2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பேச்சுவார்த்தை, தீர்வுக்கா தேர்தலுக்கா?

Thipaan   / 2014 செப்டெம்பர் 21 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவில் வெளியிடப்படும் இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போது கூறியிருக்கிறார்.

அவரது இந்த கருத்தைப் பற்றி அவரது சகோதரர்களான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் என்ன கூறுகிறார்கள் என்று அறிய நிச்சயமாக மக்கள் விரும்புவார்கள். ஏனெனில், இந்த நால்வரும் 13ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறவர்கள்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இரத்து செய்வதற்காகவே ஜனாதிபதி, தமிழ் தேசிய கூட்;டமைப்புடன் பேச முற்படுகிறார் என அரசாங்கத்தில் எவரேனும் கூற முற்படுவதாக இருந்தால், அவரது மன நிலையை பரிசோதித்துப் பார்ப்பதே நல்லது. ஏனெனில், அவ்வாறானதோர் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்;மைப்பின் தலைவர்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.

அதாவது 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுலாக்க வேண்டும் என்ற தமிழத்; தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையைப் பற்றியே ஜனாதிபதி, கூட்டமைப்புடன் கலந்துரையாட முயற்சிக்கிறார். அந்த விடயத்தில் அவருக்கு எந்தளவு உடன்பாடு இருக்கிறது என்பது வேறு விடயம். ஆனால், அந்த கோரிக்கையைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி, இயன்றதை செய்ய தாம் தயாராக இருப்பதாக எவருக்கோ ஒரு செய்தியை வழங்குவதே அவரது நோக்கமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதிகார பரவலாக்கல் கொள்கையை ஏற்றுக் கொள்பவர் அல்ல. திவிநெகும் சட்டமூலத்துக்கு சகல மாகாண சபைகளினதும் அங்கிகாரத்தைப் பெற வேண்டும் என 2012ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து குற்றப் பிரேரணையொன்றின் மூலம் அப்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை அப்பதவியில் இருந்து நீக்கிய அரசாங்கம், மாகாண சபைகளை இரத்துச் செய்ய வேண்டும் என்ற கருத்தை பரப்பவும் அத்தோடு மாகாண சபைகளை இரத்து செய்ய அல்லது அவற்றின் அதிகாரங்களை குறைக்க கடந்த வருடம் பெரும் முயற்சி எடுத்தது.

அந்த விடயத்தில் ஜனாதிபதியின் இந்த இரு சகோதரர்களும் இந்த இரு அமைச்சர்களுமே முன்னணியில் இருந்தனர். ஆனால், இந்திய நெருக்குதலின் காரணமாக அரசாங்கத்தின் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

மாகாண சபைகளுக்கு முறையாக வழங்க வேண்டிய அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கருதுவதாக இருந்தால், இந்த நால்வரும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. அதேவேளை, மாகாண சபைகளை இரத்து செய்ய வேண்டும் என்று இன்னமும் ஜனாதிபதி கருதுவதாக இருந்தால், அவர் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித பயனும் இல்லை.
இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் மூலம் ஜனாதிபதி இரண்டு குழுக்களுக்கு எதிர்ப்பார்ப்புக்களை வழங்க முயற்சிக்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்திய தலைவர்கள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் அதில் முதலாவது குழுவாகும். அடுத்ததாக அவர் இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கும் ஓர் எதிர்பார்ப்பை வழங்க முயற்சிக்கிறார்.

இந்திய தலைவர்களையும் சர்வதேச தலைவர்களையும் சந்திக்கும் போதெல்லவாம் நல்லிணக்கம் பற்றிய பிரச்சினை எழும் போது, ஏதாவது கூறிவிட்டு சமாளித்து விடுவதே அரசாங்க தலைவர்களின் பழக்கமாக இருக்கிறது. சர்வதேசத்தை சமாளிப்பதற்காக ஒவ்வொரு காலத்துக்கும் அரசாங்கத்திடம் ஒவ்வொரு காட்சிப் பொருளும் இருக்கிறது.

போர்க் காலத்தில், அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவின் தலைமையிலான சர்வ கட்சி பிரதிநிதிகளின் குழுவை, ஐ.நா. பொதுச் சபை உட்பட சர்வதேசத்துக்கு அரசாங்கம் காட்டிக் காட்டி இருந்தது.

அதற்குப் பின்னர், சில காலமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவே, அரசாங்கத்தின் காட்சிப் பொருளாக அமைந்தது. அதன் பின்னர் அக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் காட்டிக் காட்டித் திரிந்தது.

2012ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திக் கொண்டு இருந்த பேச்சுவார்த்தைகளை காட்டி இதோ தீர்வு காணப் போகிறோம் என்று சர்வதேசத்துக்கு அரசாங்கம் கூறிக் கொண்டு இருந்தது. அதன் பின்னர், அண்மைக் காலமாக இனப் பிரச்சினை தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழுவால் தீர்வு காணப் போவதாக கூறிக் கொண்டு இருந்தது.

இந்திய பிரதமர் மோடியின் பதவிப் பிரமான வைபவத்தில் கலந்துகொள்வதற்காக புது டெல்லிக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மே மாதம் 27ஆம் திகதி மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக தாம் நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை கூட்டியிரு;கின்ற போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் கலந்துகொள்ள மறுக்கிறது என்று அப்போதும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

இவ்வாறு, அரசாங்கம் ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொரு காட்சிப் பொருட்களைக் காட்டிக் கொண்டு இருந்த நிலையில் தான், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த மாதம் இந்திய பிரதமரை சந்தித்தனர்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அப்போது இந்தியப் பிரதமர்,  கூட்டமைப்பினருக்கு ஆலோசனை வழங்கிகியிருந்தார். நாடாளுமன்ற தெரிவுக் குழுவை கூட்ட முடியாதிருக்கும் ஜனாதிபதி மோடியின் ஆலோசனைக்கு ஏற்றவாறு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் விரும்புவதாக கூறுகிறார் போலும்.

ஜனாதிபதி இந்தப் பேட்டியை தமது நெருங்கிய நண்பரான சுப்பிரமணியன் சுவாமியின் மகள் சுஹாஸ்னி ஹைதருடனேயே நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். (சுவாமி தீவிர இந்துத்துவ வாதியும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமாக இருந்த போதிலும் அவரது மகள் முஸ்லிம் ஒருவரான முன்னாள் அமைச்சர் சல்மான் ஹைதரின் மகனையே திருமனம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்)
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி விருப்பமாக இருக்கிறார் என்றால், நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அரசாங்கம் கைவிட்டு விட்டதா என்ற கேள்வி எழுகிறது.

இல்லை, அவர் தெரிவுக் குழுவுக்குள் கூட்டமைப்புடன் பேச்சுhர்த்தை நடத்தவே விருப்பம் தெரிவித்து இருக்கிறார் என்று அரசாங்கத்தில் சில அமைச்சர்கள் கூறலாம்.

அவ்வாறாயின், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றியா நேரடியாகவோ தெரிவுக்குழு பேச்சுவார்த்தை நடத்தப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த ஜாதிக்க ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் விரும்புமா என்பது அடுத்து எழும் கேள்வியாகும். இவ்வாறு ஜனாதிபதியின் பேட்டியை அடுத்து பல கேள்விகள் எழுகின்றன.

ஜனாதிபதி, இந்திய அரசாங்கத்துக்கு வழங்கிய பல முக்கிய செய்திகளை இந்து பத்திரிகையின் மூலமாகவே வழங்கியிருக்கிறார். உதாரணமாக 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வொன்றை வழங்கப் போவதாக அவர் 2010ஆம் ஆண்டில் முதன் முதலாக இந்து பத்திரிகைக்கே கூறினார்.

இது உண்மையிலேயே செய்யும் நோக்கத்தோடல்லாது இந்திய அரசாங்கத்தின் நட்பைப் பெற வேண்டியதற்காக கூறப்பட்டதொன்றாகும். ஆனால், இப்போது அது அரசாங்கத்தின் பின்னால் துரத்துகிறது.

அடுத்ததாக, அவர் 2012ஆம் ஆண்டு அதே பத்திரிகையுடன் நடத்திய பேட்டியொன்றின் போது, 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக கூறினார்.

அதுவும் செய்யும் நோக்கத்தோடு கூறியதல்ல என்பது கடந்த வருடம் மாகாண சபைகளை இரத்துச் செய்ய எடுத்த முயற்சியின் மூலம் தெரிகிறது. அப்போதும் இந்திய நெருக்குதலால் அரசாங்கம் சொன்னதை செய்ய வேண்டியேற்பட்டது.

அண்மைக் காலமாக அரசாங்கம், சீனாவுடன் பாரியளவில் பொருளாதார உறவுகளை பலப்படுத்திக் கொண்டுள்ளது. இது நிச்சயமாக இந்திய அரசாங்கம் விரும்பாத நிலைமையாகும். இதன் காரணமாக இந்தியா வேறு வழிகளில் இலங்கையை நெருக்கலாம்.

அதற்காக இந்தியாவுக்குள்ள ஒரு முக்கிய ஆயுதம் இலங்கையின் இனப்பிரச்சினையாகும். எனவே, அந்த விடயத்தில் இந்திய பிரதமரின் மிக அண்மைக் கால ஆலோசனையொன்றை பின்பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக இந்தப் பேட்டியின் மூலம் ஜனாதிபதி இந்தியாவுக்குச் செய்தியொன்றை வழங்கியிருக்கிறார்.

இம்மாதம் 25ஆம் திகதி இரண்டு சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாகவும் பாதகமாகவும் இரண்டு உரைகள் நிகழ்த்தப்பட உள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றும் உரை அவற்றில் அரசாங்கத்திற்குச் சாதகமான உரையாகும். புதிய ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்த் ராத் அல் ஹுசைன், இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையில் முன் வைக்கும் அறிக்கை அரசாங்கத்துக்;குப் பாதகமான உரையாகும்.

தமிழத்; தேசியக் கூட்டமைப்பு பேச்சவார்த்தை நடத்த உடன்பட்டு இருந்தால் நிச்சயமாக அந்தச் செய்தி ஜனாதிபதி, ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றப் போகும் உரையில் உள்ளடக்கப்பட்டு இருக்கும்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் நகருக்குச் செல்லும் ஜனாதிபதி, அங்கு இந்திய பிரதமருடன் கலந்துரையாட சந்தர்பபம் கேட்டிருக்கிறார்.

அந்த சந்தர்ப்பம் கிடைத்தால், அதேவேளை, தமிழ் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் உறுதியாகியிருந்தால், அந்த சந்திப்பின் போதும்; தமிழ் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை ஜனாதிபதி தனக்கு சாதகமாகப் பாவிப்பார்.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் முன் இது போல் எடுத்துரைப்பதற்குப் புறம்பாக கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை தமிழ் மக்களை வென்றெடுப்பதற்கும் தமக்கு உதவும் என அரசாங்கம் கருதுகிறது. குறிப்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு பெரிதும் உதவும். அதற்காக கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை வெகுவாக உதவலாம்.

தற்போதைய நிலையில், சிறுபான்மை மக்களில் மலையக தமிழர்களில் குறிப்பிட்டளவினர் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலொன்றின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிப்பார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக் கால பிரசாரம் மற்றும் வன்முறைகளின் காரணமாக முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே ஆளும் கட்சியை வெறுக்கிறார்கள்.

அது மத்திய, தென், மேல் மற்றும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல்களின் போது தெரிய வந்தது. ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் சில தனித்து போட்டியிட்ட போதிலும் தேர்தலுக்குப் பின்னர் அவை அரசாங்கத்தை ஆதரிக்கலாம் என்பதால் முஸ்லிம்கள் அக்கட்சிகளுக்கும் வாக்களிக்கவில்லை.

மேற்குறிப்பிடப்பட்ட அந்தத் தேர்தல்களின் போது பேருவளை மற்றும் கொலன்னாவ தொகுதிகளில் மட்டுமே ஓரளவுக்காவது முஸ்லிம்கள் ஐ.ம.சு.முவுக்கு வாக்களித்திருந்தார்கள்.

ஆனால் பேருவள, அளுத்கம மற்றும் வெலிபென்ன ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்களுக்குப் பின்னர் அரசாங்கம் அந்த வாக்குகளிலும் பெரும் பகுதியை இழந்திருக்கக் கூடும்.

இனப்பிரச்சினையின் காரணமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை வென்றெடுக்கவும் அரசாங்கம் தவறியுள்ளது. வடக்கில் நடந்த அத்தனை தேர்தல்களிலும் ஆளும் ஐ.ம.சு.மு. அடைந்த படு தோல்விகள் அதனை தெளிவாக காட்டியுள்ளது.

இந்த நிலையில், ஒவ்வொரு சமூகத்தையும் வென்றெடுக்க அரசாங்கம் வௌ;வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதில் ஓர் அம்சமாக பாதுகாப்புச் செயலாளருக்கும் முஸ்லிம் விரோத பொது பல சேனா அமைப்புக்;கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று கூற அரசாங்கம் அண்மையில் பெரும் முயற்சி எடுத்தது.

ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி, முஸ்லிம் பிரதேசங்களில் ஆற்றிய உரைகளுக்கு வெகுவாக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் முஸ்லிம்களை கவர்வதற்காகவே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முற்படுவதும் இதேபோல், வடக்கு - கிழக்கு தமிழர்களை வென்றெடுக்கும் நோக்கத்துக்;காகவே. ஆனால், கூட்டமைப்பு அதற்கு இணங்குவதாக தெரியவில்லை. வவுனியாவில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற தமிழ் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் வருடாந்த மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் அது தெரிகிறது.

இந்த வருட இறுதிக்குள் அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தாம் சாத்வீகப் போராட்டமொன்றை ஆரம்பிப்பதாக அதில் ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. கூட்டமைப்பு தம்முடனான பேச்சுவார்த்தை நிராகரிப்பதை அரசாங்கம் விரும்பாவிட்டாலும் சிங்கள மக்களிடம் தமக்கு ஆதரவு திரட்ட உதவலாம் என்பதனால் இந்தப் போராட்டத்தை அரசாங்கம் விரும்பலாம்.

சிலவேளை, சிங்கள மக்களிடம் கூடுதலான ஆதரவை எதிர்ப்பார்த்து அரசாங்கம் அப்போராட்டங்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடவும் கூடும். அது அரசியல் ரீதியாக தமக்கு சாதகமாக அமையும் என்பதால் தமிழ் தலைவர்களும் அது போன்ற பதற்ற நிலையை விரும்பலாம்.

இது பேச்சுவார்த்தை நடைபெறும் வாய்ப்புக்களை மேலும் அழித்துவிடலாம். இங்குள்ள சிக்கலான பிரச்சினை என்னவென்றால் தீர்வொன்றுக்கு பேச்சுவார்த்தை தவிர்ந்த நாகரிகமானதும் பாதுகாப்பானதுமான வேறு வழி எதுவும் இல்லை என்பதே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X