Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 19 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே. சஞ்யன்
இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று கூறியிருந்தார் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய.
இவர் இதைச் சொன்னது கொழும்பில் அல்ல, இந்தியாவில் அதுவும் டேராடூனில் உள்ள இந்தியா இராணுவத்தின் பயிற்சித் தலைமையகத்தில் தான் இதைக் கூறியுள்ளார்.
ஒரு வாரகால இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, டேராடூனில் பயிற்சி பெற்று வெளியேறிய இந்தியப் படையினரின் அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னரே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீடுகள் பற்றிய, அவரது இந்தக் கருத்து இந்தியாவுக்கு திருப்தியைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால், சீனா பற்றி இந்தியா அதிகமாகவே கவலை கொள்ளத் தொடங்கியுள்ளது.
இலங்கையில் சீனாவின் தலையீடுகள், முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து இந்தியா கலக்கமடைவது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்வதில் தான் இந்தியாவுக்கு கௌரவப் பிரச்சினையாக உள்ளது.
பல சந்தர்ப்பங்களில் இந்திய இராணுவ, விமானப்படைத் தளபதிகள் சீனத் தலையீடுகள் குறித்து அச்சம் வெளியிட்டிருந்தாலும், இராஜதந்திரிகளோ, அரசியல் தலைவர்களோ அப்படி ஒன்றும் இல்லை என்று காட்டவே முனைகின்றனர்.
அண்மையில் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் இலங்கைக்கு வந்திருந்தார். யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் இலங்கை விவகாரம் சார்ந்த, சிறப்புரைகளை அவர் நிகழ்த்தியிருந்தார்.இதன்போது அவர் கூறிய கருத்துகளில் முக்கியமானது சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலைப்படவில்லை என்பதாகும்.
'அம்பாந்தோட்டையில் சீனா அமைக்கும் துறைமுகம் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை. சீனாவின் முதலீடுகளுக்குப் போட்டியாக இலங்கையில் இந்தியா முதலீகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை' என்று அவர் கூறியிருந்தார்.
அவரது உரை சீனாவுக்குப் போட்டியாக நாம் எதையும் செய்யவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது.
ஆனால் உண்மை அதுவாக இல்லை என்பது மட்டும் தெளிவு. இலங்கையில் இந்தியா மேற்கொள்கின்ற எல்லாத் திட்டங்களுமே சீனாவுக்குப் போட்டியாக - சீனாவின் தலையீட்டைக் குறைப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை அரசுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவும், இலங்கை விவகாரத்தில் பின்பற்றப்படும் அணுகுமுறையும் சீனாவைச் சார்ந்தே தீர்மானிக்கப்படுகின்றன.
எங்கே சீனா எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு போய் விடுமோ என்ற பயம் இந்தியாவுக்கு வந்து விட்டது.
முன்னர் ஜே.ஆர் காலத்தில் இதுபோன்று தான் இந்தியாவுக்கு ஒரு பயம் இருந்தது. அமெரிக்கா வந்து இலங்கையில் கால்வைத்து விடுமோ என்பதே அந்தப் பயம்.
அதற்காகத் தான் இந்தியா, தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்தது. பின்னர் ஜே.ஆரைப் பயமுறுத்தி இலங்கைக்குத் தனது படைகளை அனுப்பியது.
பின்னர் இந்தியா கையைச் சுட்டுக் கொண்டு வெளியே போனதுடன், அமெரிக்காவின் கவனமும் வேறுபக்கம் திரும்பி விட்டது.
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்த மூலோபாயம், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியுள்ளது. ஆனால் சீனாவை இலங்கைக்கு அருகில் கொண்டு வந்து விட்டது.
சீனா ஆயுத உதவிகளைக் கொடுக்க, இலங்கைப் படையினர் புலி வேட்டையாடியதை இந்தியா வேடிக்கை பார்த்தது. இப்போது சீனாவின் செல்வாக்கு இலங்கையில் வளர்ந்து விட்ட நிலையில்இ இந்தியா அதையும் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
பிராந்திய வல்லரசாக இருந்தாலும் குட்டித் தீவான இலங்கையை தட்டிக் கேட்கவோ, அதட்டிப் பேசவோ முடியாத நிலையில் இந்தியா இருக்கிறது. இந்த நிலையை வெளிப்படையாகக் கூற முடியாத நிலையில் இந்திய இராஜதந்திரிகள் இருக்கின்றனர் என்பதே உண்மை.விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலவே அவர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினாலோ சீனாவின் தலையிடுகளாலோ இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை இந்தியா உண்மையில் கருதுமா என்பதே சந்தேகம்தான்.
தனது கரையில் இருந்து மிகநெருக்கமாக, சீனா தனது பொருளாதார நலன்களை நிலை நிறுத்துவதை இந்தியாவினால் எப்படி அச்சமின்றி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அப்படி இருக்கின்ற ஒரு சூழ்நிலை இருந்தால் இந்தியா கையாலாகாத நிலையை அடைந்து விட்டது என்றே பொருள்.
இலங்கை விவகாரத்தில் மட்டுமல்ல மாலைதீவு, சீஷெல்ஸ் விவகாரங்களிலும் தான் இந்தியா கோட்டை விட்டு நிற்கிறது.
இந்தியாவின் காலடியில் இருந்த மாலைதீவில் தூதரகத்தை அமைத்து விட்டது சீனா. அடுத்து அங்கு நீர்மூழ்கி கப்பல்தளம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில் சீஷெல்சுடன் உடன்பாடு செய்து கொண்டுள்ள சீனா, அங்கு கடற்படைத் தளத்தை அமைக்கவுள்ளது. சீனா அமைக்கப் போகும் முதலாவது கடல் கடந்த தளம் இதுவாகும்.
இந்தக் கடற்படைத்தளம் பயிற்சி மற்றும் ஆயுத தளபாட விநியோக வசதிகளைக் கொண்டதாக அமையவுள்ளது. அதைவிட சீனா கட்டி வரும் மிகப்பெரிய விமானந்தாங்கிக் கப்பலையும் இங்கேயே நிறுத்தப் போவதான தகவல்களும் உள்ளன.
இந்தியப் பெருங்கடல் என்பது இந்தியாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஒன்றாக இருந்த நிலை இப்போது மாறிவிட்டது.
1988 இல் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கப்பல் ஒன்றின் மூலம் மாலைதீவுக்குள் நுழைந்து ஆட்சியைப் பிடிக்க முனைந்தபோது, அடுத்த சில மணி நேரங்களில் இந்தியா தனது படைகளை அனுப்பி ஆட்சியைக் காப்பாற்றியது.
அதற்குப் பிறகு எல்லாமே இந்தியா தான் என்றிருந்த மாலைதீவு, இப்போது சீனாவின் பக்கம் சாயத் தொடங்கி விட்டது. இந்தியாவுக்கு மேற்கே இப்போது அதிகரித்து வரும் சீனத் தலையீடுகள் ஒரு தலைவலியாகவே மாறி வருகிறது.
இப்பின்னணியில் தான் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இந்தியாவில் நின்று கொண்டு சொல்கிறார், சீனாவின் தலையீடுகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்று.
அவர் இதனைக் கூறிய போது சீன இராணுவ ஜெனரல் ஒருவர் அறு அதிகாரிகள் சகிதம் இந்தியாவில் தங்கியிருந்தார். இருதரப்பு இராணுவ மட்டப் பேச்சுக்களை நடத்தவே இவர்கள் அங்கு சென்றிருந்தனர்.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மட்டும், சீனா குறித்து இப்படிக் கூறவில்லை. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூட, இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டமிடவில்லை என்றே நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்திய பிரதமரின் இந்தக் கருத்து இந்தியாவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இப்படித் தான் 1962இல் ஜவஹர்லால் நேரு பஞ்சசீலக் கொள்கை, சீனா தமது நண்பன் என்று கூறிக் கொண்டிருக்க, சீனாவின் செம்படைகள் இந்தியாவுக்குள் படையெடுத்தன. அதேநிலைக்குத் தான் மன்மோகன்சிங்கின் கருத்தும் ஒப்பிடப்படுகிறது.
இப்போது இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த சீனா திட்டமிடுகிறதா- இல்லையா என்பதல்ல விவகாரம். இந்தியாவை முற்றுகையிட- அதனை செயலற்ற நிலைக்குள் தள்ளிவிட- சீனா வியூகம் அமைக்கிறது என்பதே முக்கியமான விடயம்.
சீனாவிடம் இருந்து பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தல் இறுகிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் இந்தியாவின் இராஜத்தந்திம் எதற்காகப் போலிவேடம் போடுகிறது என்பதே கேள்வியாக உள்ளது.
சீனா விவகாரத்தில் அடங்கிப் போக நினைக்கிறதா அல்லது அடக்க முடியாது என்று அச்சம் கொள்கிறதா?
எதுஎவ்வாறாயினும் இந்தியா, சீனா இடையில் ஆதிக்கப் போட்டி இந்தியப் பெருங்கடலில் தீவிரமடையும் போது அதன் பாதிப்பு இலங்கையையும் விட்டு வைக்காது.
ஏனென்றால் இந்த இரு நாடுகளினதும் செல்வாக்குப் பரப்பினுள் தான் இலங்கை இருக்கிறது.
சீனாவின் பக்கமே இலங்கை அதிகம் சாய்ந்துள்ளதால், இந்தியாவின் வெறுப்புத் தீவிரமாகவே இருக்கும். இவையெல்லாம் இப்போதைக்கு பிரச்சினையாகத் தோன்றாது. ஆனால் அதுவே நிரந்தரமானதாக இருக்காது. ஒரு உறைக்குள் ஒரு வாள் தான் இருக்க முடியும்.
அதுபோல இதுவரை இந்தியாவின் வாள் மட்டுமே இருந்த இந்தியப் பெருங்கடல் என்ற உறைக்குள் இப்போது சீனா என்ற வாளும் நுழையப் பார்க்கிறது.
அத்தகைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பதற்றம் நிறைந்த பிராந்தியமாக உருவெடுக்கலாம். அத்தகையதொரு தருணத்தின் தான் இலங்கை வருத்தம் கொள்ளும் நிலை ஏற்படவும்கூடும்.
meenavan Tuesday, 20 December 2011 01:20 PM
இந்தியாவின் இரட்டை வேடம் கிழிகிறது. 1948 இன் காஷ்மீர் சர்வசன வாக்கெடுப்பு இதுவரை நிகழாமையிலேயே 1971ல் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தை பிரிக்க உதவியது.1980 இற்கு பிற்பட்ட காலத்தில் ஒரு உறையுள் இரு வாள்களை வைத்து இலங்கை அரசுடன் உறவையும் பேணி போராளி குழுக்களுக்கு பயிற்சி வழங்கியது. 2009 ல் புலிகளை தோற்கடிக்க உதவியது. இன்று கறையான் புற்றெடுக்க நாகம் குடிகொள்வது போல சீன தடம் வலுக்கிறது இந்தியா புறந்தள்ளப்படுகிறது.
Reply : 0 0
ravi Tuesday, 20 December 2011 03:07 PM
மனதில் என்ன இருக்கிறதோ அதுதான் எழுத முடியும். சஞ்சயன் சீனாவை எதிர்கிறார் என்றுதான் புரியுது ஒழிய, அப்படியான காலகட்டம் இலங்கைக்கு வாராது. வந்தால், அதையும் முகம் கொடுக்க இலங்கை அரசு தயாராகயிருக்கும்.
Reply : 0 0
xlntgson Thursday, 22 December 2011 03:06 PM
China Taiwan pirachchinaiyai theertthu vidumaa? Indiavai soozhndha naadugal Indiavai sandhegippadhaivida vida Chinavin andai naadugal Chinavai bayandhu irukkinrana. appadiyaana bayam Pakistanukko Ilangaikko illai.
Reply : 0 0
sahabdeen Saturday, 31 December 2011 06:22 AM
காதல் என்றாலே சிக்கல்தான்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago