Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கழித்து கோட்டையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா நிர்வாகத்தின் ஒட்டு மொத்த கட்டுப்பாடும் தன் கையில் மட்டும்தான் இருக்கிறது என்கிற ரீதியில் தன் நடவடிக்கைகள் மூலம் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். அதன் விளைவாக ஒருபுறம் சசிகலா ஓரங்கட்டப்படுகிறார் என்ற செய்திகள் பரவினாலும், இன்னொரு புறம் சசிகலாவிற்கு நெருக்கமான அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக அதிரடியாக மாற்றப்படுவதும் நடக்கிறது. குறிப்பாக மாநில உளவுத்துறையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பொன்மாணிக்கவேலு திடீரென்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். இவருக்கு முன்பு ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்த உளவுத்துறை பதவி டி.ஐ.ஜி. அந்தஸ்திற்கு கொண்டு வரப்பட்டது. அதிலும் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு போட்ட பிறகு நிகழ்ந்த இந்த அதிரடி மாற்றம் பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தது. உளவுத்துறையில் இருந்து மாற்றப்பட்ட பொன்மாணிக்கவேலு, சென்ற தி.மு.க. ஆட்சியில் கடைசியாக அவர் பணியாற்றிய விழுப்புரம் சரகத்திற்கே டி.ஐ.ஜி.யாக தூக்கியடிக்கப்பட்டார்.
இந்த மாற்றம் நிகழ்ந்த உடன் கோட்டையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு செயலாளராக இருந்த கருத்தையா பாண்டியன் மாற்றப்பட்டார். அதுவும் மாநிலத்தின் கடைக்கோடியில் இருந்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோயிலில் ஒழுங்குநடவடிக்கை ஆணையர் என்று "டம்மி" பதவி உருவாக்கப்பட்டு அதில் அமர்த்தப்பட்டார். அவர் வருகின்ற மார்ச் மாதம் ஓய்வு பெற வேண்டியவர். சசிகலாவின் ஆதரவாளர் என்ற கோணத்தில் அவர் அங்கே மாற்றப்பட்டுள்ளார் என்பதே கோட்டை வட்டாரச் செய்தி. இதைத் தொடர்ந்து பொலிஸ் வட்டாரத்தில் 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை எஸ்.பி.யாக இருந்து கலக்கியவர் சிவனாண்டி ஐ.பி.எஸ். அதன்பிறகு 2006-2011இல் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியின் போது மத்திய அமைச்சர் அழகிரியிடம் நெருக்கத்தைப் பெற்று பதவி உயர்வுகள், பதவிகள் பெற்றார். குறிப்பாக செல்வாக்கான தமிழகத்தின் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவே இருந்தார். அ.தி.மு.க. இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் அவரை அங்கிருந்து மாற்றி, கும்பகோணத்தில் உள்ள போக்குவரத்துக்கழக விஜிலென்ஸ் அதிகாரியாக நியமித்தது. இத்துடன் அவர் விவகாரம் நின்று விடவில்லை. மாநில காவல்துறையில் ஏதாவது ஒரு முக்கிய பதவிக்கு வந்து விட வேண்டும் என்று தொடர்ந்து அவர் "லாபி" செய்து வந்ததாகத் தகவல். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கும்பகோணம் போக்குவரத்துக்கழகத்தில் இருந்து திருநெல்வேலி போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டார். அங்கு மாற்றப்பட்ட உடனேயே நிலம் சம்பந்தப்பட்ட புகார் என்று காரணத்தின் அடிப்படையில் சிவனாண்டி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இரு உயர் பொலிஸ் அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்கள். முதலில் தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட் சஸ்பென்ட் செய்யப்பட்டார். அது முற்றிலும் வேறு கதை! இப்போது, சிவனாண்டி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடனேயே பேச்சு எழுந்தது. அதில் ஏற்பட்ட தாமதம் முதல்வருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இந்நிலையில் எல்லாத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தது போல் சிறப்புப் பணி அதிகாரியாக அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நியமிக்கப்பட்டார் ஏ.பன்னீர்செல்வம். 91-96ஆம் வருடத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியின் போது தலித்களுக்கு எதிராக கொடியன்குளத்தில் வன்முறை வெடித்தது. அதற்கு அப்போது தூத்துக்குடி மாவட்டக் கலெக்டராக இருந்த இந்த பன்னீர்செல்வம்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் இவர் சசிகலாவின் உறவினர் என்பதே! மக்கள் தொடர்பு அதிகாரியாக 1971இல் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் தன் பணியைத் தொடங்கிய இந்த பன்னீர்செல்வம் பிறகு நியமன ஐ.ஏ.எஸ். பெற்றார். 1991இல் முதலில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது இவர் முதல்வர் அலுவலகத்தில் துணை செயலாளராக இருந்தார். சென்ற முறை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியின் இறுதி கட்டத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த முறை ஆட்சிக்கு வந்ததும் ஓய்வு பெற்ற இவரை சிறப்புப் பணி அதிகாரியாக முதல்வர் அலுவலகத்தில் நியமித்தார்கள். அங்குதான் பிரச்சினை ஆரம்பமானது.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் போதெல்லாம் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளாக நேரடி ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று வரும் அதிகாரிகளே இருப்பார்கள். ஏனென்றால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டம் - ஒழுங்கு, தீவிரவாதம் போன்ற விடயங்களை கையாளுவதில் கண்டிப்புடன் இருப்பவர் என்ற இமேஜ் இருப்பதே காரணம். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பெரும்பான்மையான மாவட்டங்களில் நியமன ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளாக (சூப்பிரண்டன்ட் ஒப் பொலிஸ்) நியமிக்கப்பட்டார்கள். அதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர் (கலெக்டர்) பெரும்பான்மையானவர்கள் நியமன ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே பணியமர்த்தப்பட்டார்கள். இது மட்டுமல்ல, தலைமைச் செயலகத்தில் நிர்வாக ரீதியாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு "சிறந்த நிர்வாகி" என்ற பெயர் சீனியர் ஐ.ஏ.எஸ். மற்றும் சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் இருக்கிறது. ஆனால் இந்த முறை நடைபெற்ற செயலாளர் மற்றும் மண்டல ஐ.ஜி.க்கள் போஸ்டிங்கில் முதல்வரின் நிர்வாகத்திற்கு துணை நிற்கும் விதத்தில் அமையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
பல துறைகளின் அரசு செயலாளர்களாக ஜூனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். தமிழகத்தின் தலைநகரான சென்னை மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிதான் கலெக்டராக அதாவது மாவட்ட ஆட்சித் தலைவராக இருப்பார். ஆனால் ஆறுமாதங்களுக்கு மேலாகியும் இன்னும் டி.ஆர்.ஓ. (மாவட்ட வருவாய் அதிகாரி) அந்தஸ்திலேயே சென்னை மாவட்டக் கலெக்டராக இருக்கிறார். இது தவிர முக்கிய இலாகாவான "புவியியல் மற்றும் சுரங்கத்துறை" துறைக்கு இன்னும் இயக்குநர் நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் இயற்கை வளங்களை கண்காணிக்கும் இப்பதவி மிக முக்கியமானது. எல்லாவற்றிற்கும் ஹைலைட்டாக முதல்வரின் மனதிற்கு பிடித்த திட்டமான மாணவர்களுக்கு மடிக்கணினி (லேப்டாப்) வழங்கும் திட்டத்தில் பன்னீர் செல்வத்திற்கும், அதன் துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபுவிற்கும் பனிப்போர் ஏற்பட்டது. இதன் காரணமாக "வளைந்து" கொடுக்காத சந்தோஷ் பாபு அந்த துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கே தெரியாமல் அங்கிருந்து தூக்கியடிக்கப்பட்டார். இந்த மாதிரி விடயங்களுக்கு எல்லாமே சிறப்புப் பணி அதிகாரியாக இருக்கும் பன்னீர்செல்வம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு கோட்டை வட்டார ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டது.
ஆனால் சசிகலாவின் உறவினர் என்று பன்னீர் சொல்லிக் கொள்வதால், இவரிடம் முறைத்துக்கொள்ள கோட்டையில் மட்டும் அல்ல, மாவட்டங்களில் இருக்கும் எந்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கும் தைரியம் வரவில்லை. குறிப்பாக இந்த விஷயங்கள், நிர்வாக குறுக்கீடுகள் பற்றி தலைமைச் செயலாளர் திபேந்திரநாத் சாரங்கி தனியாக ஒரு "ரகசிய குறிப்பை" முதல்வரிடம் கொடுத்தார் என்றும் தகவல் அடிபடுகிறது. இதன்பிறகுதான் இவ்வளவு மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்று கூறும் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், "முதல்வரிடம் இருக்கும் நிர்வாகத் திறமை எங்களுக்கு எல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால் கோட்டையில் இருந்து கொண்டே எங்கள் பணிகளில் பன்னீர்செல்வம் ஏற்படுத்திய குறுக்கீடுகள் பல. குறிப்பாக யார் உத்தரவை கேட்பது என்ற பிரச்சினை உருவானது. அதேபோல் முக்கிய விடயங்கள் தொடர்பான ஆலோசனைக்கூட்டங்களில் கூட முதல்வருக்கு முன்பே இவர் குறுக்கிட்டுப் பேசுவார். முதல்வரின் செயலாளர்கள் இருந்தாலும், இந்த சிறப்புப் பணி அதிகாரியின் தலையீடு எங்களுக்கு எல்லாம் பெரும் தர்மசங்கடமாகவே இருந்தது. இப்போது அவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதால் எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சி. இனி நாங்கள் முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் சிறப்பாக பணி புரிவோம்" என்கிறார். ஆகவே பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கோட்டை வட்டாரத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே இப்போது பரபரப்பான செய்தி.
பன்னீர்செல்வம் ராஜினாமாவைத் தொடர்ந்து முதல்வரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமலைச்சாமியும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் எஞ்சியுள்ள முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் இப்போதே உஷாராகி விட்டார்கள். அடுத்து உடனே இன்னொரு செயலாளர் ராமலிங்கமும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்தான் அப்பாயின்மென்ட் விடயங்களை கவனித்துக் கொண்டிருந்தவர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் நேரில் ஆஜராகி வருகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் சசிகலாவிற்கு வேண்டியவர்கள் என்று கூறப்படும் பொன்மாணிக்கவேலு, கருத்தையா பாண்டியன், பன்னீர்செல்வம், திருமலைச்சாமி, ராமலிங்கம் போன்றோர் முக்கிய பதவிகளில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளனர். இனி பன்னீர்செல்வத்தின் தயவில் போஸ்டிங் பெற்ற அதிகாரிகளின் மாற்றமும் அடுத்த கட்டமாக அரங்கேறலாம் என்பதே கோட்டை வட்டாரத்தில் அனல்பறக்கும் பேச்சு. அதுமட்டுமின்றி, அமைச்சர்களின் எண்ணிக்கை கூட இவ்வளவு தேவையில்லை (இப்போது 33 பேர் இருக்கிறார்கள்) என்ற மூடில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருப்பதாகவும் தகவல்! அமைச்சரவையிலும் கூட மேலும் அதிரடி மாற்றங்கள் நிகழலாம். இதுவரை நடந்துள்ள மாற்றங்கள் எல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்கும் பிளவு என்ற ரீதியில் தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கின்றன. சிறப்புப் பணி அதிகாரியாக அதிகாரத்துடன் திகழ்ந்த பன்னீர்செல்வத்தின் "எக்ஸிட்" அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மிகுந்த நிம்மதியைக் கொடுத்திருக்கிறது என்பது என்னவோ உண்மையிலும் உண்மை!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago