2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அரசியலாகிவிட்ட மனிதஉரிமைகள்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது ஜெனிவா நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 22ஆவது அமர்வு - தமிழ் ஊடகங்களுக்கு செய்தி ஊற்றாகியுள்ளது. ஆனால் சிங்கள ஊடகங்கள் அதனை அவ்வளவாக பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

சில தமிழ் பத்திரிகைகளில் இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட செய்திகளும் முழுப்பக்க கட்டுரைகள் உட்பட பல கட்டுரைகளும் பிரசுரிக்கப்படுகின்றன. குறிப்பாக சகல தமிழ் பத்திரிகைகளிலும் முன் பக்கத்தில் அநேகமாக அரைவாசி அல்லது அதற்கு மேல் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரைப் பற்றிய செய்திகளாகத் தான் காணப்படுகின்றன.

ஆனால், சிங்கள் பத்திரிகைகளில் நாளொன்றுக்கு இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரு செய்தி அல்லது இரண்டு தான் பிரசுரிக்கப்படுகின்றன. கட்டுரைகளைப் பொறுத்தவரை சிங்கள பத்திரிகைகளில் இந்த விடயத்தைப் பற்றி வாரத்திற்கு இரண்டு மூன்று கட்டுரைகள் மட்டுமே வெளியாகின்றன.

சிங்கள பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளும் கட்டுரைகளும் பெரும்பாலும் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அத்துமீறல்களைப் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துபவனவாகவே இருக்கின்றன. அதேவேளை அவை மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக பிரேரணையொன்றை கொண்டு வரவிருக்கும் அமெரிக்காவை சாடுகின்றன. பிரேரணையை ஆதரிப்பதாகக் கூறும் நாடுகளையும் சாடுகின்றன.

தமிழ் ஊடகங்கள் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கின்றன. அவை முழுமையாகவே அரச எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டதாகவே காணப்படுகின்றன.

இலங்கையில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தின்போது அரச படைகளும் புலிகளும் பாரியளவில் மனித உரிமைகளை மீறியுள்ளதாகவே சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் கூறிவருகின்றன. ஆனால் புலிகள் - மனித உரிமைகளை மீறியதாக அந்நிறுவனங்கள் பொதுவாக கூறிய போதிலும் அவை அச்சம்பவங்களை துள்ளியமாக குறிப்பிடுவதோ அவற்றைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று கூறுவதோ இல்லை.

அரசாங்கத்திற்கு எதிராக ஒரு யுத்தத்தையே தொடர்த்துள்ள சனல் 4 தொலைக்காட்சியும் கூட புலிகளும் மனித உரிமைகளை மீறியதாக தமது ஆவணப் படங்களில் பொதுவாக கூறுகின்றது. புலிகள் - சீறுவர்களை படையில் சேர்த்ததாகவும் மேலோட்டமாக கூறுகின்றது. ஆனால் புலிகளுக்கு எதிரான எவ்வித காட்சியும் அவற்றில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இது அரசாங்கத்தின் சீற்றத்திற்கு காரணமாகியுள்ளது. அதேவேளை புலிகளைச் சார்ந்த தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்களின் இந்த நிலைப்பாட்டின் காரணமாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கவில்லை. மாறாக அவ்வமைப்புக்களும் விசாரணைகளை கோருகின்றன. புலிகளின் செயற்பாடுகளும் தனித்தனியாக குறிப்பிடப்பட்டு அவற்றைப் பற்றியும் விசாரணை செய்ய வேண்டும் என்று சர்வதேச நிறுவனங்கள் கூறும் நிலை இருந்தால் அவ்வமைப்புக்களும் விசாரணை வேண்டாம் என்றே கூறும்.

இது தான் மனித உரிமைகளைப் பற்றிய அக்கறை. அரசாங்கத்தின் நிலைப்பாடு இதைவிட மோசமாக இருக்கிறது. அரசாங்கமே நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கவில்லை. அவற்றைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்றே ஆணைக்குழு சிபார்சு செய்திருக்கிறது.

உதாரணமாக கைது செய்யப்பட்ட தமது கணவன்மார்கள் காணாமற் போயுள்ளதாக பல பெண்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களை ஆணைக்குழு நிராகரிக்கவில்லை. அவற்றைப்பற்றி விசாரணை செய்யுமாறு தான் கூறுகிறது. ஆனால் போரின்போது எவரும் காணாமற் போகவில்லை என்று சில வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார்.
தடுப்புக் காவல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்ய வேண்டும் என கடந்த வருட அமெரிக்க பிரேரணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அரசாங்கம் அணமையில் சந்தேக நபர்களை தடுத்து வைத்துக் கொள்ள பொலிஸாருக்கு வழங்கப்பட்டு இருந்த காலத்தை நீடித்தது. 2006ஆம் ஆண்டு மூதூரில் உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றியும் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றியும் புதிதாக விசாரணை செய்வதாக அரசாங்கம் கடந்த முறை ஜெனீவாவில் வைத்து வாக்குறுதியளித்து. அது இன்னமும் நடைபெறவில்லை.

மாத்தளையில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகளைப் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறும் மக்கள் விடுதலை முன்னணி தென் பகுதியில் இயங்கிய பாதுகாப்புப் படையினரே தான் வடக்கு கிழக்கிலும் செயற்பட்டனர் என்ற காரணம் இருக்க வடக்கு கிழக்கில் போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாக ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் அது அவர்களது அரசியலுக்கு பொருத்தமானதாக இல்லை.

போரின்போது கைது செய்யப்பட்டவர்களை கொலை செய்வது பாரிய போர் குற்றமாகும். எனவே 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வைத்து 600இற்கு மேற்பட்ட சரணடைந்த பொலிஸாரை கொலை செய்தமை பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று கருணா அம்மான் புலிகளிடம் இருந்து பிரிந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்டபோது வெளிநாடுகளில் இயங்கும் பல தமிழ் அமைப்புக்கள் கோரின. அதுவரை அந்த சம்பவத்தைப் பற்றி மிக வேதனையுடன் கருத்து வெளியிட்டு வந்த தென் பகுதி அமைப்புக்கள் அப்போது அந்த கோரிக்கையை ஆதரிக்கத்தக்க கோரிக்கையாக கருதவில்லை.

ஏனெனில் அது கருணாவை பாதிக்கலாம் என்பதனாலேயே. 600 பொலிஸ்காரர்களை விட அவர்களுக்கு அப்போது கருணாவின் முக்கியத்துவம் அதிகமாகவிருந்தது. சில நாட்களில் தமது கோரிக்கை புலிகளையே பாதிக்கும் என்று மேற்படி தமிழ் அமைப்புக்களும் விளங்கிக் கொண்டன. எனவே அவர்களது கோரிக்கையும் ஓரிரு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

1988-1989 ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறையின்போது கொல்லப்பட்டவர்களின் படங்களை எடுத்துக் கொண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டம் நடைபெறும் ஜெனீவா நகருக்கு புறப்பட்டவர்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஆனால் இப்போது அதுபோன்ற படங்களை எடுத்துக் கொண்டு ஜெனீவாவுக்குச் செல்வோர்களை அவரது ஆதரவாளர்கள் தேசத்துரோகிகளாகவே வர்ணிக்கின்றனர்.

எனவே சகல தரப்பினரும் மனித உரிமைகளுக்காக அரசியலை பாவிப்பதில்லை. மாறாக அவர்கள் அரசியலுக்காக மனித உரிமை மீறல்களை பாவிக்கிறார்கள்.

  Comments - 0

  • aj Thursday, 28 February 2013 01:37 PM

    ஆயிபு ஐயா என்ன சொல்லவருகிறது, தமிழ் மொழி பேசிக்கொண்டு நடந்த இன அழிப்பை, உலக நடப்பை, தமிழர் பிரச்சினை இப்போது உலக பிரச்சினையாக மாறிவிட்டது. இதை தமிழ் ஊடகம் இருட்டடிப்பு செய்யவேண்டும் என்று சொல்லவருகிறார்? முஸ்லிம் ஊடகம் என்று சொல்லிக்கொண்டு சிலதுகளும் இதை தான் செய்கிறார்கள். முஸ்லிம் பயங்கரவாதிகள் செய்த கொலைகள் பற்றி யாருமே பேசாமல் இருப்பது ஏன்? ஆயிபு ஐயா இதை சுட்டிக்காட்டி சொல்லி இருக்கலாம். அதை விட அவர்களின் ஊடகம் என்று சொல்லிக்கொண்டு தமிழர் பிரச்னை இரட்டடிப்பு செய்வதையும் சொல்லலாம். அடுத்த முறை முயற்சி செய்ங்க ஐயா

    Reply : 0       0

    குமார் Friday, 01 March 2013 06:53 AM

    விடுதலை புலிகள் நடாத்திய மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுக்கவில்லை என கூறும் திரு ஐயூப் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார். விடுதலை புலிகள் என்ற அமைப்பு இன்று இல்லை. அதன் முன்னணி தலைவர்கள் கொல்லப்பட்டு அல்லது சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். இப்படியான சந்தர்ப்பத்தில் யாரிடம் விசாரணை நடத்த முடியும் அல்லது தண்டனை தர முடியும்?

    Reply : 0       0

    துலீப் Friday, 01 March 2013 06:50 PM

    தமிழ் ஊடகங்களை பற்றி எழுதும் குறை கூறும் மரியாதைக்குரிய எம். எஸ். எம் ஐயுப் அவர்களே, சர்வதேச விசாரணை என்று ஐக்கிய நாடுகள் தலையீடு என எது வரினும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக அரசியல் நடத்துபவர்கள். விழுந்தடித்து கொண்டு முஸ்லிம் நாடுகளுக்கு சென்று இனப்படுகொலை அரசிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் அதையும் மீறி உலக தலையீடு மூலம் தமிழ் மக்களின் தியாகங்களுக்கு அறுவடையாக சிறந்த அரசியல் தீர்வு வந்தால் எமக்கும் அதில் சம பங்கு வேண்டும் என்று மல்லு கட்டும், தற்செயலாக அது கைகூடாது போனால் மீண்டும் இனவாத அரசிற்கு வக்காலத்து வாங்க ஆரம்பிக்கும் அரசியல் பற்றியும் எழுதலாமே.

    மரியாதைக்குரிய எம். எஸ். எம்.ஐயூப் அவர்களே. ஏனென்றால் 2002ஆம் ஆண்டில் சர்வதேச தலையீட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த பட்ட கையோடு தென்கிழக்கு அலகு பற்றி உரக்க பேசியவர்கள் தற்போது அது பற்றி வாய் திறப்பதில்லை. இதேபோல் 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னரும் ஏற்பட்டது. தமிழ் மக்கள் இரத்தம் சிந்த தொடங்கியதும் தென்கிழக்கு அலகை மறந்தார்கள். மக்கள் அல்ல அரசியல்வாதிகள்.

    Reply : 0       0

    Rahmath ali Monday, 04 March 2013 04:19 AM

    குற்றமுள்ள மனம்தான் குறுகுறுக்கும். ஐயூப் என்ன சொல்லிவிட்டார்? மனித உரிமை என்பதெல்லாம் அரசியலாகிவிட்டது என்றுதான் கூற வருகிறார். அதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது? ஒருவர் ஒன்றைக் கூற மற்றவர் இன்னொன்றை விளங்கிக்கொண்டால் பிரச்சினை கூடிக்கொண்டுதான் போகும். தென்கிழக்கு முஸ்லிம்கள் தென்கிழக்கு அலகு கேட்டது புலிப்பயங்கரவாதிகளுக்குப் பயந்துதான் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். இன்று அவர்கள் அழிக்கப்பட்டாகிவிட்டது. அதனால் அக்கோரிக்கை கைவிடப்பட்டிருக்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X