2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தோல்வியில் சில வெற்றிகள்

Thipaan   / 2014 செப்டெம்பர் 17 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -புருஜோத்தமன் தங்கமயில்

வட மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று ஒரு வருடமாகிறது. கடந்த வருடம் செப்டெம்பர் 21ஆம் திகதி வடக்கிலுள்ள தமிழ் மக்கள் தமது வாக்குகளை பெரும் அர்ப்பணிப்போடு அளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்தனர். அதனூடு, தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்குமான உரத்த செய்தியைச் சொல்லியிருந்தார்கள். 

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு மாகாண சபைகளினூடு தீர்வைக் கண்டுவிட முடியாது என்று  தமிழ் மக்களும் அரசியல் தலைமைகளும் நிராகரித்து கால்நூற்றாண்டைக் கடந்த நிலையிலேயே வட மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடைபெற்றது.

ஏற்கெனவே, 'இது தீர்வில்லை' என்று நிராகரித்த மாகாண சபை முறைமைக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பரிப்போடு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வி தென்னிலங்கையிலிருந்தோ, இந்தியாவிலிருந்தோ அல்லது வேறொரு சர்வதேச நாடொன்றிடமோ எழுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

ஆனால், அந்தக் கேள்விக்கான பதில்கள், 'இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தமிழ் மக்களின் மனநிலை, தமிழ் தேசியத்தை நிலை நாட்டுவதற்கான ஒருமித்த ஆதரவு, ஆயுதப் போராட்டங்கள் தோற்ற நிலையில், தமது விடுதலை குறித்து சிந்திக்கும் தமிழ் மக்கள் தேர்தெடுத்த மிதவாத போராட்ட வடிவம் வாக்களிப்பு' என்பதாகவே இருக்கின்றன.

இதுதான், குறிப்பிட்டளவு நெருக்கமான பதில்கள். மற்றப்படி, எந்தவொரு தருணத்திலும் அது, நாட்டைப் பிரிப்பதற்கான ஆயுத போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அறிகுறியாக வெளிப்படவில்லை.

அதற்கு வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் இப்போதைக்கு தயாரும் இல்லை. அது, அவசியமும் இல்லை.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வைக் காணுவதற்கு அல்லது அதிகாரங்களைக் கோரும் முயற்சிகளின் ஒரு கட்டமாக மாகாண சபைத் தேர்தலை கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டது.

ஏனெனில், 2009ஆம் ஆண்டு மே மாதத்துக்;கு பின்னர் தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் தமது போராட்ட வடிவத்தை புதிய தளத்தில் முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அதனை, காலம் தாழ்த்திச் செய்யவும் முடியாது. அதற்குள் இலங்கை அரசாங்கமும், அதன் சார்ப்பு சக்திகளும் வடக்கை இன்னமும் இலக்கு வைத்து குடியேற்றங்களையும், அபகரிப்புக்களையும் செய்துவிடும் என்ற விடயம் மேலெழுந்து நின்றது.

ஏற்கெனவே கிழக்கை கிட்டத்தட்ட முற்றுமுழுதாக இழந்து நிற்கின்ற தமிழ்த் தேசியத்திற்கு வடக்கையாவது காப்பாற்ற வேண்டிய (தக்க வைக்க) தேவை இருந்தது. அதுதான், வடக்கு மாகாண சபைத் தேர்தலை போராட்டத்தின் ஒரு வடிவமாக தேர்ந்தெடுக்க காரணமாகவும் அமைந்தது.

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து அதன் மிதவாதப்போக்கு (அரசியல் நிலைப்பாடுகள்) பிடிக்காமல் அதிலிருந்து விலகியவர்கள் தோற்றுவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள் மறுதலிக்க முடியாதவை.

அந்தக்கருத்துக்களில் இன்னமும் வலு இருக்கின்றது. அதாவது, 13ஆவது திருத்த சட்ட நகல் வரைபுகள் வெளியாகிய தருணத்திலேயே தமிழ் அரசியல் தலைமைகள் அதனை முற்றுமுழுதாக நிராகரித்திருந்தன.

அப்படி ஏற்கெனவே நிகாரித்த ஒன்றுக்காக ஏன் இவ்வளவு அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும். அல்லது இந்தியாவின் அதிக கையாளுகைக்குள் ஏன் தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் செல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. இந்தக் கருத்துக்கள் மிகவும் நியாயம் பொருந்தியவைதான். 

ஆனால், கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பவனுக்கு சிறு மரக்கட்டையைப் பற்றுவதற்கான வாய்ப்பு போலவே வட மாகாண சபைத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்;கும் தமிழ் மக்களுக்கும் அமைந்தது.

அதைப் பற்றிய நிலையில், தத்தளிப்பவன் தன்னைக் கொஞ்சம் ஆசுவசப்படுத்திக் கொண்டு கரையேறுவதற்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள அல்லது அந்த முயற்சிகளை இன்னும் வேகத்தோடு முன்னெடுக்க முடியும் என்று நம்புவதாகவே அமைந்திருந்தது.

ஆக, மாகாண சபைத் தேர்தல் என்பது பெருங்கடலில் தத்தளித்தவனுக்கான சிறு மரக்கட்டை அவ்வளவுதான். அது, ஓடமோ, படகோ அல்ல. 
வட மாகாண சபைத் தேர்தல் கொடுத்த தெம்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தன்னுடைய நடவடிக்கைகளின் மேல் கொஞ்சம் நம்பிக்கை கொள்ள வைத்தது. அல்லது, இலங்கை அரசாங்கத்தை கையாளுவது தொடர்பில் இன்னமும் மூர்க்கம் கொள்ள வைத்தது. இதுதான் உண்மை.

ஏனெனில், இறுதி மோதல்கள் முடிவடைந்த நிலையில், இலங்கை அரசாங்கத்துக்;கு முன்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தது.

இன்றைக்கு, இலங்கை அரசாங்கத்தை எரிச்சற்படுத்துமளவுக்கு தன்னுடைய செயற்பாடுகளையும், கருத்து முன்வைப்புக்களையும் செய்ய வைக்கிறது.

வட மாகாண சபையில் ஆட்சி அமைத்தவர்களினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பது உண்மை. ஆனால், இன்னொரு விடயம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக இருக்கின்றது.

அதாவது, வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.

அது, தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முயற்சி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(?) அறிவித்திருந்தது. இது, இந்தியாவினாலும், சர்வதேசத்தினாலும் குறிப்பிட்டளவில் வரவேற்கப்பட்டது. 

இதிலிருந்து ஒரு விடயம் மெல்ல எழுந்து வந்தது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய சமிஞ்ஞைகளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை நோக்கி விடுத்திருந்தது என்ற ஆரம்ப அறிகுறி.

ஆனால், அதிகாரங்களைக் கோரும் தமிழ் மக்களின் பக்கம் அரசாங்கம் எந்தவித விட்டுக்கொடுப்புக்களையும் செய்யத் தயாராகவில்லை என்பது இன்னமும் பெருவாரியாக வெளிப்பட ஆரம்பித்தது.

ஏனெனில், வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆட்சி அமைந்தது முதல், மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கத்துக்;கும் இடையில் பிரச்சினைகள் இருந்து வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியைச் சந்தித்த முதலமைச்சர் தன்னுடைய கோரிக்கைகள் தொடர்பில் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதற்கு சார்ப்பு நிலையில் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி தன்னுடைய செயற்பாடுகளில் பதிலளிக்கவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுக்களை வெளிநாடுகளிடம் வட மாகாண முதலமைச்சர் தொடர்ந்து கூறி வருகின்றார்.

அதுபோக, வடக்கிலுள்ள இராணுவப் பிரசன்னம் என்பது அச்சுறுத்தும் அளவுக்கு இருப்பதான குற்றச்சாட்டை மறக்காமல் தொடர்ந்தும் முன்வைக்கின்றார். 

அது எவ்வாறாக என்றால், இப்போது இலங்கை வரும் சர்வதேச தலைவர்களும் இராஜதந்திரிகளும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க முக்கியஸ்தர்களைச் சந்திப்பது போலவே, வட மாகாண முதலமைச்சருக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து சந்தித்துச் செல்கின்றனர்.

ஏற்கெனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகளினால் அல்லற்படும் ஜனாதிபதியும் அரசாங்கமும் 'மிதவாத தலைவர், முன்னாள் நீதியரசர்' என்று சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன் முன்வைக்கும் கருத்துக்களுக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது பெரும் சிக்கல்தான். இந்தச் சிக்கலையும் அரசாங்கம் மேலதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டுக்காக வருகை தந்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், இலங்கையின் இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணும் யோசனைகளை முன்வைப்பதற்காக தென்னாபிரிக்காவினால் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்ட அந்நாட்டு துணை ஜனாதிபதி சிறில் ரமபோச உள்ளிட்ட தலைவர்கள், வட மாகாண முதலமைச்சரை சந்தித்தவர்களின் முக்கியமானவர்களாக கொள்ள முடியும்.  

இதில், இன்னொரு சிறப்புச் செய்தி அல்லது இலங்கை அரசாங்கத்திற்கு எரிச்சலையூட்டக் கூடிய செய்தி என்னவெனில், அண்மையில் இந்திய சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து திருப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், 'வட மாகாண முதலமைச்சரை இந்தியப் பிரதமர் சந்திக்க விரும்புகிறார்' என்று வெளியிட்ட கருத்துக்கள்.

ஏனெனில், இலங்கைக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை புதிதாக பதவியேற்ற  இந்தியப் பிரதமர் மோடி இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற பிரச்சினை இருக்கின்றது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மோடி சந்தித்ததும், வட மாகாண முதலமைச்சரை சந்திக்க விரும்புவதும் அவ்வளவு உவப்பான செய்தியாக அரசாங்கத்துக்கு அமையாது. 

இதனிடையே, கடந்த வாரத்தில் முன்வைக்கப்பட்ட சில கருத்துக்கள் அவதானிக்கப்பட வேண்டியவை. அதாவது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசுவதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.

ஆனால், மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார். அந்தக் கருத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகரமாக எதிர்கொண்டாதாக கொள்ள முடியும். ஏனெனில், ஏற்கெனவே, அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமேயில்லை.

அதனை முழுமையாக அமுலாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று பதிலளித்துவிட்டது. இந்தப் பதில், தர்க்க ரீதியில் அனைத்துத் தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆக, ஜனாதிபதி அடித்த பந்தை அவரை நோக்கியே திருப்ப அடித்துவிட்டிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. 

13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கம், அதற்கு அப்பாலான அதிகாரப் பரவலாக்கம் என்ற செய்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக முன்வைக்க ஆரம்பித்திருக்கிறது.

ஆக, 13ஆவது திருத்தம் தீர்வில்லை என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உறுதியாக இருக்கின்றது. ஆனால், அதிகாரத்தை அடையும் வழிகளில் இளைப்பாறும் களமாக 13ஆவது திருத்தத்தையும் அதன் போக்கில் தோற்றுவிக்கப்பட்ட மாகாண சபை முறைமையும் காணுகிறது.

மற்றப்படி, அதிகாரப்பரவலாக்கம் என்பதே தமிழ் மக்களினதும், தங்களினதும் இறுதி இலக்கு உன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக கூறியிருக்கின்றது.

அதில், இன்னமும் உறுதியாக இருக்க வேண்டியதும், அதனை அடைவது தொடர்பிலான அக்கறையைக் கொள்ள வேண்டியவும் அவசியமானது. 
இவ்வாறானதொரு நிலையில், கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை பிடிக்க முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், தன்னுடைய இளைப்பாறுதலுக்கான களமாக அல்லது தன்னுடைய பலத்தை பெருக்கும் களமாக வட மாகாண சபையையும், அதன் தேர்தலையும் கொண்டிருக்கிறது.

ஆக, நகல் வரையப்பட்ட போதே தோல்வியோடு ஆரம்பித்த மாகாண சபை முறைமை சில வெற்றிகளைக் காணுவதற்கு உதவியிருக்கின்றது.

அதுவும், வட மாகாண சபையில் ஆட்சியமைத்ததனூடு மக்களின் அபிவிருத்தி தொடர்பில் பெரிதாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும்
இராஜதந்திர ரீதியில் சில வெற்றிகளைக் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

அது, புதிய போராட்ட வடிவதற்கான தேவையாகவும், எதிர்நோக்கி பாய்வதற்கான களமாகவும் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X