2025 மே 19, திங்கட்கிழமை

இந்திய ஜனாதிபதி தேர்தல் 'சடுகுடு'

A.P.Mathan   / 2012 ஜூன் 19 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய நிதி அமைச்சரும் நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான பிரணாப் முகர்ஜியை தனது ஜனாதிபதி வேட்பாளராக இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்ந்தெடுத்துள்ளது. அந்த தேர்வு குறித்த குழப்பங்களை அரசியலாக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா, தற்போது தனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் குழப்பங்களை சந்தித்து வருகிறது. கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மட்டுமல்லாது, பாரதீய ஜனதா கட்சிக்குள்ளேயே, கட்சி அரசியலுக்கும் அப்பாற்பட்டு, பிரணாப் முகர்ஜியை ஏற்றுக்கொள்பவர்கள் இருப்பதே இதற்கு காரணம்.

எதிர்க்கட்சிகளை பொறுத்த வரையில், அவர்களுடைய முதல் தேர்வான முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தான் போட்டியிடப் போவது இல்லை என்று முடிவாக அறிவித்துள்ளார். மூத்த அணுசக்தி விஞ்ஞானியுமான கலாம் போட்டியிட்டு தோல்வி அடைவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். அதே சமயம் ஆளும் கூட்டணியின் ஆதரவு இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற முயற்சிப்பது கவலைக்குரிய விடயம் தான். தற்போது முகர்ஜிக்கு வெற்றிபெறுவதற்கு தேவையான ஆதரவு இருக்கிறது என்பது தெளிவான புலனாகி விட்ட நேரத்தில், கலாம் தனது முடிவை அறிவித்தது எதிர்பார்க்கப்பட்ட விடயம் தான்.

ஆனால், பெயருக்காகவேனும் போட்டியிட வேண்டும், அதன் காரணமாக தோற்க வேண்டும் என்பதற்காகவே முன்னாள் மக்களவை சபாநாயகர் சங்மா-வை ஆதரித்து தான் தீர வேண்டும் என்ற பாரதீய ஜனதாவில் உள்ள சில மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். இதன் மூலம் தமிழ் நாட்டில் ஆளும் அஇஅதிமுக மற்றும் ஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜீ ஜனதா தளம் ஆகிய கட்சிகளை கூட்டணி வளையத்திற்குள் மீண்டும் கொண்டு வரலாம் என்ற பாரதீய ஜனதா கருதுகிறது. ஆனால் அதற்கு கூட்டணியின் பிற கட்சிகளின் ஆதரவு இல்லை என்பது தான் தற்போதைய நிலை. அவர்களை பொறுத்த வரையில் கூட்டணியில் பிற கட்சிகளும் சேருமேயானால், அது அவர்களது 'பேரம் பேசு'; நிலைபாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் என்பதும் உண்மை.

நாட்டின் பொருளாதாரம் குழப்பமான நிலையில் இருக்கும் போது, அது குறித்த விவரங்களையும் அது குறித்த அரசியலையும் நன்றாக அறிந்த முகர்ஜியை நிதி அமைச்சர் பதவியில் இருந்து மாற்றுவது எவ்வளவு சரியான முடிவு என்பது ஒரு புறம். அதே சமயம், பல்வேறு முக்கிய அமைச்சுகளிலும் திறம்பட செயலாற்றிய அனுபவம் மறுபுறம். இவற்றிற்கும் அப்பாற்பட்டு, கடந்த பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மற்றும் அரசு சார்ந்த பிரச்சினைகளை கையாளுவதில் சூத்திரதாரி என்ற பிறிதொரு முகம். இவை அனைத்தும் சேர்ந்து, பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி பதவிக்கு விட்டுக்கொடுக்க சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சி தலைமை தயக்கம் காட்டியது என்னவோ உண்மை.

ஆனால், கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியின் குழப்படிகளில், பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதவிக்கு விட்டு கொடுக்க முடியாது என்ற முடிவை எடுக்க காங்கிரஸ் தலைமை தள்ளப்பட்டது. ஜனாதிபதி பதவிக்கு முகர்ஜியா, அல்லது தற்போதைய துணை ஜனாதிபதியான ஹமீத் அன்சாரியா? என்ற கேள்வி எழுந்த போது, காங்கிரஸ் கூட்டணியிலும் அதற்கு வெளியிலும் முகர்ஜிக்கே அமோக ஆதரவு இருந்தது. வெளியுறவுத் துறை அதிகாரியாகவும் பின்னர் சிறந்த கல்விமானாகவும் இருந்த ஹமீத் அன்சாரியால் அத்தகைய ஆதரவை திரட்டிவிட முடியாது என்பதும் உண்மை நிலை.

பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் அப்துல் கலாமை ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தும் முடிவை அந்த கட்சி ஒரு வருடத்திற்கு முன்னரே கருதி வந்தது. இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற உத்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அந்த கட்சி தான் எதிர்பார்த்த வெற்றியை பெற்றிருந்தால் தனது முடிவை பிரகடனபடுத்தி இருக்கும். ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை போலவே பாரதீய ஜனதாவும் படுதோல்வி அடைந்தது. எனவே, ஜனாதிபதி தேர்தல்களில் எதிர்பார்த்ததற்கும் அதிகமாவே பிற கட்சிகளை அண்டி அரசியல் செய்யும் சூழ்நிலைக்கு அந்த கட்சி தள்ளப்பட்டது.

ஒரு கட்டத்தில், காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்ட சூழ்நிலையில், சோனியா தலைமை தங்களை அண்டி வரும் என்று பாரதீய ஜனதா தலைமை கருதியிருந்தது. ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளர்களான பிரணாப் முகர்ஜியையும் ஹமீத் அன்சாரியையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முதல் சுற்றுக்கு முன்னரே தடாலடியாக அறிவித்து இருந்தார். இதனால், பாரதீய ஜனதாவை கலந்து ஆலோசிக்கும் மனப்போக்கு காங்கிரஸ் தலைமைக்கு தோன்றவில்லை. மேலும், சிறந்த கல்விமானும் சிறந்த மனிதருமான ஹமீத் அன்சாரிக்கு ஜனாதிபதி பதவிக்கான தரம் அல்லது தகுதி இல்லை என்று சுஷ்மா கூறியது கீழ்தர அரசியலாகவே பலராலும் கருதப்பட்டது. அந்த கருத்தை சுஷ்மாவும் பாரதீய ஜனதாவும் பின்வாங்காத காரணத்தால், அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது காங்கிரஸ் கட்சி தலைமைக்கு சவாலாகவும் அமைந்தது.

கடந்த வாரம், ஜனாதிபதி தேர்தல் குறித்து முலாயம் சிங் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி அறிவித்த அதிரடி கருத்துக்கள் தேசிய அரசியலில் விடுபட்டிருந்த பரபரப்பை தோற்றுவித்தது. அது மட்டுமல்ல. அடுத்த ஆண்டும் சென்று, 2014ஆம் ஆண்டில் நடைபெறுவதாய் உள்ள மக்களவை தேர்தல் குறித்து புதிய சிந்தனைகளையும் அது பரவ விட்டது. அந்த விதத்தில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ள அஇஅதிமுக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் தான் அவர்கள் இருவருமாக 'செக்' வைத்தனர். பின்னர், பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக முலாயம் சிங் தெரிவித்தாலும் தேசிய அரசியலில் ஜெயலலிதாவையும் மம்தா பானர்ஜியை விடவும் தான் முக்கியமான மாநில தலைவர் என்ற தனது எண்ணத்தை, அவர் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதா தோற்றிய பரபரப்பு
ஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்டு முதன்முதலில் தேசிய அரசியலில் பரபரப்பை தோற்றுவித்தவர் ஜெயலலிதா தான். இந்த காலகட்டத்தில், தேசிய தலைநகருக்கு அவர் இரண்டு முறை சென்ற போதும் அவரே தேசிய மீடியாவில் அதிகமாக பேசப்பட்டார். பின்னர், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவரை சென்னையில் வந்து சந்தித்தது, அதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக முன்னாள் மக்களவை சபாநாயகர் சங்மா-வை தங்களது ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியது ஆகியவை ஜெயலலிதா தனது தனிப்பட்ட அரசியல் செல்வாக்கையும் தமிழ்நாடு தேசிய அளவில் தனது முக்கியத்துவதையும் இழந்துவிடவில்லை என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.

இன்னும் சொல்லப் போனால், தொண்ணூறுகளில் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மறைந்த ஜீ.கே.மூப்பனார் ஆகியோர் தேசிய அரசியலில் தமிழ் நாட்டிற்கு மாறிமாறி பெற்று தந்த அந்தஸ்தை ஜெயலலிதாவே மீண்டும் முன்னின்று மீட்டுத்தருவதாக கூட சிலர் எண்ணத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக, அடுத்த மக்களவை தேர்தலுக்குப் பின்னர் தேசிய அளவில் முன்னிறுத்தப்படும் மாநில கட்சிகளின் தலைவர்களில் மிக முக்கியமானவராக கூட அவரை மீண்டும் சில அரசியல் நோக்கர்கள் கருதத் தொடங்கினர். அவரது அஇஅதிமுக கட்சியினரிடமோ ஜெயலலிதாவே அடுத்த பிரதமர் என்ணம் உருவாக தொடங்கியிருந்தது.

இந்த பின்னணியில், முலாயம் - மம்தா அதிரடி தேசிய அரசியலில் ஜெயலலிதாவை விட முக்கியமான மாநில தலைவர்களும் உள்ளார்கள் என்ற உண்மையை உணர்த்தவும் செய்த முயற்சி. ஜனாதிபதி தேர்தலில் சங்மா-வை விட்டுவிட்டு அவர்கள் வேறு மூன்று பெயர்களை முன்னிறுத்தியது மட்டுமல்ல இதற்கான காரணம். மாறாக, சங்மாவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால், அதற்கு தங்களுடைய உதவி மிகவும் முக்கியம் என்று எண்ணியே அவர்கள் செயல்பட்டார்கள். பின்னர் முலாயம் சிங், மம்தா பானர்ஜி ஆகியோரிடையே வேறுபாடுகள் தோன்றினாலும் அந்த பிரச்சினையும் அவர்களில் யார் பெரியவர் என்ற ரீதியிலேயே இருந்தது. தமிழகத்தில் ஜெயலலிதா உட்பட்ட எந்த மாநிலத்தை சார்ந்த தலைவரும் அந்த போட்டியில் சீரியசாக பங்கெடுத்துவிட கூடாது என்ற அளவிலேயே அவர்களது செயல்பாடுகள் அமைந்துள்ளன.

மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம்?
இன்றைய சூழ்நிலையில் அடுத்து வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 250 இடங்களை பிடிப்பதற்கு திணறவேண்டும். அதுவும் அவர்களது கூட்டணி கட்சிகள் உள்ளத்தூய்மையுடன் தொடர்ந்து உதவி செய்தால் மட்டுமே சாத்தியமாகும். இதில், காங்கிரஸில் ராகுல் காந்தியும் பாரதீய ஜனதாவில் நரேந்திர மோடியும் பிரதமர் போட்டியில் அடிபடும் சாத்தியகூறுகளே அதிகமாக உள்ளன.

அதாவது, மக்களவை தேர்தலுக்கு பிற்பட்ட காலகட்டத்தில், இந்த இரண்டு தேசிய கட்சிகளும் இல்லாமல் மூன்றாவது அணி ஒன்று மீண்டும் ஆட்சியில் அமரும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தமிழ் நாட்டில் அஇஅதிமுக - திமுக, பீஹார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தளம், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - இடது சாரிகள் ஆகிய வகையில் அவர்கள் பிரிந்து நிற்பதே அவர்களில் பலரும் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதாவை அண்டி அரசியல் நடத்தும் நிலைமை உருவாக காரணமாகும்.

காங்கிரஸ் தற்போது அதிக மக்களவை இடங்களை பெற்றுள்ள ஆந்திர பிரதேசத்திலோ, கட்சி பிளவுண்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை இடைதேர்தல்களில், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மறைந்த காங்கிரஸ் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன்மோகன் தலைமையிலான வை.எஸ்.ஆர். காங்கிரஸ் எதிர்பார்த்தது போலவே அமோக வெற்றி பெற்றுள்ளது. போதாததற்கு தெலுங்கான பிரச்சினை வேறு. கடந்த பதினைந்து ஆண்டுகளில், தங்களது வாக்குவங்கியால் பயனடைந்து விட்டு, கூட்டணிக்கு தலைமை வகிப்பதாக கூறிக்கொள்ளும் இந்த இரண்டு தேசிய கட்சிகளும் தங்களை நடத்தி வரும் விதம் மாநில கட்சிகளின் மனதை புண்படுத்தி உள்ளது.

இந்த பின்னணியில், அடுத்த மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகள் இல்லாத அரசு ஒன்றை மத்தியில் உருவாக்க மாநில கட்சிகளில் பலவும் பலவாறாக முயலும். அதற்கு தேசிய கட்சிகளின் ஆதரவை பெற முயல்வதே அவர்களது முதல் முயற்சியாக இருக்கும். அது எடுபடாமல் போனாலும், தங்களது மாநில அளவில் எதிரி கட்சிகளின் கை ஓங்கினால் மட்டுமே அவை வேறுவிதமாக சிந்திக்கும். இந்த சூழ்நிலையில் தங்களில் யார் அடுத்த பிரதமர் என்ற கேள்வி எழும். அதற்கு முஸ்தீபாக தான் ஜெயலலிதா - பட்நாயக் ஆகியோர் ஓர் அணியாகவும் முலாயம், மம்தா, முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி போன்றோர் பல்வேறு குழுக்களாக நான்காவது, ஜந்தாவது அணிகளாகவும் தங்களை தற்போது பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனால் மட்டுமே மக்களவை தேர்தல் முடிந்து இதுபோன்ற கூட்டணிகள் தொடரும் என்று கூறிவிட முடியாது. முலாயம், மம்தா ஆகியோரிடையே 24 மணிதியாலங்களுக்குள் தோன்றி - மறைந்த கூட்டு இதனையே குறிக்கிறது.

இவர்களில் முலாயம் சிங் யாதவ் மட்டுமே பிரதமர் பதவி குறித்து திட்டமிட்டு செயல்பட்டு வருபவர். தனக்கு பின்னர் உத்திர பிரதேச மாநில அரசியலில் தனது மகன் அகிலேஷ் யாதவை முதலமைச்சராக பதவியில் அமர்த்திவிட்டு, தேசிய அரசியலில் முழு நேரமாக ஈடுபட தன்னை தயார்படுத்தி வைத்ததுள்ளார். ஆனால், மம்தாவோ, ஜெயலலிதாவோ, நரேந்திர மோடியோ, நவீன் பட்நாயக்கோ, தங்களது அரசியல் வாரிசு என்பதற்கும் அப்பால் சென்று, தனக்கு நம்பிக்கை உள்ளவராகவும், கட்சியாலும், மாநில மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுபவராகவும் ஓர் அரசியல் வாரிசை இன்னமும் உருவாக்கவில்லை. அவ்வாறான எண்ணம் அவர்களுக்கு உள்ளதாகவும் தெரியவில்லை.

இவர்களில் ஜெயலலிதாவை பொறுத்த வரை, தமிழ் நாட்டின் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர், மறைந்த காமராஜரின் முன்னுதாரணம் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. அரைகுறையாக தமிழ் நாட்டை காமராஜ் விட்டுச் சென்றதை தொடர்ந்து, தேசிய அரசியலிலும் அவரால் நிலைத்து நிற்கவில்லை. அந்த காலகட்டத்தில், 1967ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் நாட்டில் பதவியை இழந்த காங்கிரஸ் கட்சி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிவிட்டது. இன்று அந்த கட்சி தமிழ் நாட்டில் சிற்றெறும்பை விட சிறுத்து விட்டது. காமராஜரின் அரசியல், பிற்காலத்தில், கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற தமிழ் நாட்டை சேர்ந்த காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் தலைவர்களுக்கும் படிப்பினையாக அமைந்தது. அதனால் தான் என்னவோ, இருபது வருட கால இடைவெளியில், முன்னாள் ஒடிசா முதல்வரும் இன்னாள் முதல்வரின் தந்தையுமான பிஜு பட்நாயக் பல்வாறாக முயன்றும் கருணாநிதி தேசிய அரசியலில் நேரடியாக கால் ஊன்ற மறுத்துவிட்டார்.

ஒரு கட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் தங்களுக்குள்ளே இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவிகளை பங்கு வைத்துக் கொண்டாலும் ஆச்சரியப்பட எதுவமில்லை என்ற நிலையே நிலவியது. ஆனால், காங்கிரஸின் இரு வேட்பாளர்கள் குறித்து சுஷ்மா சுவராஜ் கருத்து கூறிய பிறகு, இது குறித்து பேரம் பேச எதுவுமில்லை என்ற நிலையை காங்கிரஸ் தலைமை எடுத்தது. இதற்கிடையில் தனது தேசிய அரசியல் முயற்சிகளை பரபரப்பாக்கி வி;ட்டு, மக்களவை தேர்தல் வரை முலாயம் சிங் முடங்கி விட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதுவும் அவரது பாணி தான்.

அது போன்றே, பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தி காங்கிரஸ் கூட்டணி அரசியல் செய்யும் காரணத்தால், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உடைவதற்காக வாய்ப்புகளும் உள்ளன. 'வங்க மைந்தன்' என்ற போர்வையில் பிரணாப் முகர்ஜியே அந்த அரசியல் கைங்கரியத்தை முன்னின்று நடத்தி வைத்தால், அதில் ஆச்சரியப்பட இடமிருக்காது. அவ்வாறு நிகழுமேயானால், அதன் அரசியல் விளைவுகளை சந்திப்பதற்கே மம்தாவிற்கு நேரமும் முயற்சிகளும் செலவிடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்புறம் மக்களவை தேர்தலாவது, பிரதமர் பதவியாவது!

அதே சமயம், சங்மா விடயத்தில் பாரதீய ஜனதாவை முன்னரே கலக்காமல் முடிவெடுத்த ஜெயலலிதா, முலாயம் - மம்தா ஆகியோர் கைகோர்த்த பின்னர், அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது இரு கட்சிகளும் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஒருமித்த முடிவெடுக்கும் என்ற தொனியில் பேசினார். அதாவது, காங்கிரஸுடன் பாரதீய ஜனதா கட்சிக்கு 'பேரம்' படியவில்லை என்பதால், அதன் காரணமாக அந்த கட்சியும் அது தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியும் ஜனாதிபதி பதவிக்கு தனி வேட்பாளரை நிறுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அப்போது அந்த கட்சியை அண்டியே அஇஅதிமுக அரசியல் செய்யும்.

ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட்டணி கட்சிகள் ஒரு சேர ஏற்றுக்கொள்ளும் பிற வேட்பாளர்கள் அமையாத பட்சத்தில், பாரதீய ஜனதா, அஇஅதிமுக முன்வைத்துள்ள சங்மாவை வேட்பாளராக கருதி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கூட்டணியினுள் சங்மாவை தன்னிச்சையாக முன்மொழிவதற்கு பாரதீய ஜனதா கட்சிக்குள்ளேயே அத்வானிக்கு முன்பு இருந்த அதிகாரம் இல்லை. அவ்வாறேயானாலும் முன்மொழிவது என்னவோ பாரதீய ஜனதாவாக இருக்கும். கூட்டணிக்கான முடிவு எடுப்பது பீஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நிதிஷ் குமாராக தான் இருக்கும். இதுவும் மாநில கட்சிகளுக்கு இடையேயான தேசிய போட்டியின் ஒரு பகுதியே!

You May Also Like

  Comments - 0

  • கா.கணேசதாசன் Saturday, 23 June 2012 11:34 AM

    ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன..? ஏழை மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்பது திண்ணம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X