2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சசிகலாவின் துரோகங்களை வெளியிடும் முதல்வர் ஜெயலலிதா

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூன்றாவது முறையாக முதலமைச்சரான ஜெயலலிதா தன்னை முற்றுகையிட்டிருந்த "அதிகார மையத்தை" தகர்த்து எறிந்திருக்கிறார். உடன்பிறவா சகோதரி என்று அனைவராலும் சொல்லப்பட்ட சசிகலா - முதலமைச்சரின் இல்லமான போயஸ் கார்டனிலிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளார். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அ.இ.தி.மு.க.) தமிழகம் முழுவதும் வெவ்வேறு மண்டலங்களின் பொறுப்பில் இருந்த சசிகலாவின் உறவினர்களான இராவணன், எஞ்சினியர் கலியபெருமாள் போன்றோர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். இது மட்டுமின்றி சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், மற்ற சொந்தங்களான மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ், இளவரசி, அணுராதா, திவாகரன், பாஸ்கரன் என்று இப்படி நீக்கப்பட்டோரின் பட்டியல் தினமும் நீண்டு கொண்டே போகிறது. முதல்வரின் இல்லத்தில் அதிகாரம் செலுத்திய சசிகலாவில் ஆரம்பித்து, கடைக்கோடியில் அவரது சொந்தக்காரராக இருந்த யூனியன் சேர்மன் வரை நீக்கி "அதிர்ச்சி வைத்தியம்" கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. "சூழ்ச்சிகள்" பெரும் சுனாமியில் சிக்கி சிதறிப் போய் விட்டன என்ற ஆனந்தத்தில் ஒட்டுமொத்த தமிழக அரசின் நிர்வாக அமைப்பும், கட்சியின் தொண்டர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.

சென்னை மாநகரத்தில் மோனோ ரயில் கொன்ட்ராக்ட் வழங்குவதில் ஏற்பட்ட மோதல் - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரை போன காரணத்தால் "எப்படி பிளக் லிஸ்ட் பண்ணப்பட்ட நிறுவனத்திற்கு கொன்ட்ராக்ட் வழங்கினீர்கள்" என்று கேள்வி எழுப்பினார் முதல்வர் ஜெயலலிதா. இது தொடர்பான விசாரணையில் முதல்வருக்குத் தெரியாமலேயே அதிகாரிகளுக்கு சசிகலா உத்தரவுகளை பிறப்பிக்கிறார் என்ற பயங்கரத் தகவல் தெரியவந்தது. சமீபத்தில், பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான முதல்வர் ஜெயலலிதா, "நான் கம்பெனியில் ஒரு ஸ்லீப்பிங் பார்ட்னர்தான். சொத்துக்கள் வாங்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது" என்று நீதிபதி மல்லிகார்ஜூனைய்யா முன்பு கூறியிருந்தார். தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பது அவரது வாதம். ஆனால், அடுத்து ஆஜராகி "முதல்வர் சொன்னது சரிதான். நாங்கள்தான் சொத்துக்களை வாங்கினோம். அவருக்குத் தெரியாது" என்று கூறியிருக்க வேண்டிய சசிகலா, பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கின் கேள்விகளை தமிழில் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். வழக்கைத் தள்ளிப்போட்டு தன் தலைக்கு மேல் சொத்துக்குவிப்பு வழக்கு என்ற கத்தி எப்போதும் தொங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்ற ரீதியில் வியூகம் வகுக்கிறார் சசிகலா என்று நினைத்தார் முதல்வர் ஜெயலலிதா. இப்படி கோரிக்கை வைத்த விடயம் முதல்வருக்கு கோபத்தை ஏற்படுத்தியது என்று கூறும் ஒரு வழக்கறிஞர், "தன்னை முழு மனதுடன் ஆதரிக்கத் தயங்கும் சசிகலாவை தன் வீட்டில் ஏன் தங்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு வந்தததும் சசிகலாவின் வெளியேற்றத்திற்கு காரணம்" என்கிறார். பல ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். போஸ்டிங்குகளில் சசிகலா மூக்கை நுழைத்தது அதிகார வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. முதல்நாள் நியமிக்கப்பட்டு மறு நாள் மாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். இதனால் தலைமைச் செயலாளர் திபேந்திரநாத் சாரங்கி, டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோர் சசிகலாவின் குறுக்கீடுகள் குறித்து முதல்வருக்கு முறைப்பாடு செய்தார்கள்.

ஏற்கனவே இருமுறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் முதல் முறை (1991-1996)இல் இருந்தது போன்ற ஆதிக்கம் இரண்டாவது முறை (2001-2006) இல்லை. இந்தமுறை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் ஆட்சி அதிகாரம், கட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் சசிகலாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. அதிகாரிகளும், அமைச்சர்களும் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவை நிறைவேற்றுவதற்கு பதில் சசிகலா சொல்வதைக் கேட்டாலே போதும் என்ற நிலை உருவானது. இந்நிலையில் பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகப் போன சசிகலா முன்பே விலக்கி வைக்கப்பட்ட வளர்ப்பு மகன் சுதாகரனுடன் சகஜமாகப் பேசினார். நீதிமன்றத்திற்குள் கூட ஒரு புறம் சசிகலா, இன்னொரு புறம் இளவரசி. இவர்களுக்கு இடையில் சுதாகரன் என்று அமர்ந்து கொண்டார். அந்த அளவிற்கு "இவர்கள் நம் சொந்தக்காரர்கள்" என்ற மனப்பான்மையுடன் சசிகலா கோர்ட்டில் நடந்து கொண்டாராம். இத்துடன் இல்லாமல் அடுத்த நாள் விசாரணைக்காக பெங்களூரிலேயே தங்கியிருக்க நேர்ந்த சசிகலா, தனது குடும்பத்தாருடன் ஆலோசனை நடத்தி "நமக்கு 65 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இந்தமுறை சொத்துக் குவிப்பு வழக்கில் அம்மா (ஜெயலலிதா) மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்றால் நம் சொந்தத்தில் ஒருவரே முதல்வராக வர வேண்டும். என் கணவரே (எம்.நடராஜன்) முதல்வராக வந்தால் கூட எனக்கு சந்தோஷம்தான்" என்ற ரீதியில் பேசியதாகவும், அந்த பதிவு செய்யப்பட்ட உரையாடல் அப்படியே முதல்வர் ஜெயலலிதாவின் கைக்கு கிடைத்ததாகவும் தகவல் ரெக்கை கட்டிப் பறந்தது. இது தொடர்பாக கார்டனில் நடைபெற்ற விசாரணையில் சசிகலாவிற்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும் உச்சகட்ட மோதல் வெடித்தது. 38 வருடங்களாக தனக்கு நண்பியாக இருக்கும் சசிகலா தன் முதலமைச்சர் பதவிக்கே குறி வைக்கிறார் என்பதை முதல்வர் ஜெயலலிதாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. "இது பெரும் நம்பிக்கைத் துரோகம்" என்று கருதிய முதல்வர் ஜெயலலிதா - சசிகலாவை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றினார். ஒரு காலத்தில் முதல்வருக்கு கேஸட் கொடுப்பவராக போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து, பிறகு ஜே.ஜே.டி.வி.யின் நிர்வாக தலைவராகவும், அ.தி.மு.க.வின் செயற்குழு உறுப்பினருமாகவே நியமிக்கப்பட்டு அதிகாரம் செலுத்தி வந்த சசிகலா, இப்போது அவரது உறவினர் பாஸ்கரனின் சென்னை அருகில் உள்ள நீலாங்கரை இல்லத்தில் தங்கியிருப்பதாக தகவல்.

இன்று அல்ல! எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆனதிலிருந்து சசிகலாவின் குடும்பத்தினருக்கு பதவி கொடுப்பதும், பிறகு எடுப்பதும் என்ற பாணியையே கடைப்பிடித்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. முதன் முதலில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று 1991ஆம் ஆண்டளவிலேயே அறிக்கை விடுத்தார். பிறகு சசிகலாவின் அக்காள் மகன்கள் டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், அண்ணன் மகன் மகாதேவன், இன்னொரு அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோருக்கு பதவி கொடுத்தார். பிறகு பறித்தார். இவர்கள் அனைவருடனும் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அறிக்கைகள் விட்டார். தினகரனின் மனைவி அனுராதாவை ஜெயா டி.வி.யின் மனேஜிங் டிரெக்டராக நியமித்தார். பிறகு விலக்கினார். வி.என்.சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்து "மெகா" திருமணத்தையும் நடத்தி வைத்தார். அதன் பிறகு 1999ஆம் ஆண்டளவில், "சுதாகரன் அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல. அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணமும் இல்லை. அவரது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள நான் உதவும் பேச்சுக்கும் இடமில்லை. ஆகவே சுதாகரனுடன் அ.தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம், அவரை சந்திக்கவும் வேண்டாம்" என்று அறிக்கை விடுத்தார் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இப்படி சசிகலாவின் உறவினர்கள் அனைவரையுமே அ.இ.அ.தி.மு.க.விலிருந்து இந்தமுறை ஆட்சிக்கு வரும் முன்பே ஓரங்கட்டி விட்டார். எஞ்சியிருந்தது சசிகலா, இராவணன், எஞ்சினியர் கலியபெருமாள் ஆகியோர் மட்டுமே! இவர்களும் அமைச்சர்கள் நியமனம், கட்சி பொறுப்பாளர்கள் நியமனம், அதிகாரிகள் டிரான்ஸ்பர் எல்லாவற்றிலும் தலையிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கடந்த ஆறேழு மாதங்களில் "டோக் ஒப் த டவுன்" என்ற நிலைக்கு வந்தது. இப்படியொரு கட்டத்தில்தான் முன்பு நீக்கப்பட்டவர்கள், எஞ்சியிருந்தவர்கள் எல்லோரையும் சேர்த்து "ஒட்டுமொத்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை" வெளியேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தன் பதவிக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் சசிகலா நடந்து கொண்டதால்தான் இப்படியொரு தீவிரமான நடவடிக்கையை எடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்பது கட்சி வட்டாரத்தகவல்.

சசிகலா நீக்கப்பட்ட பிறகு அமைதியாக இருக்கிறார். அவரது கணவர் நடராஜனும் ஏதும் வாய் திறக்கவில்லை. கூட்டணி அமைத்தாலும் சரி, அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் சரி அதில் எல்லாமே தனக்கும் பங்கு இருக்கிறது என்று பத்திரிகை பேட்டிகள் மூலம் அறிவித்து வந்த எம்.நடராஜன் இப்போது தன் மனைவி நீக்கப்பட்டதற்கு எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது அரசியல் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துள்ளது. சசிகலா நீக்கப்பட்ட மறுதினம் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டு, "நாங்கள் தலைமையின் பக்கமே" என்று பறைசாற்றினார்கள். அந்த விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "தியாகம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் தியாகம் செய்தோம் என்ற எண்ணத்தை மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சுயநலத்துடன் வாழ்வது ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால் இறுதியில் கசக்கும். அதே சமயம் மற்றவர்களுக்காக வாழ்வது ஆரம்பத்தில் கசக்கும். இறுதியில் இனிக்கும்" என்றார். இது சசிகலாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை செய்தி என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அடுத்து டிசெம்பர் 24ஆம் திகதி நடந்த எம்.ஜி.ஆர். நினைவு தின நிகழ்ச்சியில் "புரட்சி தலைவி (ஜெயலலிதா) தலைமையின் பின்னால் நிற்போம்" என்று சபதம் போட்டார்கள். எந்த எம்.ஜி.ஆர் நினைவு தினத்திலும் நடக்காமல் இந்த நினைவு தினத்தில் அ.தி.மு.க. முக்கியத் தலைவர்கள் அதுவும் குறிப்பாக சசிகலாவிற்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சபதம் எடுத்துக் கொண்டார்கள். சசிகலா குடும்பத்தினர் நிர்வாகத்தில் தலையிட்டு உத்தரவுகளைப் போட வைத்தது பற்றி ரகசிய விசாரணை நடந்து வருகிறது என்று தகவல். சசிகலா வெளியேற்றப்பட்டதால் கட்சிக்குள் சிறு சலசலப்பு கூட இல்லை என்பதை தெளிவாக அறிவித்து விட்ட முதல்வர் ஜெயலலிதா வழக்கமான அரசு மற்றும் கட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

சசிகலாவின் தயவில் போஸ்டிங் பெற்றவர்கள் என்று கருதப்படும் கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள சேகர், மகேந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் டிரான்ஸ்பர் போட்டிருக்கிறார். உளவுத்துறை ஐ.ஜி.யாக 20 நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தாமரைக் கண்ணனை மீண்டும் மாற்றிவிட்டு அமரேஷ் புஜாரி என்ற ஐ.ஜி.யை உளவுத்துறைக்கு புதிதாக நியமித்துள்ளார். பொலிஸ் தலைமையகமான டி.ஜி.பி. அலுவலக வட்டாரத்திற்குள் சசிகலாவிற்கு ஆதரவான ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருக்கக்கூடாது என்ற ரீதியில் மாறுதல் உத்தரவுகள் அதிரடியாக போடப்பட்டுள்ளன.

டிசெம்பர் 25ஆம் திகதி சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து - முல்லைப் பெரியாறு அணை தொடர்பான கோரிக்கையையும், கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றியும் பிரதமர் மன்மோகன்சிங்குடன் சுமார் 40 நிமிடத்திற்கு மேல் ஆலோசனை நடத்தியுள்ளார் முதல்வர். தமிழக அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை டி.ஜி.பி.யாக இருக்கும் ராமானுஜமும், தலைமைச் செயலாளராக இருக்கும் திபேந்திரநாத் சாரங்கியும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். சசிகலாவை வெளியேற்றி, "அதிகாரபூர்வமற்ற அதிகார மையத்தை" தகர்ப்பதற்கு பிரபல துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ.ராமசாமி - முதல்வர் ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.
இப்படி பரபரப்பான வேளையில் டிசெம்பர் 30ஆம் திகதி அ.இ.அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. சசிகலாவின் ஆதரவாளர்கள் கட்சிக்குள் யார் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் யுக்தியே இந்த பொதுக்குழுக்கூட்டம் என்று கூறும் அ.இ.அ.தி.மு.க. முன்னனிப் பிரமுகர் ஒருவர், " முதல் முறை அம்மா முதல்வராக இருந்த போது சசிகலா உள்ளிட்ட அவரது சொந்தங்கள் காபிபோஸா சட்டம் முதல் கொண்டு அனைத்திலும் கைது செய்யப்பட்டார்கள். அது அம்மாவிற்கே கெட்ட பெயரை சேர்த்துக் கொடுத்தது. இப்போது அம்மாவின் பதவியையே பறிக்க திட்டம் போட்டிருக்கிறார்கள். அதனால்தான் அம்மா நடவடிக்கை எடுத்துள்ளார்கள். நடைபெறவிருக்கின்ற பொதுக்குழுவிலும், செயற்குழுவிலும் எங்கள் அம்மா (முதல்வர் ஜெயலலிதா) மீது நம்பிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படும். ஏனென்றால் அம்மாதான் அ.தி.மு.க. என்பதில் எந்த தொண்டனுக்கும் துளிகூட சந்தேகமில்லை. அதே நேரத்தில், சமீபத்தில் நீக்கப்பட்ட சசிகலா சொந்தங்கள் தனக்குச் செய்த துரோகங்களை கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான பொதுக்குழு முன்பு போட்டு உடைப்பார் அம்மா என்று எதிர்பார்க்கிறோம்" என்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தையும், கட்சி அதிகாரத்தையும் தன் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தன் இல்லமான போயஸ் தோட்டத்தில் சசிகலா நியமித்திருந்த ஊழியர்களை இரு மாத சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டார். தனக்கு வேண்டியவர்களின் கையில் போயஸ் தோட்ட நிர்வாகத்தை ஒப்படைத்துள்ளார். அடுத்த கட்டமாக பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், நீக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது சொந்தங்களுக்குமிடையிலும் என்னமாதிரி திடீர் திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தெரியவரும் என்பதே இப்போது "ஹொட் டொபிக்".


You May Also Like

  Comments - 0

  • vimal udayar Monday, 02 January 2012 06:58 PM

    சிறப்பு செய்தி ஆசிரியரின் அனுமானம் மிக நேர்த்தியாக அதிமுக பொதுக்குழுவில் அம்மா பேச்சில் வெளிப்பட்டது . அற்புதமாக யூகித்த காசிநாதன் அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும். இதை பிரசுரித்த தமிழ் மிரர் இதழுக்கும் நன்றி.

    Reply : 0       0

    manjunath swami Wednesday, 11 January 2012 05:23 PM

    தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மிகவும் நல்ல குணம் உள்ளவர். விதியின் விளையாட்டால் சதிகார கும்பலிடம் சிக்கியிருந்தார் . தற்போது அதை தூக்கி வீசியதின் மூலம் நல்லது நடந்துள்ளது. அந்த விபரங்களை தெளிவாக எழுதியுள்ள திரு காசிநாதன் பாராட்டுதலுக்கு உரியவர். வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    ibnuaboo Friday, 20 January 2012 02:34 AM

    இது தமிழ் சினிமாவில் இடம்பெறும் சதிகார குழுக்களிடம் அகப்படும் கதாநாயகின் அவல நிலையும் இடைவேளைக்குப்பின் சுதாரித்துக்கொண்ட கதாநாயகி அல்லது நாயகன் எதிரிகளை வேட்டையாடும் கடைசிக்கட்ட காட்சிகள் போல் தான் தெரிகிறது. தமிழக அரசியலின் அசட்டுத்தனத்தை அற்புதமாக தந்த தமிழ் மிரர் கு பாராட்டுகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X