப்பக்கம் போகவில்லை. இப்பிரச்சினைகளால் மாறன் சகோதரர்களுக்கும் தி.மு.க.வினருக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக விலக்கி வைக்கப்பட்டிருந்த சில தி.மு.க. நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்து விட்டார்கள் என்று கூறி போர்க்கொடி தூக்கினார் முன்னாள் அமைச்சரும் தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவருமான பரிதி இளம் வழுதி. 1991ஆம் வருடம் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தி்ற்குள் போன ஒரே தி.மு.க. எம்.எல்.ஏ. அவர் இப்போது, 'உள்கட்சி ஜனநாயகம் தி.மு.க.வில் இல்லை' என்று குற்றம் சாட்டி தனது துணை பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதம் அனுப்பியதும் தி.மு.க. தலைமை தன்னை அழைத்துப் பேசும் என்று கருதினார் பரிதி இளம் வழுதி. ஆனால் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் அவரை சந்திக்கவே விரும்பவில்லை என்ற செய்தி கிடைத்ததும் ஆவேசமடைந்தார் பரிதி இளம்வழுதி. அது மட்டுமல்ல, கட்சியின் தலைவர் கருணாநிதி கூட தன்னை அழைத்து பேசவில்லை என்ற கோபம் பரிதிக்கு இருந்தது. ஆனாலும், 'நான் தி.மு.க.விலிருந்து விலக மாட்டேன்' என்று அறிவித்திருந்தார்.

அனைவரும் எதிர்பாராத வண்ணம் திடீரென்று பரிதி இளம் வழுதியின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. சென்ற தி.மு.க. ஆட்சியில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகராக இருந்த வி.பி.துரைசாமி தி.மு.க.வின் துணை பொது செயலாளர் பதவியில் பரிதி இளம் வழுதிக்கு பதில் அமர்த்தப்பட்டார். உடனே பத்திரிக்கையாளர்களை அழைத்த பரிதி இளம் வழுதி, 'நான்கு முறை முயற்சி செய்தேன். ஸ்டாலின் என்னை சந்திக்க மறுத்து விட்டார். தலைவரையும் (கருணாநிதி) சந்திக்க அனுமதிக்கவில்லை' என்று மீண்டும் குற்றம் சாட்டினார். இப்போதும் கூட நான் தொடர்ந்து தி.மு.க.விலேயே தொடருவேன் என்று அறிவித்துள்ளார் பரிதி இளம் வழுதி.

இதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகர தி.மு.க. செயலாளராக இருந்த மாலை ராஜா (சென்ற சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர்) தனது பதவியை ராஜினாமா செய்து தி.மு.க. தலைமைக்கு கடிதம் அனுப்பினார். அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர் ஒருவரிடம் வம்பு செய்தார் என்று தி.மு.க. ஆட்சி இருந்த போதே இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களுக்கு எல்லாம் முன்பாகவே, நடிகர் தியாகு தி.மு.க.விலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமாகி விட்டார். இப்படி அடுத்தடுத்து தி.மு.க.விற்குள் ஒவ்வொருவராக 'போர்க்கொடி' தூக்கியிருப்பதால், சொத்து குவிப்பு வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள் போன்ற பயத்தில் மேலும் பலர் கட்சிக்கு எதிராக கருத்து சொல்லக்கூடும், விலகிச் செல்லக்கூடும் என்று தி.மு.க. தலைமை அஞ்சுகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் சிலர் இப்படி தலைமைக்கு எதிராக அதிரடியாக பேட்டி கொடுப்பார்கள் என்றே அக்கட்சி தலைமை நினைக்கிறது. முதல் முறையாக எம்.பி.யானவுடனேயே தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்க பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பரிந்துரை செய்தது தி.மு.க. அதன்படி மத்திய அமைச்சராகவும் ஆனார். ஆனால் காலப்போக்கில் அவர் தலைமை பற்றியோ, கட்சியின் நலன் பற்றியோ கவலைப்படவில்லை என்ற வருத்தம் தி.மு.க. தலைமைக்கு உண்டு. ஆனாலும் கூட மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட பிறகு கட்சியிலிருந்து 'சஸ்பென்ட்' செய்து வைக்கப்பட்ட தயாநிதி மாறனுக்கு மீண்டும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி. சீட்டும் கொடுத்தும், மீண்டும் மத்திய அமைச்சராக்கியது தி.மு.க. இப்படியெல்லாம் இருந்த அவரும், அவரது சகோதரரும் தி.மு.க.விற்கும், தி.மு.க. தலைவர் மகள் கனிமொழிக்கும் 2-ஜி விவகாரத்தில் பிரச்சினை எழுந்த போது அமைதி காத்ததை தி.மு.க. தலைமையால் இப்போதும் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

உறவினர்களும் உதவவில்லை. உள்கட்சியில் உள்ளவர்களும் தேர்தல் தோல்வியை மனதில் வைத்து தி.மு.க. தலைமை மீதே குற்றம் சாட்டுகிறார்கள். மறைந்த எம்.ஜி.ஆர்., வைகோ ஆகியோர் தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்ட போது புதிதாக அ.தி.மு.க., ம.தி.மு.க. போன்ற இயக்கங்கள் தி.மு.க.விலிருந்துதான் தோன்றின. இப்போது சட்டமன்ற தேர்தல் தோல்வி, உள்ளாட்சி தேர்தல் தோல்வி, மத்தியில் 2-ஜி வழக்கில் நடைபெறும் சி.பி.ஐ. விசாரணை, மாநிலத்தில் புதிதாக கிளம்பப் போகும் 'புதிய' சொத்து குவிப்பு வழக்குகள் போன்றவை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் உள்கட்சிக்குள் 'குற்றம் சாட்டும் படலம்' தொடரக்கூடாது என்று நினைக்கிறது தி.மு.க.தலைமை. எம்.ஜி.ஆர் மற்றும் வைகோ காலத்தில் உருவானது போன்ற இக்கட்டான சூழ்நிலை தி.மு.க.விற்கு இந்த காலகட்டத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே, 'தொல்லை தரும் துரோகத்தை வெற்றி கண்டாக வேண்டும்' என்று முந்திக்கொண்டு அறிக்கை விட்டுள்ளார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
1993ஆம் வருடத்தில் வைகோ வெளியேற்றப்பட்ட போது அவர் முக்கியமாக ஸ்டாலினைத்தான் குற்றம் சாட்டினார். ஆனால் அதை தனக்கும், வைகோவிற்குமான மோதலாக மாற்றி வெற்றி கண்டார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதே போல் 2000ஆம் வருடம் 'அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும்' மோதல் வந்த போதும், 'யாரும் அழகிரியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது' என்று கடிதம் எழுதிய கருணாநிதி, அதையும் தனக்கும், அழகிரிக்குமான மோதலாக மாற்றி சமாளித்தார். கடைசியாக  சென்றமுறை அழகிரிக்கும் தயாநிதி மாறனுக்கும் பிரச்சினை எழுந்த போது, அதையும் தனக்கும் தயாநிதி மாறனுக்கும் ஏற்பட்ட மோதல் போல் மாற்றி வெற்றி கண்டார். அதேபோல் இப்போது பரிதி இளம் வழுதி பிரச்சினை எழுந்துள்ள நேரத்தில் மீண்டும் அதே பாணியில் அறிக்கை விட்டுள்ளார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால் தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவரோ, 'பரிதி இளம் வழுதிக்காக இப்படி அறிக்கை விடவில்லை. ஏனென்றால் பரிதியை அவ்வளவு பெரிய போட்டியாளராக கலைஞர் நினைக்கவில்லை. ஆனால் அவரை விட பெரிய கறுப்பு ஆடு தி.மு.க.விற்குள் இருக்கிறது. அதை சூசகமாக தி.மு.க.வினருக்கு அறிவிக்கும் வகையில்தான் இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. அதுவும் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கையும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும், திகார் ஜெயிலில் இருக்கும் தன் மகள் கனிமொழியையும் சந்தித்து விட்டு திரும்பிய  ஒரு வாரத்தில் கலைஞர் இப்படியொரு அறிக்கை வெளியிடுகிறார் என்றால் அதில் ஆயிரம் அர்த்தம் உள்ளது' என்கிறார். எது எப்படியோ, தேர்தலில் தோற்கும் கட்சிகளுக்குள் ஏற்படும் புகைச்சல் தி.மு.க.வையும் விட்டு வைக்கவில்லை என்பதையே இந்த அறிக்கை எல்லாம் காட்டுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X