Super User / 2012 பெப்ரவரி 20 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு விடயங்கள் இந் நாட்களில் அரசியல் மேடைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஒன்று தற்போது முழு நாட்டு மக்களையும் ஆட்டிப் படைக்கும் விலைவாசி உயர்வும் அதனால் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நெருக்கடி நிலைமையுமாகும். மற்றையது அடுத்த மாதம் ஜெனீவா நகரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை சபை அமர்வின் போது ஆராயப்பட விருப்பதாக கூறப்படும் இலங்கை தொடர்பான பிரேரணையாகும்.
தமிழ் மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படவில்லை போலும். இல்லாவிட்டால் அவர்களுக்கு அதனை சமாளிக்க வசதி இருக்கிறது போலும். ஏனெனில் மனோ கணேசனைத் தவிர தமிழ் அரசியல்வாதிகள் அதைப் பற்றி வாய் திறப்பதேயில்லை. போருக்குப் பின்னால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற வேண்டிய அபிவிருத்தியைப் பற்றியும் தமிழ் அரசியல்வாதிகள் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை.
அவர்களின் முழுக் கவனமும் அதிகாரப் பரவலாக்கல் மற்றும் போர்க் குற்றங்கள் போன்ற விடயங்கள் மீதே செலுத்தப்பட்டுள்ளது. எப்போதாவது அந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு வாழ்க்கைச் செலவைப் பற்றிப் பேசுவோம் என்று அவர்கள் நினைக்கிறார்களோ தெரியாது.
போர்க் குற்றங்கள் என்று வரும் போதும் சில விடயங்கள் சற்று விந்தையாகவே இருக்கிறது. சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களும் அடுத்த நாடுகள் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் அக்கறை செலுத்தும் வல்லரசு நாடுகளும் இலங்கையில் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அவர்களுக்கிடையிலான போரின் இறுதிக்கட்டத்தின் போது போர்க குற்றங்களை புரிந்துள்ளதாக கூறுகின்றன. அந்த போர்க் குற்றங்களைப் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறுகின்றன.
குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் இரு சாராரில் அரசாங்கம் மட்டுமே அவ்வாறான விசாரணை தேவையில்லை எனக் கூறுகிறது. புலிகளுக்கு ஆதரவானவர்கள் அவ்வாறான விசாரணை தேவை என்றே வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச விசாரணையொன்று நடைபெறுமானால் இரண்டு சாராரும் புரிந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களுக்கும் இரு தரப்பிலும் பலர் பொறுப்புதாரர்களாகி விடுவதை தவிர்க்க முடியாது.
போர்க் குற்றங்களைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்பதில் இரண்டு நோக்கங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. எதிர்க்காலத்தில் அவ்வாறானவை நடைபெறாதிருக்கும் வகையில் குற்றம் புரியக் கூடியவர்களை எச்சரிப்பது ஒரு நோக்கமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதன் மூலம் எதிர்கால நல்லிணக்கத்திற்கு வழி வகுப்பதே இரண்டாவதாகும். பழிவாங்கல் இதன் நோக்கம்; அல்ல.
எச்சரிக்கை என்பது அவ்வளவாக பேசப்படுவதில்லை. ஆயுதப் போர் என்று வரும் போது ஆயுததாரிகள் எவரும் எச்சரிக்கப்பட்டதாக தெரிவதும் இல்லை. பொறுப்புக் கூறல் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கி, அதன் மூலம் நல்லிணக்கத்தை உருவாக்குவதைப் பற்றியே மனித உரிமை ஆர்வலர்கள் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார்கள்.
தென் ஆபிரிக்காவின் நல்லிணக்க ஆணைக் குழுவையே பலர் இதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்கள். ஆனால், தென் ஆபிரிக்க நிலைமையும் இலங்கையின் நிலைமையும் இவ்விடயத்தில் வித்தியாசமானதாகவே இருக்கிறது. தென் ஆபிரிக்காவை போலன்றி இங்கு நெருக்குதல் காரணமாக மட்டுமே நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போர் முடிந்து ஒரு வாரத்தில் அதாவது 2009ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் முன்னர் செய்து கொண்டிருந்த ஏற்பாடொன்றின் படி இலங்கைக்கு விஜயம் செய்தார். 26அம் திகதி அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் பொறுப்புக் கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஒரு வருடத்திற்குப் பின்னர் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி ராஜபக்ஷ 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு' என்ற பெயரில் ஆணைக் குழுவொன்றை நியமித்தார்.
ஆணைக் குழு ஆறுமாத காலத்தில் அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க வேண்டும் என்று இருந்த போதிலும் பலர் அதன் முன் சாட்சியமளிக்க முன் வந்தமையினால் அதன் காலக்கெடு நீடிக்கப்பட்டு, 15 மாதங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இதற்கு முன்னர் நியமிக்கட்டு இருந்த சர்வ கட்சி பிரரதிநிதிகள் குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டாலும் இந்த அறிக்கை அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவினால் டீசம்பர் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது.
என்ன குறைகள் இருந்த போதிலும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை இது வரையில் அரச ஆணைக்குழுவொன்றினால் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த அறிக்கையென்றே கூற வேண்டும். சிலர் 'வெள்ளைக் கொடி சம்பவம்' போன்ற சம்பவங்கள் தொடர்பாக தாம் எதிர்ப்பார்க்கும் 'தீர்ப்பை' ஆணைக்குழு வழங்காததால் அதனை முற்றாக நிராகரிக்க முற்பட்டுள்ளனர்.
ஆனால், அதேவேளை யோகி, எழிலன் போன்றவர்கள் விடயத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் தொடர்பாக மேலும் விசாரணை செய்ய வேண்டும் என ஆணைக்குழு செய்துள்ள பரிந்துரையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
ஆரம்பத்தில் ஆணைக் குழுவை முற்றாக நிராகரித்த சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் பூரணமாக இல்லாவிட்டாலும் தாம் ஆணைக் குழுவின் சிபார்சுகளை வரவேற்பதாகவும் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றன.
ஆணைக் குழiவை ஆரம்பத்திலிருந்தே வரவேற்ற அமெரிக்காவும் அதன் சிபார்சுகளை நிறைவேற்றுவதை ஐ.நா. மனித உரிமை சபையின் அடுத்த மாத அமர்வின் போது இலங்கைக்கு உதவி செய்வதற்கு ஒரு நிபந்தனையாக்கியுள்ளது.
இலங்கை அரசு ஆணைக்குழுவின் சிபார்சுகளை நிறைவேற்றாவிட்டால் அமெரிக்கா மனித உரிமை சபையில் கொண்டு வரப்படவிருக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என்றே அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசியாவிற்கான உதவிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கும் மற்ற இருவரும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தான் ஆணைக்குழுவினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள சில சம்பவங்களைப் பற்றி விசாரிப்பதற்காகவென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த 15ஆம் திகதி விசாரணை நீதிமன்றமொன்றை நியமித்தார். இதனையும் சில தமிழ் கட்சிகளும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் நிராகரித்துள்ளன.
இது காலத்தை கடத்தும் தந்திரம் என்றும், நெருக்குதல்கள் வரும்போதெல்லரம் ஆணைக்குழுக்களை நியமிப்பது இலங்கை அரசாங்கத்தின் வழமையென்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறியிருந்தார். இதனை அவர் 2010ஆம் ஆண்டு நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போதும் கூறியிருந்தார்.
அது உண்மையாக இருக்கலாம். அதேவேளை மனித உரிமை சபை கூட்டத்திற்கு காட்டுவதற்காகவே இந்த இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டது எனவும் ஒரு சாரார் வாதிடலாம்.. அவ்வாறானால் இராணுவ அத்துமீறல்களை பற்றி விசாரணை நடத்த கூடாதா என்று அரசாங்க தரப்பு கேள்வி எழுப்பலாம்.
இராணுவம் எல்லை மீறியிருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும் என நல்லிணக்க ஆணைக் குழு தமது அறிக்கையில் கூறியிருக்கிறது. இரண்டு மாதங்களில் இந்த இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை எடுத்த எடுப்பில் நிராகரிப்பது அவ்வாறு நிராகரிப்போரின் நோக்கத்தைப் பற்றி சந்தேகத்தை எழுப்பலாம்.
நல்ல நோக்கத்தோடு அரசாங்கத்தின் மீது நெருக்குதலை ஏற்படுத்துவதை குறை கூற முடியாது. ஆனால் நெருக்குதலானது இரு முகம் கொண்டதாகும். அது அரசாங்கத்தின் மீது நெருக்குதலை ஏற்படுத்தும் அதேவேளை இனங்களிடையே பகைமையையும் வளர்க்கிறது.
பொறுப்புக் கூறலானது நல்லிணக்கத்திற்கு அத்தியாவசியமானது என மனித உரிமை ஆர்வலர்கள் வாதிட்ட போதிலும் அந்த பொறுப்புக் கூறலுக்கான சர்ச்சை நல்லிணக்கத்தை பாதிக்கிறது.
உள்நாட்டில் வெளியிடப்படும் தமிழ் மற்றும் சிங்கள பத்திரிகைகளை வாசிக்கும் போத அது தெளிவாகிறது. எனவே நல்லிணக்கத்தை பாதிக்காத வகையில் நெருக்குதலை ஏற்படுத்தும் வழிவகைகளை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago