2025 மே 19, திங்கட்கிழமை

பிக்கு அரசியலுக்கு தடை போடும் சட்டமூலம் அர்த்தமற்றது

Suganthini Ratnam   / 2012 ஜூன் 24 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதை, குறிப்பாக நாடாளுமன்றத்திற்குச் செல்வதை தடைசெய்யும் வகையில் சட்டம் ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ரசஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். இப்பேது அந்த முயற்சி சிங்கள பௌத்த சமூகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சிங்கள பௌத்த சமூகம் இந்த விடயத்தில் இரண்டாக பிரிந்துள்ளது. இது இயல்பானது தான். எல்லோரும் இது போன்றதோர் சட்டத்தை விரும்பமாட்டார்கள். குறிப்பாக ஜாதிக ஹெல உருமய கட்சியின் சார்பில் பிக்குகள் நாடாளுமன்றத்தில் இருக்கும் நிலையில் பௌத்தர்கள் எல்லோரும் இது போன்றதோர் சட்டத்தை விரும்பவே மாட்டார்கள்.

இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த உத்தேச சட்டத்தை விரும்பவே செய்வார்கள். ஏனெனில் இதுகாலவரை சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களுக்காக பிக்குகளும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இனப் பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட பல திட்டங்கள் பிக்குகளின் தலைமையிலான போராட்டங்களின் காரணமாக வாபஸ் பெறப்பட்டுள்ளன, அல்லது இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் அந்தக் காரணத்திற்காக விஜேதாச ராஜபக்ஷ இந்தச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறவில்லை. அரசியலின் காரணமாக பிக்குகளின் கௌரவத்திற்கு மாசு ஏற்படுகின்றது என்பதே அவரது வாதமாக இருக்கிறது. இன்றைய அரசியல் மிகவும் கேவலமான நிலையில் இருப்பதாகவும் பிக்குகள் அதனை மாற்றி அமைப்பதற்குப் பதிலாக அதிலேயே ஊறிப் போயுள்ளனர் என்றும் இதனால் பிக்குகளும் பௌத்த சமயமும் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் வாதிடுகிறார்.

அதேவேளை நேர்மையாக அரசியலில் ஈடுபட்டாலும் நிர்வாகப் பணிகளின்போது எவரும் பாவமான காரியங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இது மதகுருக்கள் என்ற முறையில் பிக்குகளுக்கு எவ்வகையிலும் பொருத்தமற்றது என்றும் ராஜபக்ஷ வாதிடுகிறார்.

அவர் உதாரணத்திற்காக எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைத் தலைவரை சுட்டிக்காட்டுகிறார். எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைத் தலைவர் ஜாதிக ஹெல உருமயவைச் சேர்ந்த ஒரு பிக்கு. அந்த பிக்கு பிரதேச சபைத் தலைவர் என்ற முறையில் இறைச்சிக் கடைகளுக்கும் மதுபான தவறணைகளுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்கியிருப்பதாகவும் இது பௌத்தமத போதனைகளுக்கு முரணானது என்றும் ராஜபக்ஷ சுட்டிக்காட்டுகிறார். 

பிக்குகள் கௌரவமாக வாழ்ந்தாலும் இல்லாவிட்டாலும் இந்நாட்டு சிறுபான்மை மக்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. பிக்குகளின் அரசியலின் காரணமாக அவர்கள் மீது உருவாகியிருக்கும் அதிருப்தியின் காரணமாகவே சிறுபான்மை மக்கள் இந்தச் சட்டமூலத்தை விரும்பக்கூடும்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு காணக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக 1957ஆம் ஆண்டு பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தை குறிப்பிடலாம். பிக்குகளின் நெருக்குதலின் காரணமாகவே அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க அந்த ஒப்பந்தத்தை பகிரங்கமாக கிழித்தெறிந்தார்.

1966ஆம் ஆண்டு டட்லி சேனாநாயக்க தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தமும் இதே காரணத்தினால் தூக்கியெறியப்பட்டது. அதற்கு எதிராக அப்போது நடைபெற்ற ஊர்வலம் ஒன்றின்போது ஒரு பிக்கு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதனை அடுத்து 1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை -  இந்திய ஒப்பந்தத்தையும் அதன் கீழ் கொண்டுவரப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தையும் மாகாண சபைச் சட்டத்தையும் அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். புலிகள் அமைப்பினருடன் அரசாங்கங்கள் நடத்திய எந்தப் பேச்சுவார்த்தையையும் அவர்கள் விரும்பவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் 1990களில் கொண்டுவரப்பட்ட ஹலால் சட்டம் மற்றும் சமவாய்ப்புச் சட்டம் போன்றவற்றை எந்தவித நியாயமான காரணமும் இல்லாமல் எதிர்த்து முறியடித்தனர். இதன் காரணமாகவே சிறுபான்மை மக்கள் பிக்குகளின் அரசியலை விரும்பவில்லை.

இந்தச் சட்டமூலத்தை ஜாதிக ஹெல உருமய கட்சியே கடுமையாக எதிர்த்து வருகிறது. ஏனெனில் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அந்தக் கட்சியின் சார்பில் 10 பிக்குகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்கள். 2010ஆம் ஆண்டு தேர்தலின்போதும் அந்தக் கட்சியின் சார்பில் பிக்குகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அரசியலானது பிக்குகள் உட்பட ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படை உரிமை என்பதற்கு புறம்பாக மன்னர் ஆட்சிக் காலத்திலும் பிக்குகளே ஆட்சியாளர்களை வழிநடத்தினர் என்றும் எனவே இப்போதும் ஆட்சியாளர்களை வழிநடத்தும் பெரும் பொறுப்பொன்று பிக்குகள் மீது  சுமத்தப்பட்டுள்ளது என்றும் அந்தக் கட்சி வாதிடுகிறது.

பிக்குகளின் வழிகாட்டல் நேர்மையானதா, இல்லையா, நாட்டுக்கு நன்மை அளித்துள்ளதா, இல்லையா என்பது எவ்வாறாயினும் பிக்குகள் இந்நாட்டு ஆட்சியாளர்கள் மீது பெரும் செல்வாக்கை செலுத்தி வருகிறார்கள் என்பது உண்மையே. அவர்கள் ஒன்றுகூடினால் எதனையும் செய்யலாம், எதனையும் தடுக்கலாம் என்பது அநேகமாக உண்மை தான்.

ஆனால் அண்மைக்கால வரலாற்றில் அவர்கள் இனப் பிரச்சினை விடயத்தில் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு நெருக்குதலை கொடுத்து வந்துள்ளனர். அதுவும் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான முறையில் மட்டுமே செயற்பட்டு வந்துள்ளனர். அதைத் தவிர நாட்டில் காணப்படும் பாரியளவிலான பொருளாதார பிரச்சினைகள், ஊழல்கள், மோசடிகள், வீண்விரயங்கள் மற்றும் அரசியல் அநாகரீக செயற்பாடுகள் ஆகியவற்றின்போது ஏனைய மதகுருக்களைப் போலவே அவர்களும் ஒன்றில் மௌனமாக இருந்துள்ளனர்? அல்லது அவற்றுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

சிலவேளைகளில் அவர்கள் ஆட்சியாளர்களை வழிநடத்துவதை விட ஆட்சியாளர்கள் அவர்களை வழிநடத்துவதே உண்மை. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கம் அறிமுகப்படுத்திய சூதாட்டச் சட்டத்தை ஜாதிக ஹெல உருமய கட்சியின் பிக்குகளே உல்லாச பிரயாணத்துறைக்கு அது தேவை எனக் கூறி நியாயப்படுத்தியமை அதற்கு சிறந்த உதாரணமாகும்.

பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால் ஒரு பக்கம் சார்ந்தே செயற்பட வேண்டிவரும். அந்தப் பக்கம் எந்தப் பிழை செய்தாலும் அவர்கள் அந்தப் பிழையை அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என ராஜபக்ஷ வாதிடுகிறார். சூதாட்டச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதுவே நடந்தது. பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதனால் அவர்கள் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள் என அண்மையில் அஸ்கிரிய மகாநாயக்க தேரரும் கூறியிருந்தார்.

அரசியலில் ஈடுபடுவதற்கான பிக்குகளின் அடிப்படை உரிமையைப் பற்றிக் கூறும்போது அவர்களது கௌரவத்தை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றமே அவர்களுக்கு சில விடயங்களை தடைசெய்துள்ளதாக விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டுகிறார். பிக்குகள் சாரதி அனுமதிப்பத்திரம் பெறமுற்பட்டபோதும் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள முற்பட்டபோதும் உயர் நீதிமன்றம் அவர்களுக்கு அவற்றுக்கான அனுமதியை வழங்கவில்லை என அவர் கூறுகிறார்.

பிக்குகளின் அரசியலைப் பற்றிக் கூறப்படும் இந்த அனைத்து தீமைகளும் ஏனைய சமயங்களைச் சேர்ந்த மதகுருக்கள் மற்றும் பிரமுகர்களுக்கும் பொருந்துகின்றன. அவர்களது அரசியலும் அநேகமாக இதேபோல் தான் இருக்கிறது. அவர்களும் அரசியலில் ஈடுபடும்போது தத்தமது கட்சிகள் அல்லது குழுக்கள் எந்தக் குற்றத்தை செய்தாலும் அதனை நியாயப்படுத்தவே முயற்சிக்கின்றனர். 

ஆனால் ஏனைய மதபிரமுகர்களைப் போலவே பிக்குகளும் சமூக பண்பாட்டைப் பாதுகாப்பதில் பெரும்பங்கை ஆற்றி வருவதை எவராலும் மறுக்க முடியாது. அரசியல் கருத்துக்கள் எவ்வாறு இருந்தபோதிலும் பல பிக்குகள் சமூக சீர்திருத்தத்திற்காக பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். எந்த சமூகத்திலும் சில மதகுருக்கள் நேர்மையற்றவர்களாக இருந்தபோதிலும் பலர் உண்மையிலேயே சிறந்;த சமுதாயம் ஒன்றை பிரார்த்திக்கின்றனர். அதன் காரணமாகவே மக்கள் ஓரளவுக்காவது பாவச் செயல்களிலிருந்து விலகியிருக்கிறார்கள். ஓரளவுக்காவது நாகரீகமாக நடந்துகொள்கிறார்கள்.

அரசியல் என்று வரும்போது தான் சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில் அரசியலானது சமுதாயத்தில ஒரு சிலர் பணம் சம்பாதிக்கும் கருவியாக மாறியுள்ளது. எனவே எந்த மதகுருவாக இருந்தாலும் அரசியலில் ஈடுபடும்போது அவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

அந்த வகையில் ராஜபக்ஷவின் உத்தேசச் சட்டமூலம் பாராட்டக்கூடியது. ஏனைய சமய மதகுருக்களுக்கும் பொருத்தமானது என்றும் வாதிடலாம். ஆனால் அரசியலில் ஈடுபடுவதை தடைசெய்வது என்றால் என்ன என்பதே கேள்வியாக உள்ளது. மதகுருக்கள் நாடாளுமன்றத்திற்கு அல்லது மாகாணசபை போன்றவற்றுக்குச் செல்வதை தடைசெய்யலாம். ஆனால் அவர்கள் மக்களுடன் பேசுவதை தடைசெய்ய முடியாது. அவர்கள் சமய போதனை என்ற போர்வையில் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்தலாம். அதனைத் தடுக்க முடியாது.

1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிக்குகள் அல்ல. 1987ஆம் ஆண்டு இலங்கை -  இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிக்குகள் அல்ல.

அதேவேளை மதகுருக்களின் கௌரவம் பாதிக்கப்படுவது அரசியலினால் மட்டும் அல்ல. சமூகச் சீரழிவானது சகல சமயங்களையும் சேர்ந்த போதகர்கள் மத்தியில் ஓரளவுக்காவது பரவியுள்ளது. எனவே ராஜபக்ஷவின் சட்டமூலம் அர்த்தமற்றது என்றே கூறவேண்டும். தமது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு என்பதை மதகுருக்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 

You May Also Like

  Comments - 0

  • mansoorcader Monday, 25 June 2012 05:08 AM

    புத்திக்குப் படுகிறது. ஆனாலும் உணர்வு தடுக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X