2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வட்டியை விரும்பும் ஈரானியர்கள்

Super User   / 2011 டிசெம்பர் 06 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

•    றிப்தி அலி

- நான்காவது தொடர் -

நம்மூரில் ஒரு திரைப்பட இறுவட்டு (அதாவது டிவிடி அல்லது சி.டி) என்ன விலையிருக்கும்? தெருவோர கடைகளிலே 50 ரூபாய்க்குக் கிடைக்கும். அசல் இறுவட்டு என்றால் ஒரு 600 அல்லது 700 ரூபாய். அவ்வளவு தான். நம்பினால் நம்புங்கள். ஈரானில் இதே இறுவட்டு ஒன்றின் விலை அந்த நாட்டுப் பணத்தில் 25,000 (ஆமாம், 25 ஆயிரம்) ரியால்களாகும்.

விமான நிலையத்திலிருந்து – நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்குச் செல்வதற்கு வாடகை வான் ஒன்றுக்கான கட்டணம் 300,000 (3 இலட்சம்) ரியால்களாகும். அதே இடத்துக்கு வாடகை காரில் செல்வதென்றால் 400,000 (04 இலட்சம்) ரியால்கள். இந்தக் கட்டண விளம்பரப் பதாகையைக் கண்டவுடன் தூக்கி வாரிப் போட்டது எனக்கு.

கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன். அதாவது, ஈரானிலுள்ள இமாம் குமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தலைநகர் தெஹ்ரானில் நாங்கள் தங்க வேண்டிய இடத்துக்குச் செல்வதற்குத் தான் இந்தக் கட்டணமாகும்.

குறித்த பயணத்துக்கு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தேவைப்படும். விமான நிலையத்தை விட்டு வெளியேறியவுடன் நான் கண்ட முதலாவது கட்டண விளம்பரம் இது தான்.

நகருக்குள் நுழைந்த பின்னர் இன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்திருந்தன. வாடகைக் காருக்கான கட்டணம் என்றில்லை, அனைத்துப் பொருட்களுக்கும் கட்டணங்கள் இவ்வாறு உச்சத்தில் தான் இருந்தன.

உதாரணத்துக்கு சிலவற்றினைச் சொல்கிறேன். சுவெட்டர் (கம்பளி மேலாடை) ஒன்றின் விலை 04 லட்சத்து 50 ஆயிரம் ஈரானிய ரியால்களாகும். சோல் ஒன்று 01 லட்சம் ரியால்கள். ஈரானிய திரைப்பட இறுவட்டு ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு 25,000 ரியால்கள். இப்படி நிறைய.

புனித கும் நகரிற்கு சென்றிருந்த போது பொருளொன்றை கொள்வனவு செய்வதற்குப் பணம் தேவைப்பட்டது. (புனித கும் நகர் பற்றி அடுத்தடுத்த கட்டுரைகளில் விரிவாக எழுதுவேன்) அப்போது, கையில் இருந்த அமெரிக்க டொலர்களில் - 100 டொலரை ஈரானிய ரியால்களாக மாற்றினேன்.

நம் நாட்டு ரூபாவுக்கு மாற்றினால், 100 அமெரிக்க டொலர்களுக்கும் சுமார் 11 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால், அதே 100 அமெரிக்க டொலர்களுக்காக எனக்குக் கிடைத்த ஈரானிய பணத்தொகை எவ்வளவு தெரியுமா? 10 லட்சம் ஈரானிய ரியால்களாகும்.

கையில் கிடைத்த ஈரானிய ரியால்களைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போனேன். பணத்தினை எண்ணி முடிக்கவே நிறைய நேரம் ஆனது. இந்தக் கணக்கின் படி, ஓர் ஈரானிய ரியால் - இலங்கை நாணயப் பெறுமதியில் ஒரு சதம் ஆகும்.

இலகுவாகப் புரிந்து கொள்வதென்றால், நூறு ஈரானிய ரியால்களைக் கொடுத்தால் தான் இலங்கையின் ஒரு ரூபாய் நாணயமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். ஈரானில் இந்தளவுக்குப் பண வீக்கம் காணப்படுகிறது. ஆயினும், அங்கு - இது ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை என்கிறார்கள்.

இவ்வாறான பண வீக்கத்துக்குப் பிரதான காரணம் - அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையாக இருக்கும் என்று தான் நினைந்தேன். இது தொடர்பில் ஈரானியர் ஒருவரிடம் கேட்டேன்.

'அரசாங்கம் பாரிய செயற்றிட்டமொன்றை ஆரம்பித்துள்ளமை தான் இவ்வாறான பண வீக்கத்துக்குப் பிரதான காரணமாகும். குறித்த செயற்றிட்டம் நிறைவடைந்த பின்னர் ஈரானிய ரியாலுக்கான பெறுமதி அதிகரிக்கும்' என்றார் அந்த ஈரானியர். என்ன செயற்றிட்டம் என்பதை என்னிடம் அவர் கூறவில்லை.

நிதி நிறுவனங்கள்:

பண வீக்கம் இப்படியிருக்கின்ற நிலையிலும், கெஷவர்ஷி வங்கி, மெல்லி ஈரான் வங்கி, ஷேபா வங்கி மற்றும் ரௌவொன் வங்கி உள்ளிட்ட சுமார் 20 இற்கும் மேற்பட்ட வங்கிகளை தலைநகர் தெஹ்ரானில் மாத்திரம் காண முடிந்தது.

இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு வீதியிலும் நிதி நிறுவனங்கள், பண பணிமாற்றல் நிலையங்கள் என - பணத்தோடு தொடர்புபட்ட பல நிறுவனங்களையும் காண கிடைத்தது.

ஈரானிய வங்கிகளில் இரண்டு வகையான வங்கிக் கணக்கு முறைமைகள் உள்ளன. ஒன்று வட்டியுள்ள வங்கிக் கணக்கு. அடுத்தது வட்டியில்லாத வங்கிக் கணக்கு. வட்டியுள்ள கணக்கில் வைப்புச் செய்வோருக்கு மாதாந்தம் சுமார் 17 வீத வட்டி வழங்கப்படுகிறது.

ஓர் இஸ்லாமிய நாட்டில் வட்டியுடனான வங்கிக் கணக்கு முறை உள்ளமையானது, எனக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. இது குறித்து மாநாட்டில் கலந்துகொண்ட நம் நாட்டின் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஐயூப் - ஈரானியர் ஒருவரிடம் கேட்டார்.

"வட்டி வழங்கப்படாவிட்டால், ஈரானிய முதலீட்டாளர்களில் அதிகமானோர் தமது பணத்தினை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று விடுவார்கள். இதன் மூலம் ஈரானிலுள்ள பணம் வெளிச் சென்று விடும் என்ற அபாயமுள்ளது. அதைத் தடுப்பதற்காகத்தான் வட்டியுள்ள கணக்கு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார் அந்த ஈரானியப் பிரஜை.

"ஈரானில், வட்டியுள்ள வங்கி கணக்கின் மீது தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம் நாட்டின் பணம் வெளிநாடு செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது" என - அவர் மேலும் கூறினார்.

மேற்கத்தேய கலாசார நிராகரிப்பு :

ஈரானியர்களில் பெரும்பாலானோர் கோட் அணிந்திருந்ததை அதானிக்க முடிந்தது. அவர்களின் கோட் இரண்டு வகைகளில் காணப்பட்டன.

அதாவது, அலுவலக மற்றும் உத்தியோகபூர்வமான வைபங்களுக்கு ஒருவகையான கோட். மற்றையது குளிரான காலநிலைக்கு அணிகின்ற கோட் வகையாகும்.

எனினும், ஈரானியர்கள் கோட்டுடன் சேர்த்து 'டை' அணிவதில்லை. காரணம் 'டை' என்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பியர்களின் கலாசார ஆடை வகையென்பதால், ஈரானியர்கள் அதனை நிராகரிக்கின்றார்கள். எனவே, 'டை' போன்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பியர்களின் கலாசார ஆடைகளை ஈரானியர்கள் அணிவதில்லை.

மொழியைப் பொறுத்தவரை, ஈரானியர்களில் பெரும்பாலானோர் பாரசீகத்தினை மட்டுமே தெரிந்து வைத்திருக்கின்றனர். இதனால் தொடர்பாடல் ரீதியாக ஈரானில் - நான் அதிகம் சிரமப்பட்டேன்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பியர்களின் மொழியினை பயன்டுத்துவதில்லை என்கிற ஈரானியர்களின் வைராக்கியமே இதற்கும் காரணம் என ஈரானியர் ஒருவர் தெரிவித்தார்.

யுத்த பயிற்சி:

பாஸ்போட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கடவுச்சீட்டை ஈரானில் பெறுவது இலகுவான காரியமல்ல. கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் ஒருவர் கட்டாயம் யுத்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லா விட்டால், கடவுச்சீட்டுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

யுத்த பயிற்சியினை நிறைவு செய்தவர்கள் மாத்திரமே வெளிநாடு செல்ல முடியும் என ஈரான் அரசாங்கமும் அறிவித்துள்ளது. எனினும் ஹஜ், உம்றா போன்ற புனித யாத்திரைகளை மேற்கொள்வதற்காக மாத்திரம் யுத்த பயிற்சியினை நிறைவு செய்யாதவர்களுக்கும் விசேட கடவுச்சீட்டு வழங்கப்படும். அந்தக் கடவுச்சீட்டில், 'புனித யாத்திரைக்கு மாத்திரம்' என பொறிக்கப்பட்டிருக்கும்.

ஈரானுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்ளப்பட்டால், அதனை எதிர்த்து போராடுவதற்காகவே பொதுமக்களுக்கும் யுத்த பயிற்சி வழங்கப்படுகின்ற தாம்.

பதினாறு வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் யுத்த பயிற்சி பெறுவது கட்டாயமாகும். எனினும் இராணுவ பயிற்சி பெறுவதற்கான வயதெல்லை இதுதான் என்று வரையறுக்கப்படவில்லை.

பெரும்பாலான ஈரானியர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய நிலைமை வரும் போது தான் யுத்த பயிற்சினைப் பெறுவதாக - ஈரானிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த யுத்த பயிற்சியானது சுமார் 16 மாதங்களை கொண்டதாகும். முதல் இரண்டு மாதங்களும் இராணுவ முகாம்களில் வதிவிடப் பயிற்சியாக வழங்கப்படும். பின்னர் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அனுபவப் பயிற்சியாக வழங்கப்படுகிறது. எனினும் எமது நாட்டில் இராணுவத்தில் இணைபவர்களுக்கு சுமார் மூன்று மாதங்களே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஈரானில், இந்த யுத்த பயிற்சிக் காலத்தின் போது – நபரொருவருக்கு சுமார் 40 அமெரிக்க டொலர்கள் சம்பளமாக வழங்கப்படுகின்றன.
பயிற்சியை நிறைவு செய்த பின்னர் – பயிற்சி வழங்கிய இராணுவ முகாம் பொறுப்பதிகாரியினால், குறித்த நபரின் பயிற்சி உறுதிப்படுத்தப்படும். அதன் பின்னரே கடவுசீட்டுக்காக விண்ணப்பிக்க முடியும்.

துப்பாக்கி சுடுதல், அணி நடை, தலைமைத்துவப் பயிற்சி, போர்த் தந்திரங்கள், அசாதாரண சூழ்நிலையில் தனித்துச் செயற்படும் முறை மற்றும் தோல்வியிலிருந்து மீள்வதற்கான உபாயங்கள் போன்ற பல பயிற்சிகள் இதன்போது வழங்கப்படுகின்றன.

இந்த யுத்த பயிற்சியினை நிறைவு செய்தவர்களின் திறமைகளுக்கிணங்க - சார்ஜன், லெப்டினன் கேர்ணல், கேர்ணல் போன்ற பட்டங்கள் வழங்கப்படும்.  குறித்த யுத்த பயிற்சினை நிறைவு செய்தவர்கள் விரும்பினால் - ஈரான் இராணுவத்தில் இணையவும் முடியும்.

எமது நாட்டில் கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்படுவது போன்று, ஈரானில் யுத்த பயிற்சி பெறாதவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.

இந்த பொதுமன்னிப்பினை ஈரானின் ஆன்மீகத் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். உதாரணமாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 1970ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள் இராணுவ பயிற்சி பெறத் தேவையில்லை என அறிவிப்பார்.

இதன் மூலம் இராணுவ பயிற்சி பெறாதவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும். இவ்வாறான பொது மன்னிப்பைப் பெற்றவர்கள் - இராணுவ பயிற்சி பெறாவிட்டாலும் கூட, கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

கடந்த ஒக்டோபர் மாதம் ஈரானில் நடைபெற்ற 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான காண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த எனது ஈரான் தொடர்பான அனுபவத்தினை அடுத்தவாரமும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இக்கட்டுரை தொடர்பான உங்கள் விமர்சனங்களை rifthy.ali@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

தொடர்புடைய செய்திகள்:

பிச்சைக்காரரில்லா ஈரான்! (தொடர் - 6)

பெண்களுக்கும் சமவுரிமை கொடுக்கும் ஈரான் (தொடர் - 5)

 

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 3)

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 2)


ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 1)


You May Also Like

  Comments - 0

  • Ravi Wednesday, 07 December 2011 07:18 AM

    உங்களது கட்டுரை சுவாரசியமாக........... ?

    Reply : 0       0

    hameed Wednesday, 07 December 2011 05:10 PM

    ம்ம்ம், தம்பி, ஈரானில் மட்டுமா, நம்மட காசிம் ரோடிலும் புக்கே புக்கே என்று தாடியும் கீடியும் வைத்துக்கொண்டு ..... . பட் அந்தே இஸ்ராயில் காரர்கள் அவர்களுக்குள் வட்டி கொடுக்கவும் வாங்கவும் மாட்டார்கள்.

    Reply : 0       0

    rafeek Wednesday, 07 December 2011 07:10 PM

    இது முஸ்லிம்கலுக்கு பொருத்தம் இல்லாத விமர்சனம், இப்படியான கட்டுரைகளை தவிர்ப்பது நல்லது தம்பி "ரிப்தி அலி".

    Reply : 0       0

    pasha Wednesday, 07 December 2011 08:12 PM

    இரான் முஸ்லிம் நாடு அல்ல என்பதற்கு இது ஒரு சாட்சி.

    Reply : 0       0

    Mohammed Hiraz Wednesday, 07 December 2011 08:25 PM

    உலகில் எந்த நாட்டில்தான் வட்டி இல்லா வங்கி முறை மாத்திரம் உண்டு??? பொதுவாக உலகில் உள்ள சகல நாடுகளும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் கூட வட்டி வங்கிகள் சர்வ சாதாரணம்1!!! சவுதி, கத்தார், ஒமான், பஹ்ரைன், அமீரகம் போன்ற மத்திய கிழக்கு நாளாந்த வைப்புக்கான வட்டி வழங்க கூடிய கேல் எகவுன்ட் என்று அழைக்க கூடிய கணக்குக்கு திறக்கும் வசதிகள் கூட வங்களில் உண்டு.

    அது போன்றுதான் மது பானமும் மத்திய கிழக்கு நாடுகளில் சாதாரணமாக கிடைகாவிடினும் பதிவு செய்த நபர்கள் வாங்கவும், உயர்தர ஐந்து நட்சத்திர விடுதிகள் உட்பட சுற்றுலா பயணிகள் தங்கும் அதிக விடுதிகளில் தராளமாக உண்டு.

    Reply : 0       0

    faroos Wednesday, 07 December 2011 08:34 PM

    எது நல்லதோ அதை மட்டும் பதிவுசெய்யவும் mr சார் "ரிப்தி அலி" மன்னிக்கவும்.

    Reply : 0       0

    kuru Thursday, 08 December 2011 12:59 AM

    இந்த அலசலினால் யார் நன்மை அடைவார்கள்?
    நாட்டுக்கு நாடு அனைத்துமே வித்தியாசமாக தென்படும்.

    Reply : 0       0

    ravi Thursday, 08 December 2011 01:36 AM

    இதற்கு தொடரும் கூட............ வேறு எதாவது நல்லதினை .....

    Reply : 0       0

    mohamed Thursday, 08 December 2011 04:58 PM

    தீய விடயங்களை (மறைத்துவிடுங்கள்) தெரிவிப்பதை விட நல்லவற்றை வெளிப்படுத்துங்கள் ..
    ரிப்தி அலி சார்.

    Reply : 0       0

    janooz Sunday, 11 December 2011 08:22 PM

    கட்டுரை என்றால் இருப்பதை இருப்பதாகத்தானே எழுத வேண்டும்? அது எப்படி நல்லதை மட்டும் எழுதுவது? கட்டுரை வாசிப்பதற்கு முதல்.. கட்டுரை என்றால் என்ன என்பதை புரிந்து வாசித்துவிட்டு பின்னூட்டம் எழுதுவது நன்றாய் இருக்கும்...

    Reply : 0       0

    Khan Thursday, 15 December 2011 04:38 AM

    உண்மையை எழுதும் ரிப்தி அலிக்கு வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    imam Thursday, 22 December 2011 01:22 PM

    வட்டி என்பதல்ல அதன் கருத்து, ஒரு முதலீட்டாளரின் பங்குடமை என்பதை புரிந்து கொள்ளுங்கள் நண்பரே அதன் பிற்பாடு கட்டுரையை ஆரம்பித்து இருக்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X