2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

என்று தணியும் இந்த மோதல்?

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

இந்தியாவினது அழுத்தங்களின் பேரில், வடமாகாணசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21ஆம் திகதியுடன் ஒரு வருடமாகி விடும். 

கடந்த வருடம் செப்டெம்பர் 21ஆம் திகதி வடமாகாணசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலின் மூலம், வடமாகாணசபை முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்டது. அத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் கட்டத்தில், மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான உறவுகள் ஒட்டமுடியாத அளவுக்கு சீர்குலைந்து போயுள்ளன.

மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பதில்லை என்று மாகாண அரசும் மாகாண அரசு ஒத்துழைப்பதில்லை என்று மத்திய அரசும் மாறிமாறி  குற்றம் சுமத்துவதிலேயே இந்த ஒரு வருடகாலமும் கழிந்துள்ளது. 

வடக்கில் மாகாணசபையை அமைத்து ஓர் ஆட்சி அதிகார அலகை உருவாக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இருந்திருக்கவில்லை. இந்தியாவின் நெருக்குதலின் பேரிலேயே, வடமாகாணசபைக்கு வேண்டா வெறுப்பாக தேர்தல் நடத்தியிருந்தது அரசாங்கம். வடமாகாணசபைத் தேர்தலில் தாம் தோல்வியடைவோம், கூட்டமைப்பு வெற்றி பெறுமென்று தெரிந்திருந்த நிலையிலேயே அங்கு தேர்தல் நடத்தியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலமுறை கூறியிருக்கிறார்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுமென்று தெரிந்திருந்தும், தேர்தலை அரசாங்கம் நடத்தியது உண்மையே என்றாலும், தேர்தலை நடத்த அரசாங்கம் சுயமாக முடிவெடுத்திருக்கவில்லை என்பதை நினைவிற்கொள்ளவேண்டும். தேர்தல் திகதி கூட புதுடெல்லியிலேயே  தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்தளவுக்கு வடமாகாணசபைத் தேர்தல் விடயத்தில் இந்தியாவின் தலையீடு இருந்தது.

வேண்டா வெறுப்புடன் நடத்தப்பட்ட தேர்தலின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட வடமாகாணசபைக்கு எதற்காக அதிகாரங்களை, நிதியை வழங்கவேண்டும், அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் அடிப்படை பிரச்சினை. அதனாலேயே, 'வேண்டாப் பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்' என்பது போல, வடமாகாணசபையின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகிறது.

அதேவேளை, வடமாகாணசபையை தமிழர் பிரச்சினைக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கருதவில்லை.
13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாணசபை தீர்வுக்கான அடிப்படையாக இருக்கலாமே தவிர, அதுவே தீர்வாக இருக்கமுடியாது என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

வடமாகாணசபையை ஒரு நிரந்தர தீர்வாக மாற்றிவிடலாம் என்று இந்தியா கருதியது. அதேவேளை, இப்போதைக்கு வடமாகாணசபையை கைப்பற்றி வைத்துக்கொண்டு, அதற்கு மேல் அரசியல் தீர்வுக்காக போராடலாமென்று கருதியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஆனால், 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட சொற்ப அதிகாரங்களையும் கூட பறித்துக்கொண்டே, வடமாகாணசபையை செயற்படவிட்டுள்ளது அரசாங்கம்.

வடமாகாணசபை என்ற தளத்தில் இருந்துகொண்டு, அதற்கப்பால் போராட நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எந்த அதிகாரமும் இல்லாத ஒரு மாகாணசபையை கொண்டுநடத்துவதா? அதன் அதிகாரங்களுக்காக போராடுவதா? அதற்கு மேலான அதிகாரங்களுக்காக போராடுவதா? என்ற சிக்கல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த முரண்பட்ட தளங்களில் இரு தரப்பும் நிற்பதாலும், ஒருவரையொருவர் நம்ப மறுப்பதாலும், வடமாகாணசபையும் மத்திய அரசும் இணைந்து செயற்படமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசாங்கம் தவறிழைத்துள்ளது. அதாவது, வடமாகாணசபைக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதன் விளைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையை அரசாங்கத்தால் பெறமுடியவில்லை.

அதுபோலவே வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள், அரசாங்கத் தரப்புக்கு சினமூட்டியுள்ளதையும் மறுக்கமுடியாது.
மாகாண அரசும் மத்திய அரசும் இணைந்து செயற்பட்டாலே மக்களுக்கு நன்மை கிட்டுமென்று இன்று இரு தரப்புமே ஒத்துக்கொள்கின்றன. ஆனால், இரு தரப்பும் இணங்கிச் செயற்படும் சூழல் உருவாகவுமில்லை. உருவாக்கப்படவுமில்லை.

மத்திய அரசுடனான இணக்கப்பாடு ஒன்றை கருத்திற்கொண்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றியிருந்த கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அலரி மாளிகைக்குச் சென்று பதவியேற்றிருந்தார். அப்பதவியேற்பு விழாவில் பல்வேறு அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டிருந்த போதிலும், அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவோ கலந்துகொள்ளவில்லை.

ஆனால், இன்று மத்திய அரசாங்கத்துடன் வடமாகாணசபை ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சுமத்துவதில் முன்னிற்பவர்களாக அவர்கள் இருவருமே இருக்கின்றனர். அது மட்டுமல்ல, வடமாகாண முதலமைச்சரை தம்முடன் வந்து பேசுமாறும் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார் அமைச்சர் பசில் ராஜபக்ஷ.

அது போலவே, அண்மையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளச் சென்றிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கத்துடன் உள்ள வேறுபாடுகள் குறித்து பேசித் தீர்க்க விரும்புவதாகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ்ப்பாணம் சென்று சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இவர்கள் இருவரும் மாகாண அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்பியிருந்தால், நிச்சயமாக முதலமைச்சரின்  பதவியேற்பு விழாவில் பங்கேற்றிருப்பார்கள். அதில் இவர்கள் பங்கேற்காமை, வடமாகாணசபை குறித்த இவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.

இப்போது, மாகாண அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்று இவர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சுடன் மாகாணசபை எந்த விடயத்தில் ஒத்துழைக்கவில்லை?

படையினரின் காணி அபகரிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்கவில்லை.

வடக்கில் பெருந்தொகையான படையினரை நிலைநிறுத்தி வைத்திருப்பதற்கு ஒத்துழைக்கவில்லை.

வேறு எந்த விவகாரத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கும் மாகாணசபைக்கும் தொடர்புகள் இல்லை.

காணி அபகரிப்புக்கோ, படையினரை வடக்கில் நிலைநிறுத்தி வைப்பதற்கோ மாகாணசபையால் ஒருபோதும் ஒத்துழைக்கமுடியாது. ஏனென்றால், மஹிந்த சிந்தனையை வைத்து எப்படி, மத்திய அரசாங்கம் மக்களின் ஆணையை பெற்றதோ, அதுபோலவே இவ்விடயங்களை அனுமதிப்பதில்லை என்பதை முன்னிறுத்தியே வடமாகாண மக்களின் ஆணையை வடமாகாணசபை பெற்றுள்ளது.

ஆளுநர் விவகாரத்தில், தலைமைச் செயலாளர் விவகாரத்தில், வடமாகாண முதலமைச்சருக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. அங்கிருந்தே பிரச்சினைகள் ஆரம்பமாகின.

சிவில் ஆளுநரை நியமிப்பதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவிடாமல் தானே தடுத்ததாக பகிரங்கமாக கூறியிருக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்  டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. க்குமிடையில் கடும் பகை இருப்பது ஜனாதிபதிக்கு தெரியும்.

அப்படியிருக்கும்போது, வடமாகாணசபையுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கப்போக்கை கடைப்பிடிக்க விரும்பியிருந்தால், ஆளுநர் விடயத்தில் ஒத்துப்போயிருந்திருக்கலாம். அதை அவர் செய்யவில்லை. மீண்டும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை ஆளுநராக நியமித்தார். தலைமைச் செயலாளரை மாற்றுவதாக கொடுத்த வாக்குறுதியையும் ஜனாதிபதி நிறைவேற்றவில்லை.

அண்மையில் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கேள்வியெழுப்பியபோது, அவரை மாற்றுவதற்கு தாம் முயன்றதாகவும் அதற்கிடையில் அவர் நீதிமன்றத்தை நாடியதால் எதையும் செய்யமுடியவில்லை என்றும் கை விரித்திருக்கிறார். அதாவது, வடமாகாண தலைமைச் செயலாளரை இடமாற்றம் செய்யும் அதிகாரம் கூடத் தனக்கில்லாதது போல கருத்து வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி.

ஆனால், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மாகாண செயலாளர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரம் முதலமைச்சர்களுக்கு இல்லையென்றும் மாகாண அல்லது அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழுக்களோ அல்லது ஜனாதிபதியோதான் அதைச் செய்யமுடியுமென்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை கட்டுப்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றம் எந்த தீர்ப்பையும் அளிக்கவில்லை.

இவை மட்டுமன்றி, 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களையும் மாகாணசபைக்கு வழங்கமுடியாதென்று அரசாங்கம் அடம்பிடிப்பதும் கூட, விரிசலுக்கு மற்றொரு காரணம்.

ஆளுநர் தன்னிச்சையாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அதிகாரிகளை வைத்து வடமாகாணசபையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற செயற்பாடுகளால், மத்திய அரசாங்கத்தின் மீதும் அதன் பிரதிநிதிகளின் மீதும் வடமாகாணசபைக்கு கடுஞ்சினம் ஏற்பட்டுள்ளது உண்மை.

அதேவேளை, வடமாகாணசபை தமது காலடியில் வந்து விழவேண்டுமென்பது போன்ற எதிர்பார்ப்பு மத்திய அரசிடமும் அமைச்சர்கள், ஆளுநர் போன்றோரிடமும் இருப்பதாக தெரிகிறது. அதை நிறைவேற்ற வடமாகாணசபை தயாரில்லாத நிலையில், வஞ்சம் தீர்க்கும் வகையில் மத்திய அரசு செயற்படுகிறதென்ற பலமான குற்றச்சாட்டுள்ளது.

இதை விட வடமாகாணசபை சிறப்பாக செயற்பட்டுவிட்டால், ஒருபோதும் வடக்கில் தம்மால் அரசியல் செய்யமுடியாது போகுமென்பதை அரசாங்கமும் அரச ஆதரவுக் கட்சிகளும் நன்கறியும். அதனால், வடமாகாணசபைக்கு முட்டுக்கட்டை போடுவதில் அவை முன்னிற்கின்றன.
வடமாகாணசபை விடயத்தில் அரசாங்கம் பாரபட்சமாகச் செயற்படுகிறதென்பது மற்றொரு வலுவான குற்றச்சாட்டாகும்.

உதாரணத்துக்கு ஏனைய மாகாணசபைகள் கடைப்பிடித்துவரும் நடைமுறைகளுக்கே வடமாகாண ஆளுநர் அனுமதி மறுத்திருக்கிறார். உதாரணத்துக்கு கிழக்கு மாகாணசபையின் நியதிச்சட்டம் ஒன்றைத் தழுவி உருவாக்கப்பட்ட வடமாகாணசபையின் நியதிச்சட்டத்துக்கு ஆளுநர் அனுமதியளிக்கவில்லை. அது போலவே, முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் நியதிச்சட்டத்துக்கு அனுமதியளிக்க முடியாதென்று ஆளுநர் கூறிவிட்டார். ஆனால், முதலமைச்சர் நிதியம் சப்ரகமுவ, ஊவா, தென்மாகாணசபைகளில் நடைமுறையிலுள்ளன.

வடமாகாணத்துக்கு சிறப்பு அதிகாரங்கள், ஒதுக்கீடுகள் தேவையென்று வடமாகாண முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்திருந்தார்.

ல்லா மக்களையும் எல்லா மாகாணங்களையும் தாம் ஒரே மாதிரியாகவே பார்ப்பதாகவும் அவ்வாறே, கையாளப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.  ஆனால், தெற்கிலுள்ள 3 மாகாணங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கூட, வடமாகாணசபையால் பெறமுடியவில்லை.

இப்போது வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடவில்லையென்று அரசாங்கம் குற்றஞ்;சாட்ட ஆரம்பித்துள்ளது.
கொக்குக்கு தட்டையான பாத்திரத்திலும் நரிக்கு குடுவை போன்ற பாத்திரத்திலும் திரவ உணவு வைத்தால், அவற்றினால் அதை எப்படிச் சாப்பிடமுடியாதோ அதுபோலவே வடக்குக்கான நிதியொதுக்கீடுகளும் அமைந்துள்ளன.

வடமாகாணசபைக்கு நிதி அதிகாரங்கள் இல்லை. அனைத்துக்குமே தலைமைச் செயலாளர்தான் பொறுப்பு. அரசாங்கம் ஒரு கையால் நிதியை கொடுத்துவிட்டு அவரை வைத்தே, அதனைச் செலவிடமுடியாமலும் தடுக்கிறது.

இரு தரப்பு இணக்கப்பாடு என்பது எல்லா மட்டத்திலும் எல்லா விவகாரங்களிலும் இருந்தாலே அதன் நன்மை மக்களைச் சென்றடையும்.
ஏட்டிக்குப் போட்டியாகவும் வன்ம இலக்குடனும் செயற்பட்டால், முடக்க நிலையே தோன்றும். அதுவே, வடமாகாணசபையில் இந்த ஓராண்டிலும் நடந்திருக்கிறது. இந்த முடக்க நிலைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கத்தின் மீதும் சுமத்திவிட முடியாது.
வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் அரசாங்கத்துக்கு வெறுப்பேற்றியுள்ளன.

கடும்போக்குவாத உறுப்பினர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவேண்டிய கட்டாயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் வடமாகாண அரசுக்கும் இருப்பதால்தான் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படக் காரணம். இதனாலேயே, அண்மையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் வடமாகாணசபை உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

சர்வதேச போர்க்குற்ற விசாரணை விடயத்தில் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரசாங்கத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்திருக்கிறது. இதனாலேயே, வடமாகாணசபை மனிதாபிமான விவகாரங்களை கவனிக்குமாறும் இது போன்ற விடயங்களை தாம் சர்வதேசத்துடன் பேசிக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார் மாவை சேனாதிராசா.

இது மத்திய அரசாங்கத்துடன் இணக்கப்பாடின்மை நீடிப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அதேவேளை, அரசாங்கமும் கூட வடமாகாண அரசு ஒத்துழைக்கவில்லையென்று அடிக்கடி கூறிவருகிறது. இரண்டு தரப்புமே இப்பிரச்சினைக்கு முடிவு கட்டத் தயாராகவிருந்தாலும், சுற்றியிருப்பவர்களும் சூழவிருப்பவர்களும் அதற்கு தடையாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், இந்நிலை தொடர்வதால் பாதிக்கப்படுவது வடமாகாண மக்களேயாகும்.

எனவே, மத்திய அரசாங்கத்துடன் ஏதேனுமொரு வழியில் இணங்கிச் செயற்படுவதற்கான வழியை மாகாண அரசு தேடிப்பிடிக்கவேண்டும்.
மத்திய அரசின் போக்கு தவறானதேயென்றாலும், அதற்காக மாகாண அரசு மக்களை நீண்டகாலத்துக்கு பலிக்கடாக்களாக்க முடியாது. சர்வதேச உதவியுடனோ அல்லது வேறெந்த வழிமுறைகளின் ஊடாகவோ இப்பிரச்சினைக்கு தற்காலிகமாகவேனும் தீர்வு காணப்படாதுபோனால், வடமாகாணசபை அமைக்கப்பட்டதன் பயனை மக்களால் அனுபவிக்கவே முடியாது போய்விடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X