Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 நவம்பர் 23 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதம் முடிந்த பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டிருக்கின்றன. பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு உள்ளிட்ட தமிழக அரசின் அறிவிப்பால் இப்படி ஓரணியில் சேர்ந்துள்ளது சாத்தியமாகியிருக்கிறது. முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு மாநில நிர்வாகத்தை சீர்படுத்துவதில்தான் முக்கிய கவனம் செலுத்தினார். தி.மு.க. ஆட்சியில் நிர்வாகம் சீர்கெட்டு விட்டது என்பதை அவர் தேர்தல் பிரசாரத்திலும் சொன்னார். ஆட்சிக்கு வந்தபிறகும் சொல்லி வருகிறார். இது ஏதோ இப்போது கட்டண உயர்விற்காக தி.மு.க. மீது வைக்கும் குற்றச்சாட்டு அல்ல.
இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்றதும் அரசின் நிதி நிர்வாகத்தை சரி செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி விட்டு சென்ற ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடன்சுமையே இதற்கு முக்கிய காரணம். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க. சென்றமுறை ஆட்சி செய்ததால் இதுபோன்ற கட்டண உயர்வுகளை நினைத்துக் கூட அக்கட்சியால் பார்க்க முடியவில்லை. அதனால்தான் பெரிய அளவில் மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றை வெளிப்படையாக செய்யவில்லை. நிதி நிர்வாகம் சரி செய்யப்பட வேண்டும் என்பதால், சென்ற தி.மு.க. ஆட்சியில் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியையே தொடர்ந்து இப்போதும் அப்பதவியில் நீடிக்க அனுமதித்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆட்சிக்கு வந்தவுடன் நிதி நிர்வாகத்தை சீர்படுத்தும் நோக்கில் முதலில் முதல்வர் எடுத்த நடவடிக்கை வணிகவரி விதிப்பு! அதன் மூலம் சுமார் 4000 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்தார். அதற்கு அடுத்தபடியாக இப்போது பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வை அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த கையோடு இப்படியொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஏழை, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும். ஆனால் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளோ, "இன்று மாநில அரசு இருக்கின்ற நிதி பற்றாக்குறையில் இது தவிர்க்க முடியாத கசப்பு மருந்து. பொதுத்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலைமை ஏற்படுவதையும் குறிப்பாக மக்களின் அத்தியாவசிய தேவைகளான பால், பேருந்து, மின்சாரம் போன்றவற்றை வழங்க இந்த பொதுத்துறை நிறுவனங்கள் இருக்க வேண்டும். அப்படியென்றால் கட்டண உயர்வை தவிர வேறு வழியில்லை" என்கிறார்கள்.
கட்டண உயர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களில் போக்குவரத்துக்கழகமும், ஆவின் நிறுவனமும் பொதுத்துறை நிறுவனங்கள். நீண்ட காலமாகவே இந்த இரு நிறுவனங்களும் நிர்வாக சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. போக்குவரத்து துறை நிறுவனங்களைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் கட்சிகளின் தொழிற்சங்கங்கள்தான் அதிகாரமிக்கவைகளாக விளங்குகின்றன. அந்த சங்கங்களை மீறி அங்கு பணிபுரியும் அதிகாரிகள் எந்த அதிரடி நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்க முடிவதில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் பஸ்களின் பெயர்களை டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், எம்-சேர்வீஸ் என்றெல்லாம் மாற்றி கட்டணத்தை உயர்த்தினார்களே தவிர, வெளிப்படையாக கட்டண உயர்வு என்று அறிவிக்கவில்லை. இந்நிலையில் இப்போது வெளிப்படையாக கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் உள்ள சீனியர் அதிகாரி ஒருவர், "போக்குவரத்து கழகங்களை தனியார் மயம் கூட செய்து விடலாம் அல்லது தனியார் முதலீட்டை போக்குவரத்துக் கழகங்களில் அனுமதிக்கலாம் என்றெல்லாம் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடைபெற்றது. அப்படியொரு வழியை கடைப்பிடிக்க தமிழக அரசு விரும்பவில்லை. "தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள்" என்ற குற்றச்சாட்டு எழும் என்பதால், கட்டண உயர்வே தற்போதைக்கு சிறந்த வழி என்றே பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் இது தேவையானதே" என்கிறார். இதேமாதிரி ஆவின் நிறுவனமும் பொதுத்துறை நிறுவனமே. மற்ற எத்தனையோ தனியார் பால் நிறுவனங்கள் இருந்தாலும், அரசு சார்ந்த ஆவின் நிறுவனத்தின் பால் பொதுமக்கள் மத்தியில் பிரபல்யம். ஆனால் தனியார் பால் நிறுவனங்கள் செல்வம் சேர்க்க - ஆவின் நிறுவனத்தின் பால் பொதுமக்களின் தேவைக்கு ஏற்றபடி வழங்க முடியாமல் பார்த்துக் கொள்வார்கள். ஆட்சிகள் மாறினாலும் ஆவின் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் காட்சிகள் மாறுவதில்லை. ஆகவேதான் நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிறுவனத்திற்கு "ஒக்ஸிசன்" கொடுக்க பால் விலையையும், அந்நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கொள்முதல் விலையையும் உயர்த்தியுள்ளது அ.தி.மு.க. அரசு. மூன்றாவதாக மின் கட்டண உயர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலை. சென்ற தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தின் நிர்வாகம் மொத்தமாக சீர்கெட்டுக்கிடந்தது என்றே சொல்ல வேண்டும். அத்துறையின் அமைச்சராக இருந்த ஆர்க்காடு வீராச்சாமி மீது அப்போதே "நிர்வாகத்தைக் கண்டுகொள்ளவில்லை" என்ற குற்றச்சாட்டு எழுந்தது. "போதிய மின் உற்பத்தி இல்லாததால் வெளியிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய நேர்ந்துள்ளது. இதனால் 48,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் மின்சார வாரியம் சிக்கியுள்ளது. மாதம்தோறும் ஏறக்குறைய 1,500 கோடி ரூபாய்க்கு மேல் வட்டி செலுத்தி வருகிறோம். நிதிசுமையால் மின்வாரியத்திற்கு அடிப்படை தேவையான பொருள்களை கூட கொள்முதல் செய்ய முடியாமல் தவிக்கிறோம். எத்தனை நாளைக்குத்தான் இதேநிலையில் மின்வாரியத்தை நடத்திச் செல்ல முடியும். பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்றால் மின் கட்டண உயர்வை அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறார் மின்வாரியத்தின் மூத்த தலைமைப் பொறியாளர் ஒருவர்.
இப்படி தமிழக அரசு மக்களுக்கு "கசப்பு மருந்து" கொடுக்க வேண்டிய நிலை வரும் என்பதை உணர்ந்தே ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசுக்கு "சிறப்பு நிதியுதவி வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அதற்கு மத்திய அரசு பெருமளவில் செவி மடுக்கவில்லை. தேசிய அரசியலில் யார் பிரதமர் என்பதை முடிவு செய்யும் நாடாளுமன்ற தேர்தலை அடுத்து வரும் 2014இல் மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சி சந்திக்க வேண்டியதுள்ளது. இது மாதிரி சூழ்நிலையில் "தேசிய அரசியலில் ஆர்வம் கொண்ட" முதல்வர் ஜெயலலிதாவிற்கு நிதியுதவி செய்து மாநிலத்தில் நல்லாட்சி நடத்துகிறார் என்ற பெயரை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க மத்தியில் உள்ள ஆளுங்கட்சி விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் சிறப்பு நிதியுதவியும் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிட்டவில்லை. "தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடும், மத்திய அரசு சிறப்பு நிதி உதவி செய்யாததுமே கட்டண உயர்விற்கு காரணம்" என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதன் பின்னணி இதுவே! இப்போது கட்டண உயர்வை அ.தி.மு.க.வின் முந்தைய கூட்டணி கட்சிகள், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே எதிர்த்துள்ளன. குறிப்பாக தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானதேசிகன் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மட்டுமில்லாமல், "நிதி ஒதுக்கவில்லை என்று முதல்வர் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது குற்றம் சாட்டுகிறார்" என்று சாடியுள்ளார். அதேபோல் "ஆறுமாதம் அ.தி.மு.க. அரசை விமர்சிக்க மாட்டேன்" என்ற தன் விரதத்தை முடித்துக் கொண்ட எதிர்கட்சி தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் "நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் இந்த கட்டண உயர்வு" என்று அ.தி.மு.க. அரசை கடுமையாகவே விமர்சித்துள்ளார்.
திடீரென்று தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட கட்டண உயர்வு முடிவுகள் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை ஓரணியில் சேர வைத்திருக்கின்றன. அனைத்து கட்சிகளும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் அறிவித்து இருந்தாலும், தி.மு.க மட்டும் இன்னும் போராட்டத்தை அறிவிக்கவில்லை. அதற்கு மாறாக ஏற்கனவே ஆட்சியிலிருந்த கட்சி என்ற முறையில் "போக்குவரத்துக் கழகங்களுக்கு கடன்சுமை இருப்பது உண்மை. அப்போதே அதிகாரிகள் கட்டண உயர்வு பற்றி என்னிடம் சொல்வார்கள். நான் தான் மக்கள் தலையில் அதை வைக்க வேண்டாம் என்று கூறினேன்" என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அ.தி.மு.க. அரசின் கட்டண உயர்வு அறிவிப்பிற்கு இதற்கு முன்பு ஆட்சி செய்த முதல்வர் என்ற முறையில் கருணாநிதி தெரிவித்த கருத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, "வேறு வழியின்றியே கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. சென்ற தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடே இதற்கு காரணம். மக்கள் நலன் கருதி கடினமான நடவடிக்கைகளை உங்களால்தான் தைரியமாக எடுக்க முடியும் என்று என்னிடம் நேரில் சொன்ன எதிர்கட்சி தலைவர்கள் (கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தே.மு.தி.க. போன்ற கட்சிகளின் தலைவர்கள்) இப்போது கண்டனம் செய்வது நியாயமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இப்போது யார் போராட்டம் நடத்தினாலும், அதனால் உடனடி "தேர்தல் லாபம்" ஒன்றும் வந்துவிடப் போவதில்லை என்று முக்கிய கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்குமே தெரியும். ஏனென்றால் தேர்தல் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் இவை! ஆகவே யார் போராட்டம் நடத்தினாலும், எதிர்காலத்தில் அறுவடை செய்யப்போவது அணிக்கு தலைமை தாங்கும் சக்தி படைத்த இந்த கட்சிகள்தான்!
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு வருடங்களுக்கு மேல் இருக்கிறது. அதனால்தான் தி.மு.க., மற்ற கட்சிகள் போராடட்டும் என்று அமைதி காத்து, கண்டன அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க.வும் களத்தில் இறங்கி போராடலாம். தேர்தல் நெருங்கும் வேளையில் தங்கள் போராட்டத்தை வேகப்படுத்திக் கொள்ளலாம் என்பதே தி.மு.க.வின் தற்போதைய யுக்தி. 2001-2006 வரை ஆட்சியிலிருந்த அ.தி.மு.க., அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை, மதமாற்ற தடை சட்டம், இலவசங்கள் ரத்து, பொடா சட்டத்தில் வைகோ கைது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதி்த்துக் கொண்டது. அதன் விளைவாக 2004 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், அத்தேர்தலுக்கு பின் மதமாற்ற தடை சட்டம் வாபஸ் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது அ.தி.மு.க. அரசு. அது மட்டுமின்றி, சுனாமி பேரழிவின் போது நிதியுதவி வழங்கி "இலவசங்களுக்கு எதிரான கட்சி அ.தி.மு.க" என்ற அந்தஸ்தை மாற்றியது. 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்த அந்தஸ்தை ஓரளவு மாற்றி 2006 சட்டமன்ற தேர்தலில் 61 எம்.எல்.ஏ.க்களை பெற்று பிரதான எதிர்கட்சியாக அமைந்தது அ.தி.மு.க. குறிப்பாக தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்கட்சியாக வந்த கட்சி அவ்வளவு எம்.எல்.ஏ.க்கள் பலம் பெற்றது அதுதான் முதல் முறை. அதே மாதிரி, சுய பலத்துடனையே ஆட்சி அமைத்த காட்சிகள் காலம் நீங்கி, பலமான கூட்டணி இருந்தும், ஆட்சிக்கு வந்த தி.மு.க.விற்கு அப்போது சுய மெஜாரிட்டிக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் கிடைக்காமல் வெறும் 96 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. அதனால் சென்ற ஐந்து வருடம் (2006-2011) காங்கிரஸ் கட்சியின் தயவுடன் ஆட்சி நடத்தி, "மைனாரிட்டி அரசு" என்று அ.தி.மு.க. வழங்கிய பட்டயத்தை சுமந்தது தி.மு.க. 2004க்கு முன்பு அ.தி.மு.க. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் அக்கட்சிக்கு ஏறக்குறைய 13 வருடங்களாக "மத்திய அதிகாரம்" கிடைக்காமல் செய்து விட்டது. அந்த சூழ்நிலை இனி அ.தி.மு.க.விற்கு வரக்கூடாது. குறிப்பாக அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அப்படியொரு "ரிஸ்க்" எடுக்கக்கூடாது என்றே கருதுகிறது அ.தி.மு.க. தலைமை. அதனால்தான் ஆட்சிக்கு வந்தவுடன் இலவச மிக்ஸி, கிரைண்டர், பேன், லேப்டாப் என்று அறிவித்து வழங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதா, இன்னொரு புறம் சிறந்த நிதி நிர்வாகத்திற்கு தேவையான அதிரடி நடவடிக்கைகளை இப்போதே எடுத்து, தமிழக அரசின் நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று செயல்படுகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இப்படியொரு கட்டண உயர்வையோ, நிர்வாகம் தொடர்பான அதிரடி நடவடிக்கைகளையோ எடுத்து 2004 நாடாளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட நிலை 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். இதை மனதில் வைத்தே, தன்னுடன் இருந்த கூட்டணி கட்சிகளின் கண்டனத்தைக் கூட கடுமையாக விமர்சிக்காமல், "இப்படி கண்டனம் செய்வது சரியா என்பதை அவர்களின் மனச்சாட்சிக்கு விட்டுவிடுகிறேன்" என்று ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட கோடிட்டுக் காட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago