2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

செல்வநகர் மக்களின் துயரக்கதை!

George   / 2014 ஜூலை 23 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


செல்வநகர், நாவற்கேணிக்காடு கிராம மக்களுக்கு இது ஒரு துயரம் நிறைந்த மாதமாக மாறியுள்ளது. தாம் பூர்வீகமாக பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருகின்ற நிலங்களை விட்டு  ஓகஸ்ட்  மாதம் 30 ஆம் திகதிக்குள் வெளியேறிவிட வேண்டும் என்ற அரசின் எச்சரிக்கை உத்தரவு அந்தப் பகுதி மக்களை கலங்கச் செய்துளளதுடன் தாம் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அம்மக்களிடையே குடிகொண்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் தென்கிழக்கில், சேருவில எனும் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ், தோப்புருக்கு அடுத்ததாக அமைந்துள்ளது இந்த சர்ச்சைக்குரிய செல்வநகர், நாவற்கேணிக்காடு எனும் கிராமம். இந்த ஊரை அக்கரை என்றும் நீனாக்கேணி என்றும் வௌ;வேறு பெயர்களால் அழைக்கின்றார்கள்.

சேருவில சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் முஸ்லிம்களை மாத்திரம் கொண்ட ஒரேயொரு கிராம சேவையாளர் பிரிவாக இந்த செல்வநகர் காணப்படுகின்றது. இங்கு 765 குடும்பங்களைச் சேர்ந்த 2857 முஸ்லிம்கள் வசிக்கின்றார்கள்.

இந்நிலையில், நாவற்கேணிக்காடு, கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களை ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்பாக அங்கிருந்து வெளியேறுமாறு சேருவில பிரதேச செயலாளர் பியராளலாகே ஜயரத்னவினால் காலக்கெடு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரதேச செயலாளரால் பதிவுத் தபால் மூலம், கிராம சேவையாளரின் ஊடாகவும் தனித்தனியாகவும் இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் வெளியேற்றும் உத்தரவுக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டோம் என்பதற்கான கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் அரச காணிகள் ஆட்சி மீளப் பெறுதல் சட்டத்தின் பிரகாரம் 3(1) ஆம் பிரிவின் கீழ்  குறித்த காணியை விட்டு வெளியேறும் அறிவித்தல் என்று தலைப்பிட்டு, அரச காணிகள் ஆட்சி மீளப் பெறுதல் சட்டத்தின் நோக்கங்களுக்கு அமைவாக தகுதி வாய்ந்த அதிகாரிகளில் ஒருவராகிய சேருவில பிரதேச செயலாளர் பியராளலாகே ஜயரத்ன ஆகிய நான்  நாவற்கேணிக்காடு, செல்வநகர், தோப்பூர் எனும் விலாசத்தில் வசிக்கும் உங்களை அரச காணியில் அதிகாரம் இல்லாமல் ஆட்சி செய்கின்றீர்கள் எனக் கருதுவதனால் எனக்குரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களைக் கொண்டு உங்களை 2014.08.30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பதாகவோ குறிப்பிட்ட காணியை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்று உத்தரவிடுகின்றேன்.

காலியான காணியை இந்நோக்கங்களுக்கென தகுதிவாய்ந்த அதிகாரியான என்னிடமோ அல்லது நாவற்கேணிக்காடு கிராம உத்தியோகத்தரிடமோ ஒப்படைக்கும்படி இத்தால் கேட்டுக் கொள்கின்றேன். என அந்த கடிதங்களில்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு  காணியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட கடிதம் கிராமத்திலுள்ள 20 குடியிருப்பாளர்களுக்கு பிரதேச செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இன்னும் 107 பேருக்குரிய கடிதங்கள் விலாசதாரர்களுக்கு அனுப்புவதற்காக பிரதேச செயலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீனாக்கேணியில்  127 குடும்பத்தினருக்கு காணிகள் உண்டு. இதில் 52 குடும்பத்தினர் இங்கு நிரந்தரமாக வசித்து வருகின்றனர். 39 நிரந்தர வீடுகள்,  ஏனையவை பகுதியளவில் கட்டப்பட்ட மண், தகரம் மற்றும் கிடுகுகளால் அமைக்கப்பட்ட வாழ்விடங்களாகும்.

இங்குள்ள குடியிருப்பாளர்கள் கால் ஏக்கர் (14) அல்லது அரை ஏக்கருக்கு (12) மேற்படாத பரப்புள்ள காணிகளையே கொண்டிருக்கின்றார்கள் என்று சேருவில பிரதேச சபையின் உறுப்பினரான எம்.எல்.எம். பைஸர் ஹாஜியார் தெரிவித்தார்.

இந்தக் கிராமத்திலுள்ளவர்களும் ஏனைய அயலூர்களான உப்புறல், தோப்பூர், மூதூர் போன்ற ஊர்மக்களும் பரம்பரை பரம்பரையாக பூர்வீகமாக இப்பகுதிகளிலேயே வசித்து வந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

அதேவேளை கடந்த 2006 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தினர் இந்தப் பிராந்தியத்திலிருந்து முஸ்லிம்களை முற்றாக வெளியேற்றியிருந்த போது நாவற்கேணிக்காடு முஸ்லிம்களும் தமது வாழ்விடங்களை விட்டு சில காலங்கள் அகதிகளாக வெளியேறி கந்தளாய், கிண்ணியா உட்டபட நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்ததுடன் பின்னர் மூதூர், தோப்பூர் பகுதி படையினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து நாவற்கேணிக்காட்டுப் பகுதி மக்களும் மீளக் குடியேறத் தொடங்கினர்.

இந்தக் கிராமத்தில் வாழும் மக்களுக்கு அவர்கள் குறித்த பிரதேசத்தில் காலங்காலமாக வசிப்பவர்கள் என்பதற்கான அரசாங்கத்தின் ஆதாரங்களாக வாக்காளர் பதிவு, சமூர்த்திக் கொடுப்பனவு, வீட்டு மானியம், தேசிய ஆளடையாள அட்டை, மின்சாரப் பட்டியல், நீர் விநியோகக் கொடுப்பனவுப் பட்டியல், குடும்ப அட்டை, பிறப்பத்தாட்சிப் பத்திரம், திருமணச்சான்றிதழ் என்பன இருக்கின்றதுடன் இவை அப்பகுதி அரசாங்க உத்தியோகத்தர்களான கிராம சேவகரினாலும் பிரதேச செயலாளரினாலும் வழங்கப்பட்டு வந்த அதிகாரபூர்வ அங்கீகரிப்பு ஆவணங்களாகும்.

இவற்றைவிட இந்தக் கிராமத்தில் அவர்கள் மிகக் கஷ்டப்பட்டு உருவாக்கிய பயன்தரும் மரங்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன. கோடை காலத்தில் வெகுதூரத்திலிருந்து நீர் அள்ளி வந்து ஊற்றி அவர்களால் வளர்க்கப்பட்ட மரங்கள் இவையெனவும் தாங்கள் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னராகவே இப்பகுதிக்கு வந்து காடுகளை வெட்டி இந்தப் பகுதியை குடியிருப்புக்களாக மாற்றியதாகவும் கிராமவாசிகள் கூறுகின்றனர். அத்துடன், மேலிடத்திலிருந்து  கிடைத்த உத்தரவின் பிரகாரமே குறித்த மக்களை காணியை விட்டுக் காலி செய்யும் உத்தரவைத் தான் பிறப்பித்துள்ளதாக பிரதேச செயலாளர் தங்களிடம் கூறியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவையே இவர் மேலிடம் என்று சூசகமாகக் கூறியுள்ளார் என்பது வெளிப்படையானது.

இந்த நாவற்கேணிக்காடு கிராமத்தில் நீனாக்கேணிக்கு அருகே உயர்ந்த புற்றுப் போன்ற மண் திட்டு ஒன்று உள்ளது. இந்த திட்டிலுள்ள புராதன அடையாளம் ஒன்றுதான் சூழ உள்ள ஏழை மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிக்கு ஆரம்பமாக அமைந்து விட்டதாக கிராமவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடந்த ஆண்டு (2013) இப்பகுதிக்கு விஜயம் செய்த ஒரு குழுவினர் தங்களைத் தொல்பொருள் ஆய்வு உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு அங்குள்ள மக்களின் விவரங்களைத் திரட்டியுள்ளதுடன், பின்னர் தொல்பொருள் ஆய்வின்படி இப்பகுதியில் பௌத்த வழிபாட்டிடம் இருந்தமைக்கான ஆதாரம் இருப்பதாகக் கூறி அங்கு தங்கியிருந்து தகவல்களை சேகரித்ததுடன் 6 ஏக்கர் காணியையும் தம் வசப்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் மேலும் 49 ஏக்கர் காணி இருப்பதாகக் கூறி பொதுமக்களின் பலமான எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் நில அளவை செய்து எல்லைக் கற்களை நாட்டியுள்ளனர். இதன் பின்னணியில் மொத்தம் 600 ஏக்கர் காணியை அபகரிக்கும் இரகசியத் திட்டம் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அந்த மண்மேடு அமைந்துள்ள இடத்தைச் சுற்றி இப்பொழுது பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதுடன் அந்த இடத்தில் இரண்டு பௌத்த பிக்குகள் நிரந்தரமாகத் தங்கியுள்ள நிலையில், இரவு நேரங்களில் அவ்வப்போது பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்த இடத்திற்கு வந்து காவல் கடமையில் ஈடுபடுவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சின்ன விகாரை என்றழைக்கப்பட்டு தற்போது பெயர் மாற்றம் பெற்றுள்ள வெல்கம் விகாரையின் காணியை விஸ்தரிப்பதற்கான திட்டத்தின் அடிப்படையிலேயே தற்போது முஸ்லிம்கள் குடியிருக்கும் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக இந்த மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த வழிபாட்டு தலத்தை சூழ அதனை வணங்க வரும் மக்கள்  எவருமிலலாமல்  கட்டியெழுப்ப முடியாது என்பதால், குறிப்பிட்ட மண்மேட்டினை புராதன விகாரை அமைந்த பகுதியாகச் சித்தரித்து அதனைச் சூழ பெரும்பான்மையினரைக் குடியமர்த்தும் மறைமுக நடவடிக்கையே இது என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறு தமது பூர்வீக நிலங்களை கையகப்படுத்தப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கிராம் மக்கள் தமது உணர்வுகளை பகிர்ந்த கொண்டனர்.

எங்கே போவேன்?


ஏ.ஆர். குப்பம்மா (வயது 62)

இந்தப் பகுதி அடர்ந்த காடுகளாய் இருந்தபோது நாம் இங்கு வந்து சேர்ந்தோம். எனக்கு இதிலே அரை ஏக்கர் காணி உள்ளது. 60 தென்னை மரங்கள், 5 மாமரங்கள், 3 பலா மரங்கள்  உண்டு. எலலா மரங்களும் காய்க்கின்றன. நிறைய வாழை மரங்கள் இருந்தன. அவற்றை காட்டு யானைகள் அழித்து விட்டன. இந்த வீட்டை மூன்று முறை காட்டு யானைகள் உடைத்திருக்கின்றன. ஒரேயொரு தடவை வீடழிவுக்கு சேருவில பிரதேச செயலகத்தினால் 10,000 ரூபா பணம் தந்தார்கள். இப்படிப்பட்ட பயங்கரத்துக்குள்ளேதான் நானும் மன நோயாளியான எனது மகனும் சீவித்து வருகின்றNhம். நானோர் விதவை. இந்த காய்கனி மரங்கள் மூலம்தான் எனது ஜீவனோபாயம் கழிகிறது.

என் கையால் நீர் அள்ளி இறைத்துத்தான் இந்த மரங்களை உருவாக்கினேன். இந்த இடத்தைத் தவிர எனக்கு போய்க் குந்திக் கொள்ள வேறு ஓரிடம் கிடையாது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதிக்குள் இந்த இடத்தை விட்டு வெளியேறி விடட்டுமாம் என்று இப்பொழுது உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பியிருக்கின்றார்கள். நான் எங்கே போவேன்? அதோ பாருங்கள் முன்னொரு காலத்தில் அந்த மண் புற்றில் விகாரை இருந்ததற்கான அடையாளம் இருப்பதாகக் கூறி இங்கே சிங்கள மக்களைக் குடியமர்த்துவதற்குத்தான் எங்களை வெளியேறச் சொல்கின்றார்கள்.

சொந்தப் பூமியில் வாழ உரிமையில்லையா?...




சேகுத்தம்பி ஹயாத்து மூமின் (வயது 64)

நான் சுமார் 45 வருடங்களாக இந்தப் பகுதிக்கு வந்து காடு வெட்டி, பயிர் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றேன். அந்த மண் புற்றுப் பகுதியைச் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காக எங்களை இங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். தொல் பொருளுக்குரிய இடம் இது என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவர்களது மண்புற்றைச் சூழ ஏராளமான வெற்றுக் காணி பரந்து கிடக்கின்றது.

அவர்கள் விகாரை கட்டுவதாக இருந்தால் அந்தக் காணிகள் அவர்களுக்குப் போதும். ஆனால் இந்த ஊரையே சிங்களக் குடியேற்றமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களது உள் நோக்கம். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் எங்களை விரட்டி விட்டு மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல் போன்ற பிரதேச சிங்கள மக்களை இங்கே கொண்டு வந்து குடியேற்றப் போகின்றார்கள். அப்படிச் செய்தால் நாங்கள் எங்கே போவது? அருகிலுள்ள கடலிலா போய் விழச் சொல்கின்றார்கள்? இங்கிருக்கின்ற சாதுவும் அரசாங்க அதிகாரிகளும்தான் இந்த அநியாயத்தைச் செய்கின்றார்கள். அப்படியென்றால் பரம்பரை பரம்பரையாக இங்கே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு சொந்தப் புமியில் வாழ உரிமையில்லையா?

அச்சத்தில் உறைந்து போய் உள்ளோம்...


ரோன் மக்பிரா (வயது 43)

நாங்கள் எல்லோரும் பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் இந்தக் காணியில்தான். எனது தந்தை 85 வயதில் காலமானார் அவர் தனது 15 வது வயதில் இங்கே வந்து காடு வெட்டி வீடு கட்டி பயிர் செய்து வாழ்ந்ததாகக் கூறியிருக்கின்றார்.

இவ்வளவு காலத்திற்கும் ஒரு சிங்கள மக்களின் நடமாட்டமோ பன்சலையோ இங்கு இருந்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை. இப்பொழுது ஓரிரு மாதங்களாகத்தான் திடீரென வந்து விகாரை இருந்ததற்கான தடயம் இருப்பதாகவும் அதனைச் சூழ உள்ளவர்கள் வெளியேறவேண்டும் என்றும் கூறுகின்றார்கள். எனது 60 பேர்ச்சஸ் காணிக்கு அரசாங்கத்தால் தரப்பட்ட அனுமதிப்பத்திரம் உண்டு. இங்கிருந்து நாங்கள் குடிபெயர்ந்து எங்கே போய் வாழ்வது? இந்த வெளியேற்றப் பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து எதையுமே நிம்மதியாக செய்ய முடியாமல் இருக்கின்றது.

எப்பொழுது என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் உறைந்து போய் உள்ளார்கள். வீட்டை விட்டு வெளியே செல்லவே பயங்கரமாக இருக்கின்றது. பிள்ளைகள் பயப்படுகின்றார்கள். காவியுடை மதகுருமார், பொலிஸார் படையினர் மற்றும் சிங்கள மொழிபேசுவோரைக் கண்டால் மனம் பயத்தால் நடுநடுங்குகிறது. நாட்டில் ஏனைய பாகங்களில் நடந்த வன்முறைகளைக் கேள்விப்பட்டு நாங்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளோம்.

மனம் வெதும்பி அழுகின்றோம்...



எஸ். சனூஜா - மாணவி (வயது 14)

நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஊருக்குள் பௌத்த மத வழிபாட்டுத் தலம் இருந்ததாகக் கூறி எங்களை வெளியேறச் சொல்லியிருக்கின்றார்கள். இதனால் நாங்கள் கடும் மனத்தாக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றறோம். எப்பொழுது எம்மை வெளியேற்றுவார்கள் என்கின்ற பயம்தான் அது.

நான் மட்டுமலல என்னோடு படிக்கின்ற இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மற்றப் பிள்ளைகளும் அப்படித்தான் உணர்கின்றனர். கருத்தூன்றிப் படிப்பதற்கும், சாப்பிடுவதற்கும், நிம்மதியாகத் தூங்குவதற்கும் கூட முடியாமல் எந்நேரமும் வெளியேற்றப்படலாம் என்கின்ற பயம் மட்டும்தான் உள்ளது. சில நேரங்களில் நாம் வாழ்ந்த இடத்தை விட்டு எங்கே போவது என்ற துயரம் தாங்காமல் மனம் வெதும்பி அழுகின்றோம்.

 நிம்மதியாகத் தூங்குவதே இல்லை...



மர்சூக் மௌலவி

நான் இந்தக் கிராமத்தில் கடந்த 35 வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். எனக்கு தெரிந்த  வரையில் இங்கு ஒரு பௌத்த குடும்பம் கூட வாழ்ந்ததற்கான எந்த வித ஆதாரங்களும் இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி இங்கே பௌத்த வழிபாட்டுத் தலம் இருந்திருக்க முடியும்? இங்கு வந்து காடு வெட்டி குடியேறி காலங்காலமாக வாழ்ந்து வரும் ஏழைகள் வீட்டுத் தோட்டம், சேனைப்பயிர்களைச் செய்து தமது ஜீவனோபாயத்தைக் கழித்து வந்துள்ளார்கள். ஆனால், இப்பொழுது இந்தக் கிராமவாசிகளை இங்கிருந்து வெளியேற்றும் படலம் ஆரம்பித்துள்ளதால் எலலோரும் ஒரு வித பீதியில் உறைந்து போயுள்ளார்கள்.

ஒரு வருடத்திற்கு முன்னர் எங்களுக்கு காணிக்குரிய உறுதிபத்திரம்  தருவதாகக் கூறி நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் வந்து நிலத்தை அளந்தார்கள். பின்னர் 2013.12.06 ஆம் திகதி மீண்டும் அவர்களே வந்து அளக்க முற்பட்டபோது மக்கள் தடுத்தார்கள். அதன்போது பிரதேச செயலாளர் உடனே இங்கு வந்தார்.

உங்களுக்குக் காணியும் உறுதிபத்திரம் தருவதற்காகவே நாம் இவ்வாறு காணிகளை அளக்கின்றNhம். எனவே அதற்குத் தடை ஏற்படுத்த வேண்டாம் என்று மக்களை சமாதானப்படுத்தினார். அதனை மக்களும் நம்பினர்.  ஆனால் அவர் வாக்குறுதி தந்ததற்கு எதிர்மாறாக எந்தக் காணிகள் அளக்கப்பட்டதோ அந்தக் காணியில் வசிப்பவர்களை ஓகஸ்ட் மாதம் 30 ஆந் திகதியுடன் காலி செய்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இதனால் மக்கள் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சிறுவர்கள் கூடப் பயந்த நிலையில் இருக்கிறார்கள், படையினர், பொலிஸார், பௌத்த பிக்குகள், மற்றும் சிங்களம் பேசுவோரின் நடமாட்டங்களைக் கண்டால் அச்சத்துடன் ஓடி ஒழிந்து கொள்கின்றார்கள்.

இரவு வேளையில் பெரும்பாலானோர் நிம்மதியாகத் தூங்குவதே இல்லை. தமது வீடுகளை நாசம் செய்து விடுவார்களோ, இரவோடிரவாக எம்மை விரட்டி விடுவார்களோ என்ற அச்சம்தான் இதற்குக் காரணம். அன்றாடம் கூலித் தொழிலுக்குச் செல்பவர்கள் கூட வெளியில் எங்கும் செல்லாமல் இந்தப் பிரச்சினை பற்றியே கவலையோடு காலம் கழிக்கின்றார்கள்.

மாணவர்கள் சிறு பிள்ளைகள் என்று எல்லோரையும் இந்தப் பிரச்சினை பாதித்துள்ளது. எங்களுக்கு ஒரு பக்கம் கடலும்  மற்றப்பக்கம் நீனாக்கேணியும் அடுத்த பக்கத்தில் சேருவிலயும் தான் எல்லைகளாக உள்ளன. சேருவில மாற்று இனங்கள் கலப்பில்லாமல் ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அம்பலாங்கொட, ஹிங்குறாங்கொட போன்ற தென்னிலங்கைக் கரையோரப் பகுதிகளிலிருந்து சிங்கள மக்களைக் கொண்டு வந்து துரித குடியேற்றம் செய்கின்றார்கள். அவர்களுக்காக மூன்று ஏக்கர் வயல் காணியும், அரை ஏக்கர் குடியிருப்புக் காணியும் வழங்கி வீடும் அமைத்துக் கொடுக்கின்றனர்.

நிம்மதியாக வாழவிடுங்கள்....



முஹம்மத் ஹனீபா செய்யதஹமது (வயது 64)


நான் அறிந்த வரையில் 90 அல்லது 95 வருட கால வரலாறு  இந்தக் கிராமத்திற்கு உண்டு. எனது தகப்பனார், பாட்டனார் எல்லோரும் இந்த நிலத்தை ஆண்டிருக்கின்றார்கள். எனது தகப்பன் இதிலுள்ள மண்மேட்டைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார். இது யாருடைய வழிபாட்டுத் தலம் எனத் தெரியாது ஆனால் ஒல்லாந்தர் காலத்திலிருந்து அவர்களது ஆட்சியின் கீழ் இது இருந்திருக்கலாம் என்று அவர் கூற நான் கேட்டிருக்கின்றேன்.

புலிகள் அமைப்பினர் இந்த மண்மேட்டை இடித்துத் தள்ளி சமப்படுத்த முயற்சித்த போது அதனை ஊர் மக்கள் தடுத்தார்கள். இது புராதன மண்புற்று இதனை நாம் பாதுகாக்க வேண்டும் என்று கூறினோம். அதனை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இப்பொழுது நாம் பாதுகாத்த மண்மேடு எமக்கே வினையாகிவிட்டது. அதனை வைத்தே எங்களை இங்கிருந்து அகற்ற முயற்சிக்கின்றார்கள்.

அது பௌத்த வழிபாட்டுத் தலமென்றிருந்தால் அதனை அவர்கள் வழிபட்டுவிட்டுப் போகட்டும். அந்த வழிபாட்டுத்தலத்தை விஸ்தரிப்பதற்கு அதனைச் சூழவுள்ள 25 ஏக்கருக்கு மேற்பட்ட காணி போதுமானது. ஆனால், அதற்காக பூர்வீகமாக 90 அலலது 95 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் வாழ்ந்து வரும் எங்களை விரட்ட நினைப்பது அக்கிரமம். தங்களது வழிபாட்டு இடம் என்று அவர்கள் கூறுமிடத்தை துப்புரவு செய்து கொடுக்க எங்கள் கிராமத்தவர்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றார்கள். நாங்கள் ஒரு போதும் இடைஞ்சலாகவோ இனவெறுப்புடனோ நடந்து கொள்ள மாட்டோம். எங்களை எமது பூர்வீக இடங்களில் நிம்மதியாக வாழவிடுங்கள்.

இவ்வாறு, கிழக்கு மாகாண முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே காணி அபகரிப்புக்கள் இடம்பெறுகின்றன. ஏற்கெனவே  குச்சவெளி, புல்மோட்டை, சின்னம்பிள்ளைச்சேனைப் பகுதிகளிலும் முஸ்லிம்களின் காணிகள் பெரும்பான்மையினத்தவராலும் இராணுவம் மற்றும் கடற்படையினராலும் அபகரிக்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பின் மற்றுமொரு அங்கம் சேருவில பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செல்வநகர் நாவற்கேணிக்காடு கிராம சேவையாளர் பிரிவில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X