2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி

Super User   / 2011 நவம்பர் 15 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

• றிப்தி அலி

-முதலாவது தொடர்-

பாரசீக வளைகுடாவில் உலகுக்கு ஓர் ஆச்சரியக் குறியாய், வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்து நிற்கும் ஈரான் தேசத்து மண்ணில் கால் பதித்த போது இரவு வேளையாகியிருந்தது. கைக்கடிகாரத்தை பார்த்தேன் மணி 10.30 ஈரானிய நேரத்துக்கு எனது கடிகாரத்தைக் கொண்டு வர முட்களை இரண்டு மணி நேரங்கள் பின் நோக்கி நகர்த்த வேண்டியிருந்தது.

இன்றும் உலகம் தன் தலையில் வைத்துக் கொண்டாடும் கவிஞர்களான உமர் கையாம், இமாம் சாஅதி, சூபிக் கவிஞர் மௌலான ரூமி போன்றோர் தமது இலங்கியங்களை வடித்த பாரசீக மொழியை தன் தாய் மொழியாகக் கொண்ட ஈரானை தரிசிக்கின்றேன் என்பதை நினைத்துப் பார்த்த போது மனசுக்குள் விபரிக்க முடியாதொரு சந்தோஷம் உருவானது.

மேற்கு தேசங்களின் கண்களுக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் ஈரான், ஆசியாவின் தென் மேல் பகுதியில் அமைந்துள்ளது. 16 இலட்சத்து 48 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இந்த தேசம் - கஸ்பியன் கடல், துருக்மெனிஸ்தான், அஸர்பைஜான், ஆர்மேனியா ஆகியவற்றை வடக்கேயும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை கிழக்கேயும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

துருக்கி மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் ஈரானின் மேற்கில் அமைந்துள்ளன. தெற்கே ஓமான் கடல் மற்றும் பாரசீக வளைகுடா ஆகியவை எல்லைகளாகவுள்ளன. சுமார் 5,170 கிலோ மீற்றர் பிராந்திய எல்லைகளையும் சுமார் 2,510 கிலோமீற்றர் நீர் எல்லைகளையும் கொண்ட இந்த நாடு மத்திய கிழக்கின் நடுவே அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கடலான கஸ்பியன் கடலையும், பாரசீக வளைகுடாவினையும் இணைக்கின்றதொரு பாலமாக ஈரான் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கிற்கு குறுக்காக ஈரான் அமைந்துள்ளமையினால் கல்வி, கலாசார மற்றும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றது.

சுற்றுலா :

எண்ணற்ற நிரந்தர நீரோடைகள், தோட்டங்கள், மலை முகடுகள், பழத் தோட்டங்கள், மசூதிகள் மற்றும் புனித இடங்கள்... என ஈரானின் சிறப்புக்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இங்கு சுமார் 19 மில்லியன் ஹெக்டயர் நிலங்கள் பழத் தோட்டங்களுக்காகவும் பூங்காக்கள் மற்றும் பண்ணை நிலங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேவேளை, பயிர்ச்செய்கைக்காக சுமார் 10 மில்லியன் ஹெக்டயர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இன்னொரு புறம், தரிசுகளாகவும், பாலைவனங்களாகவும், மலைகளாகவும் பெரும் நிலப்பரப்புக்கள் காணப்படுகின்றன. இவை சுமார் 19 மில்லியன் ஹெக்டயர்கள் என கணக்கிடப்பட்டுள்ளன.

மூடிய கதவுகளைக் கொண்டதொரு தேசம் போல் ஈரானை அதன் எதிராளி நாடுகள் விமர்சித்து வருகின்றபோதும், சுற்றுலா போன்ற துறைகளை மேம்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் பல்வேறு வகையான ஊக்குவிப்புகளையும் வழங்கி வருகின்றது.

இதனால் ஈரானிய மலைத் தொடர்கள், கடற்கரைகள், பூங்காக்கள் எல்லாம் சுற்றுலாத் துறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமையைக் காண முடிகிறது.

குறிப்பாக, இஸ்லாமியர் அல்லாதவர்களே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளாக ஈரானுக்கு அதிகமாய் வந்துபோவதை அவதானிக்க முடிந்தது. ஆனால் ஒன்று, ஈரானிற்குள் நுழையும் அனைத்து பெண்களும் தலையை மூட வேண்டும் என்பது அங்குள்ள சட்டமாகும். இஸ்லாமியரல்லாத பெண்களென்றாலும் இந்தச் சட்டத்தைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

இதனால், நான் பங்கேற்ற 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான காண்காட்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த எல்லாப் பெண்களும் இஸ்லாமியர்கள் போலவே தோற்றமளித்தனர். அனைவருமே தலையை மூடியிருந்ததால், அவர்களில் இஸ்லாமிய பெண் யார் இஸ்லாமியரல்லாத பெண் யார் என்பதை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது.

இருந்தாலும், ஆடை விடயங்களில் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் முறைமை ஈரானில் இல்லை. உதாரணமாக, சவூதி அரேபியாவுக்குள் நுழையும் பெண்கள், தலையை மூடுவதோடு, உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஹபாயா எனும் ஆடையினையும் அணிதல் வேண்டும் என்ற சட்டம்மொன்று உள்ளது.

புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் சவூதி அரேபியா சென்றிருந்தேன். அதன்போது, ஐரோப்பிய பெண்ணொருவரை, சவூதி அரேபிய இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடையுடன் கண்ட போது ஆச்சரியமாக இருந்தது.
 
சவூதி அரேபியர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டேன். இஸ்லாமியரல்லாத பெண்களும் சவூதி அரேபியப் பெண்களைப் போன்றே ஆடைகளை அணிய வேண்டும். தவறுவது பாரிய குற்றமாகும் என அவர் விளக்கம் தந்தார்.

ஆனால், ஈரானில் இந்த நிலை இல்லை. அந்த நாட்டுக்குள் நுழையும் பெண்கள் இஸ்லாமியர் போன்று  தலையை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் சட்டமாகும். மற்றும் படி, அவர்களின் சாதாரண ஆடைகளில் மாற்றம் செய்யத் தேவையில்லை. உதாரணமாக, சல்வார், ஓவர் கோட் மற்றும் டெனிம் போன்ற ஆடைகளை அணிந்து வரும் ஒரு பெண் - ஈரானுக்குள் நுழையும் போது, அந்த ஆடைகளுடனேயே வரலாம்.

காலநிலை :

எந்த நேரமும் காலநிலையில் மாற்றம் ஏற்படக் கூடிய நிலையினைக் கொண்டதொரு நாடு ஈரான். இதனால், ஈரானின் ஒவ்வொரு பிரதேசமும் தனிப்பட்ட புவியியல் அமைப்பை கொண்டுள்ளன.

குறிப்பாக, ஈரானின் இயற்கை முக்கியமானதொன்றாகும். இதனால்தான் சுழற்சியான காலநிலை அங்கு காணப்படுகின்றது. அதாவது, சில காலம் உஷ்ணம், சில காலம் மழை, சில காலம் பனி, இன்னும் சில காலம் குளிர் என காலநிலை சுழன்று கொண்டேயிருக்கும்.

ஈரானில், வெப்ப நிலை சுமார் 10 பாகையிலிருந்து 35 பாகை செல்சியஸ் வரை காணப்படும். நான் அங்கு சென்றிருந்த போது, உயிர் உறையும் குளிர், வெப்பநிலை 9 பாகை செல்சியஸ் ஆகும்.

நமது நாட்டில் வெப்பத்திலிருந்து தப்பிக்க வீடுகள் மற்றும் அலுவலகங்களில் குளிரூட்டிகளை (ஏ.சி) பயன்படுத்துவதை போன்று ஈரானில் சூடாக்கிகளே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, அங்குள்ள சிறிய கடைகள் தொடக்கம் அலுவலகங்கள், வீடுகள், நட்சத்திர ஹோட்டல்கள் என எல்லா இடங்களிலும் சூடாக்கிகள் தான் காணப்படுகின்றன.

இதேவேளை, ஈரானியர்களின் பாரம்பரிய அடையாளமாகவும் அபிவிருத்தியின் சின்னமாகவும் நீர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய கொடி :

பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்கள் ஈரானிய தேசிய கொடியில் காணப்படுகின்றன. வெள்ளை பகுதியில் சிவப்பு நிறத்தில் அல்லாஹ் என குறிக்கும் இலட்சினையும் உள்ளது.

தேசியக் கொடியிலுள்ள பச்சை நிறம் சுதந்திரத்தையும், வெள்ளை நிறம் சமாதான ஈரானையும் குறிக்கின்றன. இஸ்லாத்துக்கு ஏதிரானவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான போரில் கொல்லப்பட்ட தியாகிகள் நினைவாக (Martyr) நினைவாக சிறப்பு நிறம் உள்ளது.

இதற்கு மேலதிகமாக பச்சை மற்றும் சிவப்பு நிற கரைப் பகுதியில் வெள்ளை நிறத்தினால் 'அல்லாஹ் மிக பெரியவன்' எனும் கருத்துடைய 'அல்லாஹு அக்பர்' எனும் அரபு வசனங்கள் உள்ளன.

சனத்தொகை:

ஈரானின் சனத்தொகை சுமார் 7 கோடியே 78 இலட்சத்து 91 ஆயிரத்து 220 ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் இள வயதினர். இதிலும், அரைவாசித் தொகையினர் 20 வயதிற்கும் குறைவானவர்களாவர்.

சனத்தொகையில் 60 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் நகர் புறங்களிலேயே வாழ்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு 100 ஆண்களுக்கு 103 பெண்கள் உள்ளனர்.

ஈரானில் 99 சதவீதமானவர்கள் முஸ்லிம்கள். ஏனையோரில் கிறிஸ்தவர்கள், ஆர்மேனியர்கள், யூதர்கள் மற்றும் நெருப்பை வணங்கும் சுரோசியர்கள் அடங்குகின்றனர்.

இங்கு வாழும் சிறுபான்மை சமூகங்களின் மதங்கள், ஈரானிய அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குள்ள சிவில் உரிமைகள் சிறுபான்மை இனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக சிறுபான்மையினருக்காக வழிபாட்டு தலங்களும் உள்ளன.

மொழி :

தேசிய மொழி பாரசீகம். இந்த மொழி தான் பிரதானமாகவும் உத்தியோகபூர்வமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக ஆங்கிலம் மற்றும் அரபு ஆகிய மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன.

அரசாங்கத்தினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான விளம்பர பதாகைகளில் பாரசீகம், ஆங்கிலம் மற்றும் அரபு ஆகிய மொழிகள் காணப்படுகின்றன. தனியார் விளம்பர பதாகைகளில் பாரசீக மொழி மட்டுமே காணப்படுகின்றது.



கடந்த ஒக்டோபர் மாதம் ஈரானில் நடைபெற்ற 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான காண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த எனது ஈரான் தொடர்பான அனுபவத்தினை அடுத்தவாரமும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இக்கட்டுரை தொடர்பான உங்கள் விமர்சனங்களை rifthy.ali@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

தொடர்புடைய செய்திகள்:

பிச்சைக்காரரில்லா ஈரான்! (தொடர் - 6)

பெண்களுக்கும் சமவுரிமை கொடுக்கும் ஈரான் (தொடர் - 5)

வட்டியை விரும்பும் ஈரானியர்கள் (தொடர் - 4)

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 3)

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 2)


You May Also Like

  Comments - 0

  • pTk Wednesday, 16 November 2011 03:09 PM

    தகவலுக்கு நன்றி...

    Reply : 0       0

    arun Wednesday, 16 November 2011 03:46 PM

    நான் உங்கள் கட்டுரையை படித்தேன் நன்றாக உள்ளது. ஆனால் ஒரு குறை கண்டேன்... நீங்கள் அனுபவத்தை விட தரவை தான் அதிகம் பயன்படுத்தி உள்ளீர்கள். அனுபவத்தை அதிகம் பயன்படுத்துக...

    Reply : 0       0

    Nafar Wednesday, 16 November 2011 04:05 PM

    மிகவும் சிறப்பான கட்டுரை ஒன்று மிக அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. இப்போது ஈரானை பற்றி அறிந்து கொண்டேன். மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடுகளின் வரிசையில் 18ஆவது நாடு என்று சொல்லபடுகிறது என்று படித்து இருக்கேன்.

    Reply : 0       0

    Winter Wednesday, 16 November 2011 05:05 PM

    இனிய குறுங் கட்டுரை. வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    ullooran Wednesday, 16 November 2011 08:07 PM

    வாழ்த்துக்கள்...! ஈரானின் இராணுவ பலம் பற்றியும் தகவல்களைத் தந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே... !

    Reply : 0       0

    faizmohamed Wednesday, 16 November 2011 08:24 PM

    நன்றி வாழ்த்துகள்

    Reply : 0       0

    Fasly Wednesday, 16 November 2011 09:54 PM

    நல்ல கட்டுரை . ஆனால் உங்கள் அனுபவக்கட்டுரை என்று கூறிவிட்டு திசை மாறி சென்றிருக்கின்றிர்கள். இது ஈரானின் புவியியல் சம்பந்தமான சதாரண கட்டுரை. இதில் உங்கள் அனுபவம் சார்ந்த எந்த விடயங்களும் இருக்கவில்லை. அடுத்த கட்டுரையில் மாற்றம் தேவை. என்றாலும் பல புதிய விடயங்களையும் (எனக்குத்தெரியாதிருந்த) தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Ansar Wednesday, 16 November 2011 10:18 PM

    நன்றாக ஏறுகிறது. ஆனால் ஒரு திருத்தும். சவுதி அரேபியாவில் சவுதி அல்லாத பெண்கள் தலையை மறைக்க வேண்டியதில்லை. உடலை மறைத்து ஆடை அணிந்தால் போதுமானது. நான் இங்கு கடந்த நன்கு வருடமாக வேலை பார்க்கிறேன். இங்கு முஸ்லிம் தவிர்ந்த வெளிநாட்டு பெண்கள் தலை மறைக்க மாட்டார்கள்.

    Reply : 0       0

    hassanqs Thursday, 17 November 2011 12:30 AM

    நன்றி

    Reply : 0       0

    ஓட்டமாவடி ஜெமீல் Thursday, 17 November 2011 03:58 AM

    இரண்டாவது தொடரில் ஈரானின் (பாரசீக) தொன்மிய வரலாற்றையும் குறிப்பிட்டால் வாசகர்களாகிய எமக்கு இன்ட்ரஸ்ட்டாக இருக்கும்.

    Reply : 0       0

    fazith, uk Thursday, 17 November 2011 07:25 AM

    அருமையான கட்டுரை கட்டுரையின் தலைப்பு அனைவரையும் உள்ளிர்க்கிறது... அடுத்த தொடரில் ஈரானின் சமகாலத்துடன் தொடர்புடைய விடயங்களும் அமைந்தால் நன்றாக இருக்கும்.....

    Reply : 0       0

    niros Friday, 18 November 2011 04:57 AM

    கட்டுரையை படித்தேன் மிகவும் சுவாரசியமாக உள்ளது. இன்னும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    jd Monday, 28 November 2011 01:57 AM

    நல்ல கட்டுரை.
    அமெரிக்க ஈரானுடன் ஏன் எப்போதும் உரசிக்கொண்டே இருக்கிறது? அதனுடைய பெற்றோலிய வளமா? அல்லது இஸ்லாமிய ஆட்சியின் மீதுள்ள வெறுப்பா?

    Reply : 0       0

    raseeha Wednesday, 14 December 2011 11:59 PM

    pls rifthy ungaludaiya iran visit photovaium katturaiyil inaiunkal pls.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X