2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாற்றத்தின் சாட்சி

Thipaan   / 2014 செப்டெம்பர் 24 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில்

ஐக்கிய தேசியக் கட்சி நீண்ட காலத்துக்குப் பின் உண்மையான எதிர்க்கட்சியாக, தேர்தலொன்றை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறது.

தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுவந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை ஊவா மாகாண சபைத் தேர்தலில் அதிகமாகவே பதற்றமடைய வைத்திருக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தவிர்ந்து மற்றைய மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இலகுவான வெற்றிகளையே பெற்று வந்திருக்கிறது.

வடக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முற்றாக இழந்தாலும் கூட, கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்போடு ஆட்சியமைத்திருக்கிறது. ஆனால், ஊவா மாகாண சபைத் தேர்தலில்  கத்திமுனையின் மீது நடந்தே வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இது, அரசாங்கத்தின் மீதான மக்கள் எதிர்ப்பலையின் எழுச்சியாகவும் ஓரளவுக்குக் கொள்ள முடியும். அல்லது, அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டதற்கான அறிகுறியாகக் கொள்ள முடியும்.

உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் என்று தொடர்ச்சியாக தேர்தல்களினால் நிறைந்த இலங்கை போன்றதொரு நாட்டில் ஆளுங்கட்சிக்கு அழுத்தமான போட்டியை கொடுக்கக் கூடிய எதிர்க்கட்சியொன்று மிகவும் அவசியமானது. அதுதான், அரசாங்கத்தை ஓரளவு மக்களோடு நெருங்கி உண்மையாக நடக்க வைக்கும். ஆனாலும், இலங்கையில் அது அவ்வளவு சாத்தியமாக இருக்கவில்லை.

குறிப்பாக, ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலம் முதல் சுமார் 9 ஆண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சியினால் எந்தப் பக்கத்திலும் தன்னைப் பலமான சக்தியாக முன்னிறுத்த முடியவில்லை.

மாறாக, பேச்சளவில் எதிர்க்கட்சியாக மட்டுமே செயற்பட முடிந்தது. இப்படியான நிலையில், தன்னை ஓரளவுக்கு ஒருங்கிணைத்துக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, ஊவாவில் தேர்தலை எதிர்கொண்டு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாவிட்டாலும், எதிர்கால வெற்றிக்கான அடித்தளத்தை பலமாகவே இட்டிருக்கிறது.

ஊவா மாகாண சபைத் தேர்தலை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். (அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலோடு அல்ல) ஏனெனில், ஊவா மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் என்பது சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளினாலும் தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக, மலையகப் பெருந்தோட்ட தமிழ் மக்களின் வாக்குகளால்.
ஊவாவில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடும் போது சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகள் என்று கொள்ளலாம். போர் வெற்றியொன்றை முன்னிறுத்தி இனி மஹிந்த ராஜபக்ஷவால் தேர்தல்களை பெரிதாக எதிர்கொள்ள முடியாது.

அப்படியான நிலையில் சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளும் தமது கட்சி, அரசாங்கத்துக்கான ஆதரவு மற்றும் எதிரான நிலைப்பாடுகளைப் பொறுத்து பிரிந்து செல்லும். எனவே, அறுதிப்பெரும்பான்மை வெற்றியொன்றை மஹிந்த ராஜபக்ஷவால் மீண்டும் பெற முடியாது. ஆக, சிறுபான்மை மக்களின் வாக்குகளும், அவர்கள் தெரிவு செய்யும் உறுப்பினர்களும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மீண்டும் உருவெடுப்பார்கள்.

கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம், எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிகொள்வதற்கான வேட்பாளர் எதிர்த்தரப்பில் இப்போதைக்கு இல்லை. அதுபோக,  ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவ்வளவு ஆர்வமும் கொள்ளவில்லை. ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலை தம்மால் வெற்றிகொள்ள முடியாது என்ற நிலையிலேயே எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.

ஆனால், அதன்பின்னர் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தமது அரசியல் பயணம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் சிந்திக்கலாம்.

தமது தோல்விகளுக்கு மருந்திட்டு வெற்றிகளை நோக்கி பயணிக்கலாம். இந்த இடத்தில் சரத் பொன்சேனாவின் ஜனநாயகக் கட்சி மக்களிடம் மதிப்பிழந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றது என்ற உண்மையையும் கண்டுகொள்ளலாம்.

ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத் தேர்லொன்றை எதிர்கொள்வது மாதிரியான நிலையிலேயே இருந்தது. கட்சிக்குள்ளும், ஆதரவாளர்களுக்குள்ளும் குறிப்பிட்டளவு மதிப்புப்பெற்ற ஹரின் பெர்ணான்டோ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டது பெரும் நம்பிக்கையை அளித்தது.

அது, பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்களை ஒன்றிணைய வைத்து மக்களையும் கட்சி ஆதரவாளர்களையும் நேரடியாகக் சந்திக்க வைத்தது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தயாசிறி ஜயசேகர, ஹரீன் பெர்ணான்டோ உள்ளிட்ட இளைய தலைவர்களுக்கு இளையோருக்கிடையில் பெரும் வரவேற்பு எப்போதுமே இருந்தது.
குறிப்பாக, சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பயணிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில். ஆனால், அது சாத்தியமாகாத நிலையில், அந்த ஆதரவாளர்கள் தேர்தல்களைப் புறக்கணிக்க  தொடங்கிவிட்டனர்.

இப்படியான நிலையில் தான், தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி வட மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தோடு இணைந்து சுமார் மூன்று இலட்சம் வாக்குகளைப் பெற்று முதலமைச்சரானார். இது, இன்றளவும் சாதனையாக இருக்கின்றது. (வாக்குகளின் அடிப்படையில்) ஆனால் சதவீதத்தின் அடிப்படையில் ஹரின் பெர்ணான்டோவே முன்னிலையில் இருக்கின்றார்.

ஆனால், தயாசிறி ஜயசேகர எடுத்த முடிவை ஹரின் பெர்ணான்டோ எடுக்கவில்லை. அவர், தன்னுடைய கட்சியின் வெற்றிக்காகவும், தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கை உணர்த்துவதற்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

அது,  ஊவாவில் ஆட்சியமைக்கும் அளவு வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அவருக்கும் குறிப்பிட்டளவு வெற்றியைக் கொடுத்திருக்கிறது. அத்தோடு, அவரை கட்சியின் முக்கியஸ்தர்கள் வரிசையில் இடம்பிடிக்க வைத்திருக்கிறது. அதாவது, செயற்குழுவுக்குள் அவரும் உள்ளடக்கப்படவுள்ளார். அதுவும், சஜித் பிரேமதாஸ மீண்டும் கட்சியின் பிரதித் தலைவராக பதவியேற்றதனால்  அது இன்னமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலோடு ஒப்பிடும் போது அரசாங்கததுக்;கு இம்முறை சுமார் 75,000 வாக்குகள் குறைந்திருக்கின்றன. ஆனால், மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 145,000 வாக்குகளை அதிகமாகப் பெற்றிருக்கிறது.

இது, பெரும் மாற்றமொன்றின் சாட்சி. இதில், குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், ஊவாவில் அரசாங்கத்தைக் தக்க வைப்பதற்கு மலையகப் பெருந்தோட்ட மக்களின் சுமார் 60,000 வாக்குகள் உதவியிருக்கின்றன. ஓப்பீட்டளவில் இது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த (சுமார் 40,000) மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளைவிடவும் அதிகமென்று கொள்ள முடியும்.

இன்னொருபுறம் 35,000 அளவிலுள்ள முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ்- அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணிக்குள் சிதறுண்டுவிட்டது. இதனால், அவர்களினால் ஒரு உறுப்பினரைக் கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற சோகமும் மேலெழுந்து நிற்கிறது. 2009ஆம் ஆண்டுத் தேர்தலிலும் கூட முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் ஊவாவில் வெற்றி பெற்றிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஊவா மாகாண சபையில் சிங்கள மக்களின் வாக்களிப்பில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை அல்லது அண்மைக்கால தேர்தல்களில் வாக்களிக்காது இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் நம்பிக்கையாக தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகி விட்டனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஊவாவில் அதிகளவான தேர்தல் வன்முறைகளும், அத்துமீறல்களும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

அதுவும், வரட்சி நிவாரணங்களை தேர்தல் காலத்தில் வழங்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஊவாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வரட்சி நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

இப்படியான நிலைகளைத் தாண்டியும் சிங்கள மக்களின் வாக்களிப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பதைக் கண்டு கொள்ள முடிகிறது.

அதுவும், ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலொன்றை எதிர்கொள்வது மாதிரியே ஊவா தேர்தலை எதிர்கொண்டிருந்தனர். ஆனாலும், ஏற்பட்டிருக்கிற வீழ்ச்சியை யாராலும் நிராகரித்துவிட முடியாத அளவுக்கு மாறிவிட்டிருக்கிறது.

இப்படியான நிலையில், அடுத்த பாராளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருக்காது. ஜனாதிபதித் தேர்தலையும்- நாடாளுமன்றத் தேர்தலையும் வேறுவேறாக அணுக வேண்டிய தேவையுள்ளது. எனவே, இப்போதுள்ள அறுதிப்பெரும்பான்மையுள்ள நாடாளுமன்றத்தை விரைவாக கலைத்து அரசாங்கம் சிக்கலை தேடிக்கொள்ளாது.

ஆக, தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் முழுமையான பதவிக்காலம் முடிந்த பின் 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அப்படி நோக்கினால் அதற்கு இன்னமும் 19 மாதங்கள் இருக்கின்றது.

19 மாதங்கள் என்பது ஐக்கிய தேசியக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்திருக்கின்ற பெரும் காலம். இதனை எவ்வாறு கையாண்டு இன்னமும் மக்களிடம் நெருங்கிச் செல்கின்றனவோ அல்லது அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு மனநிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு வருகிறார்களோ அது அடுத்த பாராளுமன்றத் தேர்தலை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்கும்.

அதற்குள், கட்சிகளை இன்னமும் பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. உறங்கு நிலையில் இருக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கு ஊவா மாகாண சபைத் தேர்தலை உதாரணமாக காட்டி முன்னுக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக, அதை, ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடிந்தால் வெற்றிக் கனவை நனவாக்குவது தொடர்பில் சிந்திக்க முடியும்.

மாறாக, மீண்டும் கட்சியின் சிரேஷ்ட தலைமைகள் தங்களுக்குள் அதிகார போட்டியை முன்னிறுத்தி சண்டையிட்டுக் கொண்டிருந்தால், இப்போது தோற்றம் பெற்றுள்ள ஆட்சிக்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கான களங்கள் இல்லாமற்போகலாம். அப்படிப்போனால், மீண்டும் 2022 வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அது, சிலவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்து இன்னும் அதிகமானவர்களை வெளியேற்றிவிடும்.

போர் வெற்றிகள் என்ற உணர்ச்சி வாக்குகள் இனி இல்லை. இனி, வாழ்க்கைச் செலவு, ஆட்சியின் மீதான ஆதரவும் அதிருப்தியும், சர்வதேசத்தின் இலங்கை மீதான அழுத்தங்களை முன்னிறுத்திய தேர்தல் உணர்ச்சியூட்டும் நடவடிக்கைகள் மற்றும் இனக்குரோத எண்ணங்களின் மீள் எழுச்சிக்கான செயற்பாடுகள் என்பனவே தேர்தலின் முடிவுகளைத் இலங்கையில் தீர்மானிக்கப்போகின்றன. இவற்றைக் கடந்து ஜனநாயகத்தை உண்மையாக நிலைநிறுத்தும் நீதியான தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அது இறுதி முடிவில் அதிகமாக தாக்கம் செலுத்தும்.

ஆக, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி இனிவரும் 19 மாதங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பட்சத்தில் அறுதிப்பெரும்பான்மையுள்ள அரசாங்கமொன்றை அமைக்க முடியாவிட்டாலும், கூட்டணிகளின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றும் சூழ்நிலைகள் இருக்கின்றது.

இங்கு இன்னொரு விடயம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. தெற்காசிய அரசியல் அதிகம் உணர்ச்சியூட்டும் நடவடிக்கைகளினால் தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கிறது. அப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஏதாவது நிழ்ந்தால் மாற்றங்கள் சாத்தியமில்லாமல் போகலாம்.

அதனை யாரும் மறுப்பதற்கில்லை. அதுவும், இலங்கை போன்றதொரு நாட்டில் அது இயல்பானது. ஆனாலும், ஊவா மாகாண சபைத் தேர்தல் உணர்த்துவது என்னவோ ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிகள் நோக்கிய பயணத்தின் ஆரம்ப அறிகுறிகளையே....!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X