2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஜெனிவா: திரிசங்கு நிலையில் இந்தியா

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 27 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இலங்கை அரசபடைகள் மீதான போர்க்குற்ற, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் ஒளிப்படச் சர்ச்சை ஓய்வதற்குள், புலிகளின் தகவல்களை அறிவதற்கு பாலியல் வல்லுறவை அரசபடைகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டும் அறிக்கை ஒன்றை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.

141 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட 75 பேரின் சாட்சியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் இலங்கை இராணுவம் நிராகரித்துள்ள போதிலும், அது பெரிதாக எடுப்படவில்லை.

பாலச்சந்திரனின் ஒளிப்படங்கள் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையும் சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.

கூகுளில் இலங்கை பற்றிய செய்தியைத் தேடினால், இலங்கை பற்றிய எதிர்மறையான செய்திகள் தான் குவிந்துள்ளதைக் காணலாம். அந்தளவுக்கு இலங்கை அரசின் நிலை சர்வதேச அளவில் பாதகமான கட்டத்தில் இருப்பதை உணரமுடிகிறது.

அதுமட்டுமன்றி, ஜெனிவா தீர்மான விடயத்தில், இலங்கைக்கு நெருக்கடிகள் இருக்கிறதோ இல்லையோ, இந்தியாவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என்பதை மட்டும் மறுக்க முடியாது. இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்திய மத்திய அரசு மீதான அழுத்தங்கள் இன்னும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. அதிலும் பாலச்சந்திரனின் ஒளிப்படம் வெளியான பின்னர், இந்திய மத்திய அரசு இக்கட்டான நிலைக்குள் சிக்கிவிட்டது என்றே சொல்லலாம். ஏனென்றால், எந்தவகையிலும் இலங்கைக்கு ஆதரவான நகர்வை மேற்கொள்ள முடியாத கட்டத்துக்குள் இந்தியா இப்போது தள்ளப்பட்டு நிற்கிறது.

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வரவேண்டும், இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம், மத்திய அரசு மீது கூட்டணிக் கட்சிகளாலும் எதிர்க்கட்சிகளாலும் கொடுக்கப்படுவதைக் காணமுடிகிறது.

தமிழ்நாட்டில் இருந்து தெரிவு செய்யப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களே, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, இலங்கைக்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட அத்தனை கட்சிகளும், இடதுசாரிக்கட்சிகளும் இலங்கைக்கு எதிராகச் செயற்பட அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அதற்கு முரணாகச் செயற்பட முடியாத நிலைக்குள் இந்திய மத்திய அரசு சிக்கியுள்ளது.

ஏற்கனவே, இலங்கை அரசு தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், உள்ளக நெருக்கடிகளும் அதிகரித்துள்ளதால், ஜெனிவா களத்தில் இந்தியாவின் ஆதரவை இலங்கை பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலை ஏற்கனவே உருவாகி விட்டது.

இவற்றையும் மீறி இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமானால், அல்லது இலங்கையைக் காப்பாற்ற முனைந்தால் - அது ஓர் அதிசயமாகவே பார்க்கப்படும்.

இலங்கை அரசு இந்தியாவின் காலைப்பிடித்து அதனுடன் பேச்சு நடத்தி ஓர் இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் திட்டத்துடன் இருந்தாலும், இந்திய மத்திய அரசுக்கு உள்ள புறச்சூழல், அதற்குச் சாதகமான நிலையில் இல்லை.

இந்திய மத்திய அரசு, இலங்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமானால், ஏதேனும் ஒருவகையிலேனும் சாதகமான நிலை இருக்க வேண்டும். அதாவது, இந்தியா தனது பூகோள நலனை மட்டும் கருதி அத்தகைய ஆதரவை வழங்க வேண்டும் என்றால், ஒன்றில் இலங்கை அதற்குச் சாதகமாக நடந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது உள்நாட்டு எதிர்ப்புகள் இல்லாமலேனும் இருக்க வேண்டும்.

இந்த இரண்டுமே இல்லாத சூழலில், இந்திய மத்திய அரசு, இலங்கைக்கு சார்பாக முடிவுகளை எடுப்பதோ, அதன் சார்பில் நடந்துகொள்வதே அபத்தமான அரசியல் முடிவாகவே கருதப்படும். கடந்த ஆண்டு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தபோது, அது முட்டாள்தனமான முடிவு என்று விமர்சித்தவர்கள், இப்போது அந்த நிலைப்பாட்டில் இல்லை. அப்படிக் கருத்து வெளியிட்டவர்கள் பலரும் வாயைத் திறக்காமல் உள்ளனர்.

இப்போது ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட வேண்டும் என்ற கூறியுள்ள ஒரே ஒருவர், அரசியல் கோமாளி என்று விமர்சிக்கப்படும் சுப்பிரமணியம் சுவாமி தான். அவரைவிட வேறு எவரும் இத்தகைய கருத்தை இதுவரை கூறவில்லை.

இதைவிட, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்று கூறியுள்ளதும், அந்த உறுதிப்பாட்டை தமக்கு பிரதமர் மன்மோகன்சிங் வழங்கியுள்ளதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

கடந்த ஆண்டில், இந்தியா தீர்மானத்தில் இருந்து நழுவிக் கொள்ளுமா என்ற சந்தேகம் கடைசி வரை இருந்தது. காரணம், இப்படியொரு உறுதிப்பாட்டை கடந்த ஆண்டு முன்கூட்டியே இந்தியா வழங்கவில்லை.

இப்போது கூட இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவிக்காது விட்டாலும், அதற்கு சாதகமான சமிக்ஞைகளையே இந்திய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

இந்தியா வலியுறுத்தும், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் கைகழுவிக்கொள்ள முனைந்துள்ளது இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. அதை இந்தியா வெளிப்படையாகவே கூறியுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கும் கூட ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடந்த விவாதத்தில் பேசிய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இந்தியா உறுதியுடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இத்தகைய நிலையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரக்கூடிய எத்தகைய தீர்மானத்தையும் இந்தியா எதிர்க்க முடியாது. எனினும், இந்தியாவின் ஆதரவைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை இலங்கையிடம் கொஞ்சமேனும் இருப்பதாகத் தெரிகிறது.

இந்தநிலையில், இலங்கையின் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்ள முடியாத இக்கட்டான நிலைக்குள் இந்தியா சிக்கிப்போயுள்ளது. அந்தச் சூழலை உருவாக்கிக் கொடுத்தது, தமிழ்நாட்டின் எதிர்ப்புகள் மட்டும் அல்ல. இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் கூடத் தான். இந்தியாவை மதிக்கத் தவறியதும், அதற்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதும் தான், இலங்கை இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குக் காரணம்.

இந்திய நாடாளுமன்ற விவாதத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கையை விட்டுக் கொடுத்து பேசவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். என்னதான், கோபமோ, கவலையோ இருந்தாலும் இலங்கை ஓர் எதிரி நாடு அல்ல என்று அவர் அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார். அந்தளவுக்கு, இலங்கை அரசாங்கம், இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை மதித்து நடந்துகொள்ளவில்லை என்பது வெளிப்படை.

போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகப்போகின்ற நிலையில், தமிழர் பிரச்சினைக்குத தீர்வு காணத் தவறியது அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறு. அதுவே எல்லா அழுத்தங்களையும் மையப்படுத்தியுள்ளது என்ற உண்மையை இனிமேலாவது அரசாங்கம் புரிந்துகொள்ளுமா என்பது சந்தேகம் தான்.

இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறியதற்கான தண்டனையை இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒருமுறை ஜெனிவாவில் எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்குமா இல்லையா என்ற கேள்விக்கு புதன்கிழமை விவாதத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலளிக்கவில்லை. ஆனால், அவரது உரையில் இருந்து இந்தியாவின் மனோநிலை என்னவென்பதை ஓரளவுக்கேனும் புரிந்துகொள்ள முடிகிறது.

இலங்கையை முழுமையாக எதிர்த்து நிற்கும் அளவுக்கு இந்தியாவிடம் துணிச்சலைக் காணவில்லை. இந்தியாவுக்கு இது சோதனையான விடயம் தான்.

ஒரு பக்கத்தில், எட்டி உதைத்தாலும் தனது சகோதர பாசத்தை விட்டுக் கொடுக்காமல் இலங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்தியாவின் இதயம் துடிக்கவே செய்கிறது. இன்னொரு பக்கத்தில், உள்ளக நெருக்கடியும், இலங்கை அரசின் போக்கும் அவ்வாறு காப்பாற்ற முடியாத கட்டத்துக்குள் இந்தியாவை தள்ளிவிட்டுள்ளன.

உண்மையைச் சொல்லப் போனால், ஜெனிவா களத்தில் இலங்கை வெளிப்படையான நெருக்கடிகளை எதிர்கொண்டாலும், அதனிடம் எதையும் எதிர்ப்பது என்ற போர்க்குணத்தை காண முடிகிறது, ஆனால் இந்தியாவிடம் அத்தகைய தெளிவு இல்லை. எதைச் செய்வது என்று தெரியாத குழப்பத்தில் தான் இந்தியா சிக்கியுள்ளது. இது ஜெனிவாவில் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை விட, பெரியதாகவே தோன்றுகிறது.

  Comments - 0

  • malaysian Friday, 01 March 2013 07:58 AM

    கொல்லபட்டவர்கல் வட இந்தியர் என்றால் முடிவு தெளிவாக இருக்கும்.

    Reply : 0       0

    Manuelpillai Tuesday, 12 March 2013 01:56 PM

    தமிழர் என்றால் அவர் உயிர் பெரிதில்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X