2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நியமனப் பிரச்சினை!

George   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் அவ்வப்போது கவர்னர் நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த விதத்தில் இப்போது தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்தை மாநில கவர்னராக நியமிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சதாசிவம், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகி இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 9 மாதங்கள் பணியாற்றியவர். அவர் ஓய்வு பெறும் போதே, 'எந்தப் பதவியையும் ஏற்க நான் தயார்' என்று பேட்டி கொடுத்தார்.

பொதுவாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்கள் இப்படி பேட்டி கொடுப்பதை தவிர்ப்பார்கள்.

ஆனால் இவர், முன்னாள் இந்தியப்பிரதமர்  ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை குறித்த வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுக்க அதுவே சர்ச்சையானது. ஆகவே 'பேட்டி' கொடுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்று பத்திரிக்கையாளர்களின் பாராட்டுதலைப் பெற்றவர் இவர். அந்த அளவிற்கு எதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு சொந்தக்காரர்.

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவரை இப்போது தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலக் கவர்னராக நியமிக்க மத்திய அரசு விரும்புகிறது. அதற்கான பரிந்துரையும் குடியரசுத் தலைவருக்குச் சென்று விட்டதாகத் தகவல்கள் சிறகடித்துப் பறக்கின்றன.

ஆனால் இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குடியரசுத் தலைவருக்கே புகார் செய்து 'சதாசிவத்திற்கு கவர்னர் பதவி வழங்கக் கூடாது' என்று கூறியிருக்கிறார். மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.ஹரே போன்றவர்கள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியே கடும் எதிர்ப்புத் தெரிவித்து, 'சதாசிவத்தை கவர்னராக நியமிக்க விரும்புவதன் பின்னணியில் எதிர்காலத்தில் நீதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி அரசு விரும்புகிறதா? என்ன காரணத்திற்காக அவருக்கு கவர்னர் பதவி, அதாவது ஒரு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவருக்கு கொடுக்கப்படுகிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்' என்று கருத்துக் கூறியிருக்கிறது.

மத்தியில் ஆளுங்கட்சியாக வரும் கட்சியில் உள்ள சீனியர்களின் சொற்க பூமியாக 'ராஜ்பவன்களை' மாற்றும் வழக்கம் இருந்து வருகிறது. கட்சிக்குள் தொல்லை பண்ணுகிறவர்களை கவர்னர்களாக நியமித்து ராஜ் பவனுக்கு அனுப்பி விடுவார்கள்.

அரசியல் மயமான கவர்னர் நியமனத்திற்கு 1983இல் நியமிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் சில வழி முறைகளை வகுத்துக் கொடுத்தது. இந்த கமிஷனுக்கு தலைமை வகித்த ஆர்.எஸ். சர்க்காரியா உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர்தான்.

1987-88 ஆம் வருடங்களில் அவர் அளித்த அறிக்கையில் யாரை கவர்னராக நியமிக்க வேண்டும், எப்படி அவரை தேர்வு செய்ய வேண்டும் என்றெல்லாம் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.

கவர்னராக நியமிக்கப்படுவர் அறிவார்ந்த நபராக (Eminent Person) இருக்க வேண்டும்.  எந்த மாநிலத்திற்கு நியமிக்கப்படுகிறாரோ அந்த மாநிலத்தில் உள்ளவராக இருக்கக் கூடாது. கவர்னராக நியமிக்கப்படுவதற்கு முன்பு குறைந்தபட்சம் சில வருடங்களாவது அரசியலில் இல்லாதவராக இருக்க வேண்டும்.

கவர்னராக நியமிக்கப்படும் உள்ளூர் அரசியலில் தொடர்பு உள்ளவராக இருக்கக் கூடாது. இதெல்லாம் ' எப்படிப்பட்டவரை கவர்னராக நியமிக்க வேண்டும்' என்று சுட்டிக்காட்டியுள்ள பரிந்துரைகள்.

பிறகு எப்படி நியமிக்க வேண்டும்?

அது பற்றிக் கூறியுள்ள சர்க்காரியா, 'துணை குடியரசு தலைவர், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர் ஆகிய மூவரும் ஆலோசனை நடத்தி, கவர்னரை தேர்வு செய்ய வேண்டும்' என்றும் வரையறுத்தார்.

அது மட்டுமின்றி, கவர்னரை அவர் பதவிக்குறிய ஐந்தாண்டு காலத்திற்குள் நீக்கக் கூடாது. அப்படி நீக்கினால், அவருக்கு முன் கூட்டியே விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி கவர்னர் நீக்கம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றெல்லாம் பரிந்துரை செய்திருக்கிறது.

இதன் பிறகு அமைக்கப்பட்ட 'அரசியல் சட்ட மறுசீராய்வுக் குழு' உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.பி. ஜீவன்ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை ஏற்றுக் கொண்டது.

அதில் குறிப்பாக மாநில கவர்னரை நியமிக்கும் போது அம்மாநில முதலமைச்சரை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், 'பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற சபாநாயகர், மாநில முதல்வர்' ஆகியோர் தலைமையில் அதற்காக ஒரு கமிட்டி அமைத்து அந்த கமிட்டிதான் கவர்னரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

அது மட்டுமின்றி கவர்னரின் பதவிக்காலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அவர் தவறு செய்தால் குடியரசுத் தலைவரை நீக்குவதற்கு உள்ள 'இம்பீச்மென்ட்' முறையை கவர்னருக்கும் கொண்டு வர வேண்டும்.

அதன்படி மாநில சட்டமன்றத்தில் கவர்னரை இம்பீச்மென்ட் முறையின் படி நீக்க வழி முறைகள் உருவாக்க வேண்டும் என்றும் கூறியது. இந்த 'கன்ஸல்ட்டேஷன்' பேப்பர் அடிப்படையில்தான் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா கமிஷனும் பரிந்துரை செய்தது.

மாநில கவர்னர் என்பவர் 'மத்திய அரசின் ஏஜெண்ட்' என்றுதான் பொதுவாக அழைக்கப்படுகிறார். அவருக்கு முதலமைச்சர் நியமனம், நீக்கம், மாநில சட்டமன்றத்தை கலைப்பது போன்ற விஷயங்களில் பிரத்யேக அதிகாரங்கள் இருந்தாலும், அவை பெரும்பாலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளால் வரைமுறைப்படுத்தப்பட்டு விட்டன.

உதாரணமாக தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவரை மக்கள் தீர்ப்பு என்பதை காரணம் காட்டி அவரை முதல்வராக நியமிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது. அதே போல் மாநில அரசைக் கலைக்கும் விஷயத்திலும் 'எஸ்.ஆர்.பொம்மை' வழக்கில் பல வழிகாட்டுதல்களைச் சொல்லி கவர்னரின் அதிகாரத்தை ஒரு வரம்பிற்குள் கொண்டு வந்து விட்டது.

இப்படிப்பட்ட பதவிக்குத்தான் இப்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சதாசிவத்தின் பெயர் முன்னிறுத்தப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சில முக்கியக் காரணங்கள் இருக்கிறது.  குறிப்பாக இந்திய அரசியல் சட்டப் பிரிவு 60 இன்படி குடியரசுத் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

அப்படிப்பட்ட பதவியில் இருப்பவருக்கு இப்போது கவர்னர் பதவி பரிந்துரைக்கப்படுகிறது. இதில் சிக்கல் என்னவென்றால், தனக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தவரை தன்னுடைய ஏஜெண்டாகவே நியமித்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இருக்கிறார்.

கவர்னர் நியமனத்தைப் பொறுத்தமட்டில் மத்திய அரசின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் 'அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான்' குடியரசுத் தலைவர் செயல்படுகிறார்.

அப்படி ஒரு வேளை கேரள மாநில கவர்னராக பி.சதாசிவம் நியமிக்கப்பட்டால், அவருக்கு யார் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது? அதிலும் வியப்புக்கள் நிறைந்த விஷயம் இருக்கிறது. இந்திய அரசியல் சட்டப் பிரிவு 159இன்படி மாநில கவர்னருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு அந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இருக்கிறது.

இதனடிப்படையில் பார்த்தால் தனக்கு முதலாளியாக இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, அவரின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் தர்மசங்கடம் உருவாகிறது.

ஆக மொத்தம் பி.சதாசிவம் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டால், அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பதவிப்பிரமாண வரைமுறைகள் பெரும் தர்மசங்கடத்திற்குள்ளாகும்.

கவர்னர் பதவி 'அரசியல்மயமாகக் கூடாது' என்ற கோஷம் போய் இப்போது 'ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு' மாநில கவர்னர் பதவியா என்ற முழக்கம் கேட்கிறது.

நாடு முழுவதும் பல்வேறு சட்ட வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கேரள மாநிலத்தில் ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சியின் அம்மாநிலத் தலைவர் கடுமையாக இதை எதிர்த்து அறிக்கை விட்டுள்ளார்.

ஆனால் தமிழகத்தில் எந்த தலைவரும் இது பற்றி வாய் திறக்கவில்லை. ஏனென்றால் 'கவர்னர் பதவி கொடுக்கக் கூடாது' என்று யாராவது குரல் கொடுத்தால் அது தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழினத் துரோகமாக கருதப்படும் என்ற அச்சம்தான் அதற்கு காரணம்.

அதே நேரத்தில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் புகைந்து கொண்டே இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது பற்றி இரு மாநில அரசுகளும் கூடிக் கூடி விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அது மட்டுமின்றி சதாசிவம் வசிக்கும் பகுதியான கோவை பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் பற்றியும் கேரளாவிற்கும், தமிழகத்திற்கும் முட்டலும் மோதலும் நடைபெற்று வருகின்றன.

இந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவர் கேரள மாநிலக் கவர்னராக நியமிக்கப்படுவது இரு மாநில உறவுகளை இனிதாக்குமா அல்லது கசக்க வைக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரை தன் கீழ் கவர்னராக நியமித்து புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்துவாரா இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி என்பதுதான் இப்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X