2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கூட்டமைப்பு சாதித்தது என்ன?

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 31 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

இலங்கை மீது இந்தியா தனது நெருக்குதல்களை மேற்கொள்ளக்கூடிய அல்லது நெருக்குதல் மேற்கொள்ள வேண்டிய வகையிலான தந்திரோபாயமொன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் கையாண்டது.

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பி குடியமர்வதற்காக, இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள அவர்களது காணிகளை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திடம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தமையே அந்த தந்திரோபாயமாகும். 

ஆறு பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று கடந்த 23ஆம் திகதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளின் பிரச்சினை, கடந்த காலத்தில் இலங்கையின் வரலாற்றையும் ஓரளவுக்கு மாற்றி அமைத்த ஒன்றாகும். எனவே தான் இந்தப் பிரச்சினையை மிக முக்கியமானதாக கருத வேண்டியுள்ளது. வேறு விதமாக கூறுவதாக இருந்தால், இலங்கை அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்தற்காக இந்தியா ஒரு காலத்தில் அந்நாட்டில் வாழும் இலங்கை அகதிகளின் பிரச்சினையை பாவித்தது என்றே கூறலாம்.

இலங்கையின் இனப் பிரச்சினை காரணமாகவும் அதன் விளைவாக ஏற்பட்ட ஆயுதப் போராட்டம் காரணமாகவும் தமிழகத்திற்கு சென்றுள்ள இலங்கை அகதிகள், தமக்கு ஒரு பழுவாக இருப்பதாக காரணங் காட்டியே 1980களில் இந்திய பிரதமர்களான இந்திரா காந்தியும் அவரது மகனான ராஜீவ் காந்தியும் இலங்கை மீது பல்வேறுபட்ட நெருக்குதல்களை கொடுத்தனர்.

இலங்கை அகதிகளின் பிரச்சினையை காரணமாக காட்டிக் காட்டி, பல்வேறு விதமாக இலங்கை அரசாங்கத்திற்கு தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்த இந்திய அரசாங்கம், இறுதியில் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் அரசியலமைப்பையும் தமக்கு வேண்டியவாறு மாற்றிக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இலங்கை விடயத்தில் தலையிட இந்தியா பெற்றுக்கொண்ட உரிமையின் காரணமாகவே இன்றும் மாகாண சபைகள் விடயத்தில் தமக்கு வேண்டிய முடிவை எடுக்க முடியாமல் இலங்கை அரசாங்கம் திணறுகிறது.

தமிழ் நாட்டில் 115 முகாம்களில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான இலங்கை அகதிகள் வாழ்வதாக ஹிந்து பத்திரிகை கூறுகிறது. தாம் இந்த அகதிகளின் பிரச்சினையை இந்திய பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்ததாக இம்முறை இந்திய விஜயத்தை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஹிந்து பத்திரிகையிடம் கூறியிருந்தார்.

போரின் பின்னர், வட மாகாணத்தின் சனத்தொகை குறிப்பிட்டளவில் குறைந்துள்ளதாகவும் எனவே, இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது மிகவும் அவசியாமாக இருப்பதாகவும் சேனாதிராஜா கூறியிருக்கிறார்.

பாதுகாப்புப் படையினர் வடக்கில் காணிகளை கைப்பற்றிக்கொண்டு இருப்பதாகவும் பெருமளவில் இராணுவமயமாக்கல் இடம்பெற்று வருவதாகவும் அவற்றின் விளைவாக பெண்கள் பாதுகாப்பற்ற நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும் இந்த விடயங்களை தாம் இந்திய பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும் அவர் ஹிந்து பத்திரிகையிடம் கூறியிருந்தார்.

அதிகார பரவலாக்கல் தொடர்பான விடயங்களில் இலங்கையை இந்தியா ஓரளவுக்கு நெருக்குவது உண்மை தான். ஆயினும், வடக்கில் படைகளின் செயற்பாடுகளை குறைக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை இந்தியா அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. அதனாலோ என்னவோ இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பான பிரச்சினையை வட மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களோடு முடிச்சுப் போட்டு அதன் மூலம் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளை இந்திய நலன்களோடு முடிச்சு போடுவதற்கு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு தந்திரமாக நடந்துகொண்டுள்ளது போலும்.

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் நலன் விடயத்தில் செயற்படும் ஒரு அமைப்பு தான் ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பு. எஸ்சி.சந்திரஹாசன் அதில் முக்கிய பங்கு வகிக்கிறார். இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு இலங்கை - இந்திய அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட வேண்டும் என அவரும் ஹிந்து பத்திரிகைக்கு கடந்த வாரம் கூறியிருந்தார்.

தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய பிரதமர் மோடியை சந்தித்த முதலாவது முறை இதுவாகும். இந்திய அரசாங்கம், இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைப் பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை என்றும் அவ்வரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்க பெரிதாக ஏதும் அவசியம் இல்லை என்பதைப் போன்று, இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தவிசாளர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

ஆனால், இந்திய பிரதமர், முன்னைய சந்திப்புகளுக்கு வழங்கப்படாததொரு முக்கியத்துவத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு வழங்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு இந்திய பிரதமர் 30 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியிருந்த போதிலும் பேச்சுவார்த்தை ஒரு மணித்தியாளத்திற்கும் மேல் நீடித்ததாக ஹிந்து பத்திரிகை கூறியது.

அதேபோல் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னை சந்திக்க விரும்புவாரா என மோடி வினவியதாகவும் அதற்கு பதிலளித்துள்ள கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், விக்னேஸ்வரனை சந்தித்தால் நடைமுறை பிரச்சினைகளை மேலும் விவரமாக தெரிந்துகொள்ளலாம் என கூறியதாகவும் இதனையடுத்து, விக்னேஸ்வரனோடு சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு தனது அதிகாரிகளுக்கு இந்திய பிரதமர் உத்தரவிட்டதாகவும் இந்திய ஊடகங்கள் கூறின.

தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்திப்பதில் இந்திய தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை என சுவாமி வெளியிட்டிருந்த கருத்துக்கு இந்த நிலைமை முற்றிலும் முரணானதாகும்.

அது ஒருபுறமிருக்க விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராகவன்றி, வட மாகாண முதலமைச்சர் என்ற முறையில் இந்திய தலைவர்களை சந்தித்தால் அது சட்டப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். காரணம்  வெளிநாட்டலுவல்கள், மாகாண சபைகளின் பொறுப்பிலன்றி மத்திய அரசாங்கத்தின் கீழேயே வருகிறது. எனவே, இந்திய பிரதமரை முதலமைச்சர் சந்தித்தால் அவர் சட்ட விரோதமாக வெளிநாட்டுத் தொடர்புகளை வைத்திருந்தார் என்று அரசாங்கம் குற்றஞ்சாட்டலாம்.

இதற்கு முன்னர் இலங்கைத் தமிழ் தலைவர்கள், இந்திய தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்களை விட இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய பிரதமருடன் நடத்திய சந்திப்பு முக்கியானது என தமிழகத்தில் வெளியிடப்படும் தினமணி பத்திரிகை கூறியிருந்தது.
இம்முறை பேச்சுவார்த்தையின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங், பிரதமர் அலுவலகத்தின் பிரதம செயலாளர் நிரபேந்திர மிஸ்ரா மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் ஆகியோர் கலந்து கொண்டமை சிறப்பம்சங்களாகும் என்றும் தினமணி கூறியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த இந்திய விஜயத்தைப் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது அதிருப்தியை தெரிவித்து சம்பந்தனுக்கு செய்தியொன்றை அனுப்பியதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தமது பிரதான அரசியல் பத்தியில் குறிப்பிட்டு இருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் கூட்டமைப்பு தமது இந்திய விஜயத்தைப் பற்றி அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அறிவிக்காததையிட்டு ஜனாதிபதி கோபங்கொண்டுள்ளதாகவும் அந்த பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இலங்கைத் தமிழ் தலைவர்கள் இதற்கு முன்னரும் இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டுத் தலைவர்களை சந்தித்துள்ள போதிலும், ஒருபோதும் அவர்கள் அதைப்பற்றி அரசாங்கத்திற்கு அறிவித்துவிட்டுச் செல்லவில்லை. இந்த அரசாங்கம் உட்பட எந்தவொரு அரசாங்கமும் அதனை இதற்கு முன்னர் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய தலைவர்களை சந்திப்பதாக இருந்தால் அவர்கள் அதைப் பற்றி இலங்கை அரசாங்கத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என கடந்த வாரம் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். அதனை ஏற்று தான் ஒருபோதும் இல்லாமல் ஜனாதிபதியும் கூட்டமைப்பினர் தமது இந்திய விஜயத்தைப் பற்றி அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும் என நினைக்கிறார் போலும்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜுடன் நடத்திய பேச்சுவாத்தையின் போது 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு புறம்பாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கும் அம்மாகாணங்களில் கலாசார மற்றும் மொழித் தனித்துவத்தை மாற்றி அமைப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் நிர்வாக ரீதியாக இணைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டமைப்பின் தலைவர்கள் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் கூறின.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தவிர்ந்த அவர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பற்றி இந்திய தலைவர்கள் முக்கியமாக ஏதாவது கூறியதாகவோ குறைந்த பட்சம் அக்கருத்துக்களுக்கு இணக்கம் தெரிவித்ததாகவோ தகவல்கள் இல்லை.

ஆனால், வழமைபோல் அவர்கள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். அதிலும் இம்முறை ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜோ அல்லது மோடியோ கூறியதாக தகவல் இல்லை.

இலங்கை தொடர்பாக தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சிறப்புத் தூதுவர்களை நியமித்திருப்பதைப் போல் இந்தியாவும் இலங்கை விடயத்தில் சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்ததாக மற்றொரு செய்தி கூறியது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இந்திய விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு அக்கூட்;டமைப்பு இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகக் கூறப்படும் செய்தியை இந்திய அரசாங்கம் எவ்வாறு விளங்கிக்கொண்டு இருக்கும் என்பதும் முக்கியமான வியமாகும். ஏனெனில் கூட்டமைப்பினர் இந்தியாவுக்குச் செல்வதை முன்னிட்டு அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக எவராவது கூறுவதாக இருந்தால் அதன் அர்த்தம் கூட்டமைப்பு இந்தியாவுடன் சேர்ந்து இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கிறது என்பதே. இது இந்தியாவுக்கு எதிரான பாரதூரமானதோர் குற்றச்சாட்டாகும்.

ஆனால், 13அவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் செல்லல், மாகாண இணைப்பு மற்றும் இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக இந்திய தலைவர்கள் காட்டிய அக்கறையின்மையை கவனிக்கும் போது 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்ற விடயம் தவிர்ந்த எந்தவொரு விடயத்திலும் இலங்கை அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்க இந்திய அரசாங்கம் நினைக்கவில்லை என்பதே உண்மையாகும். அவ்வாறிருக்க இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கிறது என்று எவ்வகையிலும் கூற முடியாது.

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்ற விடயத்தை எடுத்துக் கொண்டாலும், அது இந்திய அரசாங்கத்தினால் கடந்த இரண்டு தசாப்தங்களாக வலியுறுத்தி வரும் ஒரு விடயமாகும். அதன் மூலம் இலங்கை அரசியலமைப்பில் உள்ளதன் பிரகாரம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதையே இந்தியா கூறி வருகிறதேயல்லாமல் வேறொன்றையும் வலியுறுத்தவில்லை. இதனை இலங்கையில் சிங்கள தலைவரகளால் நடத்தப்படும் அரசியல் கட்சிகளும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.

மாகாண சபைகளுக்கு இந்த அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று இது போன்ற சந்திப்புக்களின் போது வலியுறுத்தி வந்ததே தவிர அந்த விடயத்திலும் இந்தியா - இலங்கை அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கவில்லை. ஆனால் மாகாண சபைகளுக்கு ஏற்கெனவே இருக்கும் அதிகாரங்களை குறைக்க இலங்கை அரசாங்கம் முயற்சித்த நேரங்களிலென்றால் இலங்கை அரசாங்கத்தை பின்வாங்கச் செய்ய இந்திய அரசாங்கம் ஏதோ செய்தது போல் தெரிந்தது.

எனவே, இந்தியாவை ஆத்திரமூட்டாமல் இருந்தால் மேலும் பல வருடங்களுக்கு அதிகார பரவலாக்கல் என்ற விடயத்தில் தற்போதைய நிலைக்கு அப்பால் செல்ல வேண்டிய நிலைமை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படாது. இலங்கை ஜனாதிபதியைப் போலவே இந்திய பிரதமர் மோடியும் அரசியல் சித்தாந்தங்களை மதியாது நடைமுறை நிலைமைகளை மட்டுமே பார்த்து செயற்படுபவர் என்று கூறப்படுகிறது. எனவே இந்திய அரசாங்கத்தை ஆத்திரமூட்டாமல் இருப்பதே இலங்கை அரசாங்கத்திற்கு நல்லது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X