Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதோ வருது, அதோ வருது என்று சொல்லப்பட்ட 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு'வின் அறிக்கையை இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இடைப்பட்ட காலத்தில், ஆணைக்குழு - தனது அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பிக்காது, அவ்வாறு சமர்ப்பித்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு அதனை வெளியிடாது என்று பல்வேறுவிதமான அனுமானங்கள், குற்றச்சாட்டுகள் பரவி வந்தன. அவற்றிற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது முதல் அடி தான். ஆணைக்குழுவின் அறிக்கை இனப் போரின் கடைசி மாதங்களில் இலங்கை இராணுவம் வேண்டுமென்றே தமிழ் மக்களில் அப்பாவிகளை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததா? என்ற முக்கியமான கேள்விக்கு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கபட்டது. அதுவே சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசு அளித்த உத்தரவாதமும் கூட. அந்த விடயத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஆணைக்குழு செயற்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் ஆணைக்குழுவின் முன்னால் இரண்டு முக்கிய கேள்விகள் இருந்ததாகவே கொள்ள வேண்டும். ஒன்று, இனப் போரின் உச்சக்கட்ட நாட்களில் பல்லாயிரக் கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் - அரசு படைகளால் வேண்டுமென்றே, ஒரு கொள்கை திட்டமாக கொன்று குவிக்கப்பட்டனரா? அப்படி என்றால் அதற்கு யார் மீது குற்றம் சுமத்த வேண்டும்? இது ஒரு கேள்வி. அவ்வாறு இல்லை என்றால், அதிகப்படியான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு இருந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு ஏற்று தண்டனை அடைய வேண்டும்? இது இரண்டாவது கேள்வி.
இதில் ஆணைக்குழு எதிர்கொண்ட சில - பல பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் ஏற்றுக்கொண்டு ஆகவேண்டும். ஒன்று, 'போர் குற்றங்கள்' என்று கருதப்படும் குற்றச் செயல்கள் குறித்த அறிவு பூர்வமான தெளிவு ஆணைக்குழு உறுப்பினர்கள் எவருக்குமே இல்லை. அதனை நாம் எதிர்பார்க்கவும் முடியாது. அவர்களை விட்டால், இலங்கைக்குள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளே இத்தகைய, தேவையான பின்னணி கொண்டவர்கள். அவர்களை தமிழ் சமூகம் ஏற்றுக்கொண்டு இருக்காது, சர்வதேச சுமூகமும் சந்தேகக் கண்களுடனேயே நோக்கி இருக்கும்.
இத்தகைய பிரச்சினைகள் குறித்த அறிவு இருக்கலாம் என்று கருதப்பட வேண்டிய உலகளாவிய அமைப்புகளும் பிறரும் முதல் 'ரவுண்டிலேயே' அரசை எதிர்த்து ஒரு நிலைபாட்டை எடுத்தமையால், தங்களது நடுநிலைமையில் இருந்து வழுவி விட்டார்களோ என்ற எண்ணப்பாட்டை விதைத்து விட்டனர். பின்னர் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று அவர்களும் சரி, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களும் சரி, தற்போதைய அறிக்கையை தயார்படுத்துவதில் தங்களுக்கான பங்களிப்பை செய்யத் தவறி விட்டனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அதிர்ச்சி தரும் அதிசயங்கள் எதுவும் இல்லை. போரில் அப்பாவி தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப் பட்டனரா? அப்படி என்றால், அது வேண்டுமென்றே அரசின் கொள்கை ரீதியாக செய்யப்பட்டதா? அவ்வாறானால் அதற்கான உத்தரவு யாரால் கொடுக்கப்பட்டது? என்பன உட்பட பல்வேறு கேள்விகளுக்கு ஆணைக்குழுவின் அறிக்கையில் பதில் இருக்கும் என்பதுபோன்ற எதிர்பார்ப்பை அரசு தரப்பினர் ஏற்படுத்த முயன்று இருந்தனர். ஆனால், இவை குறித்து எந்தவித அறுதியிட்டுக் கூறக்கூடிய எண்ணங்களும் அந்த அறிக்கையில் இல்லை.
அப்பாவி தமிழ் மக்கள் அதிக எண்ணிக்கையில் இழந்துள்ளனர், அல்லது காணாமல் போயுள்ளனர் என்று ஆணைக்குழுவின் அறிக்கை கூறியுள்ளது. இது அரசின் நிலைபாட்டிற்கு எதிராக உள்ளது. போரில் அப்பாவி மக்கள் உயிர் இழக்கவே இல்லை என்ற அரசின் கூற்றை இது பொய்ப்பித்து உள்ளது. என்றாலும் அவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அந்த அறிக்கையில் எந்த விவரமும் இல்லை. அதே சமயம் இந்த மரணங்கள் வேண்டுமென்றே இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் ஆணைக்குழு மறுத்துள்ளது. ஆனால் இதிலும் ஆணைக்குழு ஆணித்தரமான எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை என்றாலும், அது ஏற்றுக்கொண்ட கருத்துக்களே இலங்கை தமிழ் மக்களுக்குக் கிடைத்த தார்மீக வெற்றி.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சரியானது, அல்லது தவறானது என்று கூறுவதும், அது தவறு என்று கருதும் பட்சத்தில் அது குறித்து சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்பது ஒரு பக்கம். என்றாலும் குழு ஏற்றுக்கொண்ட விடயங்களில் அரசின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. சிலபல சம்பவங்களில் அப்பாவி மக்கள் இறந்தது அல்லது காணாமல் போனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தால் அது குறித்து அரசு மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிவுறுத்தி உள்ளது. ராஜபக்ஷ அரசு இந்த அறிவுறுத்தல்களின் படி நடக்க வேண்டும்.
அரசு அத்தகைய முடிவு எடுத்து செயல்படுமேயானால், சுட்டிக் காட்டப்பட்டுள்ள குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய இராணுவ அதிகாரிகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்களா, அவ்வாறானால் அந்த மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு கூட இராணுவத்தில் முன் அனுபவமும் இலங்கை போர்முறைகளிலும் போர் களங்களின் தன்மையை உணர்ந்தவர்களால் மட்டுமே இது குறித்து விசாரணை மேற்கொள்ள முடியும். அத்தகைய பின்புலம் இலங்கை இராணுவத்திற்கு மட்டுமே உள்ளது. இந்த கேள்விக்கான விடையை தமிழ் கட்சி தலைமைகள் இப்போதாவது ஆலோசிக்க வேண்டும்.
ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அமைச்சரும் அவைத் தலைவருமான நிமல் சிரிபால டி சில்வா, அன்றாட வாழ்க்கையிலும் முடிவு எடுக்கும் அதிகார மையங்களிலும் இராணுவத்தின் பங்களிப்பை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்தார்.
ஆனால், தமிழ் சமுதாயம் கோரியது போல் மக்கள் மத்தியில் அன்றாடம் வீதிகளிலும் பிற இடங்களிலும் இருந்தும் இராணுவ பாதுகாப்பு பின் வாங்கப்படும் என்று இதனை எடுத்துக்கொள்ள முடியாது. இத்தகைய முடிவு இல்லாத முடிவை எடுப்பதற்கு அரசுக்கு குறிப்பிட்ட காரணங்கள் இருந்தால் அதனை தமிழ் சமுதாயத்தோடும், தமிழ் அரசியல் தலைமைகளுடனும் கலந்து பேச வேண்டும்.
இதன் அடிப்படையில், அரசியல் கலப்பில்லாத அதே சமயம் அரசு மற்றும் அரசியல் அறிந்த, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் சமுதாய தலைவர்களை உள்ளடக்கிய அமைதி குழுக்களை பல்வேறு மட்டங்களிலும் அமைத்து அரசு இத்தகைய பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். இந்த குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் பங்குபெற வேண்டியது இன்றி அமையாதது. இத்தகைய முயற்சியை அரசு, ஆணைக்குழு வருவதற்கு முன்கூட்டியே அமைத்திருக்கலாம். இப்போதும் காலநேரம் ஒன்றும் பின்தள்ளிப் போய்விடவில்லை.
இலங்கையின் இனப் பிரச்சினை சார்ந்த இன்னல்களுக்கு எல்லாம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக பொறுப்பு எடுத்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணைக்குழு அறிவுறுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, அரசும் கூட மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு நின்றுவிடாமல் எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சினைகளும் அதனால் போர்களும் தீவிரவாதமும் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்கான அரசியல் மற்றும் அரசியல் சாசனம் சார்ந்த தீர்வுகளை முன் வைக்க வேண்டும். அவற்றை உளபூர்வமாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் அதைவிட முக்கியமாக மனப் பக்குவத்தையும் அனைத்து தரப்பினரும் வெளிப்படுத்த வேண்டும்.
இதற்கான அரசு தரப்பு முட்டுக்கட்டையாக இருக்காமல் முனைவராக இருக்க வேண்டும். என்றாலும் எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெற, அரசு தரப்பு மட்டும் போதாது. இரண்டு கைகள் சேர்ந்தால் மட்டுமே ஒலி எழுப்ப முடியும். இல்லை என்றால் அந்த இரண்டு கைகளும் முஷ்டி மடக்கி சண்டை போட்டுக் கொண்டே இருக்கலாம். இலங்கை அரசியலைப் பொறுத்தவரை, சண்டை என்றாலும் சத்தம் எழுப்புவது என்றாலும் இரண்டு அல்ல, இரண்டாயிரம் கைகள் இருக்கின்றன. எதிர்காலத்திலாவது, கை கோர்ப்பதா அல்லது கை கலப்பதா என்பதை முடிவுசெய்து செயல்பட வேண்டும். அதற்கான சமயம் இது தான். அதுவே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சாராம்சம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago