2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஏன் வேண்டும் இலங்கை பேச்சுவார்த்தை?

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 06 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்து வருடம் முழுவதுமாக நடந்தேறியுள்ள இலங்கை அரசு தரப்புக்கும் தமிழ் தேசிய கூட்டணி தலைமைக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நடைபெறும் டிசெம்பர் மாதம் நான்கு முறை சந்தித்து பேச முடிவு செய்ததன் மூலம், இரு தரப்பினரும் இந்த தொடர் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க முடிவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைய வேண்டும் என்று இரு தரப்பிலும் எண்ணுபவர்கள் உள்ளனர். அரசு தரப்பில் இத்தகைய எண்ணம் கொண்டோர், சிங்கள பேரினவாதிகள் மட்டுமல்ல. நாட்டின் இராணுவ தலைமையிலும் பலர் இத்தகைய சந்தேகங்களை உள்ளடக்கி, தங்களது அரசுக்கு தவறான அணுகுமுறைகளை அறிவுறுத்தி வருகின்றனர். இவர்களது சந்தேகங்களை முற்றிலும் தவறானவை என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாது. கடந்த கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது, துறை ரீதியான இந்த கவலைகள் உண்மை நிகழ்வுகளாக வடிவம் எடுக்கும் சாத்திய கூறுகள் குறித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. அது போன்றே, தமிழர் தலைமையும், சமகால அரசியல் சரித்திரத்தின் அடிப்படையில் இலங்கை அரசு தலைமையையும், சிங்கள - பௌத்த கட்சிகளையும், பேரினவாத போக்கையும் சந்தேக கண்ணுடன் தொடர்ந்து பார்த்து வருவதும் இயற்கையே. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலத்திற்கு பின்னர், இந்த சந்தேகம் அதிகமாகி இருக்குமே தவிர குறைந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது. இங்கு தான் பிரச்சினையே.

தங்களுக்குள் உள்ள சந்தேகங்களை மனம்விட்டு பேசி தீர்க்கும் மனநிலை இருசாரார் இடையேயும் தோன்றவில்லை என்பது வருத்தம் அளிக்கும் விடயம். ஆனால் அவ்வாறு எல்லாம் நினைத்த மாத்திரத்தில் நடந்துவிடும் என்று எதிர்பார்ப்பது கூட, களநிலையை வைத்துப் பார்க்கும் போது தவறான அணுகுமுறை என்பது தெளிவாகும். இவை எல்லாம் அடித்துப் பழுக்க வைக்கும் வகையை சேர்ந்தவை அல்ல. மாறாக, தானாகவே கனிய வேண்டிய விஷயங்கள். இங்கு தான் பிரச்சினையே. இலங்கை அரசைப் பொறுத்த வரை, இத்தகைய அணுகு முறைக்கு தயாராக உள்ளதாக கருக இடம் உள்ளது. ஆனால், அத்தகைய அணுகுமுறையை, தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ஒரு தந்திரோபாயமாகவே தமிழ் சமூகம் பார்க்கிறது. இதுவும் சூழ்நிலை சார்ந்த ஓர் எண்ணப்போக்கே. இதனை மாற்ற, தமிழ் சமூகத்தை வெற்றி கொள்ளும் முகமான எந்த ஒரு முயற்சியையும் அரசு தரப்பு எடுக்கவில்லை. மாறாக, தமிழ் மக்களை, தொடர்ந்து சந்தேக கண்ணுடன் நோக்கும் மனப்பான்மையும், அதனால் அரசு எடுக்கும் முடிவுகளும் தமிழ் சமுதாயத்தின் பயத்தையும் வெறுப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.

இலங்கை அரசை பொறுத்த வரை, தமிழர் அரசியல் தலைமையில் தொடர்ந்தும் முன்னாள் போராளிகள் இடம் பெற்றுவருவது ஏற்க முடியாத ஒன்று. இந்த போராளிகளில் பலரும், விடுதலை புலிகள் இயக்கத்தால் இல்லாமல் ஆக்கப்பட்டார்களே தவிர, உண்மையான மனமாற்றத்தால் மிதவாத அரசியலை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல என்பதே அரசின் நிலைபாடு. இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதற்காக, தங்களது மனமாற்றத்தை நிரூபிப்பதற்கு அவர்கள் என்ன, தங்கள் இதயத்தை கிழித்தா காட்ட வேண்டும்? அவ்வாறு செய்தால் மட்டும், அரசும் பேரினவாதிகளும் தங்களது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள் என்று சொல்வதற்கு இல்லை. மாறாக, அதனை கூட, விடுதலை புலிகள் இயக்கம் சார்ந்த ஓரு தந்திரமாகவே அதனை காண்பார்கள். இதுவே இன்று இலங்கையில் நிலவும் உண்மை நிலை.

இன்றைய சூழ்நிலையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அதிவிரைவில் தீர்வு காண வேண்டும் என்பதில், அரசையும் தமிழ் தலைமையையும் விட, உலக நாடுகளே அதிக ஆர்வம் காட்டுவதாக ஒரு தோற்றம் உருவாகி வருகிறது. எது எப்படியோ, காரண, காரணிகள் எதுவாகிலும், இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில், சர்வதேச சமூகம் உறுதியாக உள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது. இதில் அவர்களது தற்போதைய நிலைபாடு, தமிழ் சமூகத்திற்கும், தமிழ் அரசியல் தலைமைக்கும் ஆதரவாக உள்ளது. தமிழ் அரசியல் தலைமையும் இது தங்களது உபாயங்களுக்கு உதவிகரமாக  இருக்கும் என்றும் எண்ணுவதாகத் தோன்றுகிறது.

ஆனால், இந்த நிலைமை நிரந்தரம் அல்ல என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த உண்மையை புரிந்து செயல் படாத காரணத்தால், விடுதலை புலிகள் இயக்கம் - சர்வதேச சமூகத்தை தனது முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் அத்தாட்சி அளிக்கும் ஓர் இனமாகவே கண்டு வந்தது. அது தொடராத பட்சத்தில், விடுதலை புலிகள் இயக்கம், சர்வதேச சமூகத்தில் இருந்து விலகி நின்று செயல்பட தொடங்கியது. இதுவே, பிரபாகரன் தலைமை மீது உலக நாடுகள் 'திருந்த முடியாதவர்' என்ற பட்டத்தை கட்டுவதற்கும் காரணமானது.

விடுதலை புலிகள் இயக்கம் ஆகட்டும், அல்லது தமிழ் அரசியல் தலைமை ஆகட்டும், எப்போதுமே அரசாங்கத்தில் பங்கு பெறாத காரணத்தால், பன்னாட்டு தலைமைகளுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நெளிவு, சுளிவுகளை கற்று அறியாதவர்கள். ஓருவிதத்தில் வெகுளித் தன்மை உள்ளவர்கள் என்று எண்ணுவதற்கு கூட இடம் இருக்கிறது. இதுவே, அவர்கள் தங்களது நிலைபாடுகள் குறித்து உலக நாடுகள் ஏற்றுக் கொண்டதாக கருதி செயல்படும்போது, அந்த நாடுகள் மாறான முடிவுகளை எடுக்கும் தருணத்தில். தாங்கள் ஏமாற்றப் பட்டதாக எண்ணி, விரக்தி அடைந்து வந்துள்ளன. அத்தகைய தருணங்களில், தமிழ் அரசியல் தலைமை விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடும். இதுவே கூட, விடுதலை புலிகள் இயக்கம் சார்ந்த இராணுவ ரீதியான முயற்சிகளை தமிழ் மக்கள் எளிதாக ஏற்றுக் கொள்வதற்கான வடிகாலாக அமைந்து வந்துள்ளது.

உலக நாடுகளை பொறுத்த வரையில், உண்மையான களநிலையை அவர்கள் முழுவதுமாக உணர்ந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதே தவறான அணுகுமுறை என்பதை இருசாராரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு புரிவதெல்லாம், கடந்த கால களநிலைகளின் அடிப்படையில், அவர்கள் அறிந்து கொண்டதாத எண்ணிக் கொள்ளும் படிப்பினை மட்டுமே. சுமகால நிலைபாடுகளை அவர்கள் உணர்ந்து கொள்ளும் வேளையில், கடந்த காலம், அதற்கு பாலமாக அமையவில்லை. மாறாக, பாரமாகவே அமைந்துள்ளது. இது, இலங்கையை பொறுத்த வரையில் துரதிர்ஷ்டமான ஒன்று. இது போலவே, தங்களது நியாயங்களை சர்வதேச சமூகம் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்களது முயற்சிகளுக்கு பல்வேறு சாயங்கள் பூசி கொச்சை படுத்துவதும், அவர்களை சோர்வடைய செய்கிறது.

இத்தகைய எண்ணம், இலங்கை அரசை விட தமிழ் தலைமைகளிடம் அதிகம் இருந்ததாகவே கருத இடம் உள்ளது. இதனை ஒட்டி விடுதலை புலிகள் இயக்கம், போர் மட்டுமே தாங்கள் எதிர்பார்க்கும் முடிவினை தங்களுக்கு வென்று அளிக்கும் என்ற முடிவிற்கு வந்துள்ளார்கள். இத்தகைய சூழ்நிலையில், அவ்வப்போது ஆட்சியில் இருந்து வந்துள்ள தலைமைகளும், இனப்பிரச்சினைக் குறித்த தங்களது அப்போதைய அணுகுமுறைகளுக்கு, சர்வதேசத்தின் அங்கீகாரத்தை கேட்காமலே கூட பெற்று வந்துள்ளனர். இந்த பின்னணியில், தற்போது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் கூட்டணி தலைமை, சர்வதேச சமூகம் சார்ந்த தனது முன்னெடுப்புகளில் உலக அரங்கத்தின் சூழல்களையும், அவர்களது வாக்கு சாதுரியத்தையும், அதன் பின் ஒளிந்து கிடக்கும் உண்மையான, அர்த்தபுஷ்டியான கருத்துகளையும் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

ஆனால், சர்வதேச சமூகம் வாய்மூடி கேட்டுக் கொண்டு இருக்கும் போதெல்லாம் பேசி தீர்த்து விட்டு, இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று அவர்கள் பேச தொடங்கும் போது செவிமடுக்க மறுப்பது, தமிழ் சமூகமும் அதன் தலைமையும், விட்டுக்கொடுத்து பேசும் விடயத்தில் விவரம் அறியாதவர்களாகவோ, அல்லது வில்லங்கம் பிடித்தவர்களாகவோ மட்டுமே தங்களை காட்டி வந்துள்ளார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.

இனப்பிரச்சினை, இலங்கை சார்ந்த பிரச்சினை மட்டுமே. விடுதலை புலிகள் இயக்க தலைமையின் கீழ் அது, 'உலகளாவிய தீவிரவாதம்' என்ற குடைக்குள் வந்தது. அப்போது மட்டுமே, அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள் என்று கூறலாம். அதற்காக அவர்களை மட்டுமே குறை கூறுவதும் தவறு. அவர்களை விட்டு விலகிச் சென்று அரசியல் செய்வதும் இயலாத காரியமாகி விட்டது. தங்கள் நாட்டில் உள்ள தமிழ் வாக்காளர்களை மனதில் வைத்து மட்டுமே அந்நாட்டு தலைமைகள் இனப்பிரச்சினையை அணுகுவதாக எண்ண இடம் உள்ளது. இந்த நிலைமை ஏதோ ஒருவிதத்தில் மாறி விட்டால், அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் ஜுரம் விட்டுப் போய்விடும். ஏன், தமிழ் மக்கள் தங்களை இன அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்ற கையறு நிலை சார்ந்த எண்ணம் கூட அவர்களை ஒருவித பழிவாங்கும் மனநிலைக்கு தள்ளி விடலாம்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் சமுதாயம் இத்தகைய மாற்றங்களையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இல்லை என்றால், மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்ற நிலைமை மீண்டும், மீண்டும் ஏற்படலாம். இதன் காரணமாக, இலங்கையின் உள்ளே இனப்பிரச்சினை சார்ந்த தமிழ் மக்களின் எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் மாறாத பின்னடைவு தொடரலாம். அன்று தமிழ் சமுதாயமும் அதன் அரசியல் தலைமையும், சின்னாபின்னமாகி இருந்தால், இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற ஆவலோ, கட்டாயமோ, அன்றைய ஆட்சியாளர்களிடம் இருக்க வாய்ப்பில்லை என்ற அடிப்படையிலேயே தமிழ் மக்கள் இன்று செயல்பட வேண்டும். அவ்வாறு தமிழ் தலைமையும் மக்களும் மேலும் மேலும் தங்களை தாங்களே துண்டாடிக் கொள்வார்கள் என்று எண்ணுவதற்கு மட்டுமே தற்போது இடம் உள்ளது. இதுவும் தமிழ் மக்களின் ஓரு சாபக்கேடு.

உள்நாட்டு பிரச்சினை என்று ஆன பிறகு, அதில் வெளிநாட்டு பங்களிப்பிற்கு வழி செய்து விட்டு, பிற்காலத்தில் அதனை விட்டு விலகி நிற்க முயல்வது அர்த்தமற்றது மட்டும் அல்ல, அது ஆபத்தானதும் கூட. இதில் தமிழ் அரசியல் தலைமையை விட, இலங்கை அரசின் நிலைமை, நீண்டகால நோக்கில் அவர்களுக்கு பயன் அளிக்கும் என்று கருதலாம். ஓன்று, தனி மனிதர்களும் ஒரு சமுதாயமும் சார்ந்தது. காலம் தோறும் மாற்றங்களை எதிர்நோக்கி வருவது. ஆனால், அரசு அமைப்புகளோ, காலங்கள் மாறினாலும் தான் மாறியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்தே தீர வேண்டும் என்ற கட்டாயங்களுக்கு கட்டுப்படாதவை. 'அடிப்படை வலிமை, வல்லமை மற்றும் தொடர்ச்சி என்பன போன்ற நிர்வாக கட்டமைப்புகளின் பாதுகாப்பில் வளர்ந்து வருபவை. அதனை மாற்றும் சக்தியோ, சாகசமோ தமிழ் மக்களிடம் இல்லை என்பதை விடுதலை புலிகள் இயக்கம் நிரூபித்து சென்று விட்டது.

இது இப்படி இருந்தாலும், இடைப்பட்ட காலத்தில் இலங்கை அரசும் சர்வதேச சமூகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும் அதன் காரணமான தொல்லைகளுக்கும் ஆளாகி வருகின்றது. இது அரசின் முதிர்ச்சியின்மையின் காரணமாக மட்டுமே ஏற்பட்ட தவறு. ஆண்டாண்டு காலமாக தமிழ் தலைமைகள் வெளிப்படுத்தி வந்த அதே தவறுகளை அரசு தரப்பும் செய்து வருகிறது. கொடுத்த வாக்குகளை காப்பாற்றுவதில் அரசும் விடுதலை புலிகள் இயக்கத்தை போலவே உதட்டளவில் மட்டுமே தற்காலிக முயற்சிகளை செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்று சர்வதேச சமூகம் கருதுகிறது. இந்த வகையில், இலங்கையில் உள்ள இரு தரப்பினரும் உலக நாடுகளுக்கு புரியாத புதிராகவே தொடர்ந்து வருகின்றனர். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற இலங்கையின் இரு சாராரின் வழி முறைகளை சர்வதேச சமூகம் புரிந்து கொண்டு செயல்படுவதில் கலாசார குழப்பங்களும் நடைமுறை சிக்கல்களும் நிறையவே உள்ளன.

இந்த பின்னணியில், பிற நாடுகளின் உதவியை எதிர் நோக்காமல், இலங்கை அரசும் தமிழ் தலைமையும் இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறான பேச்சுவார்த்தைகளின் போது, சில பல நீக்குபோக்குகளுக்கு இரு தரப்பினரும் தயாராக வேண்டும். இலங்கை அரசை பொறுத்த வரையில், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள மாற்று அரசியல் தலைமைகள் தமிழருக்கு வழங்க தயாராக இருக்கும் தீர்வுகளை தானும் இப்போதே வழங்க முன்வர வேண்டும். தமிழ் அரசியல் தலைமையும், ஓன்றுபட்ட இலங்கையில் தங்கள் மக்களுக்கு வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் அதே வேளையில், தங்களது கோரிக்கைகளுக்கு மட்டும் அல்லாமல் தங்களது வாக்குறுதிகளுக்கும் கூட வரி வடிவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு இரு தரப்பினரும் முன்னோக்கி பயணித்தால் மட்டுமே, இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பிற அணுகுமுறைகள் எல்லாம் மீண்டும் மீண்டும் தோல்வியில் முடிந்தால் அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். எதிர்கால சந்ததியினரின் நலம் கருதியாவது, இரு தரப்பினரும் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X