2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தமிழ்நாட்டு நெருக்குவாரத்திலிருந்து இந்தியா தப்பிக்கவே முடியாது

Menaka Mookandi   / 2013 மார்ச் 07 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக்கு முக்கியமான மூன்று முக்கிய சம்பவங்கள் தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ளன. இம்மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை பேரவை கூட்டத்தின் போது அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரேரணையை இந்திய அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புக்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானவை தான் ஆனால் அவை வழமையானவை. ஆனால் இம்முன்று சம்பவங்கள் அவற்றை விட முக்கியமானவையாகும்.

இம்மூன்று சம்பவங்களும் அவ்வார்ப்பாட்டங்களோடு சம்பந்தப்படாதவையல்ல. அவையும் இவ்வார்ப்பாட்டங்களின் அம்சங்கள் தான். நாம் தமிழர் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கடலூரைச் சேர்ந்த எல்.மணி என்பவர் இலங்கை தமிழர்களுக்கு நியாயம் வேண்டியும் இந்தியாவில் இடம்பெறும் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடலூரில் வைத்து கடந்த திங்கட்கிழமை தீக்குளித்து உயிரிழந்தமை இவற்றில் மிகவும் பாரதூரமான சம்பவமாகும்.

தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு (டெஸோ) வியாழக்கிமை புதுடில்லியில் நடத்தவிருக்கும் கூட்டத்தில் பங்குபற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் கட்சியின் உப தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தியை சந்தித்தமை அடுத்த முக்கிய சம்பவமாகும்.

அண்மையில் இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விட்டுச் சென்ற கலாநிதி சுப்பிரமணிய சுவாமி தலைமை தாங்கும் இந்திய ஜனதா கட்சியின் மதுரை அலுவலகம் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லெறி தாக்குதலுக்குள்ளகியமை நாம் குறிப்பிடும் மூன்றாவது முக்கிய சம்பவமாகும். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இலங்கை விடயத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டிருப்பது சகஜமான விடயமாகும். இன்று புலிகள் அமைப்பை பாராட்டும் சில தலைவர்கள் நாளை அதனை பயங்கரவாத அமைப்பு என்று கூறக்கூடும்.

இலங்கையில் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தில் நடைபெறும் போது தமிழ்நாட்டில் சில தலைவர்கள் புலிகளை நான் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்று கூறினர். வேறு சிலர் எந்த நாட்டிலும் போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்படுவது சகஜம் என்று கூறினர். எனவே தான் மேற்கூறிய சம்பவங்கள் அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டஙகளை விட முக்கியமானவையாக கருத வேண்டியிருக்கிறன.

அரசியல்வாதிகளின் போராட்டங்களில் சந்தர்ப்பவாதம் இருக்கலாம். ஆனால் ஒருவரது உயிர் தியாகத்தில் ஏமாற்றம் இருக்கிறது என்று கூற முடியாது. எனவே அரசியல்வாதிகளின் பல ஆர்ப்பாட்டங்களை விட மணியின் தீக்குளிப்பு அரசியல் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆயினும் அவரது செயல் மேலும் பலர் அவ்வாறு செய்வதை ஊக்குவிப்பதாக அமையாது இருந்தால் நல்லது. உயிரை மாய்த்துக் கொள்ளாமல் உயிரோடு இருந்து போராடுங்கள் என்று தமிழ்நாட்டில் பல தலைவர்களும் கூறியிருக்கிறார்கள்.

இருந்த போதிலும் அவரது மரணம் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டில் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போதும் தமிழ்நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 11பேர் அப்போதும் தீக்குளித்து உயிரிழந்தனர். ஆனால் அப்போது இந்தியா இலங்கைக்கு எதிராக அவ்வளவு கண்டிப்பான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ஏனெனில் புலிகளை அழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அப்போது இந்தியாவும் இருந்தது. எனவே அப்போது இந்திய மத்திய அரசாங்கம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை சமாளிக்கவே முயற்சித்தது.

ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது போல் தான் தெரிகிறது. இலங்கையில் அதிகார பரவலாக்கல் முறையை பலப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் தொடந்து வலியுறுத்தி வந்தும் இலங்கை அரசாங்கம் அதனை பகிரங்கமாக புறக்கணிப்பதாகவே தெரிகிறது. தற்போது அமுலில் உள்ள அதிகார பரவலாக்கல் முறையை பலப்படுத்துவது ஒருபுறமிருக்க அரசாங்கம் ஏற்கனவே இருக்கும் அதிகார பரவலாக்களையும் இல்லாமல் செய்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் முன்னரை விட மத்திய அரசாங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. கடந்த வருடம் அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணையொன்று கொண்டு வந்த போதும் இந்த நிலை இருந்தது. எனவே தான் கடந்த வருடம் இந்தியா அமெரிக்க பிரேணையை ஆதரிக்க வேண்டியிருந்தது.

சுப்பிரமணிய சுவாமியின் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவமும் சற்று வித்தியாசமான சம்பவமாகும். சுவாமி எப்போதும் சர்ச்சைக்குரியவரே. இதற்கு முன்னரும் பல முறை அவர் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழ்நாட்டு தலைவர்களை பகிரங்கமாக விமர்சித்து இருக்கிறார். ஆனால் அவருக்கு எதிராகவோ அவரது கட்சிக்கு எதிராகவோ வன்முறை பிரயோகிக்கப்படுவது மிகவும் குறைவே.

தமிழ்நாட்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தியை சந்தித்து இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக உரையாடியிருந்தால் அது சாதாரண விடயமாக கருதலாம். ஆயினும் அவர்கள் தாமும் புது டில்லியில் நடைபெறவிருக்கும் டெஸோ கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது தான் இங்குள்ள முக்கியத்துவமும் சிறப்பம்சமுமாக இருக்கிறது.

இதைக் கொண்டு இரண்டு விடயங்களை ஊகிக்கலாம். ஒன்று இந்த டெஸோ கூட்டம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியால் புறக்கணிக்க முடியாத ஒன்றாகியிருக்கிறது போலும். புறக்கணித்தால் தாம் மக்களிடமிருந்து ஓரங்கட்டிவிடப்படுவோமோ என்று காங்கிரஸ் மாநில கமிட்டி அச்சப்படுகிறது.

இரண்டாவதாக அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவை பெருவதில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறது என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது.  சில தினங்களுக்கு முன்னர் தி.மு.க.வின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டீ.ஆர்.பாலு, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழியுடன் சென்று ராகுல் காந்தியை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நெருக்குதல்கள் இல்லாவிட்டாலும் இந்தியா, இலங்கை விடயத்தில் ஏற்கனண்வே ஓரளவு சீற்றம் கொண்டு இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமே. குறிப்பாக இந்தியாவின் தலையீட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியின் சகோதரர்களான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அண்மையில் கூறி வந்தமை இந்தியாவுக்கு அவ்வளவு பிடித்திருக்காது.

அதுவும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பாலும் செல்லத் தயார் என இலங்கைத் தலைவர்கள் இந்தியாவிடம் பலமுறை கூறிவிட்டு இப்போது 13ஆவது திருத்தத்தையும் ரத்துச் செய்ய முற்படுவது தம்மை மதியாத செயலாக இந்தியா நினைத்திருக்கும்.

கடந்த முறை போலன்றி இந்த முறை உலகத் தலைவர்கள் இலங்கையை சற்று காரமாக விமர்சிப்பதை அவதானிக்க முடிகிறது. போரின் இறுதிக் கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அத்துமீறல்களைப் பற்றி பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை தமது கடமைகளை நிறைவேற்ற தவறிவிட்டது என அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் மேலும் பலரும் பகிரங்கமாக குற்றஞ்சாட்ட முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் இந்தியா தமிழ்நாட்டு நெருக்குதலையும எதிர் நோக்குகிறது.

  Comments - 0

  • ss Friday, 08 March 2013 05:02 AM

    எது எப்படியோ? தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டும் எப்போதும் உங்கள் பக்கம்தான்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X