2025 மே 19, திங்கட்கிழமை

தேர்தல்களின் போது இன உணர்வுகளை பாவிக்காதவர்கள் யார்?

Super User   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}



எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் களங்களில் அவ்வப் பிரதேச மக்களின் பிரச்சினைகள் எடுத்துரைக்கப்படுகின்றனவா அவற்றுக்கு தீர்வு முன்வைக்கப்படுகின்றதா என்று கேட்டால் இல்லை என்று தான் விடையளிக்க வேண்டியுள்ளது.

தேர்தல்களின் போது ஓவ்வொரு கட்சியும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முன்வைக்கும் தீர்வுகளை ஒப்பீட்டு பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள் என்றே நாம் சிறுவர்களாக பாடசாலைகளில் கல்வி கற்கும் போது நினைத்தோம். ஆனால் நடைமுறையில் நடப்பது அதுவல்ல.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது பிரதான வேட்பாளர்கள் தொலைக் காட்சியில் தோன்றி விவாதம் நடத்துவார்கள். மக்கள் எதிர்நோக்கும் வரிப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கு தாம் எவ்வாறு திர்வு வழங்கப் போகிறோம் என்பதையே அந்த விவாதங்களின் போது வேட்பாளர்கள் விவரிப்பார்கள். மக்களும் அனேகமாக வேட்பாளர்களின் கொள்கைகளைப் பார்த்தே அவர்களுக்கு வாக்களிப்பார்கள்.

ஆனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் நிலைமை வேறு. இங்கு மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதை விட அவதூறும் வீம்பும் வீராப்பும் தான் தேர்தல் மேடைகளில் கூடுதலாக பேசப்படுகின்றது. அதற்கு புறம்பாக அடி உதை கொடுக்கும் சத்தமும் தேர்தல் களத்தில் இருந்து கேட்கிறது.

கொடுங்கோலுனுக்கும் கொடுமைக்காரனுக்கும் எதிரான வன்முறைகளைத் தவிர்ந்த ஏனைய வன்முறை நடவடிக்ககைகள் அநாகரிகத்தின் அடையாளமே தவிர வேறொன்றுமல்ல. தேர்தல் களத்தில் இப்போது இடம்பெறும் வன்செயல்கள் எவ்வித் கொடுங்கோளனுக்கும் கொடுமைக்காரனுக்கும் எதிரானவையல்ல. அவை மற்றவர்கள் வாக்காளர்களை வென்றுவிடுவார்களோ என்ற பயத்தால் மேற்கொள்ளப்படும் அநாகரிகச் செயல்களே.

கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றில் இருந்தும் வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தில் இருந்துமே தேர்தல் வன் செயல்களைப் பற்றிய கூடுதலான செய்திகள் வருகின்றன. கிழக்கில் தேர்தல் கடும் போட்டியாக நடைபெற்று வருவதால் தோல்வி காண்போமோ என்ற பயத்தால் அரசியல் கட்சித் தலைவர்கள் வன்முறைகளுக்கு தமது ஆதரவாளர்களை தூண்டிவிடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால், வட மத்திய மாகாணத்தில் போட்டி என்று எதுவும் காண்பதற்கில்லை. அவ்வாறிருக்க, அங்கு வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கும் கட்சியின் தலைவர்கள் ஏன் வன்முறைகளுக்கு தமது ஆதரவாளர்களை தூண்டிவிடுகிறார்கள் என்பது விளங்கவில்லை. தாம் வன்முறைகளை தூண்டிவிடவில்லை என்று அவர்கள் கூறலாம். அவ்வாறாயின் குறைந்த பட்சம் அவர்கள் தமது ஆதரவாளர்களை வன்முறைகளில் இருந்து தடுத்திருக்க வேண்டும். அதுவும் இல்லை.
அவ்வாறாயின், வெற்றியும் தெளிவாக இருக்க, இது பழக்க தோசமாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் இயல்பாகவே குரூரக் குணம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மூன்று மாகாணங்களிலும் வெற்றி நிச்சயமாகவுள்ள பல வேட்பாளர்களும் அவர்களது தலைவர்களும் தேர்தலுக்காக பொதுச் சொத்துக்களை பாவிக்கிறார்கள். இது அனாவசியமானது என அவர்களுக்குத் தெரியும். எனவே இதுவும் பழக்க தோசமாகத் அல்லது அகம்பாவமாகத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசாங்கத்தின் ஆளும் கூட்டணி கிழக்கில் கட்சி வாரியாக நான்காக பிரிந்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆளும் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அமைச்சர் அதாவுல்லாவின் தலைமையிலான தேசிய காங்கிரஸூம் ஜென்ம வைரிகளைப் பொல் போட்டியில் (சண்டையில்) ஈடுபட்டுள்ளன. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தலைவர்களான கருணாவும் பிள்ளையானும் மறுபுறத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கருணா என்று முன்னர் அழைக்கப்பட்ட பிரதி அமைச்சர் விணாயகமுர்த்தி முரளிதரன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். பிள்ளையான் என்றழைக்கப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்ற கட்சிக்கு தலைமை தாங்குகிறார்.

இவை நான்கு தனியான கட்சிகள் என்பதாலும் இவற்றின் குறிப்பிட்ட சில தலைவர்கள் தமது அரசியல் இருப்புக்காக கிழக்கு மாகாணத்தின் மீது தங்கியிருப்பதனாலும் அவர்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா சாவா என்பதை நிர்ணயிக்கும் நிகழ்வாக இருக்கிறது. வன்முறைகளுக்கு அதுவும் பிரதான காரணமாக இருக்கிறது.

சாதாரணமாக எப்போதும் வாக்காளர்கள் இன ரீதியாக பிரிந்தே வாக்களிக்கிறார்கள். முன்னாள் வெளிநாட்டமைச்சராக இருந்த ஏ.சி.எஸ் ஹமீதுக்காக ஹாரிஸ்பத்துவை வாழ் சிங்கள மக்களும் முன்னாள் போக்குவரத்து ராஜாங்க அமைச்சராக இருந்த யூ.எல்.எம். பாரூக்கிற்காக ருவன்வெல்லை வாழ் சிங்கள மக்களும் வாக்களித்ததைப் போல் ஆங்காங்கே சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சில சந்தர்ப்பங்களில் வித்தியாசமாக வாக்களித்த போதிலும் பொதுவாக மக்கள் இன ரீதியாக பிரிந்தே வாக்களிக்கிறார்கள்.

எனவே பொதுவாக எந்த அரசியல் கட்சியும் தமிழர்கள் வாழும் ககுதிகளுக்கு தமிழ் வேட்பாளர்களையும் முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் பகுதிகளுக்கு முஸ்லிம் வேட்பாளர்களையும் நியமிக்கிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நியமிக்கும் போது அந்தந்த பிரதேசங்களில் வாழும் இனங்களை மட்டுமன்றி சாதிகளையும் கவனத்தில கொள்கின்றன.
அவ்வாறு இருக்க, ஒரு சில சிறுபான்மை இனக் கட்சிகளுக்கு எதிராக மட்டும் சிலர் இனவாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் மு.கா.வும் குறிப்பிட்ட இனங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை மட்டும் நியமித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய கட்சிகளும் அவ்வாறு பிரதேசங்களின் இனப் பரம்பலை பார்த்து தான் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அக்கட்சித் தலைவர்களும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்குச் சென்று தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றியும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றியும் தான் பேசுகிறார்கள்.

இனவாதத்தை தேர்தலுக்காக பாவிப்பதாக மு.கா.விற்கு எதிராகவே கூடுதலாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. மு.கா. கிழக்கில் தனித்து போட்டியிட முன்வந்தமை ஆளும் கூட்டணிக்கு பெரும் தலையிடியாக அமைந்திருப்பது அதற்கு ஒரு காரணமாகும். மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் சாய்ந்தமருதுவில் காவியுடையைப் பற்றிக் குறிப்பிட்டு நிகழ்த்திய சர்ச்சைக்குரிய உரை இதற்கு மற்றொரு காரணமாகும்.

அதைத்தவிர இந்த விடயத்தில் மு.கா.விற்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையே வேறு வித்தியாசங்கள் இல்லை. ஏனைய கட்சிகளும் மு.கா.வைப் போலவே கிழக்கில் இன உணர்வுகளை வாக்குகளாக பரிவர்த்தனை செய்து கொள்ளும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளன. தேசிய காங்கிரஸூம் அகில இலங்கை மு.கா.வும் தேர்தலுக்கு முன்பிருந்தே முஸ்லிம் முதலமைச்சர் பதவியைப் பற்றிப் பிரஸ்தாபித்துக் கொண்டு இருந்தன. அவ்விடயத்தில் தயக்கம் காட்டுவதாக மு.காவை குறைகூறிக் கொண்டும் இருந்தன.

மதச்சார்பின்மையைப் பற்றிப் பெரிதாக பறைசாற்றிக் கொண்ட இந்திய தேசிய காங்கிரஸே இவ்விடயத்தில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கிறது. 1950களில் இந்தியாவின் முதலாவது தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூடிய போது அப்போதைய உப ஜனாதிபதியாகவிருந்த ஸாகிர் ஹூஸைன், பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முன்னிலையில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

காங்கிரஸ் தலைவர்களில் மதிப்பிற்குரிய ஒருவரான மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தை  முஸ்லிம்கள் அதிகமாகவுள்ள தொகுதியொன்றின் வேட்பாளராக காங்கிரஸ் ஏன் நிறுத்தியது என்று அவர் கேள்வி எழுப்பினார். தோல்வியடைந்தாலும் அவரை இந்துக்கள் அதிகமாகவுள்ள தொகுதியொன்றில் நிறுத்தியிருந்தால் அது மதச்சாரபின்மை கொள்கையை வலுப்படுத்தியிருக்கும் என அவர் வாதிட்டார்.

இலங்கையில் சிறுபான்மை மக்கள் சிறுபான்மை இனத்தவர்களான ஒரே காரணத்தால் பிரச்சினைகளை எதிர்நோக்கும்போது இரு பிரதான கட்சிகளும் சரியான முறையில் செயற்பட்டு இருந்தால் சிறுபான்மை கட்சிகளே உருவாகியிரா. உதாரணமாக, தமிழ் கைதிகளைப் பற்றி தமிழ் தலைவர்கள் தான் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. அதேபோல் அண்மையில் சில பள்ளிவாசல்களுக்கு எதிராக ஏற்பட்ட பிரச்சினைகளையும் குறிப்பிடலாம்.

ஆளும் கூட்டணியில் இருக்கும் சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்களும் இதனை ஏற்றுக் கொள்வார்கள். அதை மறுப்பதாக இருந்தால் அவர்கள் தத்தமது கட்சிகளை கலைத்து விட்டு அமைச்சர் விநாயகமூர்த்தியைப் போல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்து காட்ட வேண்டும்.  


You May Also Like

  Comments - 0

  • Rusthy Wednesday, 05 September 2012 05:26 AM

    உண்மை..... சில விடயங்கள் விளங்க பல நாட்கள் போகாது ,,,,,,,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X