2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கனிமொழி - தயாநிதி மாறன் புதிய உடன்படிக்கை; தி.மு.க.விற்குள் புதிய அரசியல் அத்தியாயம்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தி.மு.க.விற்குள் புதிய பனிப்போர் தொடங்கியிருக்கிறது. பொருளாளர் பதவியில் இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும், ராஜ்ய சபை எம்.பி.யாக இருக்கும் கனிமொழிக்கும் இடையேயான இந்த புதிய போட்டி கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2-ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலிருந்து வெளிவந்த கனிமொழி தமிழகத்தில் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தி.மு.க.வின் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தி.மு.க.வினரை சந்திக்கிறார். குறிப்பாக கீழ்மட்ட நிர்வாகிகளிடம் மிகுந்த நம்பிக்கையோடு மனம் விட்டுப் பேசுகிறார். தி.மு.க. அறிவிக்கும் முக்கிய போராட்டங்கள் என்றாலும் சரி, கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, அவற்றில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள கனிமொழி தவறியதில்லை. குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களை சென்று சந்தித்து வந்தார். அதிலும் ஸ்டாலினுடன் வம்பு பண்ணிக் கொண்டிருக்கும் தி.மு.க. முன்னணி தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தை சிறைச்சாலையில் சந்தித்தது கட்சிக்குள் பரபரப்பாக பேசப்பட்டது.

கட்சிக்குள் ஏற்கனவே மு.க.ஸ்டாலின் - மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோருக்கு இடையே கடும் பனிப்போர் நிலவியது. ஆனால் சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அழகிரி அமைதி காத்தார். அதைப் பயன்படுத்திக் கொண்ட ஸ்டாலின் கட்சிக்குள் தன் கரத்தை வலுப்படுத்திக் கொண்டார். அதற்கு அந்த காலகட்டத்தில் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததும் காரணம். தி.மு.க.வின் தோல்வியே கனிமொழி தலையிட்ட 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தால்தான் என்ற பிரசாரம் கட்சிக்குள்ளேயே மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரசாரங்களை எல்லாம் முறியடித்து தன்னாலும் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியும் என்பதற்காகவே திகார் சிறையிலிருந்து வெளியேறியவுடன் அதிரடி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் கனிமொழி.

திகார் சிறையில் இருந்து கனிமொழி வெளியே வந்தபோது, "20 சதவீத உரிமைகள் கலைஞர் டி.வி.யில் இருக்கிறது. என் படத்தை, செய்தியை அடிக்கடி கலைஞர் டி.வி.யில் காண்பிக்கிறார்கள் என்பதுதான் என்மீது சி.பி.ஐ. வழக்குத் தொடுக்க காரணம் என்றால், அதே டி.வி.யில் 80 சதவீத பங்குகள் வைத்துள்ளவர்களுக்கு வேறு நீதியா?" என்ற ஆதங்கத்துடன் இருந்தார். அப்படி வந்தவருடன் முதலில் நட்புறவு பாராட்டியது தயாநிதி மாறன் தரப்புதான். ஏனென்றால் மத்திய அமைச்சராக இருந்த ராஜா - கனிமொழி தரப்பிற்கு ஆதரவாக இருக்கிறார் என்ற கோபத்தில்தான் 2-ஜி அலைக்கற்றை பற்றி தயாநிதி மாறனின் தரப்பு மீடியாக்களில் பெருமளவில் செய்தி வெளியிடப்பட்டது. சொல்லப்போனால் குக்கிராமத்தில் இருப்பவர்கள் கூட அலைக்கற்றை விவகாரத்தைப் புரிந்துகொள்ள அந்த பிரசாரம்தான் பேருதவி செய்தது. ஆனால் ஜாமினில் வெளிவந்த ராஜா - தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் பக்கமாகச் சேர்ந்தார். அதனால் தயாநிதி மாறன் தரப்பு வேறு வழியின்றி காலப்போக்கில் கனிமொழியுடன் தங்களது நட்பை புதுப்பித்துக்கொள்ள விரும்பியது. சமீபத்தில் கனிமொழியிடம் பேச்சுவார்த்தை நடத்திய தயாநிதி தரப்பு, "உங்களுக்கும் எங்களுக்கும் பிரச்சினையில்லை. நாங்கள் உங்களுக்கு எதிரியுமல்ல" என்று விளக்கிச் சொன்னது. அதன் விளைவாக இரு தரப்பிற்கும் அரசியல் ரீதியான உறவு சீரானது. முன்பெல்லாம் தயாநிதி மாறன் தரப்பு மீடியாக்களில் கனிமொழியின் பேச்சுகள் வராது. ஆனால் இப்போதெல்லாம் அந்த டி.வி.களில் அடிக்கடி கனிமொழியின் பேச்சு ஹைலைட் பண்ணப்படுகிறது. சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்ற கனிமொழி, அவர் பேட்டி எல்லாம் திரும்பத் திரும்ப காட்டப்பட்டது தி.மு.க.வினருக்கே ஆச்சர்யமாக இருந்தது.

இது மட்டுமின்றி சமீப காலமாக கனிமொழி போகும் இடங்களில் உள்ள ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூட வரவேற்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டார்கள். ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று கருதப்பட்ட வடசென்னை பகுதியில் கனிமொழிக்காக பெரும் கூட்டத்தைப் போட்டு கலக்கினார் முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி. பிறகு கடலூரிலும் அதே மாதிரி பெரும் பொதுக்கூட்டம் போட்டார் அங்கு இருக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். இப்போது கூட டெசோ மாநாட்டுப் பொதுக்கூட்டத்திற்காக நாகர்கோயிலுக்குச் சென்ற கனிமொழிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் அங்கிருந்த தி.மு.க.மாவட்டச் செயலாளர் பெரியசாமி பிரமாண்டமான வரவேற்பை கொடுத்திருக்கிறார். இப்படி கட்சிக்குள் ஒரு காலத்தில் அழகிரி, தயாநிதி மாறன் பக்கம் எப்படி ஒரு தரப்பு திரண்டதோ, அதே மாதிரி இப்போது கனிமொழி பக்கமும் பரவலாக கட்சியினர் திரண்டு வருகிறார்கள். குறிப்பாக 2013இல் ராஜ்ய சபை எம்.பி. பதவி காலம் முடியும் நிலையில் இருக்கும் கனிமொழிக்கு 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டத் தொகுதிகளில் போட்டியிடுவார் என்றே முன்னணித் தி.மு.க.வினர் மத்தியில் இப்போது சூடான பேச்சாக இருக்கிறது.

இந்நிலையில், தயாநிதி மாறன்- கனிமொழி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட இந்த புதிய ஒப்பந்தம் ஸ்டாலினுக்கு "கிலி" யை ஏற்படுத்தியிருக்கிறது. மீடியா பலம் பெற்றுள்ள கனிமொழிக்கு கட்சிக்குள் செல்வாக்கு வந்து விடக்கூடாது என்பதில் கறாராக காய் நகர்த்துகிறார் ஸ்டாலின். இலங்கை தமிழர் பிரச்சினையில் கனிமொழிக்கு தீவிர பற்றுதல் உண்டு. குறிப்பாக போரின் இறுதி காலகட்டங்களில் தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களே கூட கனிமொழியுடன் இணைந்து செயல்பட்டார்கள். வைகோ தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு, தி.மு.க.விற்குள் இலங்கை தமிழரின் முகமாக தி.மு.க. தலைவர் கருணாநிதிதான் இருந்து வருகிறார். மு.க. ஸ்டாலினைப் பொறுத்தவரை அவ்வளவு தீவிரமாக இலங்கை தமிழர் பிரச்சினையில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் டெசோ மாநாட்டு வரவேற்பு குழுவிலும் சரி, தீர்மானங்களை விளக்கும் மாநாட்டிலும் சரி தான் முன்னிலைப்படுத்தப்படும் விதத்தில் ஸ்டாலின் ஏற்பாடுகளைச் செய்து கொண்டார். குறிப்பாக மாநாட்டு நன்றியுரை கனிமொழிக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த போது, அதற்கும் முட்டுக்கட்டை போட்டார் ஸ்டாலின் என்பது கட்சிக்குள் கனிமொழி ஆதரவாளர்களின் கருத்து. இதையடுத்து டெசோ தீர்மானங்களை விளக்கி தமிழகமெங்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதில் நாகர்கோயிலில் முதலில் பேசினார் கனிமொழி. அந்த கூட்டத்தை விஞ்சும் வகையில் தன் கூட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதற்காக அடுத்த நாள் திருநெல்வேலியில் பொதுக்கூட்டம் போட்டு டெசோ தீர்மானங்களை விளக்கிப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். கட்சிக்குள் இலங்கை தமிழர்களின் முகம் கனிமொழி என்ற இமேஜ் வந்து விடக்கூடாது என்பதற்காக ஸ்டாலின் கவனமாக காய் நகர்த்தி வருகிறார். இது தவிர, கட்சியில் ஏதாவது ஒரு முக்கியப் பொறுப்பு வேண்டும் என்பது கனிமொழியின் நீண்ட கால கோரிக்கை. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் அதற்கு உரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அந்த தேர்தலே இப்போது தள்ளி வைக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அதனால் கட்சிக்குள் கனிமொழி உடனடியாக ஒரு முக்கியப் பொறுப்புக்கு வருவதும் காலதாமதம் ஆகிறது. இவை எல்லாமே கனிமொழிக்கும்- தயாநிதி தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய உடன்பாட்டின் தாக்கம்.

கட்சிக்குள் நடக்கும் இந்த விடயங்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் புரிகிறது. முன்பு ஸ்டாலினுக்கும்- அழகிரிக்கும் பனிப்போர் என்ற நிலை வந்தபோது இருவரையும் சம அந்தஸ்தில் பாவித்தார். அது தி.மு.க. ஆட்சியிலிருந்த சமயத்தில்! ஆட்சியில் இல்லாத நேரத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள் மீதே நடவடிக்கை எடுத்து, ஸ்டாலின்தான் முக்கியம் என்பதை கட்சிக்குள் உள்ள அழகிரியின் ஆதரவாளர்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் இப்போது ஸ்டாலினுக்கும்- கனிமொழிக்கும் இடையேயான பனிப்போரில் இருவருக்குமே சாதகமாகவே இருந்து வருகிறார். டெசோ மாநாடு போன்ற விடயங்களில் ஸ்டாலினுக்கு முன்னுரிமை கொடுத்தாலும், மற்ற தி.மு.க. விடயங்களில் கனிமொழியையும் அவர் முன்னிலைப்படுத்த தவறியதில்லை. முன்பு வைகோ, அழகிரி, தயாநிதி மாறன் போன்றோர் தன் தலைமைக்கு போட்டியாக கனிமொழியும் வந்து விடக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார் ஸ்டாலின். அதிலும் குறிப்பாக தயாநிதி மாறன் தரப்பு ஆதரவு கனிமொழிக்கு கிட்டியுள்ள நிலையில், மீடியா பலத்துடன் இருக்கும் கனிமொழிக்கு கட்சிக்குள் பெரிய அளவில் முக்கியத்துவம் வந்து விடக்கூடாது என்பது ஸ்டாலின் மட்டுமல்ல அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ள எண்ணம். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பொறுத்தமட்டில், ஸ்டாலின்தான் தி.மு.க. என்ற ரீதியில் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வந்தாலும், கனிமொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவதை பெரிய அளவில் குறைத்து விட விரும்பவில்லை என்பதே கட்சிக்குள் அவரது அணுகுமுறைகளில் எதிரொலிக்கிறது. ஆனால் கனிமொழி- தயாநிதி மாறன் புதிய உடன்பாட்டில் பதற்றத்தில் இருப்பது மு.க. ஸ்டாலின்தான் என்பதால் தமிழகத்தில் தி.மு.க. அரசியல் புதிய பரிணாமத்தில் பயணிக்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .