2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஊவாவில் வாழ்வா சாவா

Thipaan   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொகுதிவாரி தேர்தல் முறை நடைமுறையில் இருந்த காலத்தில், பொதுவாக இந்நாட்டின் பெரும்பாலான மக்கள், தேர்தல்களின் போது நடந்து கொண்டதைப் போல் தான் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் இப்போதும் தேர்தல்களின் போது நடந்து கொள்கிறார்கள்.

1978ஆம் ஆண்டு விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் அப்போதைய எதிர்க்கட்சியையே ஆதரித்தனர். எனவே, அக் காலத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அரசாங்கம் மாறியது.

விகிதாசார தேர்தல் முறையோடு நாட்டில் அந்த நிலைமை மாறினாலும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இன்னமும் அதே வழமையை பின்பற்றி வருகிறார்கள்.

1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்குப் பதிலாக நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக 1982ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு, 1988, 1994, 1999, 2005, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் 1989, 2000, 2001, 2004 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் அப்போதைய ஆளும் கட்சியை எதிர்த்தே வாக்களித்துள்ளனர்.

பதவிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய தவறியதன் விளைவாகவே பதவிக்கு வரும் ஒவ்வொரு கட்சியையும் மக்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், பல்வேறு விதமான தேர்தல் திருகுதாளங்கள் மூலம் வடக்கு, கிழக்குக்கு வெளியே இந்த நிலைமையை மாற்ற ஆளும் கட்சிகளுக்கு விகிதாசார தேர்தல் முறை உதவியிருக்கிறது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் மட்டும் அவர்களின் அந்தப் பருப்பு வேகவில்லை என்றே தெரிகிறது.

வடக்கு, கிழக்கில் அரச எதிர்ப்பு உணர்வு எந்தளவுக்கு என்றால் போர் முடிவடைந்த உடன் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது போர் காலத்தில் படைகளுக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையே, வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரித்தார்கள்.

இப்போதும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையே வடக்கு, கிழக்கில் காணப்படுகிறது. அப் பகுதி மக்கள் இன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பார்க்கிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நெருக்கமாகவே இருகின்றார்கள். 

மலையகத்தின் வாக்காளர்கள் இதற்கு மாற்றமான முறையையே கையாள்கிறார்கள். அதற்குக் காரணம் மலையகத் தலைவர்கள் பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் ஒட்டிக் கொண்டு இருப்பதே. இதனால் மலையக மக்கள் அனேகமாக ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆளும் கட்சியையே ஆதரித்துள்ளனர்.

தொழிற்சங்கங்கள் என்ற அடிப்படையில் சிந்திக்காது மக்கள் தனித்தனியாக முடிவெடுக்கும் நிலை மலையகத்திலும் இருந்தால் அம் மக்களும் வரப் போகும் தேர்தல்களின் போது ஆளும் கட்சியை ஆதரிப்பார்களா என்பது சந்தேகமே.

முஸ்லிம் மக்கள், கடந்த காலங்களில் ஒரு சமூகமாக குறிப்பிட்டதோர் பிரதான கட்சியை சார்ந்திருக்கவில்லை. அவர்கள் பிரிந்து ஐ.தே.க. தலைமையிலான அரசியல் கூட்டுக்களையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டுக்களையும் ஆதரித்து வந்துள்ளனர்.

ஆனால், இம்முறை நிலைமை மாறியிருப்பதாகவே தெரிகிறது. அதாவது மிகச் சிலரைத் தவிர முஸ்லிம்கள் ஆளும் கட்சியை விரும்பவில்லை என்பதே உண்மை.

குறிப்பாக அண்மையில் நடைபெற்ற மத்திய, தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களின் பெறுபேறுகள் அதனையே சுட்டிக் காட்டுகின்றன. கடந்த ஓரிரு வருடங்களில் நாட்டில் பரவிய முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரங்கள் மற்றும் நடவடிக்கைகளின் போது அரசாங்கம் நடந்து கொண்ட விதமே இதற்குக் காரணமாகும்.

ஆனால் ஆட்சியாளர்கள் அதனை புரிந்து கொண்டுள்ளதாக தெரியவில்லை. எனவே தான், முஸ்லிம்கள் ஐ.மசு.முவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த உடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசியிடம் கேட்டிருந்தார்.  

பொதுவாக சிறுபான்மை மக்கள் இன்று ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால், அவ்வாறு ஆட்சி மாற்றம் இடம்பெற வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என்பதும் ஆட்சி மாறினாலும் அவர்கள் எதிர்ப்பார்க்கும் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்பதும் பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஆட்சி மாறுமா என்ற சந்தேகம் எழுவதற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் தலைமைத்துவப் போட்டியே. அந்தப் போட்டி சிலவேளைகளில் சில நகைப்புக்குரிய நிலைமைகளையும் உருவாக்குகிறது.

உதாரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தமது தேர்தல் மேடைகளில் பேசவுள்ளார் என அண்மையில் ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறியிருந்தார். அதனை சில பத்திரிகைகள் தமது முன்பக்கத்திலேயே பிரசுரித்திருந்தன.

சஜித் பிரேமதாச ஐ.தே.க.வின் தலைவர்களில ஒருவர். அவர் ஐ.தே.க. தேர்தல் மேடைகளில் பேசுவது செய்தியா? சாதாரண நிலைமைகளின் கீழ் அது செய்தி அல்ல தான். ஆனால்;, ஐ.தே.க. உட்பூசல் எந்தளவுக்கு என்றால் கட்சித் தலைவர்களே அதையும் செய்தியாக கருதுகிறார்கள்.

ஏனெனில், கடந்த காலத்தில் சஜித் பிரேமதாச கட்சியின் பல முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. 2012ஆம் ஆண்டு ஐ.தே.க. தமது மே தினக் கொண்டாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்திய போது பிரேமதாச அதில் கலந்து கொள்ளாது, அன்றே தமது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்காக ஞாபகார்த்த கூட்டமொன்றை கொழும்பில் நடத்தினார். எனவே இப்போது, அவர்; ஐ.தே.க. தேர்தல் மேடைகளில் பேசுவதும் செய்தியாகிவிட்டது.

ஐ.தே.க. தலைவர்கள் தெரிந்திருந்தும் புறக்கணித்து வரும் ஒரு உண்மை என்வென்றால், அவர்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டு இருந்தாலும் அரசாங்கம் தேர்தல்களை ஒத்திப் போடப் போவதில்லை என்பதே.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் வெற்றி பெறுவதை விட உட்கட்சித் தேர்தல்களில் வெற்றுபெறுவதே ஐ.தே.க. தலைவர்களின் நோக்கமாக இருக்கிறது போலும். வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால் ஆளும் கட்சியொன்றில் இரண்டாம் நிலையிலாவது இருப்பதை விட எதிர்க்கட்சியில் தலைவராக இருப்பதே மேல் என்று ஐ.தே.க. தலைவர்கள் சிலர் நினைக்கின்றார்கள்.

எனவே, ஹம்பாந்தோட்டையில் தமது கட்சி தோல்வியடைய வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கவின் பிரிவு விரும்புவதோடு, நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் தமது கட்சி தோல்வியடைய வேண்டும் என சஜித்தின் பிரிவு விரும்புவதாக சிலர் நகைச்சுவையாக கூறுகிறார்கள்.

நகைச்சுவையாக கூறிய போதிலும் இதில் ஓரளவுக்கு உண்மை இல்லாமலும் இல்லை. இந்த நிலைமையின் இறுதி விளைவு என்னவென்றால் முழுக் கட்சியே நீண்ட காலமாக தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதே. இது தற்போதைய நிலையில் சிறுபான்மை மக்களின் விருப்பத்துக்;கு மாறாக அமைந்துள்ளது. அதேவேளை, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பலம் வாய்ந்த எதிர்க் கட்சியொன்று நாட்டுக்கு அவசியமாக இருப்பதால் அதையாவது பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் இருக்கிறது.

ஒரு வகையில் ஐ.தே.க. தேர்தல்களில் தோல்வியடைவதற்கு உட்கட்சிப் பூசல்கள் மட்டுமே காரணமல்ல, மாறாக தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்து வந்ததன் விளைவே உட்கட்சிப் பூசல்கள் என்றும் கூறலாம். உண்மையிலேயே கட்சித் தலைமையின் பலவீனம் கொள்கை என்பனவற்றை விட தற்போதைய விகிதாசார தேர்தல் முறையும் நிறைவேற்று ஜனாதிபதி முறையுமே ஐ.தே.க.வின் தொடர்ச்சியான தோல்விக்குக் காரணமாகும். தொகுதிவாரி தேர்தல் முறை இருந்தால் எந்தவொரு கட்சிக்கும் தொடர்ச்சியாக 17,18 வருடங்கள் பதவியில் இருக்க முடியாமல் போயிருக்கும்.

கட்சிகளின் கொள்கைகளுக்காக மக்கள் அக் கட்சிகளுக்கு வாக்களிப்பதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வெற்றி பெறக்கூடும் என்று தாம் நினைக்கும் கட்சிக்கே வாக்களிக்கிறார்கள். மாவட்ட வாரியாக தேர்தல் நடைபெறும் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆளும் கட்சிகளுக்கே இந்த வெற்றித் தோற்றத்தை உருவாக்கிக் காட்ட முடிகிறது. ஏனெனில், அவற்றுக்கு அரச வளங்களையும் அரச அதிகாரங்களையும் இதற்காக பாவிக்க முடியும்.

ஒரே கட்சி தொடர்;ச்சியாக நீண்ட காலமாக பதவியில் இருப்பதால் பொதுவாக நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை விட சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகமாகும். ஏனெனில், சிறுபான்மை மக்களை மதியாத கட்சியொன்றின் தலைமையில் அரசாங்கமொன்று அமைந்தால் அந்தக் கட்சியின் ஆட்சியும் நீண்ட காலமாக நிலைத்திருக்கும்.   

இந்தப் பின்னணியில் தான் எதிர்வரும் 20ஆம் திகதி ஊவா மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாகாண சபைத் தேர்தல் பிரதான இரு கட்சிகளுக்கும் மாகாண சபைத் தேர்தலொன்றை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் இறுதி மாகாண சபைத் தேர்தல் இதுவாகும்.

இந்தத் தேர்தலில் ஐ.தே.க வெற்றி பெற்றால் அல்லது மாகாண சபையில் பலமான எதிர்க் கட்சியாக தெரிவு செய்யப்பட்டால் அது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஆளும் ஐ.ம.சு.மு வை வெகுவாக பாதிக்கும். குறிப்பாக ஊவாவில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமையிலான வேட்பாளர் குழுவொன்று தோல்வியடைவதானது ஐ.ம.சு.மு.வுக்கு பலத்த அடியாக அமைந்துவிடும்.

ஏனெனில், ஐ.ம.சு.மு.வின் ஜனரஞ்சகத்தன்மை சரிந்துள்ளதையும் ஐ.தே.க.வின் ஜனரஞ்சகத்தன்மை அதிகரித்துள்ளதையும் அது எடுத்துக் காட்டும். ஐ.தே.க. பதவிக்கு வரப் போகிறது என்றதோர் தோற்றம் உருவாகினால் பெரும்பாலான மக்கள் எதிர்வரும் நாடளாவிய ரீதியிலான தேர்தல்களின் போது அக் கட்சியையே ஆதரிப்பார்கள். கட்சிக் கொள்கைகள் இதில் முக்கியமாவதில்லை. இது தான் வாக்காளர் சுபாவம்.

வாக்காளர்களின் இந்த சுபாவத்தின் காரணமாகவே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை கட்டம் கட்டமாக நடத்துகிறது. அதன் மூலம் முழு அரச பலத்தை பாவித்து ஒரு மாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு அதன் தாக்கத்தால் அடுத்த மாகாண சபையைக் கைப்பற்றி இவ்வாறு தொடர்ச்சியாக மாகாண சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி பின்னர் அவற்றின் தாக்கத்தால் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெறுவதே அரசாங்கத்தின் உத்தியாகும். ஐ.தே.க. பதவியில் இருக்கும் போதும் இது நடைபெற்றது.

அரச பலத்தைப் பாவிப்பதற்குப் புறம்பாக ஆளும் கட்சி ஊவாவில் வன்முறையையும் வெகுவாக பாவிக்கிறது. அத்தோடு சிறுபான்மை மக்கள் அதிகமாகவுள்ள பதுளை மாவட்டத்தில் இருந்து மூன்று ஆசனங்கள் குறைக்கப்பட்டு பெரும்பான்மை மக்கள் அதிகமாகவுள்ள மொனராகலை மாவட்டத்துக்கான ஆசனங்களின் எண்ணிக்கை மூன்றால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில் ஆளும் கட்சிக்கு இது பெரும் உதவியாக அமைந்துள்ளது.

விகிதாசார தேர்தல் முறை ஆளும் கட்சிகளுக்கு சாதகமாக இருந்த போதிலும் அதனை அக் கட்சிகள் தமக்கு சாதகமாக பாவிப்பதிலும் ஓர் எல்லை இருக்கிறது என்பதை கடந்த தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலிகளின் போது காணக்கூடியதாக இருந்தது. அவ்விரண்டு மாகாணங்களிலும் ஆளும் கூட்டணி இம்முறை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அந்த மாகாண சபைகளுக்hன முன்னைய தேர்தல்களின் போது அக் கூட்டணி பெற்ற வாக்குகளை விட ஒரு இலட்சம் வாக்குகள் வீதம் குறைந்திருந்தது.

இந்த சரிவு சிலவேளை ஏனைய மாகாணங்களிலும் ஏற்பட்டு இருந்தால் அது ஆளும் கட்சியின் எதிர்க்காலத்தை பாதிக்கும். எனவே, ஊவா மாகாண சபைக்கான தேர்தல் ஒரு வகையில் ஆளும் கட்சிக்கு வாழ்வா சாவா போராட்டமாக அமைந்திருக்கிறது போலும்.
 
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X