2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சர்வதேச சமூகம்

Super User   / 2012 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                             -கே. சஞ்சயன்

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதமே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி பலமாக உள்ளது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியானது, இந்தத் தேர்தலில் முக்கிய போட்டியாளராக இருக்கின்ற மூன்று அணிகளில் எதனாலும் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதே அது.

கிழக்கின் இனப்பரம்பல் தற்போதைய நிலையில் எவரையும் தனித்து ஆட்சியமைக்க இடமளிக்கப் போவதில்லை.

இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த மூன்று கட்சிகளும் தான் வலுவான போட்டியில் உள்ள கட்சிகள்.

ஐதேக, ஜேவிபி, தேசிய சுதந்திர முன்னணி, இடதுசாரிக் கட்சிகள் போன்ற மற்றெல்லாமே அடுத்தடுத்த கட்டங்களில் உள்ளவை தான்.

முதல் மூன்று நிலைகளில் உள்ள கட்சிகளில் எது அதிக ஆசனத்தைப் பிடிக்கப் போகிறது என்ற கேள்வியே முக்கியமானது.

எந்தக் கட்சி அதிக ஆசனத்தைக் கைப்பற்றினாலும் ஆட்சியமைப்பதற்கு பிற கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டியிருக்கும்.

அப்படி ஆட்சியமைப்பதற்கான கூட்டணி எது என்ற கேள்வி தான் தொடர்கிறது. காரணம், முன்னதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது.

ஆனால் கட்சிக்குள் நிலவிய கடும் எதிர்ப்புகளை அடுத்து, கடைசி நேரத்தில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிட முடிவு செய்தது.

முன்னதாக, இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கின்ற திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்திருந்தது.

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதானால் அரசாங்கத்தை எதிர்த்து நிற்க வேண்டும். அப்படி எதிர்த்து நிற்பதாயின், அரசாங்கத்தில் இருந்து அமைச்சர் பதவிகளை விட்டு விலக வேண்டும்.

அதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கவில்லை. இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருங்கிச் செல்ல அது தயாராக இருக்கவில்லை.

அரசதரப்புடனேயே பேரம் பேசியது, கடைசியில் அரசதரப்பில் இருந்து விலகித் தனித்து போட்டியிடுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட முன்னர் முடிவு செய்த போது, அதனால் அதிகம் வருத்தமடைந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான்.

ஏனென்றால், கிழக்கு மாகாணசபையை தமிழ் பேசும் கட்சிகளின் கையில் வைத்திருக்க வேண்டும், அரசதரப்பு பிடித்துவிடக் கூடாது என்ற தமது கனவு சிதறிப் போய்விடுமே என்ற அச்சம் தான்.

தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளூர மகிழ்ச்சி.  அதை அவர்கள் வெளிப்படுத்தவும் தவறவில்லை.

தனித்துப் போட்டியிட முடிவு செய்தபின்னர், தேர்தல் பிரசாரங்களில் அரசாங்கத்தை எதிர்க்கமாட்டோம், விமர்சிக்கமாட்டோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறியது.

இது அமைச்சர் பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு உத்தியேயாகும்.

அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது ஒரு தந்திரமே என்றும், தேர்தல் முடிந்து பின்னர் கூட்டாக ஆட்சியமைப்போம் என்றும் ஆளும்கட்சியின் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு இன்னமும் கனவு கண்டு கொண்டு தான் இருக்கிறது.

ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் தமக்கு கணிசமான ஆசனங்கள் கிடைக்கும் என்று உறுதியான நம்புகிறது.

2010 நாடாளுமன்றத் தேர்தல், மற்றும் 2011 உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றிகள் அதற்கு இந்த நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

ஆனால், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை பலம் தமக்குக் கிடைக்கும் என்றளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்ப்பது போலவே வெற்றிபெற்றால், ஒன்றில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும்.

அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

ஆளும்கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

எனவே அவர்களுக்கு இருக்கின்ற ஒரே தெரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசாகத் தான் இருக்க முடியும்.

ஆனால், அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்க முன்வருமா என்ற கேள்வி உள்ளது.

ஏனென்றால் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதை அரசாங்கம் விரும்பாது.  கிழக்கு தமது கையை விட்டுப் போவதை அரசாங்கம் ஒரு போதும் விரும்பப் போவதில்லை.

எப்படியாவது சலுகைகளைக் கொடுத்தோ அல்லது வேறு பேரங்களைப் பேசியோ, முஸ்லிம் காங்கிரசை தன்பக்கம் இழுத்துக் கொள்ளவே அரச தரப்பு முனையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏற்கனவே, மத்திய அரசில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடம்பெற்றிருப்பது அதற்கு இன்னமும் சாதகமானது.

இந்தக் கூட்டணி அமைவதானாலும் கூட, முதலமைச்சர் விகாரத்தில் ஒரு சிக்கல் இருக்கத் தான் செய்யும். அதை அரசாங்கம் எவ்வாறு தீர்க்கும் என்பது முக்கியமான விடயம்.

ஆனால், மீண்டும் ஆளும்கட்சிக் கூட்டணி கிழக்கில் ஆட்சியமைப்பதை சர்வதேச சமூகம் விரும்புமா என்ற கேள்வியும் உள்ளது.

கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைப்பதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் இலங்கை வரலாம் என்று நம்பப்படும்  தெற்கு,மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேர்ட் ஓ பிளேக், இதற்கான முயற்சிகளில் ஈடுபடக் கூடும் என்றும் தகவல்கள் உள்ளன.

முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசையும் இணைந்து  போட்டியிட வைக்க, நோர்வே அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அதுதோல்வியில் முடிந்துள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை நோர்வே அடியோடு நிராகரித்திருந்தது.

அதேவேளை, அமெரிக்காவின் ஆர்வம் தொடர்பாக செய்திகள் வெளியான போது, நோர்வேயைப் போல  அமெரிக்கா அதை நிராகரிக்கவில்லை.

கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஆட்சி அமைப்பதை இந்தியாவும் கூட விரும்பலாம்.

எப்போதுமே வல்லரசு நாடுகள், தமது கவனிப்புக்குரிய நாடுகளில் எதிர்க்கட்சிகள் பலவீனமடைவதை விரும்புவதில்லை.

ஆளும்கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றே அமெரிக்கா போன்ற நாடுகள் கருதுகின்றன.

கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் என்பது அவற்றின் உறுதியான நம்பிக்கை.

அதுவே, அந்த நாடுகளை தம் கைக்குள் வைத்திருப்பதற்கு உதவும் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் வலுவாக நம்புகின்றன.

ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததும் இந்தப் பின்னணியில் தான்.

அதேவேளை, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைப்பது பல பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரும் என்று இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் நம்புவதாகத் தெரிகிறது.

அதாவது, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைவதன் மூலம் அரசாங்கத்தை அரசியல் தீர்வு ஒன்றுக்கு இழுத்துவர முடியும் என்பது இந்த நாடுகளின் நம்பிக்கை.

அதற்கு இந்த தேர்தலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அவை முனையலாம். ஆனால் எந்த நாடுமே கிழக்குத் தேர்தலில் தாம் ஆர்வம் காட்டுவதாக வெளிப்படையாக கூறவில்லை.

இருந்தாலும் இந்த தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது என்பது மட்டும் உண்மை.

கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக்  கூட்டமைப்புடன் இணைந்திருந்து ஆட்சியமைக்கின்ற ஒரு நிலை உருவானால், அதை அடிப்படையாக வைத்து அமெரிக்காவோ, இந்தியாவோ புதிய அரசியல் நகர்வுகளில் இறங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனென்றால் அத்தகையதொரு நிலையானது, இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய உறுதியை உடைத்து விடக் கூடியதாக இருக்கும்.


  Comments - 0

  • Mohammed Hiraz Saturday, 11 August 2012 03:44 AM

    கூட்டணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் சேராததுக்கு காரணம் அவ்வாறு சேர்ந்தால் முஸ்ம்மக்கள் வாக்களிக்க மாட்டர் என்பதே அப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும் அது முஸ்லிம் காங்கிரஸின் அஸ்தமனதிற்கே வழிகோலும் உடைந்த கண்ணாடி ஒரு நாளும் ஒட்டாது. உள்ளங்கள் உடைந்து விடின் ஒட்டுவது நடவாது.

    Reply : 0       0

    ss Monday, 13 August 2012 06:02 AM

    ஏனப்பா அப்படி?

    Reply : 0       0

    Maattrem Thursday, 16 August 2012 12:35 AM

    ஹிராஸ், எடுத்த எடுப்பிலே உங்கள் கல்ரைக்காட்டிவிட்டீகள். என்ன இருந்தாலும் படித்தவர்கள் சிறிது நிதானமாக சிந்திக்கவேன்டும். சமூகபொறுப்பும் இருக்கவேன்டும். எவ்வாறன நிலமை வரும் என சொல்லமுடியாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X