Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 28 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
• றிப்தி அலி
- ஏழாவது தொடர் -
ஈரானியர்கள் ரசனை மனங் கொண்டவர்கள். இந்த ரசனையானது – இவர்களிடம் நேற்று இன்று தொற்றிக் கொண்டதொரு விடயமல்ல. ஈரானியர்களின் நீண்ட வரலாறும், அவர்களால் படைக்கப்பட்ட அரும் பொருட்களும் ஈரானியர்களின் ரசனை மனதுக்கு அத்தாட்சிகளாகும்.
உதாரணமாக, ஈரானியத் தரை விரிப்புக்கள் (காபட்) - அவர்களின் ரசனைகளுக்கு ஒரு சான்றாகும். அங்கு உற்பத்தி செய்யப்படும் தரை விரிப்புக்களில் ஈரானியர்களின் ரசனை மனம் இழையோடிக் கிடப்பதைக் காண முடியும்.
உலகில் தரை விரிப்புகளுக்கு பிரசித்திபெற்ற இடம் ஈரானாகும். உலக சந்தையில் ஈரானிய தரைவிரிப்புகளுக்கு எப்பொழுதும் கிராக்கி அதிகமாகும்.
துரதிர்ஷ்டவசமாக எனக்கு ஈரானில் - காபட் வாங்கிக்கொள்ள முடியவில்லை. நாடு திரும்பிய பின்னர் வாங்கியிருக்கலாம் என்று கவலைப்பட்டேன்.
தரமானதும் சிறந்த வடிவமைப்புக்களைக் கொண்டதுமான காபட்களை மிகவும் குறைந்த விலையில் ஈரானில் காண முடிகின்றது. சுமார் 3,000 வருடங்களுக்கு முன்பிருந்தே ஈரானியர்கள் கைகளினால் தரைவிரிப்புக்களை வடிவமைக்க ஆரம்பித்தார்கள் என்கிறது வரலாறு.
புராதன தரைவிரிப்புக்களைப் பாதுகாப்பதற்கென்றே ஈரானில் "காபட் நூதனசாலை" என்று உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட தரை விரிப்புகள் இந்த நூதனசாலையில் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வகின்றமை குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டிலுள்ள நூதனசாலையில் உள்ள அரும் பொருட்களை படம் பிடிப்பதற்கு அனுமதி கிடையாது. ஆனால், ஈரானிய காபட் நூதனசாலையில் புகைப்படங்கள் எடுக்கலாம். ஒரேயொரு நிபந்தனை. படம் எடுக்கும் போது, கமராவிலிருந்து பிளாஸ் என்றழைக்கப்படும் வெளிச்சம் வரக்கூடாது.
எனது ஈரான் விஜயத்தின் இறுதியில் பொருட் கொள்வனவிற்கான மிக பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான சந்தையொன்றிற்கு விஜயம் மேற்கொண்டேன். குறித்த சந்தையின் பாரியதொரு பிரதேசம் முழக்க தரைவிரிப்புக் கடைகளே காணப்பட்டன.
இந்த கடைகளில் பல டிசைன்களை கொண்ட மிக தரமான காபட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. தரைவிரிப்புக்களை உற்பத்தி செய்வதற்கென்றே ஈரானில் பல தொழிற்சாலைகள் உள்ளன.
சுற்றுலா:
ஈரானில் நடைபெற்ற ஊடக கண்காட்சியில் கலந்துகொண்டோரில் அதிகமானோர் துருக்கி நாட்டை சேர்ந்தவர்களாவர். ஈரானியர்களிலும் அதிகமானோர் துருக்கியின் ஸ்தான்புள் நகருக்கே சுற்றுலாப் பயணிகளாகச் சென்று வருகின்றனர். சராசரியாக வருடத்திற்கு 3.5 மில்லியன் ஈரானியர்கள் துருக்கியிற்கு சுற்றுலா செல்கின்றனர்.
ஈரானியர்கள் துருக்கி செல்வதற்கு விசா அவசியமில்லை. ஈரானிலிருந்து விமானம் மூலம் துருக்கி செல்வதற்கு 01 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் தேவைப்படுகிறது. பஸ் பயணமென்றால் 18 மணித்தியாலங்கள். ரயிலில் செல்வதாயின் 24 மணித்தியாலங்கள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. ரயிலுக்கான அனுமதிச் சீட்டுப் பெறுவது சிரமமாகும்.
கல்வி முறைமை:
நமது நாட்டில் 05 வயதில் பிள்ளைகளை தரம் ஒன்றில் சேர்த்து விடுவோம். ஆனால், ஈரானில் 07 வயதிலேயே தரம் ஒன்றுக்குச் சேர்க்கப்படுகிறார்கள்.
முதல் 05 வருடங்கள் ஆரம்ப பிரிவு. அடுத்த 03 வருடங்கள் உயர் நிலை பாடசாலையில் கற்க வேண்டும். பின்னர் வரும் 03 வருடங்களும் டிப்ளோமா கற்கை நெறியாகும்.
இதனையடுத்து, இறுதி பரீட்சையில் சிறந்த தராதரங்களை பெற்றவர்கள் போட்டிப் பரீட்சையொன்றின் மூலம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.
வருடத்திற்கு சுமார் ஒரு மில்லியன் மாணவர்கள் பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்களை அனுமதிப்பதற்கு தேவையான அளவு பல்கலைக்கழங்கள் ஈரானில் உள்ளன.
இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு மாணவர்களும் ஈரானிய பல்கலைக்கழங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். இதனடிப்படையில் இலங்கையர்களும் ஈரானிய பல்கலைக்கழகங்களில் கற்கின்றனர்.
இந்தப் பல்கலைக்கழகங்களில் வைத்தியம், பொறியியல், சட்டம், வர்த்தகம் மற்றும் கலைத் துறை என - தொழில் வாய்ப்புக்கு ஏற்றவகையில் கற்கை நெறிகள் உள்ளன.
இதேவேளை, பல்கலைக்கழகங்களில் இளமானி பட்டத்தை பெறுவதற்காக 4 வருடங்கள் கற்க வேண்டும். இதனையடுத்து முதுமானி கற்கை நெறிக்காக 2 வருடங்களும், கலாநிதி கற்கை நெறிக்காக சுமார் 4 – 5 வருடங்களும் கற்க வேண்டும்.
மில்லத் கோபுரம்:
ஈரானிய நவீன கட்டிடக் கலையின் அடையாளமாக மில்லத் கோபுரம் விளங்குகின்றது. 435 மீற்றர் உயரமான இந்தக் கோபுரத்தில் பாரசீக கலை மற்றும் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தலைநகர் தெஹ்ரானிலுள்ள இந்தக் கோபுரமானது, உலகில் மிக உயரமான தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்களில் ஐந்தாவது இடத்தைப் பெறுகின்றது.
மில்லத் கோபுரத்தில் பல்வேறு விதமான வடிவமைப்புக்கள் காணப்படுகின்றமையினால், இது ஈரானின் முக்கிய கலை மற்றும் சமூக நிலையமாகவும் கருதப்படுகின்றது.
சுமார் 150 ஆயிரம் தொன் நிறையினை கொண்ட இந்த கோபுரம் 63 ஆயிரம் கன மீற்றர் கனவளவு உடையதாகும். இந்தக் கோபுரத்தில் 17 ஆயிரம் கன மீற்றர் கண்ணாடியால் ஆன பகுதியும் காணப்படுகிறது.
மில்லத் கோபுரமானது, அடிப் பகுதி, கோபுரக் கால் பகுதி, தண்டுப் பகுதி, தலைப் பகுதி மற்றும் தொலைக்காட்சி - தொலைத்தொடர்பு அண்டனா பகுதி என பிரிக்கப்பட்டுள்ளது.
தொஹ்ரான் பிரதேசத்திற்கான கம்பில்லா தொலைத் தொடர்பு விஸ்தரிப்பு, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவற்றுக்கு தேவையான அலைவரிசை சேவை (வி.எச்.எப் / யு.எச்.எப் / எப்.எம்), நவீன தொலைக்காட்சி கட்டமைப்பு (டி.வி.பி / எம்.வி.டி.எஸ்) போக்குவரத்து கட்டுப்பாடு, வானிலை அவதானிப்பு மற்றும் சுற்றுலா ஆகிய சேவைகளுக்காக இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோபுரத்தினை நிர்மாணிப்பதற்காக ஆரம்பத்தில் 21 இடங்கள் தெஹ்ரான் நகரில் இனங்காணப்பட்டன. பின்னர், அவற்றில் நான்கு இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, கடைசியில் தற்போது மில்லத் கோபுரம் அமைந்துள்ள குயி நாசர் மலையே இறுதியாக தெரிவுசெய்யப்பட்டது.
இயற்கை அனர்த்தங்களின்போது பாதிப்பு ஏற்படாத வகையில் தான் மில்லத் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதாவது, மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் காற்றுக்கும், சிலவேளைகளில் மணிக்கு 220 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் காற்றுக்கும் தாக்குப் பிடிக்கும் வகையில் தான் இந்தக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேலும், நான்கு மட்டங்களில் ஏற்படக் கூடிய பூமியதிர்ச்சிக்கும் இந்தக் கோபுரம் தாக்குப் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. அதேவேளை 110 வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படலாம் என எதிர்பார்ப்படுகின்ற இரண்டாம் மட்ட பூமி அதிர்ச்சியினால் இந்த கோபுரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடாத வகையில்தான் அதன் நிர்மாணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்ட மில்லத் கோபுரத்தை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இந்த கோபுரம் ஈரானிய பொறியியலாளர்களினால் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறித்துச் சொல்லத்தக்கது.
மில்லத் கோபுரத்தின் நிர்மாண பணிகளுக்காக வெளிநாட்டவரின் எந்தவித உதவியும் பெறப்படவில்லை என்பதை ஈரானியர்கள் பெருமையுடன் பேசிக் கொள்கின்றனர்.
மில்லத் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால், முழு தெஹ்ரானையும் அவதானிக்க முடியும். அதேபோன்று தெஹ்ரானின் எந்தவொரு மூலையிலிருந்தாலும் இந்தக் கோபுரத்தை காண முடிகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் ஈரானில் நடைபெற்ற 18ஆவது ஊடக மற்றும் செய்தி சேவைகள் தொடர்பிலான காண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த எனது ஈரான் தொடர்பான அனுபவத்தினை அடுத்தவாரமும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்:
பிச்சைக்காரரில்லா ஈரான்! (தொடர் - 6)
பெண்களுக்கும் சமவுரிமை கொடுக்கும் ஈரான் (தொடர் - 5)
வட்டியை விரும்பும் ஈரானியர்கள் (தொடர் - 4)
ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 3)
ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 2)
ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 1)
Ntmshafraz Thursday, 29 December 2011 06:10 AM
பாரசீகம் என்றால் நாகரிகம்தானே
Reply : 0 0
MM.Rasmeer Thursday, 29 December 2011 04:26 PM
பிற நாடுகளின் பாரம்பரியங்களை தெரிவித்தமைக்கு nanri.
Reply : 0 0
asmil Saturday, 31 December 2011 06:55 PM
நன்றி, ரிப்தி அலி, இன்னும் வரட்டும், valtukkal
Reply : 0 0
kolifathaanaa Thursday, 05 January 2012 05:01 PM
நன்றி buvaa
Reply : 0 0
mohammed Thursday, 12 January 2012 11:03 PM
ஒரு சமூகத்தின் கலைத்துவத்தை எடுத்துக் காட்டியுள்ளீர். கலை என்பது ஒரு மனிதனின் உயிரோடு கலந்து செயற்படுவது. சீரான சிந்தனையும், பிடிவாதம் இல்லா நடத்தையும் கொண்ட மனிதனில் கலைத்துவம் மேலோங்கும். அதில் ஈரானியர்களும் விதிவிலக்கல்ல.
நன்றி றிப்தி தொடர்ந்து எழுதுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago