2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பிரதம நீதியரசருக்கு நடக்கப்போவது என்ன?

A.P.Mathan   / 2013 ஜனவரி 09 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

நீதிமன்றத் தீர்ப்பை விமர்சனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு வந்த நாட்டில், நீதித்துறை இப்போது செல்லாக்காசு போன்று மதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை வாசம் அனுபவித்த அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க அங்கம் வகிக்கின்ற அரசாங்கத்தில் உள்ள அவரது அமைச்சரவை சகாக்களே, பகிரங்கமாக நீதிமன்றங்களை, நீதிபதிகளை, நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கின்ற நிலை காணப்படுகிறது. அதுவும், உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள், கருத்துகள் எல்லாம் கண்டபடி விமர்சிக்கப்படுகின்றன.

அரச ஊடகங்களிலேயே, இத்தகைய விமர்சனங்கள் தாராளமாக வெளியாகின்றன. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக முக்கிய அரசியல்வாதி ஒருவரையே சிறைக்கு அனுப்பிய இந்த நாட்டில், இப்படியொரு நிலை ஏற்படும் என்று எவரும் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க முடியாது.

எனினும், அரசியலமைப்பில் 18ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது, நீதித்துறை சுதந்திரம் மீது கை வைக்கப்படும் நிலை உருவாகும் என்ற கருத்து ஒருசாராரிடம் இருந்ததை மறுக்க முடியாது. எல்லா நீதிமன்றத் தீர்ப்புகளும் நியாயத்தை சொல்வதாக இருக்க முடியாது. எல்லா நீதிமன்றத் தீர்ப்புகளும் நியாயத்தை சொல்வதாக இருந்தால், மேல்முறையீடு, அதற்கான நீதிமன்றக் கட்டமைப்பு என்பனவற்றுக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது.

நீதிமன்றங்கள், நீதிபதிகள் சுய விருப்பு, வெறுப்புகளற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியமான போதும், அவ்வாறு செயற்படாமல் பக்கசார்புடன் செயற்படும்போது அதை சட்டரீதியான அணுகுவதே சரியான அணுகுமுறையாக கருதப்பட்டது. அதற்காகவே மேல் முறையீடு செய்யும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலை இலங்கையில் இருப்பதாகத் தெரியவில்லை.

தமக்குச் சார்பாகச் செயற்படாதபோது நீதிமன்றங்களையும் அவற்றின் தீர்ப்புகளையும் மட்டுமன்றி, நீதிபதிகளையும் கூடத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கின்ற நிலை தான் தற்போது காணப்படுகிறது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையைக் கொண்டு வந்த அரசாங்கம், அதற்குரிய நடைமுறைகளின்படி அதை அணுகியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. பிரதம நீதியரசரின் விவகாரத்தை அரசாங்கம் அணுகிய முறை பற்றிய விவாதங்களுக்கு அப்பால், அவரைக் குற்றவாளியாக நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதிலேயே அதிக கரிசனை காட்டப்பட்டது.

அரசாங்க அமைச்சர்களும் அரசாங்க ஊடகங்களும், பிரதம நீதியரசர் சில வழங்குகளில் வழங்கிய தீர்ப்புகள் தவறானவை என்ற கருத்தை உருவாக்க முற்பட்டதையும் அவதானிக்கலாம். இது நாட்டு மக்களுக்கு நீதித்துறை மீது கொண்டிருந்த நம்பிக்கையை பெரும்பாலும் சிதைத்துவிட்டதென்பதை மறுக்க முடியாது.

உயர்நீதிமன்றம் பக்கச்சார்பாக செயற்பட்டது, தீர்ப்பை வழங்கியது என்ற கருத்து எப்போது உருவாக்கப்பட்டதோ, அப்போதே இலங்கையின் நீதித்துறையின் கால்கள் ஒடிக்கப்பட்டுவிட்டன. அரசாங்கம் தான் நினைத்த ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, எத்தகைய அணுகுமுறையையும் பின்பற்றலாம், யாரையும் கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு முடியும் என்ற உண்மை மக்களுக்கு உணர வைக்கப்பட்டுள்ளது.

இந்தவாரம் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. 10ஆம், 11ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள விவாதத்தின் முடிவில், 11ஆம் திகதி மாலை வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அரையும் குறையுமாக விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, விவாதம் நடத்தப்படவுள்ளது.

ஆனால், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்து, தண்டனை அளிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும், அந்தத் தெரிவுக்குழு அளித்த அறிக்கை செல்லுபடியற்றதென்றும் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதை மீறித்தான் இந்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தை உயர்நீதிமன்றமோ, மேல்முறையீட்டு நீதிமன்றமோ கட்டுப்படுத்த முடியாது என்றும், அதன் தீர்ப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அரசாங்கத் தரப்பு சொல்கிறது.

ஆனால், அரசியலமைப்பு ரீதியான சந்தேகங்கள் ஏற்படும் போது, அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பது உயர்நீதிமன்றம் தான். ஓர் அரசியலமைப்பு உருவாக்கத்தில், நீதிமன்றங்களின் தீர்ப்புகள் முக்கியமாக கவனத்தில் எடுக்கப்படுகின்றன. இது உலக வழக்கம். அப்படியிருக்கும் போது, அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்கிறது. விளக்கம் சொல்லும் அதிகாரம் இல்லை என்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கருத்தில்கொள்ள வேண்டியதில்லை என்கிறது. இது எதிர்காலத்தில், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை வலுவற்றதாக்கி விடுவதுடன், அரசியலமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமன்றி அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்துக்கு அரசியலமைப்பு ரீதியான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கின்ற தகைமையைக் கூட உயர்நீதிமன்றத்துக்கு இல்லாமல் செய்து விடும். அரசியலமைப்பில் நீதித்துறைசார் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு, நீதிமன்றங்களிடமே விடப்பட்டுள்ளது. அரசாங்கம் அந்த அதிகாரங்களை நாடாளுமன்றத்தின் கையில் எடுத்துக்கொள்ளத் துணிந்துள்ளது.

இத்தகைய நிலையில், நாட்டின் இரண்டாவது நீதிக் கட்டமைப்பாக, நாடாளுமன்றம் தோற்றம் பெறும் நிலை காணப்படுகிறது. இந்த முரண்பாட்டின் உச்சநிலையாக, நாடாளுமன்றமே உயர்நீதிமன்றத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. இப்போதைய நடப்புகள் அதற்காக அடிக்கல்லைத் தான் போட்டுள்ளன. தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக, பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அதற்கடுத்து ஜனாதிபதி அவரைப் பதவி நீக்க நடவடிக்கை எடுப்பார். அதற்குள், பெயர் வெளியிடப்படாத நான்கு பேரைக் கொண்ட நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் விசாரணை நடைமுறைகள் குறித்து அவர்கள் அளிக்கும் அறிக்கைக்கு அமையவே பதவிநீக்கம் இடம்பெறும்.

இந்த நிபுணர் குழு, ஒருவேளை பிரதம நீதியரசருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை அளிக்குமேயானால், அதன் விளைவு மிகவும் மோசமாகும். அதாவது, தெரிவுக்குழு, நாடாளுமன்றம், நீதித்துறை போன்றவற்றை அது கேலிக்கூத்தாக்கி விடும். எனினும், பெயர் கூட வெளியிடப்படாத அந்த நிபுணர் குழுவின் அறிக்கை பிரதம நீதியரசருக்கு சாதகமாக இருப்பதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை.

இருந்தாலும், பிரதம நீதியரசர் விவகாரத்தில் அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு அணுகுமுறையும், மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளும், ஆட்சியின் இலக்கணங்களை மீறும் வகையில் அமைந்திருப்பதை மறுக்க முடியாது.

அரசாங்கத்தின் இப்பாதைய ஒரே இலக்கு – பிரதம நீதியரசரை அகற்ற வேண்டும் என்பது தான். அதற்காக ஒட்டுமொத்த நிதித்துறையையும், நீதிபதிகளையும், நீதிமன்றங்களையும் பக்சார்பானவர்களாக காண்பித்திருப்பது உச்சக்கட்ட அநீதி எனலாம்.

பிரதம நீதியரசரைப் பதவி நீக்குவதன் மூலம், அரசாங்கத்தின் இந்த இலக்கு எட்டப்பட்டு விடலாம். ஆனால், நீதித்துறையின் மீது ஏற்படுத்தப்பட்ட கறை, இழந்துபோன அதன் சுயாதிபத்தியம் என்பனவற்றை ஒருபோதும் மீள வழங்க முடியாது. அதுமட்டுமன்றி, இனிமேல் நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதும் கூட விவாதப் பொருளாகலாம். நீதி, நிர்வாக, சட்டவாக்கத் துறைகளுக்கு இடையில் இது ஒரு நெடுங்காலச் சிக்கலாக நீளப்போகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X