2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வேட்பாளர்களுக்கு கல்வித் தகமையை கட்டாயப்படுத்தியுள்ள ஈரான்

Super User   / 2012 ஜனவரி 07 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

•    றிப்தி அலி

- எட்டாவது தொடர் -

 

நமது நாட்டில் அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட வேண்டுமானால்  அதற்கு ஒரு கல்வித் தகைமை இருக்க வேண்டும் என்று சட்டமொன்று இயற்றப்பட்டால் நன்றாக இருக்குமே என பல முறை நான் யோசித்ததுண்டு. அப்படி யோசித்த அந்த விடயம்  ஈரானில் அமுல்படுத்தப்படுவதை கண்டபோது ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

எமது நாட்டுத் தேர்தல்களை போலவே ஈரானிலும் ஜனநாயக ரீதியான தேர்தல்கள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் என அனைத்தும் அங்கு நடைபெறுகின்றன. நமது நாட்டிலுள்ள மாகாண சபை முறைமை மாத்திரம் ஈரானில் இல்லை.

ஈரானில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நான்கு வருடங்களுக்கொரு முறை நடைபெறுகிறது. அதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் இரண்டு வருடங்களுக்கொரு முறை இடம்பெறும்.

ஈரானிய நாடாளுமன்றத்தில் 270 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு இனத்தின் விகிதாசாரத்திற்கேற்ப உறுப்பினர்கள் - தேர்தல் மூலமான இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யப்படுவார்கள்.

அங்கு தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் ஒருவர் கண்டிப்பாக  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.  அவருக்கு 30 வயதாகியிருக்கவும் வேண்டும். ஒவ்வொரு அபேட்சகரும்  அங்குள்ள நிபுணர்களை கொண்ட குழுவொன்றினால் ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும். இப்படியான பல தகுதிகளைப் பூர்த்தி செய்யும் ஒருவரே  ஈரானிய தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்படுவார்.

மேற்சொன்ன தகுதிகளை கொண்டிராத வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகளினதும், சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும்.

நமது நாட்டில்  தேர்தல் ஒன்றில் வாக்களிப்பதற்கு நபரொருவருக்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும். ஆனால், ஈரானில் 15 வயதை அடைந்துவிட்டால் போதும், அவர் வாக்களிக்கும் உரிமையினைப் பெற்றுக் கொள்வார்.

ஈரானிய நாடாளுமன்றத்தினதும், இலங்கை நாடாளுமன்றத்தினதும் நடைமுறைகள் ஒத்த தன்மையாகவே காணப்பட்டன.  இருந்தபோதும், ஈரானிய நாடாளுமன்றத்தில் பெண்களில் பங்கு கணிசமானதாகும். ஈரானிய சுகாதார அமைச்சராக பெண்ணொருவர் பதவி வகிக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசினால் நியமிக்கப்பட்ட மாகாணங்களின் பிரதிநிதிகள் குழுவொன்று அங்கு உள்ளது. இந்தக் குழுவுக்கு ஆளுநர் தலைமை வகிக்கின்றார். மாகாணத்தின் அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் நலன்புரி உள்ளிட்ட பல விடயங்களை இந்தக் குழுவே மேற்கொள்கின்றது.

இந்தக் குழுவினால் தங்களின் மாகாணங்களுக்கு ஏற்ற வகையிலான உத்தேச சட்டங்களை தயாரிக்க முடியும். ஆயினும், அவற்றினை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். அப்போது தான் அவை சட்டமாக மாறும்.

தேசிய நூலகம் :

இப்பயணத்தன்போது, ஈரானிய தேசிய நூலகத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அதன் பரப்பளவு மட்டும் 9 லட்சத்து 70 ஆயிரம் சதுர மீற்றர்களாகும். அந்த நூலக கட்டிடமானது எட்டு தொடர் மாடிகளை கொண்டதாகும். கிட்டத்தட்ட கொழும்பு – 7 இல் உள்ள தேசிய நூலகம் மற்றும் தேசிய ஆவண காப்பகத்தினை ஒத்ததே ஈரானிய தேசிய நூலகமாகும்.

1937ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஈரானிய நூலகமானது, 1991ஆம் ஆண்டு ஈரானிய நாடாளுமன்றத்தினால் சட்டபூர்வ நிறுவனமாக்கப்பட்டது.

இந்த நூலகம் - தேசிய ஆவணக் காப்பகமாகவும், தேசிய நூலகமாகவும் செயற்படுகிறது. அதேவேளை, ஆராய்ச்சி, திட்டமிடல் மற்றும் தகவல் தொழிநுட்ப நிலையமாகவும் உள்ளது.

ஈரானில் வெளியிடப்பட்டும் நூல்களின் இரண்டு பிரதிகள், குறித்த நூலகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது சட்டமாகும்..

24 மணித்தியாலங்களும் தொழிற்படும் இந்த நூலகத்தில்  ஆங்கிலம், பாரசீகம், அரபு மற்றும் பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 15 லட்சம் புத்தகங்கள் உள்ளன.

இதேவேளை, அரபு மற்றும் பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட 30 ஆயிரம் கையெழுத்து சஞ்சிகைகளும் இந்நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. பாரசீகம் தவிர்ந்த ஏனைய மொழிகளில் ஈரான் குறித்தும், இஸ்லாம் தொடர்பிலும் எழுதப்பட்ட பல்லாயிரக்கணக்கான புத்தங்களும் இங்கு சேகரிப்பில் உள்ளன.

அத்துடன் வரைபடங்கள், புகைப்படங்கள், முத்திரைகள், இறுவட்டுக்கள் மற்றும் சின்னங்கள் என, 70 வகையான ஆவணங்கள் இந்நூலகத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கை 10 லட்சமாகும். மேலும், இங்கு ஆய்வு மற்றும் கல்விச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நூலகத்தில் ஆண்களுக்கொன்று தனியான ஒரு பகுதியும் பெண்களுக்கொன தனியான ஒரு பகுதியுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஈரானிய ஊடகங்கள் :

அச்சு, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் என அனைத்து வகையான ஊடகங்களும் ஈரானில் உள்ளன. மேலும், பல்வேறு செய்தி சேவைகளும் இங்கு இயங்கி வருகின்றன.

ஊடக நிறுவனங்கள் அரச மற்றும் தனியார் துறையினரின் கட்டுப்பாட்டினுள் உள்ளன. ஈரான் நியூஸ், தெஹ்ரான் டைம்ஸ் மற்றும் ஈரான் டெய்லி ஆகிய நாளந்த ஆங்கில பத்திரிகைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. பிறஸ் டி.வி. எனும் ஆங்கில தொலைக்காட்சி அலைவரிசையொன்றையும் பார்வையிட கிடைத்தது.



ஈரானில் பார்வையற்றவர்களுக்காக நாளாந்த பத்திரிகையொன்றும் வெளிவருகின்றது. ஈரான் நியூஸ் எனும் பத்திரிகையினை வெளியிடுகின்ற நிறுவனமொன்றே மேற்படி பார்வையற்றவர்களுக்கான பத்திரிகையினையும் வெளியிடுகின்றது. (தமிழ்மிரர் இணையத்ளத்தின் வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ் பேப்பர் லிமிட்டட் - அண்மையில் பார்வையற்றவர்களுக்காக வாரந்தப் பத்திரிகையொன்றினை இலங்கையில் அண்மையில் வெளியிட்டிருந்ததை இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்)



ஈரானில் வெளிவரும் பார்வையற்றவர்களுக்கான பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றுவோரில் 90 சத வீதமானோர் பார்வையற்றவர்கள் என்பது மெய்சிலிர்க்க வைக்கும் தகவலாகும். சுமார் 10 வருடங்களாக இந்த பத்திரிகை வெளிவருகின்றது.

அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல தேசங்களில் பார்வையற்றவர்களுக்காக வாரந்த பத்திரிகைகளே வெளிவருகின்றன. ஆனால், ஈரானில் பார்வையற்றவர்களுக்காக நாளாந்த பத்திரிகையொன்று வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஈரானிலுள்ள பெரும்பாலன ஊடகங்கள் பாரசீக மொழியினைக் கொண்டவையாகும். ஆங்கில மொழி ஊடகங்களை விடவும் பாரசீக மொழி ஊடகங்கள் ஈரானில் முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலும், ஐரோப்பிய ஊடகங்களை எதிர்க்குமளவு - ஈரானியர்களின் ஊடகத் துறையானது வளர்ந்து நிற்கிறமை குறிப்பிடத்தக்கது. (தொடர் நிறைவு பெறுகிறது)

தொடர்புடைய செய்திகள்:

இரசனை மிக்க ஈரானியர்கள் (தொடர் - 7)

பிச்சைக்காரரில்லா ஈரான்! (தொடர் - 6)

பெண்களுக்கும் சமவுரிமை கொடுக்கும் ஈரான் (தொடர் - 5)

வட்டியை விரும்பும் ஈரானியர்கள் (தொடர் - 4)

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 3)

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 2)

ஈரான்: உலகின் ஓர் ஆச்சரியக்குறி (தொடர் - 1)

 

 

 


You May Also Like

  Comments - 0

  • sekar Saturday, 07 January 2012 06:17 PM

    ஒரு மாதிரியாக சகோதரர் றிப்தி அலி ஈரான் பயண கட்டுரையை நிறைவு செய்து விட்டார்.

    Reply : 0       0

    sakeer Saturday, 07 January 2012 06:19 PM

    ஏழு நாள் ஈரானில் தங்கியிருந்து 8 கட்டுரை தொடரா? நம்பவே முடியவில்லை. சிறந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

    Reply : 0       0

    ooran Saturday, 07 January 2012 08:08 PM

    வாழ்த்துக்கள்..... உங்களது கட்டுரையை நான் முழுமையாக படித்தேன்..... மிகவும் சிறப்பாக உள்ளது.... .உங்களுக்கு இப்படியான ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்ததை முஸ்லிமாகிய நான் பெருமைபடுகிறேன்... தொடரட்டும் உங்களது முயற்சி அனைத்து வழிகளிலும்.

    Reply : 0       0

    easternbrother Sunday, 08 January 2012 02:27 AM

    மிக்க நன்றி சகோதரர்.. உங்கள பயணக்கட்டுரை முடிந்து விட்டதே என ஒரு ஆதங்கம்... நன்றி.... ஒரு சிறு ஆசை உங்கள் போட்டோவை இங்கு போட்டால் ., ஏதோ ஒரு ஆசை..உங்களை பார்க்க..

    Reply : 0       0

    A.H.M.BOOMUDEEN Sunday, 08 January 2012 08:57 PM

    பயணக்கட்டுரை சிறப்பாக இருந்தது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X