2025 மே 19, திங்கட்கிழமை

தமிழக இடைத் தேர்தல்கள்: பணம் பட்டுவாடாவை தடுக்கத் திணறும் தேர்தல் ஆணையம்

A.P.Mathan   / 2012 ஜூன் 11 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் புதுக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தல் வருகின்ற ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் மூன்றாவது இடைத் தேர்தல் இது. முதலில் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை திடீரென்று விபத்தில் சிக்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல். இரண்டாவதாக இன்னொரு அமைச்சர் கருப்பசாமி - உடல்நலக்குறைவால் இறந்து போனவுடன் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத் தேர்தல். இப்போது மூன்றாவதாக அ.தி.மு.க.வின் தோழமை கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமாரன் - சாலை விபத்தில் மரணமடைந்ததால் வந்துள்ள தேர்தல்.

முதல் இடைத் தேர்தலான திருச்சி மேற்கில் எதிர்கட்சியான தி.மு.க.வுக்கும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கும் நேரடியாக நடைபெற்ற மோதல். அதில் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றது. முன்னாள் அமைச்சர் நேருவை களமிறக்கிய தி.மு.க. அங்கு கட்டுத் தொகையை தக்க வைத்துக் கொண்டு, அ.தி.மு.க.விற்கு நெருக்குதல் நெருக்கடியைக் கொடுத்தது. 14,887 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட பரஞ்சோதி வெற்றி பெற முடிந்தது.  அடுத்த தேர்தலான சங்கரன்கோவில் மும்முனைப் போட்டியின் மையமாக காட்சியளித்தது. அ.தி.மு.க.வை விட தி.மு.க.விற்கு சற்று பலமான தொகுதியாக கடந்த காலங்களில் இருந்த சங்கரன்கோவில் இந்தமுறை கட்டுப்பணம் போகும் அளவிற்கு ஒரு தோல்வியை தி.மு.க.விற்கு கொடுத்தது. அ.தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட்ட ம.தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு வந்தாலும் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை. இத்தனைக்கும் வைகோவின் சொந்த தொகுதி சங்கரன்கோவில். தேர்தல் தொடங்கும் போது மும்முனைப் போட்டி போல் காட்சியளித்த சங்கரன்கோவில் தேர்தல் - முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.விற்கு எதிராக தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்திருந்தால் கூட இத்தொகுதியை கைப்பற்றியிருக்க முடியாது என்ற கணக்கை வெளியிட்டது. ஏனென்றால் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இங்கு வாங்கிய வாக்குகள் 94,977. ஆனால் தி.மு.க. உள்ளிட்ட இந்த மூன்று கட்சிகளும் பெற்ற வாக்குகள் 59,042. அ.தி.மு.க.வை எதிர்த்து மூன்று கட்சிகளும் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தால் கூட 35,935 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் இந்த கட்சிகள் மூன்றும் தனித்தனியாக போட்டியிட்ட சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அ.தி.மு.க.

இந்நிலையில் இப்போது நடைபெறும் மூன்றாவது இடைத் தேர்தலான புதுக்கோட்டை இடைத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருக்கும் தே.மு.தி.க.சென்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணியாக இருந்த அ.தி.மு.க.வுடன் நேரடியாக மோதும் தேர்தல். இங்கு 7000 வாக்குகளுக்குள் மட்டுமே பலம் பொருந்திய கட்சியாக விஜயகாந்த் தலைமையேற்கும் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி செல்வாக்கு இருக்கிறது. "இந்த தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்" என்று தேர்தல் பிரசாரத்தை தொடக்கி வைக்க முதன் முதலில் சென்ற நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

நேரடிப் போட்டியில் களமிறங்கியுள்ள அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் புதுக்கோட்டை வாக்காளர்களை வீடு வீடாக சந்தித்துள்ளார்கள். அ.தி.மு.க.வின் சார்பில் 32 அமைச்சர்கள் தொகுதிக்குள் முகாமடித்து வாக்கு சேகரித்துள்ளார்கள். பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம், வெற்றிலை பாக்கு போன்றவற்றையெல்லாம் வாக்காளர்களிடம் கொடுத்து "சென்டிமென்டாக" வாக்கு சேகரித்துள்ளனர். "உங்கள் மின்வெட்டுப் பிரச்சினை தீரவேண்டுமா?", "குடிநீர் பிரச்சினை ஒரு வாரத்தில் தீர வேண்டுமா?" எங்களுக்கு வாக்குப் போடுங்கள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தொகுதிக்குள் சூறாவளிப் பிரசாரம் செய்திருக்கிறார். அவரது பிரசாரத்தின் பிரதான இலக்கு அ.தி.மு.க. மீதுதான். குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவின் மீதுதான் இருக்கிறது. "புதுக்கோட்டையில் இருமுறை அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. அப்போது புதுமை செய்யாத அ.தி.மு.க. இப்போது ஜெயித்து என்ன புதுமை இந்த தொகுதிக்கு செய்து விடப்போகிறது" என்று அ.தி.மு.க. அரசின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார். அ.தி.மு.க.வை எதிர்க்கும் சக்தி படைத்த கட்சி தே.மு.தி.க. மட்டுமே என்பதை எடுத்துரைக்கும் விதத்தில் கடுமையான அ.தி.மு.க. தாக்குதலை தொடுத்து தேர்தல் பிரசாரத்தை செய்து முடித்துள்ளார் விஜயகாந்த். இவருடன் கூட்டணியாக இருக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூட, "அ.தி.மு.க.வை எதிர்க்கும் சக்திபடைத்தவர்கள் நாங்கள்தான்" என்று சவால் விட்டு பேசியிருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வோ தே.மு.தி.க.வை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பற்றி கண்டுகொள்ளவில்லை. அதற்கு பதில் வீடு வீடாக வாக்கு சேகரிப்பதிலும், வாக்காளர்களை "வசீகரம்" செய்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தியது. குறிப்பாக ஒரேநாளில் பத்து இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா கூட, "சங்கரன் கோயில் இடைத் தேர்தல் அ.தி.மு.க. அரசின் நிர்வாகம் எப்படி என்பதற்கு எடை போடும் தேர்தல் என்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி இப்போது "நடை"யை கட்டி விட்டார்" என்று சாடி, புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார். "எனக்கு தி.மு.க.தான் எதிர்கட்சி. நீங்கள் அல்ல" என்பதை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு "பளிச்" எனக் கூறி புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரசாரத்தை முடித்து வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அதேபோல் தொடரும் மின்வெட்டின் மீது மக்கள் அதிருப்தியாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த முதல்வர், "இந்த மின்வெட்டிற்கு முன்பு சிறுபான்மை அரசாக இருந்த தி.மு.க.தான் காரணம்" என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்திருந்தாலும், புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடாமல் போனது அங்குள்ள தி.மு.க.வினர் மத்தியில் ஒருவிதமான சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. ஏனென்றால் 2006, 2011 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சியும் இந்த தொகுதியில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசங்களிலேயே தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்துள்ளன. குறிப்பாக 2006இல் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் 1950 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஜாபர் அலி தோற்றார். அந்த ஜாபர் அலி இப்போது அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2011இல் அ.தி.மு.க.வின் தோழமை கட்சியாக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்துக்குமரனிடம் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக இருக்கும் பெரியண்ணன் அரசு 3101 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்தார். இவ்வளவு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை பறிகொடுத்த தி.மு.க. ஏன் இப்போது போட்டியிடவில்லை என்ற கேள்வி புதுக்கோட்டை தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், இடைத் தேர்தல் செலவு செய்ய வேண்டிய நிலையில் இருந்த தி.மு.க. பிரபலங்கள் "அப்பாடா... நம் தலையில் தேர்தல் செலவு விழவில்லை" என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். புதுக்கோட்டையில் அ.தி.மு.க.விற்கும், தே.மு.தி.க.விற்கும் போட்டி என்று பத்திரிக்கை செய்திகள் வந்தாலும், தமிழக முதல்வரைப் பொறுத்தமட்டில், "இல்லை. புதுக்கோட்டையில் தே.மு.தி.க. ஒரு பொருட்டே இல்லை" என்று கருதுகிறார். அதனால்தான், "அ.தி.மு.க.வைத் தவிர போட்டியிடும் இதர கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் பறிபோகும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்து விட்டு சென்னை திரும்பியுள்ளார். ஆகவே ஏற்கனவே நடந்த திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் 14000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. அடுத்த சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் 68000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. இப்போது புதுக்கோட்டை இடைத் தேர்தலில் 100,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே அ.தி.மு.க. வின் இலக்கு. அதை மையப்படுத்தியே தே.மு.தி.க. - அ.தி.மு.க.விற்கு ஒரு விடயமே அல்ல என்ற ரீதியில் தேர்தல் பிரசாரத்தை செய்து முடித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வெற்றி, அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பது போன்றவை தங்கள் லட்சியங்களாக இருந்தாலும், இடைத் தேர்தல் நடத்தும் விதம் பற்றி தேர்தல் கமிஷன்தான் அனைத்து அரசியல் கட்சிகளின் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. புதுக்கோட்டை இடை தேர்தலில் இதுவரை போடப்பட்ட தேர்தல் வழக்குகள் செஞ்சுரியைத் தாண்டி விட்டன. மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த மகேஸ்வரி தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு அரசால் மாற்றப்பட்டார் என்றால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த தமிழ்சந்திரன் தேர்தல் கமிஷனால் மாற்றப்பட்டு புதிய எஸ்.பி.யாக சுதாகர் தேர்தல் காலத்தில் நியமிக்கப்பட்டார். ஆனாலும் நிலைமையில் "வியக்கத்தக்க" முன்னேற்றம் ஏதுமில்லை என்பதே போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் கருத்தாக இருந்தது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதை தடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன் ஓய்வு பெறுகிறேன் என்று கூறியிருக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி.

புதுக்கோட்டை இடைத் தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தேர்தல் கொமிஷன் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இங்கு போட்டியிடும் பிரதான எதிர்கட்சியான தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்தின் பேச்சில் எதிரொலிக்கிறது. "வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அ.தி.மு.க.வினரை எங்கள் கட்சியினர் பிடித்துக் கொடுத்தாலும் பொலிஸ் நடவடிக்கை எடுப்பதில்லை" என்று குற்றம் சாட்டியிருக்கிறார் அவர். தேர்தல் வெற்றிகளில் வாக்கு வித்தியாசங்கள் மாறினாலும், உயர்ந்தாலும் தமிழக இடைத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது இன்று நேற்றல்ல. காலம் காலமாக இந்த குற்றச்சாட்டு கொடி கட்டிப் பறக்கிறது. முன்பு நடைபெற்ற "சைதாப்பேட்டை இடைத் தேர்தல்", "ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல்", "கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல்", "திருமங்கலம் இடைத் தேர்தல்", "கம்பம் இடைத் தேர்தல்", "தொண்டாமுத்தூர் இடைத் தேர்தல்", "பென்னாகரம் இடைத் தேர்தல்" இப்போது "திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத் தேர்தல்கள்" என்று எல்லா இடைத் தேர்தல்களிலும் இந்த குற்றச்சாட்டு ஓய்வின்றி பயணிக்கிறது.

ஒவ்வொரு முறையும் ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சிகள் இடைத் தேர்தல்களில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கமுடியாமல் திணறுவது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மட்டுமே! அதற்கு முக்கியக் காரணம் அதன் நேரடி கட்டுப்பாட்டில் தங்களுக்கு என்று தனி பணியாளர்களை வைத்துக் கொள்ள முடியாமல் போனதே காரணம். தேர்தல் என்று வந்து விட்டால் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களைத்தான் நம்பியிருக்கிறது தேர்தல் கொமிஷன். அவர்கள் மீது தேர்தல் காலத்தில் தேர்தல் கொமிஷன் நடவடிக்கை எடுத்தால், வெற்றி பெறும் கட்சியிடம் அந்த அதிகாரிக்கு முக்கியத்துவம் வந்து விடுகிறது. இன்னொரு வகையில், நடப்பது இடைத் தேர்தல்கள்தானே என்று ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தல் முறைகேடுகள் பற்றி பெருமளவில் கண்டுகொள்ளாமல் இருக்கின்ற ஆளுங்கட்சியின் சார்பில் கண்ணை மூடிக் கொள்கிறார்கள். அதுவே பிறகு நடக்கும் பொதுத் தேர்தல்களிலும் தேர்தல் முறைகேடுகளுக்கு வழி அமைத்து மேம்பாலம் அமைத்துக் கொடுக்காத குறையாகிவிடுகிறது.

ஆகவே இடைத் தேர்தல்களையும் பொதுத்தேர்தல்கள் போல் பாவித்து கறாராக தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தினால் மட்டுமே அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் கட்சிகள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் மேலோங்கும். அதுவும் முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் தேர்தல் நேரத்தில் போடப்படும் வழக்குகளில் "இத்தனை வழக்குகளுக்கு மேல் ஒரு கட்சியின் வேட்பாளர் மீது போடப்பட்டால் அந்த கட்சியின் அங்கீகாரத்தில் கைவைக்க நேரிடும்" என்று தேர்தல் கொமிஷன் எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறையிலேயே தேர்தல்களில் ஜெயிக்க முடியும் என்று கருதும் சூழ்நிலை உருவாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X