2025 மே 19, திங்கட்கிழமை

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பானவர்கள் யார்?

Menaka Mookandi   / 2012 ஜூலை 09 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக் காலமாக சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட போதிலும் அவை இடம்பெறுவதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிவதென்பது இன்று முக்கியமாகியுள்ளது.

உண்மையைச் சொல்லப்போனால் இவ்வாறான சம்பவங்களுக்கு முழுமையான காரணகர்த்தாக்களாக விளங்குவது சிறுவர்களின் பெற்றோரும் பாதுகாவலர்களுமேயாவர்.

இவர்களின் கவனயீனம் காரணமாகவே இவ்வாறான துஷ்பிரயோகங்களும் வன்முறைகளும் நாட்டில் அதிகரித்துச் செல்கின்றன என்று பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

சிறுவர்களின் பாதுகாவலர்களான பெற்றோர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினர் - அச்சிறுவர்கள் தொடர்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்திலேயே பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு கடந்த சில தினங்களாக இடம்பெற்ற சம்பவங்களை உதாரணங்களாகக் கூற முடியும்.

கிருளப்பனையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது, தனது மகளை திருவிழா பார்ப்பதற்கு அழைத்துச் சென்ற தாய், மீண்டும் வீடு திரும்பாத நிலையில், குறித்த சிறுமி காணாமல் போய் பல மணித்தியாலங்கள் கடந்த நிலையில் தனது மகள் குறித்து தேடிப் பார்ப்பதில் தவறிழைத்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
 
இதேவேளை, தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றின் போது 14 வயது சிறுமியொருவர் ஐந்து தினங்களாக வீட்டிலிருந்து தனித்து இருந்த நிலையில், அவர் தொடர்பிலும் பெற்றோர் கவனம் செலுத்தத் தவறியுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க - அக்குரஸ்ஸ பிரதேச சபைத் தலைவரினால் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அச்சிறுமியின் தாய், மேற்படி பிரதேச சபைத் தலைவருக்குச் சொந்தமான தேயிலைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்துள்ள அதேவேளை, சிறுமி மீதான பிரதேச சபைத் தலைவரின் துஷ்பிரயோகம் தொடர்பில் தாயார் அறிந்துள்ளார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

வென்னப்புவ பிரதேசத்தில் 5 வயது சிறுமியொருவர், 62 வயதான நபரொருவரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் தாயார், அவரை சாரதியொருவரின் பொறுப்பில் விட்டிருந்த நிலையிலேயே அச்சிறுமிக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தில் இன்று நாம் பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டுள்ளோம். கடந்த 25 வருடங்களுக்கு முதல் இருந்த நிலைமை இன்று இல்லை என்றே கூற வேண்டும்.

அன்றைய நிலைமையை விடவும் நாம் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளோம். கையடக்கத் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு தனது காதலியையோ அல்லது ஆசை நாயகியையோ விரும்பிய இடத்துக்கு வரவழைக்கக் கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது.

இற்றைக்கு 25 வருடங்களுக்கு முதல் நாட்டில் காணப்பட்ட நிலைமையுடன் ஒப்பிடுமிடத்து நிகழ்காலத்தில் தங்குமிடங்கள், விடுதிகள், கெஸ்ட் ஹவுஸ்கள் என்பன அதிகரித்துள்ளன. இதனால், மிக இலகுவாக இவ்வாறான இடங்களைச் சென்றடையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

இணையத்தளம் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக ஆபாசக் காட்சிகள், உணர்ச்சிகளை மேம்படுத்தக்கூடிய காட்சிகளை இலகுவில் பார்வையிட முடியும். இவ்வாறான காட்சிகள் இளைய தலைமுறையினரின் மனங்களையும் உணர்வுகளையும் பாதிப்படையச் செய்கின்றன. செயலனுபவம் தேவை என்ற நிலையில் இவ்வாறான தவறுகளுக்கு பலரும் தள்ளப்படுகின்றனர்.

ஊடகங்களும், இவ்வாறான துஷ்பிரயோகங்கள், வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்தும் செய்திகளை வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் அவற்றைத் தவிர்த்துக்கொள்வதற்கான எந்தவொரு வழிமுறைகளையேனும் ஆலோசனைகளையேனும் வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை.


விசேடமாக, 16 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், சிறுமிகளிள் நடவடிக்கைகள் தொடர்பில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தங்களது பிள்ளைகளை பாடசாலைகளுக்கோ அல்லது மேலதிக வகுப்புகளுக்கோ, விளையாட்டுப் பயிற்சிகளுக்கோ, வேறு எந்த இடத்துக்கோ அனுப்பும் போது அவர்களை வேறு நபர்களிடம் பொறுப்பாக விடும் பட்சத்தில் அவ்வாறு பொறுப்பளிக்கப்படுபவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

பாலியல் ரீதியாக எந்தவொரு நபரிடமிருந்தும் எந்தவொரு தொந்தரவும் ஏற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக செயற்படும் விதம் குறித்து மிகவும் பக்குவமான முறையில் சிறுவர்களுக்கு அவர்களது தாயாரால் விளக்கமளிக்கப்பட்டிருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அவ்வாறான தொந்தரவுகள் தொடர்பில் பெற்றோருக்கு அறியப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்திருக்க வேண்டியது அவசியமே.

அத்துடன், சிறுவர்களின் அனைத்துவித நடவடிக்கைகள் தொடர்பிலும் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும். விடுதிகள், கெஸ்ட் ஹவுஸ்களுக்கு சிறுவர்கள் அழைத்துச் செல்லப்படுமிடத்து அவர்களுக்காக தங்குமிடங்களை ஒதுக்கிக் கொடுக்காது, தந்திரமான முறையில் அது தொடர்பில் பொலிஸில் அறிவிக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் தொழிலுக்குச் செல்லுமிடத்து உறவினர்கள், அயலவர்களின் பொறுப்பில் விடப்படும் சிறுவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்படும் சிறுவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பஸ்கள், வேன்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்பப்படும் சிறுவர்கள் தொடர்பிலும் அவதானம் தேவை.

பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னரோ சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலோ அல்லது விடுமுறை தினங்களிலோ பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு சிறுவர்களை அனுப்புவதில் பெற்றோர், பாதுகாவலர்கள் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், சிறுவர்களை தனிமையில் வீதிகளில் நடமாக விடுவதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.


கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற சிறுவர்களுக்கு எதிராக அசம்பாவிதங்களைக் கருத்திற்கொள்ளும் போது அதற்கு முற்றும் முழுதான காரணகர்த்தாக்களாக அச்சிறுவர்களின் பெற்றோரும் பாதுகாவலர்களுமே காணப்படுகின்றனர். இவ்வாறான சம்பவங்களை பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பைத் தவிர வேறு எவராலும் முற்றும் முழுதாக தடுத்து நிறுத்திவிட முடியாது.

சிறுவர்களை இவ்வாறான அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது அச்சிறுவர்களின் முதற்தரம் முதல் மூன்றாம் தர பாதுகாவலர்கள் கைகளில் உள்ளது. அதற்கான முழுப் பொறுப்பும் அவர்களையே சாரும். அசம்பாவிதங்கள் இடம்பெற்றதன் பின்னர் பொலிஸிடம் செல்வதன் மூலம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமே தவிர பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து செயற்படுவது அவசியம்.


சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் தெரிவிப்பதற்கு தொடர்புகொள்ளுங்கள்...

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை. இலக்கம் - 330, தலவத்துகொட வீதி, மாதிவள, ஸ்ரீ ஜயவர்தனபுர.
தொலைபேசி - 94-011௨778911, 94-011௨778912, 94-011௨778913
தொலைநகல் - 94-011௨778915.


சிறுவர் மற்றும் மகளிர் சேவைக்கான பொலிஸ் பிரிவு.
தொலைபேசி – 011 – 2826444, 011 - 2768076

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X