2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பிள்ளையை தம் பக்கம் வளைத்தெடுக்க அரசாங்கமும் தமிழ் தரப்பினரும் கடும் போட்டி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 03 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே கடந்த 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்தார். ஆனால் அவரது விஜயத்தைப் பற்றி அரசாங்கத்தின் சில அமைச்சர்களின் வெளியிட்ட கருத்துக்களை பார்க்கும் போது அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வந்த ஒரு விருந்தாளியைப் போல் அவர் நடத்தப்பட்டாரா என்பது சந்தேகமே.

பிள்ளைக்கு நாட்டில் எங்கும் சென்று வர நாம் அனுமதி வழங்கியிருக்கிறோம், ஆனால் அவர் எமக்கு கட்டளையிட முடியாது என் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருந்தார். நவநீதம்பிள்ளை விரும்பினால் தாம் அவரை நாளை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளத் தயார் என அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த வாரம் மருதானையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது கூறியிருந்தார்.

அரசாங்கம் தமது கட்சியின் கருத்தை விசாரிக்காமலேயே பிள்ளைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் முன்கூட்டியே இலங்கையைப் பற்றி தயாரிக்கப்பட்ட அறிக்கையுடனேயே வந்துள்ளார் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஐ. நா மனித உரிமை பேரவைக்கும் இடையே நடைபெறும் பனிப் போரையே எடுத்துக் காட்டுகிறது.

இந்தப் பனிப் போர் புலிகள் அமைப்புக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. புலிகள், வன்னி மக்களை கேடயமாக பாவித்ததன் விளைவாகவே இந்த நிலைமை பிரதானமாக உருவாகியது.

புலிகள் கிழக்கு மாகாணத்தில் பின் வாங்கும் போது சாதாரண மக்களையும் தம்மோடு இழுத்துச் செல்லவில்லை. எனவே படைகள் 2007 ஆம் ஆண்டு அம் மாகாணத்தை கைப்பற்றிய போது சாதாரண மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை உருவாகியதேயல்லாமல் அவர்கள் பாரியவில் கொல்லப்படும் அபாயம் ஏற்படவில்லை. ஆனால் வடக்கில் இறுதிப் போரின் போது அவர்கள் பின்வாங்கும் போது முழு வன்னியிலும் வாழ்ந்த மக்களையும் தம்மோடு வர வற்புறுத்தினர் இதன் காரணமாக புலிகள் இறுதியில் முல்லைத்தீவு மாவட்டதில் இராணுவத்தின் முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட போது மக்களும் பெருமளவில் கொல்லப்படும் அபாயம் ஏற்பட்டது.

எனவே, 2008ஆம் ஆண்டு இறுதியில் இருந்தே பலம் வாய்ந்த நாடுகளும் ஐ.நா. அதிகாரிகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் போரை நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தினர். எனினும், புலிகளின் தலைவர்கள்; அனைவரையும் ஒரே நேரத்தில் அழிக்க வராற்றில் கிடைத்த ஒரே சந்தர்ப்பத்தை வீணாக்க அரச படைகளின் முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை.

இறுதியில் புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எவ்வளவு தான் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் எந்தவொரு நாட்டிலும் அரசாங்மொன்று இது போன்றதோர் சந்தர்ப்பத்தை கைவிடப் போவதில்லை. 1987ஆம் ஆண்டு வடமாராட்சிப் போரின் போது மிரட்டியதைப் போல் இந்தியா மிரட்யிருந்தால் மட்டுமே போரின் இறுதிக் கட்டத்தின் போது அரச படைகளின் முன்னேற்றத்தை தடுத்திருக்கலாம்.

ஏனெனில இந்தியா மட்டுமே இலங்கை விடயத்தில் இராணுவ ரீதியில் தலையிட முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே சில காலங்களுக்கு முன்னர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றின் போது கூறியிருந்தார். போரின் இறுதிக் கட்டத்தின் போது இந்தியா அவ்வாறு தலையீடு செய்யவில்லை. அந் நாடும் புலிகளை அழிக்க இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்தது.

போர் முடிவடைந்து இரண்டொரு நாட்களில் முன்னைய ஏற்பாடொன்றின் படி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தார். அப்போது போரின் இறுதிக் கட்டத்தின் போது இடம்பெற்ற உயிரிழப்புக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதென அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்; கூட்டறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தனர், ஆனால் இலங்கை அரசாங்கம் அந்த இணக்கத்தின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை நடவடிக்கை எடுக்காத நிலையிலேயே ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்க மர்சூகி தருஸ்மானின் தலைமையில் குழுவொன்றை நியமித்தார். அதனை எதிர்த்துத் தான் அமைச்சிர் விமல் வீரவன்ச 'சாகும் வரை' உண்ணாவிரதம் இருந்தார்.

தருஸ்மானின் தலைமையிலான குழு இறுதிப் போரின் போது 40,000 சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறி அது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியது. (ஆனால் அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் நடத்திய குடிசன மதிப்பீட்டின் படி 2009 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8000 ஆகும். இது பிழை என்று இது வரை தமிழ் தரப்பார் ஆதாரங்களை முன்வைக்க தவறியுள்ளனர் என்பதும் முக்கிய விடயமாகும்).

ஐ.நா. செயலாளர் நாயகம் அக் குழுவை நியமித்ததன் பின்னர் தான் இலங்கை அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. முதலில் அது ஏமாற்று முயற்சி எனக் கூறிய சர்வதேச சமூகம் அவ் ஆணைக்குழுவின் அறிக்கையை பாராட்டியது. பின்னர் இலங்கை அரசாங்கம் அவ் ஆணைக்குழுவின் சிபார்சுகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இறுதிப் போரின் போது கொல்லப்பட்டடோர் தொடர்பாக உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றே நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சு செய்தது. 2012 ஜெனிவா தீர்மானம் அதை வலியுறுத்தியதன் மூலம் சர்வதேச சமூகமும் அந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இலங்கை அரசாங்கம் அத் தீர்மானத்தை எதிர்த்த போதிலும் இது இலங்கை அரசாங்கம் பெற்ற வெற்றி என்றே கூற வேண்டும்.

ஆயினும், இலங்கை அரசாங்கம் இறுதிப் போரில் கொல்லப்பட்டோர் விடயத்தில் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. எனவே தான் இவ் வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கை விடயத்தில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருந்தார். இறுதிப் போரின் போது கொல்லப்பட்டோர் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அவ் அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இந்தப் பின்னணியில் தான் ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவரது இந்த விஜயத்தின் போது அவர் திரட்டிக்கொண்ட தகவல்கள் சர்வதேச விசாரணை தொடர்பான அவரது நிலைப்பாட்டை பலப்படுத்தியிருக்குமா அல்லது தளர்த்தியிருக்குமா என்பதே இப்போது எழும் கேள்வியாகும். அவரது நிலைப்பாட்டை பலப்படுத்த தமிழ் தரப்பினர் செயற்பட்டதையும் அதனை தளர்த்தும் வகையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்ததையும் பார்க்கக் கூடியதாக இருந்தது.

அரசாங்கம்; ஐ.நா. மனித உரிமை பேரவையை பார்த்து உள்நாட்டில கர்ஜித்தாலும அதனை சமாளிக்க பல நடவடிக்கைகளை எடுத்தது. உதாரணமாக 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் மரணங்கள் தொடர்பாக கடந்த மாதம் பொலிஸ் அதிரடிப் படை வீரர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் அதே ஆண்டு மூதூரில் பிரெஞ்சு நிவாரணப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்கப்போவதாக தெரிய வருகிறது. அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளில் ஒன்றான பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சிலிருந்து பிரிக்க வேண்டும் என்பதையும் அரசாங்கம் ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

இராணுவம் மக்களுக்கு சொந்தமான காணிகளை கைப்பற்றிக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இப்போது படிப்படியாக் பல காணிகள் உரிமையாளரகளிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. நவநீதம் பிள்ளை இலங்கையில் இருக்கும் போதும் சில காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. சிலவேளை கிளிநொச்சிக்கான ஒத்திகை ரயில் பயணமும் வேண்டும் எனவே நவநீதம் பிள்ளையின் விஜயத்தின் போதே நடத்தப்பட்டு இருக்கலாம் ஏனெனில் அது மறுவாழ்வுப் பணிகளில் சேர்ந்த விடயமாகும்.

பிள்ளையை வரவேற்க அரசாங்கம் இவ்வாறு தயாராகும் போது தமிழ் தரப்பினரும் அவ் விஜயத்தை முன்னிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காணாமற் பேனோரின் உறவினர்களின் ஆர்ப்பாட்டம் அதில் முக்கியமானதாகும். அதேவேளை தற்செயலோ என்னவோ சில முக்கிய வழக்குகளும் இதே காலகட்டத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வவுனியா மேல் நீதிமன்றத்தில் 12 ஆட்கொணர்வு மனுக்கள் பிள்ளை இங்கு இருக்கும் போதே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அவற்றில் ஒன்று புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் தொடர்பானதாகும். இவ் வழக்குகள் காணாமற் போனவர்களைப் பற்றி பிள்ளைக்கு ஞாபகமூட்டுதைப் போல் அமைந்தன.

இராணுவம் காணிகளை அபகரிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கவனத்திற் கொண்டு வரப்பட்ட ஒரு விடயமாகும் அவ்வாறிருக்க பிள்ளை இலங்கையில் இருக்கும் போதே ஒரே நாளில் மூன்று முக்கிய காணி வழக்குகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் ஒன்று தமது பாரம்பரிய காணியை அரசாங்கம் சுவீகரிக்கப் போகிறது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் தாக்கல் செய்ததாகும். மற்றொன்று யாழ்ப்பாண ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இவ்விரண்டு வழக்குகளும் அவற்றை தாக்கல் செய்தவர்களின் பெயர்களினாலேயே பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மூன்றாவது வழக்கு பொதுவாக 6000 ஏக்கர் நிலத்தை இராணுவம் கைப்பற்றப் போகிறது என்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் வழக்கொன்றாகும்.

இவ்வாறு இரு தரப்பார்களிடமும் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே நவநீதம் பிள்ளை அடுத்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையை தயாரிக்கப் போகிறார். அவர் இலங்கையை விட்டு வெளியேறுமுன் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கூறியவற்றின் அடிப்படையில் அந்த அறிக்கையை மதிப்பிட முடியாது. ஏனெனில் அவர் திரட்டிய தகவல்களை பகுப்பாய்வு செய்ய அவருக்கு நேரம் தேவைப்படுகிறது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X