2025 மே 19, திங்கட்கிழமை

கைதாகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி?

A.P.Mathan   / 2012 ஜூலை 02 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். தேர்தலில் தனக்கு ஆதரவு திரட்டினார். ஆனால் அவருக்கு அளித்த வரவேற்பில் தி.மு.க. அசத்தி விட்டது என்றே சொல்ல வேண்டும். சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்து இறங்கிய பிரணாப் முகர்ஜியை காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான த.மோ.அன்பரசன் தலைமையில் வரவேற்பு கொடுத்து அசத்தினார்கள். அவரை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் இணைந்து நின்று வரவேற்றது தி.மு.க.வினருக்கு கிடைத்த அரிய காட்சியாக அன்றைய தினம் இருந்தது.

அங்கிருந்து கிளம்பி சென்னை சி.ஐ.டி. கொலனியில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு வந்தார் பிரணாப் முகர்ஜி. அங்கு அவரை அழைத்து வந்தவர் தி.மு.க.வின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு. அவர் வரும்போது சாலையின் இரு புறங்களிலும் பூக்கள் நிரம்பிய தட்டுக்களில் விளக்குகளுடன் நின்று பெண்கள் வரவேற்றது பிரணாப்பிற்கு வித்தியாசமான காட்சியாக இருந்திருக்கும். அதற்கும் மேல் "பெங்கால் மேளம்", "கேரள செண்டை மேளம்", "தமிழக மேளதாளம்" என்று வித்தியாசமான மேளம் வரவேற்பு அப்பகுதியை சற்று நேரம் திருவிழாக் கோலத்தில் மூழ்கடித்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரணாப் முகர்ஜி பத்திரிகை நிருபர்களிடம், "தி.மு.க. தலைவர் கருணாநிதி எனக்கு 1970ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே நன்கு பழக்கமுள்ளவர் என்பதால் அவரை சந்திக்க இங்கு வந்துள்ளேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக 50 ஆண்டுகளுக்கு மேல் அவர் உழைத்து வருகிறார். முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகிய இரண்டிலும் சிறந்த நிலையான தோழமைக் கட்சியாக தி.மு.க. இருந்து வருகிறது" என்று தி.மு.க.விற்கு புகழாரம் சூட்டினார். தி.மு.க. ஆதரிக்கும் அமைச்சரவையில் இருந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவி பொறுப்பேற்கும் முன்பு தி.மு.க. தலைவருக்கு வாசித்து அளித்த பாராட்டுப் பத்திரமாக இது இருக்கும். பொதுவாகவே மத்திய அரசுக்கு நிலையான ஆதரவு அளித்து வரும் கட்சி தி.மு.க. என்ற இமேஜ் தங்களுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர் தி.மு.க. தலைவர். அதற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்த பிரணாப் பாராட்டு எதிர்காலத்தில் தேர்தல் கூட்டணிக்கு பெரிதும் அக்கட்சிக்கு உதவும். காங்கிரஸுடன் கூட்டணியை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்தாலும் சரி, பிரிந்தாலும் சரி இந்த பாராட்டுரை தி.மு.க. விற்கு பேருதவி அளிக்கும்.

இந்த வரவேற்பு முடிந்து விருந்து கொடுக்கப்படும் பார்க் ஷரட்டன் நட்ஷத்திர ஹோட்டலுக்கு புறப்பட்டார்கள். ஒரே காரில் பிரணாப் முகர்ஜியும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அருகிலருகில் அமர்ந்து கொள்ள, பின் சீட்டில் ராஜ்ய சபை உறுப்பினர் கனிமொழியும், டி.ஆர் பாலுவும் அமர்ந்து கொண்டார்கள். சி.ஐ.டி. காலனியில் நடைபெற்ற பிரணாப் முகர்ஜி வரவேற்பில் கனிமொழியே பிரதானமாக இருந்தார். நாட்டின் எதிர்கால குடியரசுத் தலைவருடன் ஒரே காரில் பயணம் செய்யும் வாய்ப்பும் அவருக்கே அன்றைய தினம் கிடைத்தது. முன்னாள் முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பில் அண்ணன், தம்பிகளான மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கனிமொழியும் விமான நிலைய வரவேற்பிற்கு செல்லவில்லை! அங்கு நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற போது பேசிய பிரணாப் முகர்ஜி, "நிர்வாக தலைமை என்பது குடியரசுத் தலைவரிடம் இல்லை. அது அரசியல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமையிடம் உள்ளது... நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியரசுத் தலைவர் பதவிக்கு அரசியல் சட்டப்படி வகுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை எனது திறமைக்கேற்ப சிறந்த முறையிலே நிறைவேற்றுவேன்" என்றார். இதையே மறுநாள் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆதரவு திரட்டும் கூட்டத்தில் கூட பேசியிருக்கிறார். அரசியல் முதிர்ச்சியும், பொருளாதார அறிவும், அமைச்சரவை அனுபவமும் உள்ள பிரணாப் முகர்ஜி "பொம்மை ஜனாதிபதியாக" இருக்கமாட்டார் என்று அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரணாப் முகர்ஜி இப்படி பேசி வருகிறார் என்று நினைக்க இடமிருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்த மட்டில் பிரணாப் முகர்ஜிக்கு கொடுத்த பிரமாண்டமான வரவேற்பு மூலம், ஆட்சியை இழந்த பிறகு சோர்வுடன் காணப்படும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை உருவாக்கிக் கொடுத்தது. அதுவும் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும் நான்கு நாட்களுக்கு முன்பு கிடைத்த இந்த வாய்ப்பு அக்கட்சி தொண்டர்களை ஆவேசமாக போராட்டத்தில் பங்கேற்க வைக்கும் என்று தி.மு.க. தலைமை நம்பலாம்.

அதை நிரூபிக்கும் வகையில் பிரணாப் முகர்ஜிக்கு வரவேற்பு அளித்த மறுநாள் சென்னை தாம்பரத்தில் "அ.தி.மு.க அரசை எதிர்த்து நடைபெறும் சிறை நிரப்பும் போராட்ட" விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் துரைமுருகன், "எத்தனை எதிர்கட்சிகள் இருந்தாலும், தி.மு.க.தான் உண்மையான எதிர்கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் நாமெல்லாம் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த வேண்டும்" என்று பேசினார். இது விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.விற்கு விடுத்த செய்தி. "நீங்கள் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் டெபாஸிட் வாங்கிவிட்டதால், நீங்கள்தான் எதிர்கட்சி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நாங்கள்தான் எதிர்கட்சி. எங்கள் தலைமையில்தான் வெற்றிக்கூட்டணி அமைக்க முடியும்" என்று பேசினார். இதற்கு முதல்நாள்தான் திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "நாடாளுமன்ற தேர்தல் வரட்டும். யாரால் யார் வெற்றி பெற்றது என்று தெரியும்" என்று அ.தி.மு.க.விற்கு ஓப்பனாகவே எச்சரிக்கை விடுத்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

துரைமுருகனுக்கு அடுத்து சிறை நிரப்பு போராட்டக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "அ.தி.மு.க. ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்றால் இது இருளில் மூழ்கியிருக்கின்ற ஆட்சி" என்றார். அத்துடன், "உங்களை கைது செய்து சிறையிலே பூட்டியதும், கொண்டுவா பேப்பரை ஜாமீன் கையெழுத்துப் போடுகிறேன் என்று யாரும் ஜாமீனில் வந்து விடக்கூடாது. இப்போது போராட்டத்தில் கலந்து கொண்டு யாரும் ஜாமீனில் வந்து விடக்கூடாது" என்று கறாராகக் கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி, "போராட்டத்திற்கு வரிசை வரிசையாக செல்லுங்கள். இந்த வரிசை தடைபட்டால், அடுத்த வரிசை, அதுவும் தடைப்பட்டால் அடுத்த வரிசை என்று செல்லுங்கள். அதுவும் தடைப்பட்டால் கடைசி வரிசை. அந்த வரிசையிலே கருணாநிதியும் இருப்பான்" என்று உணர்ச்சி பொங்கப் பேசி சிறை நிரப்பும் போராட்டத்தில் தானும் பங்கேற்பேன் என்பதை சூசகமாக அறிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி போராட்டத்திற்கு வந்தால் அவர் மற்ற தொண்டர்கள் போலவே கைது செய்யப்படுவாரா? அப்படி கைதானால் அவரும் ஜாமினில் வெளிவரமாட்டேன் என்று இருந்தால் என்ன விளைவுகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படுத்தும்- இதெல்லாம் ஜூலை நான்காம் திகதி நடக்கப் போகும் தி.மு.க. போராட்டத்திற்கு பிறகு தெரியப் போகும் நிகழ்ச்சிகள்.

ஆனால் "என்னை கைது செய்யமுடியுமா?" என்று எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது சவால் விட்டார் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி. அவரை அப்போது எம்.ஜி.ஆர். கைது செய்தார். பிறகு "என்னை கைது செய்து பார்க்கட்டும்" என்று அமெரிக்காவில் இருந்தவாறு சொன்னார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அப்போது அவர் சென்னை வந்ததும் விமானநிலையத்திலேயே கைது செய்து காட்டினார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அதேபோன்று "யாரும் ஜாமீன் கேட்கக்கூடாது. இந்த கருணாநிதியும் கடைசி வரிசையில் இருப்பான்" என்று அறிவித்துள்ளதால், கருணாநிதியும் கைதாகிறார் என்ற பரபரப்பு தமிழக அரசியலில் கிளம்பியுள்ளது.
(Pix: The Hindu)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X