2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வடக்கு - கிழக்கு இணைப்பு சரியா? சாத்தியமா?

A.P.Mathan   / 2012 ஜனவரி 04 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இனப் பிரச்சனைக்கு சண்டை மூலம் தீர்வுகாணமுடியாது என்ற நிலைமை தோன்றிய பின்னர், சமாதானத்தின் மூலம் முடிவுகாண, அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளை தொடங்கி ஒரு வருடம் உருண்டோடி விட்டது. பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை என்றாலும் - உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினைகளை வைத்துப்பார்க்கும் போது, அது தொடர்ந்து நடைபெறுவதே ஓர் அதிசயம் தான்!

இலங்கை அரசைப் பொறுத்தவரை 'போர் குற்றம்' குறித்த பிரச்சினைகளில் சர்வதேச அழுத்தங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதிலேயே அதிக காலம் செலவிட வேண்டிவந்தது. கூட்டணியோ, மறுவாழ்வு குறித்த தம்மக்களின் கேள்விகளை எதிர்நோக்க வேண்டிவந்தது. அரசியல் ரீதியாக மட்டுமே இனப்பிரச்சனையை அணுகி வந்த தமிழ் தலைமைக்கு இது புதிய அனுபவம். நாளை ஆட்சிக்கு வந்து, இந்த பிரச்சினைகளை கையாள வேண்டுவதற்கான பாலர் பாடம். என்றாலும், ஐ.நா. சபையின் பொது செயலாளர் அமைத்த குழுவின் அறிக்கை மற்றும் வெளிநாடுவாழ் தமிழ் குழுக்களின் அழுத்தம் ஆகியவற்றையும் மீறி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ளாதது மனநிறைவு தரும் ஒரு விடயம்.

இந்த பின்னணியில், புதிய வருடத்தில் இனப் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை தொடரும் என்ற எண்ணமே நம்பிக்கை தருகிறது. இதனால் ஒருமித்த கருத்து உருவாகுமென்றோ, அவ்வாறு உருவானால் அது இந்த 2012ஆம் ஆண்டு முடிவதற்குள் நடைபெறுமென்றோ அறுதியிட்டுக் கூறிவிடமுடியாது. என்றாலும், புதிய ஆண்டில் தான் எந்தவொரு புதிய தேர்தலையும் நாட்டில் எதிர்பார்க்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தனது பட்ஜெட் உரையில் கூறியது நினைவு கொள்ளத்தக்கது. இனப் பிரச்சினைக்கு அரசியல் முறைகள் மூலம் தீர்வுகாண்பது வரை வட மாகாணசபை தேர்தல் நடத்தபடமாட்டாது என்று அவர் கூட்டணிக்கு உறுதி அளித்துள்ளதாக இதனைக் கொள்ளலாம். அவ்வாறான அரசியல் வழிமுறைகளுக்கு ஒரு ஆண்டு மட்டுமாவது பிடிக்கும் என்றும் அவர் எதிர்பார்ப்பது போல் தோன்றுகிறது. அவ்வளவு பொறுமை, தமிழ் கூட்டணிக்கும் வெளிநாடுவாழ் தமிழ் சமூகத்திற்கும் சர்வதேசத்திற்கும் இருக்குமா என்பது சந்தேகமே.

இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான முடிவு பேச்சுவார்த்தை மூலம் இருக்கலாம். அல்லது அரசு தற்போது கூறிவருவது போல் நாடாளுமன்ற குழு மூலம் அந்த முடிவு வரலாம். அல்லது, தமிழ் கூட்டணி கோடிட்டுக் காட்டுவது போல் பேச்சுவார்த்தையோடு ஒட்டிய நாடாளுமன்ற குழு மூலமும் அமையலாம். அமைதி தீர்வு எவ்வாறு அமைந்தாலும் பொலிஸ், நிலம் (காணி), மற்றும் வடக்கு - கிழக்கு ஆகிய பிரதேசங்களை மீண்டும் இணைத்து ஒரே மாநிலம் ஆக்குதல் ஆகிய விடயங்களே முக்கியமாக விவாதிக்கப்படும்.

இதில், பொலிஸ், காணி ஆகிய பிரச்சினைகள் தொடர்பாக, பிரிந்து கிடக்கும் தமிழ் அரசியல் தலைமைக்கு, சிங்கள அரசியல்வாதிகளின் மௌன ஆதரவு இப்போது உண்டு. அதிலும் குறிப்பாக, தென் சிங்கள மாநிலங்களில் உள்ள பிராந்திய சபை உறுப்பினர்களே தங்களுக்கும் அத்தகைய உரிமையும் அதிகாரமும் வேண்டும் என்பதில் கருத்தாக உள்ளனர். அதேசமயம், தங்களது அரசியல் தலைமைகளை எதிர்த்து போராடும் எண்ணமோ, வல்லமையோ, அல்லது மனப்பான்மையோ அவர்களுக்கு இல்லை. எங்கே, தங்களது முக்கியத்துவமும் அதிகார பலமும் இல்லாமல் போய்விடுமோ என்பதும் சிங்கள அரசியல் கட்சிகளின் தேசிய கட்சிகளின் தலைமைத்துவம், பல்வேறு அடுக்குகளில் எதிர்கொள்ளும் சந்தேகம்.

இந்த இரு பிரச்சினைகளிலும் தமிழ் பேசும் மக்களிடையே கிட்டத்தட்ட ஒருமித்த கருத்தே நிலவுகிறது. ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவையும் பேசி தீர்த்துக்கொள்ளக் கூடிய விடயமே. ஆனால் தமிழ் பேசும் மக்களிடையேயே குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினை உண்டு. அதுதான் வடக்கு மற்றும் மீளிணைப்பு குறித்த விடயம். இதில் தான் குறிப்பாக, இனப்பிரச்சினை துண்டாடப்பட்டு மதவாரியாக முஸ்லிம் சமூகத்தினரும் பிராந்திய ரீதியாக கிழக்கில் உள்ள பிற தமிழ் பேசும் மக்களும் வடக்கு பிராந்திய தமிழ் மக்களிடையே இருந்து தனித்துவம் கோரி வருகிறார்கள். கடந்த 1987ஆம் ஆண்டு வட-கிழக்கு இணைப்பு சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று இலங்கை உயர்நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்த பிறகு, அதனை மீண்டும் உடனடி பிரச்சினைப் பொருள் ஆக்குவது தற்போது நிலவும் சூழ்நிலையில் சிறந்த அரசியல் உத்தி அல்ல.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடையே உள்ள ஒற்றுமை - வேற்றுமைகளை அட்டவணை இட்டுப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். கடந்த 1951ஆம் ஆண்டு 'தந்தை' செல்வா, வடக்கு நோக்கி மட்டுமே பயணித்து வந்த தமிழ் மக்களின் அரசியலை கிழக்கு முகமாகவும் திருப்பிப் பாய்ச்சினார். என்றாலும், அவரால் இயற்றப்பட்ட 'வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு'ப் பிறகும் அவரது கட்சி அல்லது கூட்டணியின் கீழ் கூட, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தமிழ் வாக்காளர்கள், 'வெளி ஆட்களுக்கு' வாக்களித்து வெற்றிபெற வைக்கவில்லை என்பதே உண்மை. பிற்காலத்தில் கருணா மற்றும் பிள்ளையான் தலைமையில், விடுதலைப் புலிகள் இயக்கம் பிளவடைந்ததை தனிமனிதர் பிரச்சினையாக மட்டுமே ஒதுக்கிவிட முடியாது. வடக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைமை தொடர்ந்து இந்த அடிப்படை உண்மையை புறக்கணித்து வருவது வருத்தத்திற்குரிய விடயம்.

கடந்த 1990ஆம் வருடம் விடுதலை புலிகள் இயக்கம் வடக்கில் குடியிருந்த முஸ்லிம் சகோதரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இனத்தவர்கள் ஒரு சேர குடியிருந்த கிழக்கு பிராந்தியத்தில் அது சாத்தியமில்லாத நிலையில் முஸ்லிம் மக்களை தாக்கியதன் மூலமும் அவர்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் அந்த இயக்கம் சந்தித்துக் கொண்டது. இன்று விடுதலை புலிகள் இயக்கம் இல்லாத சூழ்நிலையில் கூட அன்று நடந்த சம்பவங்களுக்கு தமிழ் அரசியல் தலைமை வருத்தம் தெரிவிக்கவில்லை. இது, அவர்களும் விடுதலை புலிகளின் 'இனப்புனித' கொள்கையை கொடர்ந்து ஆதரிக்கிறார்களோ என்ற சந்தேகத்தை முஸ்லிம் இனத்தவரிடையே தோற்றுவிற்று இருக்கிறது.

அரசுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், தமிழ் தேசிய கூட்டணி தலைமை, பிற தமிழ் தலைவர்களை மட்டுமல்ல, முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் தலைமைகளையும் கலந்து பேசவில்லை. இரண்டு அல்லது மூன்று முறைகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தாலும் அந்த கட்சியை அரசுடனான பேச்சுவார்த்தைகளில் கூட்டணி பிரதிநிதித்துவப்படுத்தும் என்பது போன்ற எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. மாறாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மற்றும் வடக்கு மாநிலத்தில் அமைச்சர் ரிஷாட் பைதியுதீன் போன்றோர் தங்களது மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் தனித்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்கள். அவர்கள் எப்போதாவது வடக்கு, கிழக்கு மீளிணைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. அதே சமயம், அந்த சமூதாய இளைஞர்களிடையே தோன்றியுள்ளதாகக் கருதப்படும் உலகு சார்ந்த தனித்துவ எதிர்பார்ப்புகளை புறக்கணித்துவிட்டு அந்த சமூகத்தின் அரசியல் தலைமைகள் செயற்பட்டு வெற்றி பெற்றுவிட முடியாது.

வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற பேச்சு எழுந்தாலே அரசு மட்டுமல்ல, அங்கு வாழும் முஸ்லிம் இன மக்களும் தமிழ் அரசியல் தலைமையை மீண்டும் சந்தேக கண்ணுடன் நோக்கத் தொடங்கிவிடுவார்கள். இதுவே அந்த இரு இன மக்களிடையே தற்போது மீண்டும் துளிர்விடும் நல்லுணர்விற்கு ஊறுவிளைவித்து விடும். அத்தகைய சமூகங்கள் சார்ந்த நல்லுணர்வு நிலவினால் மட்டுமே வடக்கு, கிழக்கு மீளிணைப்பு அர்த்தமுள்ளதாக அமையும். அதனை மட்டுமே அரசியலுக்கு அப்பாற்பட்டு இலங்கை அரசும் ஏற்றுக்கொள்வது குறித்து தீவிரமாக சிந்திக்க முயலும்.

மாறாக, முழுமையான மீளிணைப்பு என்றல்லாமல், 'ஜனாதிபதி சந்திரிகா திட்டத்தின்' அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் கிழக்கு பிராந்திய பகுதிகளை மட்டும் வடக்குடன் இணைப்பது குறித்து பேச்சு எழுந்தால், முஸ்லிம் தலைமைகளும் தங்களுக்கும் இந்தியாவில் உள்ள புதுச்சேரி போன்ற அரசு அமைப்பை செய்து தரவேண்டும் என்ற பழைய கோரிக்கையை மீண்டும் முன்வைக்கலாம். அவ்வாறு செய்யப்பட்டால், வடக்கில் முன்பு முஸ்லிம் மக்கள் குடியிருந்த பகுதிகள் மட்டுமல்ல, விடுதலை புலிகள் காலத்தில் அவர்கள் அநாதரவாக இடம்பெயர்ந்த புத்தளம் போன்ற பகுதிகளும் துண்டாடப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இந்த அதிக பிரச்சினைகளை எதிர்நோக்கி, அரசும் மீளிணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கே தயக்கம் காட்டலாம்.

தமிழ் கூட்டணி தலைமையின் முன்பு உள்ள கேள்வி இது தான்: வடக்கு, கிழக்கு மீளிணைப்பு பிரச்சினையை தற்போது கையில் எடுத்து, அரசுடனான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அதிகப்படியான ஓர் ஆயுதத்தை தனது எதிர்ப்பணியினருக்கு அளிப்பதா? அல்லது, காலம் கனியட்டும் என்று காத்திருந்து, மீளிணைப்பு பிரச்சினையை எதிர்கால சந்ததியினரின் முடிவிற்கு விட்டுவிடுவதா? வடக்கு, கிழக்கு மக்கள் தொகையில் முஸ்லிம் இனத்தவரின் எண்ணிக்கை கூடிவருகிறது என்றும், இலங்கை தமிழ் இனத்தவரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் கருத இடமுள்ள இந்த சமயத்தில், களநிலவரத்திற்கு எதிரான அவர்களது எத்தகைய முயற்சிக்கும் அரசு மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் உடன்படாது என்பதே உண்மை.


You May Also Like

  Comments - 0

  • ummpa Wednesday, 04 January 2012 07:38 PM

    திரு. சத்தியமூர்த்தி அவர்களே ! மிகவும் ஆழமாக சிந்தித்து நல்ல கருத்துக்களை முன்வைக்கிறிர்கள். இந்த வருடத்தின் 4 நாள் கடந்துவிட்டது இப்படி அடுத்தவருடம் வந்துவிடும். இங்கு ஒரு விடயம் தெளிவு ஒற்றுமை என்பது நடக்காத விடயம். ஆனால் அரசியல் அரங்கத்தில் அது நடைபெற முடியும். இருந்தும் இப்போது சிந்தித்து தேவையற்ற பிரச்சினைகளை கவனத்தில் எடுப்பதினால் தான் எதிரிகள் அவர்களின் சுரண்டல்களை கொஞ்சம் வேகமாக நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

    Reply : 0       0

    ummpa Wednesday, 04 January 2012 07:56 PM

    எனவே 'பக்கத்துக்கு வீட்டார் சிங்களவராக, முஸ்லிமாக இருக்க பழகிக்கொள்ளுங்கள். அப்போது நிச்சயமாக பிரச்சினை ஓன்று இருக்காது ஏனென்றால் அரசு ஒருகண் கொண்டு பார்க்கவேண்டிவரும். இது இப்போதைய நிலைமைக்கு சரியாக இருக்கும். பாடசாலை என்றால் அது இரண்டாக இருக்கட்டும் அது ஆண், பெண் என்று மட்டும். கட்டாயம் படிப்பது ஆங்கிலம். சிங்களவர்கள் தமிழ் கட்டாயம் படிக்கவேண்டும். அதுபோல் தமிழ் பேசுவோர் சிங்களத்தை படிக்கவேண்டும். அரச மொழி ஆங்கிலமாக இருக்கட்டும்.
    இப்படி இருந்தால் பலவிடயங்கள் பிரச்சினை இல்லாமல் போகிவிடும்.

    Reply : 0       0

    mohamed Wednesday, 04 January 2012 11:44 PM

    திரு. சத்தியமூர்த்தி அவர்களே ! வடக்கு தனித்தும் கிழக்கு தனித்தும் இருப்பதுதான் சரியானது. அதுவே கிழக்கு வாழ் மக்களின் விருப்புமாகும். கூட்டமைப்பின் கனவு ஒரு போதும்
    நனவாகாது !!!!

    Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 05 January 2012 12:47 AM

    தவறாக இணைக்கபட்டதனாலேயே வடக்கும் கிழக்கும் தனி தனியானது!!! நல்ல முன் அனுபவம் இருக்கின்றது !!! பதினைந்து வருடங்களுக்கு மேல் இணைந்திருந்த வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த கால கட்டத்தில் அம்மாகாண கல்வி, பொருளாதார, அரசியலில் யார் கோலோட்சினர், எந்த பிரதேசத்தவர் அதிகம் வேலை வாய்பை பெற்றனர் என்பதை ஆராய்ந்தால் கிழக்கிலங்கை மக்களின் பேரால் வடமாகாண மக்கள் எல்லா வற்றையும் அளவுக்கதிகமாக அனுபவித்து இருப்பது தெரியவரும் கிழக்கில் கூட முஸ்லிம்களை அன்றி கல்விஇ அரச தொழில் இ நிர்வாகம்இ பொருளாதாரத்திலும் மேல் நிலையில் நிற்போர் வடக்கில் இருந்து தொழில் நிமித்தமோ அல்லது பிரிதொரு காரணத்தினாலோ இடம் பெயர்ந்தவர்கள்தான்.


    எனவே கிழக்கிலங்கை மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் முனேர வேண்டுமெனில் கிழக்கிலங்கை தன் கலாசாரத்துடன் தனித்து தலை நிமிர்ந்து நிற்பதே உசிதமானது !!! கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் அதீத வளர்ச்சி அடைந்து விட்டனர் அவர்களையும் அவர்களின் வாழ்விடங்கள் பாரம்பரிய பூமிகளையும் சேர்த்து இனி வடக்குடன் இணைக்க முடியாது அதற்கு முஸ்லிம்கள் ஒரு நாளும் சம்மதிக்க போவதும் இல்லை!!!! எனவே கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் அர்களின் அரசியலை நல்ல செழிப்புடன் இன்று போல் என்றும் மேற்கொள்வர் அதனால் அவர்கள் இந்த விடயம் குறித்து அலட்டி கொள்ள போவதில்லை!!

    Reply : 0       0

    NAKKIRAN Thursday, 05 January 2012 03:01 AM

    பாண்டிசேரி, கோவா இவைகள் தனி அலகாக இருப்பது பிரான்சு, போத்துக்கல் காலணிகள். அப்படி பார்த்தால் இலங்கை போத்துக்கல், டச்சு, பிரிட்டிஸ் மூன்று காலணிகள் வடக்கு கிழக்கு மத்திய மாகாணங்கள், தென்மேற்கு. ஆகவே இலங்கை மூன்று மாநிலங்கள் இதைதான் பண்டாரநாயக்க, செல்வநாயகம் கொண்டுவர இருந்தார்கள். இதை செய்யாதால்தான் இன்று இவ்வளவு அழிவும்... பெரியோர் சொல் மந்திரம்.

    Reply : 0       0

    janoovar Thursday, 05 January 2012 04:30 AM

    வட-கிழக்கு இணைந்து நீங்கள் அனுபவித்த இன்பங்கள் போதாதே கிழக்கு மாகாண சபையில் ஒரு அதிகாரம் பெற்ற முஸ்லிம் உத்தியோகத்தரை கானேவே இல்லை. சிறுபாண்மை என்றாலும் எங்களுக்கு கிடைக்காத சுதந்திரங்களும், தொழில் வாய்ப்புக்களையும் பெற்று வாழ்தவர்கள் நீங்கள் தற்போது கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு அங்கு சுதந்திரமான ஆட்சியும் தமிழ்,சிங்களம்.முஸ்லிம் மூன்று இனங்களும் தற்போது சுதந்திரமாக இருந்து வருகின்றார்கள். அதனை நீங்கள் எந்த வகையிரும் சீரழிக்க முயற்சிக்காதீர்கள். மீண்டும் வட-கிழக்கு இணைக்கப்படுமானால் அது யாரால் செய்யப்டுகின்றதோ அது அவர்கள் செய்கின்ற வரலாற்றுத் தவராக காணப்படும் தயவு செய்து இக்கதையினை விட்டுவிட்டு ஒற்றுமையாக வாழ ஜனாதிபதி அவர்களுடன் ஒண்றினைந்து செயற்பட முன் வாருங்க.

    Reply : 0       0

    jeyarajah Thursday, 05 January 2012 12:46 PM

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. இது பொதுவாக எல்லாராலும் ஏற்கப்பட்ட உண்மை. நாம் பிரிந்து பலவீனமாவதைத் தவிற்பதற்கு ஆக வேண்டிய எல்லாக் காரியங்களையும் நாம் என்று செய்தாக வேண்டும். நாம் சிறுபான்மையினர் என்றவகையில் ஒன்றுபட வேண்டும். எமது இனம் சிதறிப் போய் இருப்பதற்கு காரணம் அசட்டு சுய கௌரவம். அந்நியனுக்கு நாம் ஒன்றுபட்டு இருந்து கொண்டு விருப்பமாயின் எமக்குள் நாம் பிரிந்து கொள்ளலாம்.

    Reply : 0       0

    Ratnam Thursday, 05 January 2012 03:52 PM

    இணையட்டும் வடக்கும் கிழக்கும்!!!!

    Reply : 0       0

    xlntgson Friday, 06 January 2012 03:11 PM

    Vadakku kizhakku inaippu ippoadhaikku saatthiyamillai, paechchu vaartthaikalukku muttukkattai.

    Reply : 0       0

    muhammath Ranoos Tuesday, 17 January 2012 06:56 PM

    வடக்கும் கிழக்கும் இணைக்கப்படும் போது முஸ்லிம்களின் நிலை அவர்களுக்கு சாதகமான முறையில் உருதிப்படுதப்படாது விட்டால் முஸ்லிம்கள் அதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X