Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 31 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்ககுழுவின் இறுதி அறிக்கை கடந்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்லாவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையை படித்த அரசாங்கத்தின் தலைவர்கள் என்ன கற்றார்கள், சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவ்வறிக்கையின் அடிப்படைகளில் என்ன நடவடிக்கைகளை எடுக்க போகிறார்கள் என்பன இன்னமும் தெளிவாகவில்லை.
ஆணைக்குழுவின் பெயர் எதுவாக இருந்தாலும் அதன் பெயரையும் அதற்குரிய நிபந்தனைகளையும் ஒப்பிட்டு பார்க்ககும் போது சற்று குழப்பமாகவே இருக்கிறது.
ஆணைக்குழுவின் பெயரின் படி அரைநூற்றாண்டுக்கு மேலாகிய இனப்பிரச்சினையின் வரலாற்றிலிருந்து நாடு என்ன கற்றுக்கொண்டுள்ளது என்றும் அவ்வாறு கற்றுக்கொண்ட பாடங்களின் பிரகாரம் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அராசங்கம் என்ன செய்ய வேண்டும் என்றும் ஆணையாளர்கள் ஆராய வேண்டும்.
ஆனால், ஆணைக்குழுவிற்குரிய நிபந்தனைகளின் படி, ஆணையாளர்கள் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வரையிலான ஏழு ஆண்டு காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை மட்டுமே ஆராய்ந்து கற்ற பாடங்களையும் நல்லிணக்கத்திற்கான சிபாரிசுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இனப்பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் வரலாற்று பாடங்களை கற்க வேண்டுமானால் நாம் ஏன் அதற்கு 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதியை ஆரம்ப நாளாக கொள்ள வேண்டும்? இப்பிரச்சினை என்ன அன்று தான் உருவானதா?
ஆணைக்குழுவும் இந்ந விடயத்தை தமது அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளது. "2002ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி முதல் 2009 மே மாதம் 19ஆம் திகதி வரையில் இடம்பெற்ற விடயங்களை பற்றியே ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றே ஆணைக்குழு பணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பல்வேறுபட்ட சமூகங்களின் பிரச்சினைகளுக்கு காரணமானவர்களின் ஆரம்பம் ஆணைக்குழுவிற்கான கால வரையறைக்கு முன்னரே தோன்றியிருக்கிறது என்பதையும் ஆணைக்குழு ஏற்றுக்கொள்கிறது. எனவே, சாட்சியங்களை பெறும்போது, ஆணைக்குழு இந்த விடயத்தை கருத்தில் கொண்டு ஓரளவு நெகிழ்வுத் தன்மையுடன் செயற்பட்டது" என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஆணைக்குழுவிற்குரிய ஆராய்ச்சி காலப்பகுதி குழப்பமாகவே உள்ளது. அதேவேளை, ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் உறுப்பு கட்சிகளின் கொள்கைகளும் இந்த ஆணைக்குழுவிற்கான ஆணையும் ஒத்துபோவதாக தெரிவதும் இல்லை.
அவ்வாணையின் படி, ஆணைக்குழு 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதிக்கு பின்னராக கால பகுதியொன்றையே ஆராய வேண்டும். ஏன் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி? அன்று நடத்த முக்கிய சம்பவம் தான் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமீழிழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் கையொப்பமிட்டமை. (மறுநாளே ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டார்)
2002ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதிக்கு பின்னரான காலப்பகுதியொன்றில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் யாவர் என ஆராயுமாறு பணிக்கப்பட்ட போதும் யுத்த நிறுத்த உடன்படிக்கை தவறானதாக ஆணைக்குழு கூறவில்லை. அந்த உடன்படிக்கையின் தோல்விக்கு காரணமானவர்களையே அது ஆராய்ந்துள்ளது.
அவ்வாறு செய்தமை பிழையென அரசாங்கத்தின் எவரும் கூறவில்லை. ஆளும் கூட்டணியின் கட்சிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தனர்.
அவ்வாறு இருக்க, அக்கூட்டணியின் தலைமையிலான அரசாங்கம் ஆணைக்குழு நியமித்து போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்விற்கான காரணங்களை ஏன் ஆராய வேண்டும்? உடன்படிக்கையின் தோல்வியே அவர்களின் பிராத்தனையாக இருத்தது. அவ் உடன்படிக்கையின் விளைவாகவே ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை கலைத்து விட்டார்.
அவ்வாறாயின் ஏன் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது? ஆணைக்குழு நியமிக்கப்படுவதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் அதாவது 2009ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அப்போது இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான ;கீ முனுடன் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். போர் முடிந்து ஒரு வார காலத்திலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
சர்வதேச மனித நேயம் மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை மீறியது தொடர்பாக பொறுப்புக் கூறுதல் விடயமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் வலியுறுத்தியதாகவும் அரசாங்கம் அது விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கூறியதாகவும் அவ்வறிக்கையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம்தான் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது என அரசாங்கம் கூறவில்லை. ஏதோ தமக்கு நல்லிணக்கம் தேவைப்பட்டுத் தான் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது என்பது போல் அரசாங்கம் நடந்து கொண்டது.
ஆயினும், சர்வதேச ரீதியில் பொறுப்புக்கூறல் என்ற விடயம் வரும் போதெல்லாம் அரசாங்கம் இந்த ஆணைக்குழுவையே வந்தது. எனினும் கௌரவப் பிரச்சினையாக எடுத்துகொண்டோ என்னவோ ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடனான உடன்பாட்டின் அடிப்படையிலேயே நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது என்று கூற அரசாங்கம் விரும்பவில்லை.
எனவே போரின் இறுதிக்கட்டம் என்று அரசாங்கம் ஏழு ஆண்டு காலத்தை எடுத்து கொண்டுள்ளது. "போரின் இறுதி கட்டம்" என்றால் என்ன என்று குறிப்பிட்ட வரையறையோ வரைவிலக்கணமோ இல்லாத நிலையில் எவரும் எதையும் கூறவுமில்லை.
எவ்வாறு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டதோ அவ்வாறே அதன் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 388 பக்கங்களை கொண்ட அறிகைக்கையை முழுமையாக வாசிக்காமல் அறிக்கை வெளியிட்ட நாளே சிலர் தாம் முன்கூட்டியே மனதில் வைத்திருந்த கருத்துக்களை வெளியிட்டமையை காணக்கூடியதாக இருந்தது.
சிலர் போரின் இறுதி நாட்களில் மூன்று முக்கிய புலித் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது படையினரால் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஆணைக்குழு "தீர்ப்பு" வழங்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர் போலும்.
அவ்வாறான தீர்ப்பொன்று அறிக்கையில் இல்லாதால் அவர்கள் அறிக்கையை முற்றாக நிராகரிக்க முற்பட்டு இருப்பதையும் காணலாம்.
ஆனால் சரணடைந்த வேறு சில புலித் தலைவர்களை படையினர் அழைத்து சென்று பின் அவர்களை காணவில்லை என்று கூறப்படுவது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று ஆணைக்குழு கூறியிருப்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை போலும்.
"அரச வர்ணம்" அங்காகே காணப்பட்டாலும் ஆணைக்குழுவின் அறிக்கை இனப்பிரச்சினை தொடர்பான நல்லதோர் ஆராய்ச்சி ஆவணம் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுவதை போல், ஆணைக்குழு அப்பாற் சென்று அதிகார பரவலாக்கலை வற்புறுத்தியுள்ளது. ஆணைக்குழுவின் ஆணையை பொறுத்தவரை, நல்லிணக்கம் என்று வரும் போது அதற்கான ஒரே வழி அதிகார பரவலாக்கல்தான் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஆயினும் ஆணைக்குழு அதிகார பரவலாக்கத்தை வலியுறுத்தியுள்ளது.
எனவே பாத்திரத்தில் அழுக்கு நீர் இருந்தாலும் அந்நீருடன் குழந்தையையும் கொட்டி விடுவதா என்று அதிகார பரவலாக்கலை ஆதரிப்போர் சிந்திக்க வேண்டியுள்ளது.
அரசாங்கம் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை செயற்படுத்துமா என்பது அடுத்த கேள்வியாக உள்ளது. எல்லா சிபாரிசுகளையும் செயற்படுத்த வேண்டும் என்றில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
அவ்வாறாயின் அரசாங்கம் எந்தெந்த சிபாரிசுகளை நிறைவேற்றப் போகிறது எந்தெந்தவற்றை கைவிடப் போகிறது என்பது இப்போதைய கேள்வியாகும்.
ஜனாதிபதி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இரண்டு நிபுணர் குழுக்கள் நீண்ட நாள் ஆய்வுக்கு பின் அதிகார பரவலாக்கலே இனப்பிரச்சினைக்கு தீர்வாகும் என முடிவு செய்துள்ளன.
ஒன்று, ஜனாதிபதியின் முதலாவது பதவி காலத்தில் நியமிக்கப்பட்ட சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவாகும் (ஏ.பிஆர்.சி.) மற்றையது தற்போதைய நல்லிணக்க ஆணைக்குழுவாகும் (எல்.எல்.ஆர்.சி.)
முதலாவது குழு கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னர் அதன் அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தது. அவ்வளவுதான். அக்குழுவின் தலைவராகவிருந்த தற்போதைய சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இப்போது அதை பற்றி பேசுவதில்லை.
அதை நினைக்கும் போது அதிகார பரவலாக்கலை பற்றி நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் எந்தளவிற்கு அரசாங்கத்தின் ரசனையோடு ஒத்துபோகும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. ஒத்து போனால் நல்லது.
Kethis Sunday, 01 January 2012 07:08 PM
உண்மையான கருத்துக்கள் கொண்ட சிறந்த கட்டுரை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago