2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சேது சமுத்திரத்திட்டத்தை தொடாத நரேந்திரமோடி!

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு இரண்டாவது முறையாக வந்து விட்டு சென்றிருக்கிறார். முதல் முறை திருச்சியில் பேசினார். இப்போது சென்னையில் பேசியிருக்கிறார். அப்போது அவர் மட்டும் மேடையில் தோன்றினார். இப்போது அவருடன் கூட்டணி சேர விரும்பும் ம.தி.மு.க. போன்ற கட்சிகளின் தலைவர்கள் மேடையில் தோன்றினார்கள்.

இந்த முறை முழுக்க முழுக்க பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் "காங்கிரஸ் மீதான தாக்குதல்" அந்த அளவிற்கு தூள் பறந்தது.
கலர்புல்லாக நடைபெற்ற இந்த மாநாட்டில் மோடி தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி வாய் திறக்கவில்லை. மோடி என்றாலே "வளர்ச்சியின் நாயகன்" என்றுதான் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு விபூதி பூசி  விடப்பட்டுள்ளது.
 
குஜராத்தில் அவர் முதலமைச்சராக இருந்து செய்து கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மொத்த நாட்டிற்குமே கிடைக்கும் என்பதுதான் அவரை முன்னிறுத்தும் பிரச்சார நாயகர்களின் பெரும் பிரச்சாரம். வாக்காளர்களும் இந்த எதிர்பார்ப்பில்தான் இருக்கிறார்கள். ஆனால் சென்னைக்கு வந்த நரேந்திரமோடியின் பேச்சில் தமிழகத்தின் "வளர்ச்சி" திட்டங்கள் பற்றி எந்த கருத்தும் இல்லை!

முக்கியமாக தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க.விற்கும், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும், தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளுக்கும் முக்கியச் சவாலாக இருக்கப் போவது சேது சமுத்திரத்திட்டம். இத்திட்டம் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி காலத்தில் உருவம் பெற்றது. அப்போது அந்தக் கூட்டணியில் இருந்த தி.மு.க., ம.தி.மு.க. எல்லாமே இந்தத் திட்டத்திற்காக முழு மூச்சாக பாடுபட்டார்கள்.

குறிப்பாக ம.தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட அந்நாள் பிரதமர் வாஜ்பாய் சென்னை கடற்கரைக் கூட்டத்தில் "சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்படும்" என்று மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மக்கள் சமுத்திரத்தில் நின்று வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதியைக் கேட்டுப் பெற்றது நான்தான் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முழங்கினார். இன்னும் சொல்லப்போனால் சேது சமுத்திரத்திட்டம் எப்படி தி.மு.க.வின் முதல் முழக்கமோ, அதே போல் ம.தி.மு.க.வின் முதல் முழக்கமும் இதுதான்!

இப்படி முளைத்த சேது சமுத்திரத்திட்டம்  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இன்றைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோரால் மதுரையில் மாபெரும் கூட்டம் நடத்தி அந்த விழாவிலேயே துவக்கி வைக்கப்பட்டது. அப்படிப்பட்ட சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்து கிடப்பில் போடுவதற்கு காரணமாக இருந்தது இதே "வளர்ச்சி நாயகனை" பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள பா.ஜ.க.தான் என்ற கருத்து தமிழகத்தில் வேறூன்றிப் போயிருக்கிறது.

"எனக்கு பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கைகள் பற்றி கவலையில்லை. நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு செயல்படப் போகிறேன்" என்பதுதான் நரேந்திரமோடியின் பிரச்சார மகிமையாக இருக்கிறது.

அவர் அதைத்தான் இதுவரை நாட்டின் பல பாகங்களிலும் அரங்கேற்றிய பொதுக்கூட்டங்களில் உரையாக வடிவமைத்து வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட நரேந்திரமோடி சேதுசமுத்திரத்திட்டத்தில் தன் நிலைப்பாடு என்ன என்பதை சென்னை பொதுக்கூட்டத்தில் விளக்கவில்லை. இந்த ஆதங்கம் தமிழகம் வளர்ச்சியடையை வேண்டும் என்று நினைக்கும் அனைத்து தரப்பு மக்களிடமும் அரும்பியிருக்கிறது.
சேது சமுத்திரத்திட்டத்தை ரத்து செய்வாரா அல்லது அந்தத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவாரா என்பது பற்றியெல்லாம் அவர் பேசவில்லை. இங்குள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அது பற்றி கேள்வி எழுப்பவில்லை.

குறிப்பாக இத்திட்டம் வேண்டும் என்று தீவிரமாக போராடியவர்களில் வைகோவும் ஒருவர். அவரது கட்சி மேடையில் வைத்துதான் அன்றைய பிரதமர் வாஜ்பாய் உறுதிமொழியே கொடுத்தார். அவரும் கூட சேது சமுத்திரத் திட்டத்தில் பா.ஜ.க. தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. மாநாடு முடிந்த பிறகு நரேந்திரமோடியை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்தார் வைகோ. அப்போதும் கூட சேது சமுத்திரத்திட்டம் பற்றிப் பேசியதாக அவர் அறிவிக்கவில்லை. சந்தித்து விட்டு வந்த பிறகு "250க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க.வே தனியாக வெற்றி பெறும்" என்று வைகோ பேட்டி கொடுத்திருக்கிறாரே தவிர, சேது சமுத்திரம் பற்றிப் பேசினேன். மோடி அது பற்றி இந்த மாதிரி கருத்துச் சொன்னார் என்று வைகோ பேட்டி கொடுக்கவில்லை.

சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றுகிறேன் என்று மோடி சொல்லவில்லை என்றாலும், அ.தி.மு.க. கோரிக்கை வைத்துள்ளது போல் "ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்" என்பதையாவது ஆதரிக்கிறேன் என்று கூறுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அது பற்றியும் அவர் கருத்துச் சொல்லவில்லை. வளர்ச்சி நாயகன் என்று போற்றப்படும் நரேந்திரமோடி சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றுகிறேன் என்றும் சொல்லவில்லை.

அதெல்லாம் முடியாது அந்த ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பேன் என்றும் கூறவில்லை. ஒரு மாநிலத்தின் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டத்தின் பால் பிரதமர் வேட்பாளராக வரப் போகும் அவர் தெளிவான கருத்தைச் சொல்லாதது வாக்காளர்கள் மத்தியில் நிச்சயம் மாற்றுக் கருத்தை உருவாக்கும் சக்தி படைத்தவை என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

கூட்டணிக் கட்சிகள்தான் அப்படியென்றால் எதிரணியில் இருப்பவர்களும் கேள்வி எழுப்பவில்லை. ஏன் இந்த திட்டம் வேண்டும் என்று தொடர்ந்து போராடி வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட, "சேது சமுத்திரத்திட்டம் பற்றி மோடியின் நிலைப்பாடு என்ன?" என்று கேள்வி கேட்கவில்லை. தி.மு.க.விற்கு வேறு மாதிரியான கவலை. திட்டம் வேண்டும் என்றால் வேறு மாதிரி விவகாரம் வந்து விடுமோ என்ற அச்சம் தி.மு.க.விற்கு இருக்கிறது.

நாடெங்கும் "மோடி அலை" என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற நிலையில், தேர்தலுக்குப் பிறகும் டெல்லியி உருவாகும் அரசியல் சூழ்நிலையை எண்ணி சேது சமுத்திர திட்டம் விஷயத்தில் தி.மு.க.வும் அமைதி காக்கிறது. குறிப்பாக திருச்சியில் மாநில மாநாட்டை நடத்தவிருக்கின்ற சூழ்நிலையில் கூட சேது சமுத்திரத்திட்டம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, மோடியுடன் மோதி தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க மனமில்லாமல் தயங்கி நிற்கிறது.

அதே போல் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் இடது சாரிக் கட்சிகள் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற எண்ணம் உடையவர்கள். அதற்காக போராட்டங்கள் நடத்தியவர்களும் கூட. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்கள் இதனால் பெரும் வளர்ச்சி பெறும் என்பதுதான் அனைவரும் சேது சமுத்திரத்திட்டத்தை ஆதரிப்பதின் நோக்கம். பொருளாதார ரீதியாக தமிழகத்திற்கு செழிப்புத் தன்மை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் கூட "மோடி ஏன் இது பற்றி தன் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை" என்று வாய் திறந்து கேட்கவில்லை. அவர்களுக்கு "சேது சமுத்திரத்திட்டம் வேண்டாம்" என்று கூறும் அ.தி.மு.க. அணியில் இருந்து கொண்டு இப்பிரச்சினையை எழுப்பினால், கூட்டணிக்கு வேட்டு வந்து விடும் என்று கருதுகிறார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சேது சமுத்திரத்திட்டத்தை முன்னிறுத்தி மோடியிடம் கேள்வி எழுப்பவில்லை என்பது மட்டும் உண்மை!

இப்படிப் பார்த்தால் தமிழகத்தின் மிக முக்கியமான வளர்ச்சித் திட்டம் ஒன்றில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும் மவுனமாக இருக்கிறார். அவருடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளும் வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டு இருக்கின்றன. மோடியை எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகளும் "வேண்டாம் வம்பு" என்று அமைதி காக்கிறார்கள். ஆனால் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப் போகிறோம், சீரழிந்த பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறோம் என்ற கோணத்தில்தான் வாக்காளர்களிடம் இவர்கள் அனைவருமே வாக்குக் கேட்கப் போகிறார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு இடைவெளி என்பது இந்த சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வந்து விட்டது.

இது தவிர சென்னைக்கு வந்த நரேந்திரமோடி கர்நாடக மாநிலத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே நடைபெற்று வரும் காவிரிப் பிரச்சினை பற்றியோ, கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே நடக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றியோ கருத்துச் சொல்லவில்லை. இந்த திட்டங்கள் இரண்டுமே விவசாயிகளின் குறிப்பாக தமிழக விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சினை.

குஜராத்தில் விவசாயிகளுக்கு புரட்சிகரமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்து பசுமைப் புரட்சி செய்த நரேந்திரமோடி தமிழக விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி, முல்லைபெரியாறு போன்ற விஷயங்களை "டச்" பண்ணவேயில்லை என்பது கவலைக்குறியது. இப்படி மாநிலத்திற்கு மாநிலம் உள்ள சென்ஸிட்டிவான பிரச்சினைகளிலும் கருத்துச் சொல்லாமல், பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கை விஷயத்திலும் கருத்துச் சொல்லாமல் நரேந்திரமோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக வலம் வருகிறார்.

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் நேரத்தில் இந்த "கருத்துச் சொல்லாமை" அவருக்கு கஷ்டத்தை உருவாக்கும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆக மொத்தம் "வளர்ச்சி நாயகன்" என்ற பிரச்சாரம் வாக்குகளை வாரிக் குவிப்பதற்கு மட்டுமே என்ற எண்ணத்தை விதைத்து விடாமல் இருந்தால் நரேந்திரமோடிக்கு நல்ல காலம் பொறக்கும் என்று நம்பலாம்!

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X