Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 02 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.சஞ்சயன்)
இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? இந்தக் கேள்வியும் இதற்குத் தேடவேண்டிய பதிலும் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானவை.
ஏனென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக - ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்ற சூழல் இது.
இந்தப் பத்தி எழுதப்பட்ட போது, வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தொடர்ச்சியான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தெரியாத ஒரு பின்னணியில், அதைச் சார்ந்து இந்தப் பத்தி எழுதப்படுகிறது.
இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தீர்க்கமானதொரு பங்கை வகிக்கப் போவதன் வெளிப்பாடாகவேஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் அமைந்துள்ளன.
இந்தநிலையில் தான் இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது என்ற கேள்விக்கான விடை தேடலில் இறங்குவோம்.
இலங்கை விவகாரம் என்பது இன்றைய சூழலில் சாதாரணமாக சுமார் 65,610 ச.கி.மீ பரப்பளவுடைய ஒரு தீவினது அல்லது சுமார் 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாட்டினது தனிப்பட்ட விவகாரம் அல்ல.
உலகின் வேறெந்த ஒரு புள்ளியிலாவது- இதே பரப்பளவையும், இதே சனத்தொகையையும் கொண்டதொரு நாடாக இலங்கை இருந்திருக்குமேயானால், அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடோ திரும்பிக் கூடப் பாராது போயிருக்கலாம்.
ஆனால் இலங்கையின் அமைவிடம்- கேந்திர முக்கியமான இடத்தில் இருப்பதால், எல்லா நாட்டினதும் கண் இலங்கை மீது பதிந்துள்ளது.
ஒருவிதத்தில் இது இலங்கைக்கு சாதகமாக இருந்தாலும் கூட, இலங்கைத் தீவின் உள்நாட்டுக் குழப்பங்கள், இனப்பிரச்சினை போன்றவை நீடித்து நிலைப்பதற்கும், வலுப் பெறுவதற்கும் இந்த அமைவிடச் சூழலும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.
இந்த அமைவிடம் தான், அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளும் இலங்கையின் உள்விவகாரத்துக்குள் மூக்கை நுழைப்பதற்கு முக்கிய காரணம்.
ஜே.ஆரின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கச் செல்வாக்கு இலங்கையில் ஓங்கியிருந்தது. பின்னர், இந்தியாவின் செல்வாக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர் சீனாவின் செல்வாக்கும் இலங்கையில் மேலோங்கியது.
சீனாவின் செல்வாக்கு எல்லை கடந்த அளவுக்குப் போய் விட்ட நிலையில் தான் இந்தியா வேறு வழியின்றி இலங்கையை தனது கைக்குள் வைத்துக் கொள்ளப் போராட வேண்டிய நிலையில் உள்ளது.
ஏனென்றால் இலங்கையை சீனாவிடம் முற்றாகவே ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டால் அல்லது, இலங்கையை சர்வதேச அரங்கில் ஓரம்கட்டி விட்டால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்தாகி விடும்.
சீனா வகுத்து வரும் முத்துமாலை வியூகத்துக்கு இந்தியா பலியாகி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், இலங்கையை எப்பாடு பட்டாவது தன் கைக்குள் வைத்திருக்க வேண்டும். பனிப்போர் காலத்து இராஜதந்திரம் எல்லாம் இப்போது செல்லாக்காசாகி விட்டது.
தனக்கு விரும்பாத நாடு ஒன்றுடன் உறவுகளை வைத்துக் கொண்டால், அந்த நாட்டையும் சேர்த்தே கைகழுவி விடுவது தான் பனிப்போர் கால இராஜதந்திரம்.
அமெரிக்கா, ரஸ்யா போன்றவை மட்டுமன்றி அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக கூறிய இந்தியாவும் கூட கிட்டத்தட்ட இதே கொள்கையைத் தான் கடைப்பிடித்தது.
ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. அமெரிக்காவோ ரஸ்யாவோ இந்தியாவோ அல்லது சீனாவோ- தமக்கு வேண்டாத நாடுகளுடன் உறவுகளைக் கொண்டிருந்தாலும், அந்த நாடுகளை எப்படி மடக்கிப் போடலாம் என்றே சிந்திக்கின்றன.
அந்தவகையில் தான் இலங்கையை இப்போது அமெரிக்காவும்இ இந்தியாவும் பார்க்கின்றன. சீனாவின் செல்வாக்கிற்குள் இலங்கை அகப்பட்டுக் கொண்டாலும் அதனை தூர ஒதுக்கி வைத்து விட அமெரிக்காவும் சரி, இந்தியாவும் சரி- தயாராக இல்லை.
இலங்கை மீதான எத்தகைய வெறுப்புகள் இருந்தாலும், தாம் அதனை தூர விலக்கி வைக்கும் போது- இன்னமும் சீனாவுடன் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் என்று அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கருதுகின்றன.
அவ்வாறு சீனாவுடன் நெருக்கமாவதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பவில்லை. காரணம் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் தான்.
அண்மையில் இலங்கை அரசின் ஏற்பாட்டில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
பயணத்தின் முடிவில், அவர்களில் ஒருவரான ஜக் கிங்ஸ்ரனிடம் 'இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை அமெரிக்கா எவ்வாறு முறியடிக்கப் போகிறது?' என்ற கேள்வியை செய்தியாளர் ஒருவர் எழுப்பினார்.
அதற்கு அவர், "முன்னர் இலங்கையுடன் அமெரிக்கா நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தது. சீனாவுடன் இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை இலங்கை அதிகரித்துக் கொண்டதால்இ இந்த உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்திருப்பது அமெரிக்காவை அதிகம் கவலைகொள்ள வைத்துள்ளது.
இலங்கையுடன் வர்த்தக, இராணுவ, அரசியல் ரீதியான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலமே சீனாவின் தலையீட்டை முறியடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. புவியியல் ரீதியாக இலங்கையின் அமைவிடம் முக்கியமானது. எனவே அதன் மீதான கவனத்தை அமெரிக்கா நிச்சயமாக இழக்காது" என்று பதிலளித்திருந்தார்.
சீனத் தலையீட்டை முறியடிக்க அதேவழியில் தான் அமெரிக்காவும் முனையப் போகிறதே தவிர, இலங்கையை வெட்டிவிடத் தயாராக இல்லை.
இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்வது அவசியம். இலங்கைக்கு அமெரிக்கா நெருக்கடிகள் கொடுக்கும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும்இ ஆனால் அடித்து விரட்டாது.
தனக்கு விரோதமான நாடுகளுடன் உறவுகளைக் கொண்டிருந்தாலும்,இலங்கையை கழற்றி விட அமெரிக்கா தயாரில்லை.
லிபியத் தலைவராக இருந்த கேணல் கடாபியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருந்த உறவும், சீனாவுடனும் ஈரானுடனும் கொண்டுள்ள உறவுகளும் அமெரிக்காவை சினமடைய வைத்துள்ளது உண்மை.
இப்போது கடாபி இல்லை- இதன் மூலம் இலங்கையை புறக்கணிப்பதற்கான ஒரு காரணம் குறைந்துள்ளது. அதுபோல அடுத்து ஈரானின் பக்கமும் அமெரிக்காவின் கவனம் திரும்பப் போகிறது.
ஈரான் சர்வாதிக்காரத்தனம் நோக்கி நகர்வதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் மிக அண்மையில் கூறியதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இதுவும் இலங்கைக்கு ஒரு அடியாகவே அமையும்.
அமெரிக்காவுக்குப் பிடிக்காத நாடுகளிடம் இருந்து இலங்கையை மெல்ல மெல்ல விடுவிக்கப்படுகின்ற சூழ்நிலை உருவாகிறது. கடைசியாக இலங்கையுடன் எஞ்சியிருக்கப் போவது சீனாவாகத் தான் இருக்கும்.
சீனாவை முறியடிக்க அபிவிருத்தி, வர்த்தகம், இராணுவ உறவுகள் என்று பல்வேறு நெருக்கங்களின் மூலம் அமெரிக்கா உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள விரும்புகிறது. இது ஒருவித இராஜதந்திரம்.
முன்னர் அடிமேல் அடி அடித்து அழுத்தங்கள் கொடுத்து வந்த அமெரிக்கா இப்போது வேறோர் பாதையில் பயணிக்கிறது. இது இலங்கையைத் தன்வழிக்கு கொண்டு வருவதற்கான பாதை. ஆனால் இதற்குள் ஒரு சிக்கல் அமெரிக்காவுக்கு உள்ளது.
அதுதான் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டு. இதனை அடிப்படையாக வைத்து இலங்கை மீது அமெரிக்கா அதிகளவு அழுத்தங்களைக் கொடுத்து விட்டது.
திடீரென இலங்கை மீது போர்க்குற்றங்கள் ஏதும் கிடையாது- எல்லாமே சட்டரீதியாகத் தான் நடந்தது என்று கூறிவிட்டு ஒதுங்கி விட முடியாது.
அமெரிக்கா அவ்வாறு நினைத்தாலும், புலம்பெயர் தமிழர்கள் அதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கோசம் எழுப்புவார்கள்.
இந்தக்கட்டத்தில் தான் அமெரிக்க நலனுக்குள் தமிழரின் நலன் கேள்விக்குள்ளாகத் தொடங்கியுள்ளது. போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா திடீரெனப் போய் இலங்கை அரசுடன் ஒட்டிக் கொள்ள முடியாது.
அதுபோல தமிழ் மக்களுக்கு கொடுத்து வந்த நம்பிக்கையையும் ஒரேயடியாக சிதைத்து விட முடியாது.
இந்தநிலையில் தான் அமெரிக்கா போர்க்குற்றங்களை வைத்து எவ்வாறு அரசியல்தீர்வு ஒன்றைப் பெறுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதாகத் தகவல்.
ஒன்றைப் பெறுவதற்காக இன்னொன்றை இழத்தல் என்பது மனிதவாழ்வில் இயல்பானதொரு விடயமே.
ஆனால் இப்போது தமிழர்கள் பலரும் போர்க்குற்றங்களையே தமது பலமாக கருதுகின்றனர்.
முன்னர் விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் கொடுத்த பலத்தை, இப்போது போர்க்குற்றங்கள் கொடுத்திருப்பதாகவே பலரும் கருதுகின்றனர்.
ஆனால் அது எவ்வளவு காலத்துக்கு- எந்தளவுக்குப் பயன்தரக் கூடியதென்பது விவாதத்துக்குரிய விடயம்.
போர்க்குற்றச்சாட்டுகளை வெறுமனே கூறிக்கொண்டிருந்தால் அதில் பெறுமதி இருக்காது- அதற்கான ஆதாரங்களும் சர்வதேச ஆதரவும் அவசியம்.
இலங்கையின் பக்கம் அமெரிக்கா சாயத் தொடங்கினால் மேற்குலக ஆதரவும் இல்லாது போய்விடும்.
எனவேதான் நெருக்கடி கொடுக்கும் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசுடன் பேசி ஒரு அரசியல் தீர்வுக்கு வர கூட்டமைப்பை நெருக்குதலுக்குள்ளாக்க அமெரிக்கா முனைகிறது.
போர் முடிவுக்கு வந்தவுடன் அமெரிக்கா வலியுறுத்திய இரண்டு விடயங்களில் ஒன்று நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், மற்றது அரசியல் தீர்வு.
அரசியல்தீர்வை அமெரிக்கா வலியுறுத்தக் காரணம், இலங்கையில் மீண்டும் ஒரு போர் வந்து விடக் கூடாதென்பதற்குத் தான்.
உள்நாட்டுப் போர் நடந்த நாடுகளில் அரசியல்தீர்வும், நல்லிணக்கமும் ஏற்படுத்தப்படாது போனால் அங்கு மீண்டும் போர்வெடிக்க 60 வீதம் வாய்ப்புகள் இருப்பதாக, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் அண்மையல் கொழும்பில் வைத்துக் கூறியிருந்தார்.
அதுபோன்ற நிலை இலங்கையில் ஏற்பட்டு விடக் கூடாது என்பது அமெரிக்காவின் எண்ணம். அவ்வாறு மற்றொரு போர் வந்து விட்டால் சீனாவின் பிடிக்குள் இலங்கை இலகுவாக வீழ்ந்து விடும் என்பது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும்.
எனவே தான் போர் ஒன்று மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க அமெரிக்கா முனைகிறது. அதற்காகவே அரசியல்தீர்வுக்கு வலியுறுத்துகிறது.
அமெரிக்கா ஒன்றும் தமிழர்கள் சார்பாகவோ மனச்சாட்சியின் பக்கம் நின்றோ பேசுவதாக யாரும் கருதக் கூடாது.
அமெரிக்கா தனது நலன்களை முன்னிறுத்தியே எதையும் செய்யும்- அந்த வகையில் தான் இலங்கை விவகாரமும் அணுகப்படுகிறது.
சிறிது காலத்துக்கு முன்னர் அமெரிக்காவுக்கு இத்தகைய நோக்கங்கள் ஏதும் இருக்கவில்லை. ஆனால் இப்போது சீனாவை முறியடிக்க அமெரிக்காவும் தனது பங்கிற்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.
இதனால் தான் தமிழர்களுக்கு அரசியல்தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுக்க அமெரிக்கா முனைகிறது. அதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.
இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்கு நன்மை பயக்கக் கூடியதென்பதை உடனடியாக ஊகிக்க முடியாது.
இந்தச் சந்தர்ப்பத்தில், கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள முதன்மையான பெண் அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக 'புதினப்பலகை' இணையத்தளத்தில் தி.வழுதி என்ற கட்டுரையாளர் எழுதியுள்ள குறிப்பிட்டுள்ள ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தம்.
' இலங்கையைப் பொறுத்தவரை, 80% உள்ள சிங்கள இனத்தைப் பகைத்துக் கொண்டு எம்மால் எதனையும் அடைய முடியாது.
ஏனென்றால் - எமக்கு ஒத்துவரவில்லை என்பதற்காக ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியை அகற்றி விட்டுத் தேர்தலை நடத்தினால் கூடஇ திரும்பவும் ஒரு சிங்களக் கட்சி தான் ஆட்சியில் அமரப் போகின்றது. அந்தச் சிங்கள ஆட்சியோடு தான் நாம் வேலை செய்ய வேண்டியும் இருக்கும்.
அடிப்படையில் பார்த்தீர்களானால், நாங்களும் கூட, சிங்களவர்களுக்குப் பிடித்தவற்றை மட்டும் தான் சொல்லவோ, செய்யவோ முடியும். வேறு வழியில்லை'
இந்தக் கருத்துகளில் வெளிப்படும் உண்மைகளின் அடிப்படையில் பார்க்கும் போது, தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது ? எதைச் செய்யப் போகிறது? என்ற கேள்விக்கு ஓரளவுக்காவது பதில் கிடைக்கும்.
அந்தப் பதில் என்னவென்பதை இந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் அவரவர் தமது அறிவுக்கமைய தேடிக் கொள்வதே பொருத்தமானது. அதனை இன்னொருவர் திணிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
meenavan Wednesday, 02 November 2011 07:23 PM
என்ன செய்வது இலங்கை அரசு? விலாங்கு மீன் வேசம் கொண்டு,பாம்புக்கு தலை மீனுக்கு வால் காட்டி நிலைமையை சமாளித்து அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை ஓர் இழுத்தடிப்பை செய்யலாம்?
Reply : 0 0
UMMPA Wednesday, 02 November 2011 08:33 PM
திரு சஞ்சயன் அவர்களே,
உண்மையான ஒரு எதிர்வு குரல் என்று தான் நினைகிறேன். ஏன் இதுதான் உண்மையும். நாம் நமது வீட்டுபிரசினை நாம்தான் நமக்குள் கலந்து தீர்வுகாணவேண்டும். என்ன என்றால் கடந்த நான்கு தசாப்தகாலம் பக்கத்தில் இருந்த இந்திய முடிவுக்கு கொண்ண்டுவந்தபோது புலிகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் பிரேதசவுடன் இணைந்து முழுவதையும் தவிடுபொடியாக்கி விட்டார்கள். நடந்தது நடந்ததுதான் . இனி நமது மூளைப்பலத்தைக் கொண்டுதான் நமது பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் . இதற்கு சற்று வளைந்து கொடுத்து, சந்தர்ப்பம் வரும்போது ..........?
Reply : 0 0
riswan Wednesday, 02 November 2011 10:38 PM
இலங்கையில் எதுவும் தீர்வு கிடையாது !.......... இப்படியே காலங்கள் செல்லும்.
Reply : 0 0
m.i.m.musadique Friday, 04 November 2011 04:32 PM
அமெரிக்க வல்லரசுக்கு எது தேவை என்பதை
வெளிப்படையாகவே கூறிவிட்டீர்கள். அதுசரி, தமிழ் மக்களின் தேவை எதுவென்பதை அமெரிக்கா அறியவேண்டாமா?........ஆனால், தமிழ் மக்களின் தலைமைத்துவத்தில் உள்ள ஓட்டை சரிசெயயப்படும்வரை சிங்கள அரசுக்கு வேட்டைதான்...........
Reply : 0 0
rusan Wednesday, 30 November 2011 09:06 PM
என்ன பாடு படுத்துறங்க, இந்த நாட்ட போட்டு?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago