Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 டிசெம்பர் 12 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
"முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக்கூட்டம் டிசெம்பர் 15ஆம் திகதி நடைபெறும்" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். "தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கின்றன" என்பதை எடுத்துரைக்கவே இந்தக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள சட்டமன்றம் கூட்டப்பட்டு அங்கு புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற தீர்மானம் -அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டியால் முன்மொழியப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கள் ஒற்றுமையை அறிவித்த இருநாள் கழித்து தமிழக சட்டமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை ஒற்றுமைக் கோட்டில் பயணிக்க வைத்துள்ளது. "நாம் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உறுதிப்பட தெரிவிக்க அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்" என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் கோரிக்கை விடுத்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அடுத்தநாளே சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் தமிழக முதல்வர். வாக்கு வங்கி அடிப்படையில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க.வும் ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வும் ஆரோக்கியமான அரசியலை நோக்கி நெருங்கி வருவதன் அடையாளமாக அமைந்திருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு "மாநிலத்தில் அனைவரும் முல்லைப்பெரியாறு அணை விடயத்தில் ஒற்றுமையாக இருக்கிறோம். அதனால் சட்டமன்ற சிறப்புக்கூட்டம் அவசியமல்ல" என்று அறிவித்திருந்த முதல்வர் ஜெயலலிதா - இப்போது அப்படியொரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதற்கு தென்மாவட்டத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்களின் உணர்ச்சிபூர்வமான போராட்டமே காரணம். "அணையின் பலம் குறித்து வெளியாகும் கற்பனைக்காக தமிழகத்தின் உரிமையை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விட்டுக்கொடுக்க மாட்டோம். தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் ரீதியான உண்மைகளை உச்ச நீதிமன்றத்தின் முன்பு வைத்து அணை பலமாக இருக்கிறது என்பதை நிரூபிப்பதில்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறது என்று நம்புகிறேன்" என்று உறுதிபடக் கூறியுள்ளார் தமிழக முதல்வர். மூன்றாவது முறை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கூட்டப்படும் சட்டமன்ற முதல் சிறப்புக் கூட்டம் என்பதால் இது அதி முக்கியத்துவம் பெறுகிறது. விலைவாசி உயர்வு போன்ற விடயங்களில் ஆளுங்கட்சியை எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகளும், எதிர்கட்சிகளும் பொது விடயமான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
"அணை பலமாக இருக்கிறது" என்று தமிழக முதல்வரும், "தமிழகத்திற்கு தண்ணீர் - கேரளாவுக்கு பாதுகாப்பு" என்பதே எங்கள் முழக்கம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் மாறி மாறி அறிவித்து வருகிறார்கள். கேரள சட்டமன்றத்திலும் சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டு, அதில் "உடனடியாக புதிய அணை கட்டப்பட வேண்டும். அதுவரை அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்" என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி முன்மொழிய, அம்மாநில எதிர்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியுள்ளது. இரு மாநிலங்களிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள முல்லைப் பெரியாறு அணை விடயத்தில் கேரள முதல்வரின் முழக்கம் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தினாலும், அம்மாநில சட்டமன்ற தீர்மானம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் "தமிழகத்திற்கு தண்ணீர்" என்று கேரள முதல்வர் கூறுவதை, தமிழக மக்களோ, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களோ நம்பத்தயாராக இல்லை.
இதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஏற்கனவே 152 அடியாக இருந்த அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்தது கேரள அரசு. அதன்பிறகு மத்திய நீர்வள ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும் அணை நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு அனுமதிக்கவில்லை.மாறாக உச்சநீதிமன்ற தீர்ப்பையே ரத்து செய்யும் விதத்தில் கேரள நீர்பாசன பாதுகாப்பு சட்டத் திருத்தம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் 2006ஆம் ஆண்டே நிறைவேற்றியது. அப்போது மட்டும் அல்ல... இப்போது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதியரசர் ஆனந்த் தலைமையிலான "எம்பவர்டு கமிட்டி (அதிகாரம் வழங்கப்பட்ட குழு)" முன்பும் முழக்கத்திற்கு மாறான வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறது. அது என்ன? கேரள அரசு அக்கமிட்டி முன்பு தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில் "அணை எங்கள் மாநிலத்திற்குள் இருப்பதால் தமிழகம் தண்ணீரில் உரிமை கோர முடியாது" என்று கேரள அரசு அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். "தமிழகத்திற்கு தண்ணீர்" என்று கேரளா கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆனந்த் கமிட்டி முன்பு ஏன் அவர்கள் இப்படியொரு மாறுபட்ட வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார் அந்த ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்.
அது மட்டுமின்றி, முல்லைப்பெரியாறு அணை பலமாக இல்லை என்ற கேரளாவின் கோரிக்கை உள்நோக்கம் கொண்டது என்று கூறும் தமிழக பொதுப்பணித்துறை சிரேஷ்ட பொறியியலாளர் ஒருவர், "கேரளா புதிதாக இடுக்கி அணையை கட்டியது. 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அந்த அணைக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் அவர்களால் அங்கு மின் உற்பத்தி செய்ய முடியவில்லை. முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டால் இடுக்கி அணைக்கு தண்ணீர் வரத்தை அதிகரித்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு தீவிரமாக புதிய அணை என்ற கோஷத்தை முன்வைக்கிறார்கள்" என்கிறார்.
இது ஒருபுறமிருக்க, அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கும் 5 டி.எம்.சி. தண்ணீர் வரை வீணாகப் போகிறது. உச்சநீதிமன்றம் இதை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட போது அவசர அவசரமாக ஒரு சட்டதிருத்தத்தைக் கொண்டு வந்த கேரள அரசு "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிதான்" என்று கறாராக நிர்ணயித்து விட்டது. இதை மீண்டும் 120 அடியாகக் குறைக்க சட்டமன்றத்தில் தற்போது தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். அது மட்டுமின்றி அம்மாநிலத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். கேரள அரசின் சட்டத்தை எதிர்த்து கேரள அரசே கோர்ட்டிற்கு போயிருக்கும் விநோதம் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் நடந்திருக்கிறது.
கேரளாவின் நீர்பாசன பாதுகாப்பு திருத்த சட்டம்- 2006இன் 62-ஏ என்ற பிரிவில் 116 வருடம் பழமையான முல்லைப் பெரியாறு அணையை மட்டுமின்றி, அம்மாநிலத்தில் உள்ள மேலும் 21 அணைகள் "ஆபத்தான அணைகள்" என்று பட்டியலிட்டுள்ளது கேரள அரசு. இவற்றில் "அருவில்லாரா" அணை 78 வருடங்களுக்கு மேல் பழமையானது. குந்தலா அணை 64 வருடங்களுக்கு மேலானது. கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் ஜேக்கப் "முல்லைப் பெரியாறு அணையின் ஆயுள் 50 வருடம்தான்" என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அப்படியென்றால் அம்மாநிலத்தில் "ஆபத்தான அணைகள்" என்று பட்டியலிடப்பட்டுள்ள 22 அணைகளில் (முல்லைப் பெரியாறு தவிர) 12 அணைகள் 50 வருடத்திற்கும் மேல் பழமையானவை. இச்சட்டத்தின் இன்னொரு பிரிவான 62 (1) (ஜி)யில் அணையின் பாதுகாப்பு குறித்தும், எவ்வளவு தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்பது குறித்தும் எக்ஸ்பெர்ட் ஆய்வு நடத்தி அறிக்கை பெற கேரள அரசுக்கு முழு அதிகாரம் அளிக்கிறது. அதைப் பயன்படுத்தித்தான் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொண்டது. ஆனால் அதே சட்டத்தில் உள்ள மற்ற "ஆபத்தான அணைகளில்" இதுபோன்ற ஆய்வினை கேரள அரசு ஏன் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், "இதுவே முல்லைப்பெரியாறு அணை விடயத்தில் கேரள மாநில அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக் காட்டு" என்று வாதிடுகிறார். கேரளாவிற்குள்ளே ஆபத்தான அணைகள் இருக்கும்போது தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் முல்லைப் பெரியாறு அணையை மட்டும் ஏன் அங்குள்ள அரசியல்வாதிகள் குறி வைக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது மாதிரி பரபரப்பான சூழ்நிலையில் சட்டமன்ற சிறப்புக் கூட்டம் தமிழகத்தில் நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு அணைக்காக தி.மு.க. 14ஆம் திகதி மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் - தேனியிலேயே ஆர்பாட்டம் நடத்துகிறார். ஆனால் இதற்காக நீண்ட காலம் போராடியும், முல்லைப்பெரியாறு பாசன வசதி பெறும் கிராமங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டவருமான ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனியாக உண்ணாவிரதம், பிரதமரை சந்தித்து முறையிடல் என்று முல்லைப் பெரியாறு அணை விடயத்தில் போராடி வருகிறார். தமிழக அரசியல்வாதிகளில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை தொடர்ந்து பேசி வருபவரும், கேரளாவின் "டாம் 999" படத்தை முதலில் எதிர்த்து அறிக்கை விட்டவரும் வைகோதான். ஆகவே, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தால், வைகோ, ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க வசதியாக அமைந்திருக்கும். ஆனால் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் அங்கு பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள் மட்டுமே கருத்து தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அ.தி.மு.க., தி.மு,க, தே.மு.தி.க., பா.ம.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கருத்துச் சொல்ல வாய்ப்பு கிடைக்கும் போது, காலம் காலமாக இந்த அணைப் பிரச்சினையை கையிலெடுத்து போராடிய வைகோவிற்கு கருத்துச் சொல்ல சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை. ஆகவே அவருடைய கட்சியான ம.தி.மு.க.வின் கருத்து பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
எது எப்படியோ கேரள, தமிழக எல்லைகள் பதற்றத்தில் இருக்கின்றன. 1000 பேர், 2000 பேர் என்று கூடி பேரணி நடத்தியவர்கள் இன்று தமிழக எல்லையான குமுளி பகுதியில் 50,000 விவசாயிகள் வரை கூடி பேரணி நடத்தும் நிலை ஏற்பட்டு விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், "முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும். சர்ச்சைக்குரிய அணைகளை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்" என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் இரு மாநில பதற்றத்தை தணிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தமிழகத்தில் கோபமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள தமிழகத்தில் காங்கிரஸுக்கு பெரும் தலைவலியை எதிர்காலத்தில் தரப்போகிறது என்பது மட்டும் உண்மை!
dharma Thursday, 28 June 2012 06:13 AM
சிறப்பாக கூறியுள்ளீர்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago