2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குப்புற கவிழ்க்குமா போர் வெற்றி?

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ள ஆறுதல் வெற்றி, அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட சிவப்பு சமிக்ஞை என்றே எல்லோராலும் கருதப்படுகிறது.

ஊவா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் அரசியல் மாற்றத்துக்கு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காரணத்தை கூறிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், ஊவாவில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் திடீர் எழுச்சிக்கும் அரச தரப்பின் பின்னடைவுக்கும் தனியொரு காரணம் மட்டுமே இருக்கிறதென்று கருதமுடியவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள்தான், ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவில்
பிரதிபலித்திருக்கின்றன. இது தேசிய அரசியலில் திருப்பமொன்று ஏற்படுவதற்கான பிரகாசமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தக் கட்டத்தில் ஊவா மாகாணசபையில் தாம் பெற்றுள்ள மயிரிழை வெற்றியைக்கூட, அரசாங்கத்தரப்பு பெரும் சாதனையாக சுட்டிக்காட்டி தப்பிக்கொள்ளப் பார்க்கிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்த தமக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை இதுவென்று, தேர்தல் முடிவு வெளியான பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். அதுபோலவே, பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும் இது போர் வெற்றியால் ஈட்டப்பட்ட வெற்றியென்று கருத்து வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு அரசாங்க அதிகாரியேயாவார். அரசு அதிகாரிகள், அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசுவது மரபல்ல.  ஆனாலும், அரசாங்கத்துக்கு சார்பாக, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பிரமுகர் போல பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிடுவதொன்றும் புதிய விடயமல்ல. இப்போது அதுவல்ல விவகாரம், அவர் வெளியிட்டுள்ள கருத்தே பிரதானம்.

அதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சரி, பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும் சரி போரில் தாம் ஈட்டிக்கொடுத்த வெற்றியே, தமது அரசியல் வெற்றியின் அடிப்படையென்று தெளிவாக கூறியிருக்கின்றனர்.

இதனைத்தான், கலாநிதி தயான் ஜெயதிலக தமது அண்மைய ஆய்வொன்றில் போர் வாதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கமே, இந்தப் போர் வாதம் மூலம்தான் தாம் ஊவாவில் மயிரிழையில் வெற்றியை பெற்றதாக நம்புகிறது என்றால், அரச தரப்பு ஆபத்தின் உச்சியிலிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும், இன்னமும் போர் வாதத்தின் மீதுதான் அரசாங்கம் நிற்கிறது.  போர் வாதத்தின் மீது அரசாங்கம் நின்றுகொண்டிருக்க, அதன் அடித்தளமோ ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஊவா மாகாணசபைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் கடந்த 20ஆம் திகதி நடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் கணிசமாக குறைந்துள்ளன. அதற்கும் அரசாங்கம் காரணமொன்றை குறிப்பிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஊவா மாகாணசபைத் தேர்தல், போர் வெற்றி கொள்ளப்பட்டு 3 மாதங்களுக்குள் நடத்தப்பட்டது என்பதால், போர் வெற்றி அலை தமக்கு வீசியதென்று ஆளும் கட்சி தெளிவாகவே கூறியிருக்கிறது.

அவ்வாறாயின், இப்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை, போர் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அந்த போர் வெற்றி அலை அடங்கத் தொடங்கிவிட்டதென்றே கருதவேண்டும். ஆனாலும், அதே போர் வெற்றி அலையே தம்மை காப்பாற்றியுள்ளது என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றனர்.

அரசாங்கம் தனியே போர் வெற்றி வாதத்தையே தமது வெற்றிக்கான காரணமாக கருதுகின்றபோதிலும், அந்த அலை ஓய்ந்துவருகிறது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது முக்கியமானது.

தற்போது தேசிய அளவிலான தேர்தலுக்கு குறிப்பாக, ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிவரும் அரசாங்கத்துக்கு ஊவா தேர்தல் முடிவு நிச்சயம் பதற்றத்தை தோற்றுவித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அரசாங்கத்தின் வாக்கு வங்கி தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்துவரும் நிலையில், கூடிய விரைவில் ஜனாதிபதித் தேர்தலை மட்டுமன்றி, நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்துவதற்கும் கூட அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளது.

போர் வெற்றி அலை மட்டுமன்றி, அபிவிருத்தி அலையும் கூட அரசாங்கத்துக்கு பெரிதும் கை கொடுக்கவில்லை என்றே கூறவேண்டும். ஏனென்றால், போர் முடிவுக்கு வர முன்னரும் சரி, அதற்குப் பின்னரும் சரி தெற்கில் அபிவிருத்தித்திட்டங்களுக்காக கொட்டப்பட்ட நிதியின் அளவு சாதாரணமானதல்ல.

இருந்தாலும், அவையெல்லாம் அரசாங்கத்தின் வாக்கு வங்கியை பாதுகாக்கவில்லை.

தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலுக்கு பின்னர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்துக்கு வாக்குகளை சேகரிப்பதில் தோல்வி கண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார். அக்கருத்தை கூறியதற்காக அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினதும் விசனத்தையும் சந்திக்க நேர்ந்தது.

இப்போது, ஊவா மாகாணசபைத் தேர்தலில், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் பதுளைத்தொகுதியில் ஆளும் கட்சி தோல்வியை தழுவியிருக்கிறது. அதற்கு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ள காரணம் முக்கியமானது.

அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை, எல்லாவற்றையுமே ராஜபக்ஷ குடும்பத்திலுள்ளவர்களின் அமைச்சுகள்தான் கையாள்கின்றன.
இதனால், அமைச்சர்களால் சொந்த தொகுதிக்கு கூட எதையும் செய்யமுடியவில்லை. அதுதான் நிமால் சிறிபால டி சில்வாவின் தோல்விக்கு காரணமென்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது குறிப்பிடத்தக்கதொரு காரணமென்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதி வசமும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வசமும் உள்ள அமைச்சுகளின் ஊடாகவே பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதனால், அமைச்சர்கள் செல்லாக்காசு போல ஆக்கப்பட்டுள்ளனர்.

ஏன், விமல் வீரவன்சவின் அமைச்சுக்கு கூட கடந்த 2 ஆண்டுகளில் 500 மில்லியன் ரூபாய் கடனே மிஞ்சியிருக்கிறது.  அதுவும் வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சு அது. அதன் நிலை இப்படியென்றால், ஏனைய அமைச்சுக்களின் நிலையை கேட்க வேண்டியதில்லை.
அரசாங்கத்தின் பின்னடைவுக்கு இப்படியே பல காரணங்களை கூறிக்கொண்டிருக்கலாம்.

இவையெல்லாம் ஆளும் கட்சியை தேர்தலில் வீழ்த்தும் என்பதை முன்னரே அரசாங்கம் அறிந்திருந்தது. அதனாலேயே  சாம, பேத, தான, தண்டம் என்று எல்லா வழிமுறைகளையும் கையாண்டு தேர்தலில் வெற்றி பெற முயன்றது. இதுபோன்றதொரு மோசமான மாகாணசபைத் தேர்தல் இதற்கு முன் நடந்ததில்லையென்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே கூறியுள்ளது.

இருந்தாலும், அரசாங்கத்தினால், குறைந்தளவு ஆசன மற்றும் வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றியை பெறமுடிந்துள்ளது. முந்திய தேர்தல்களுடன் ஒப்பிட்டு நோக்கினால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஏற்பட்டுவரும் தொடர் வீழ்ச்சியை தெளிவாகவே புரிந்துகொள்ளலாம்.

2009ஆம் ஆண்டு ஊவா மாகாணசபைத் தேர்தலில் 72.39 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கடந்த வாரம் நடந்த தேர்தலில் 51.24 சதவீதமான வாக்குகளே கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட 21.15  சதவீதமான வாக்குகளை அரசாங்கம் இழந்திருக்கிறது.

அரசாங்கத்தின் கோட்டையென்று கூறப்பட்ட மொனராகலை மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு 81.32 சதவீதமான  வாக்குகளை பெற்ற ஆளும் கட்சியால், இம்முறை 58.34 சதவீதமான  வாக்குகளையே பெற முடிந்திருக்கிறது. இது ஆளும் கட்சியின் வாக்கு வங்கியின் வீழ்ச்சி குறித்த வெளிப்படையான தோற்றம்.

இதை விட மறைமுகமாக நிகழ்ந்துவரும் மாற்றம் – வீழ்ச்சியின் புலப்பாடொன்றும் உள்ளது.  அது என்னவென்றால், இந்த 5 ஆண்டுகளுக்குள் புதிய வாக்காளர்கள் எந்தளவுக்கு ஆளும் கட்சியிலிருந்து விலகியுள்ளார்கள் என்பதை காட்டுவதாகும்.

2009ஆம் ஆண்டு  ஊவா மாகாணசபைத் தேர்தலில் 418,906 வாக்குகளை பெற்ற ஆளும் கட்சியால், இம்முறை 349,906 வாக்குகளையே பெறமுடிந்திருக்கிறது. இக்காலகட்டத்தில் ஆளும் கட்சிக்கு 69 ஆயிரம் வாக்குகள் குறைந்திருக்கின்றன.

ஆனால், கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகையை விடவும், இம்முறை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை 67 ஆயிரத்தினால் அதிகரித்திருந்தது.

வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஈடாக, ஆளும் கட்சியின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், புதிய வாக்காளர்களை ஆளும் கட்சியால் கொஞ்சம் கூட ஈர்க்கமுடியவில்லை என்பதேயாகும். புதிய வாக்காளர்களை கவர்வதென்பது இன்று முதன்மையான விவகாரம்.

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி புதிய வாக்காளர்களை கவர்ந்ததே அதன் பிரமாண்ட வெற்றிக்கான காரணம்.

போருக்கு பின்னர், வளர்ந்த - வாக்குரிமை பெற்றதொரு சமூகம் நாட்டில் உருவாகிவிட்டது. போரின் பாதிப்பையோ, அதன் விளைவுகளையோ பெரிதாக அனுபவிக்காத சமூகமொன்று உருவாகி வருகிறது. அந்தச் சமூகத்தை அரசாங்கத்தின் போர் வெற்றி வாதம் ஒருபோதும் கவரப்போவதில்லை. அதுவும், நவீன தகவல் தொடர்பு யுகத்தில் நன்கு பரிச்சயமான அந்த இளம் சமூகம் நன்மை, தீமைகளை இலகுவாக புரிந்துகொள்ளும், அறிந்துகொள்ளும் திறன் படைத்ததாகவும் இருக்கிறது. இத்தகையதொரு சமூகம் வாக்குரிமையை பெறும்போது அது அரசாங்கத்துக்கு நிச்சயம் ஆபத்தானது.

அண்மையில், ஐ.தே.க.வின் ஊடாக இளைஞர்களுக்கு தகவல் தொடர்பு பயிற்சி வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டபோது அரசாங்கம் மிரட்சியடைந்தது. அதற்கு அமெரிக்காவே உதவியளிப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. இது பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைத்தளப்புரட்சி ஒன்றுக்கான அடித்தளமென்று அரசாங்கம் கூறியது நினைவிருக்கலாம். இவற்றினூடாக இலகுவாகவே பிரசாரத்தை முன்னெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதை ஏற்கத்தான் வேண்டும். அதனால்தான் அரசாங்கம் அச்சம் கொண்டது.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதற்கு இளம் சமூகம் அதனை நோக்கித் திரும்பியுள்ளதும் ஒரு காரணம்.

மாகாணசபைத் தேர்தலில் 5 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சி நிச்சயம், தேசிய அளவிலான தேர்தலிலும் பிரதிபலிக்குமென்பதில் ஐயமில்லை.

கடந்த கால தேர்தல் அனுபவங்களின் படி, மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி பெறும் வாக்குகளை விட, ஜனாதிபதித் தேர்தலில் குறைந்தளவு வாக்குகளையே பெறமுடிந்திருக்கிறது.

எனவே, தற்போது மாகாணசபைத் தேர்தல்களில் பெற்றுள்ள வாக்குகளையேனும் ஆளும் கட்சியால், ஜனாதிபதித் தேர்தலில் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பது சந்தேகம்தான்.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில், எதிர்க்கட்சியின் வாக்கு வீதம் இன்னும் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. இது அரசாங்கத்துக்கு உள்ள முக்கியமான சவால்.

எனவேதான், எந்த நெருக்கடி வந்தாலும் எதிர்வரும் ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தலை மட்டுமன்றி, கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தலையும் கூட அரசாங்கம் நடத்த முற்படுமென்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. சரியாக கணிப்பிட்டு காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது அரசியலில் முக்கிய திருப்பமெனலாம்.

இதுவரை உட்பூசல்தான் ஐ.தே.க. வுக்கு முதல் எதிரியாக இருந்த நிலையில், அவற்றை மூட்டை கட்டிவைத்துவிட்டு இளம் தலைமுறையை முன்னிலைப்படுத்த கட்சியின் மூத்த தலைவர்கள் தயாராகியுள்ளனர்.

அவர்களின் விட்டுக்கொடுப்பும் இளம் தலைமுறையினரின் பரந்த மனப்பாங்கும் மீண்டும் ஐ.தே.க. வை அரியணை ஏற்றுவதற்கு வழியேற்படுத்தக்கூடும்.

குடும்ப அதிகாரம் ஓங்கியமையும், போர் வெற்றி அலையும், சிறுபான்மை மக்களின் நம்பிக்கையீனமும் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகியுள்ளன.

ஆனாலும், ஊவா தேர்தலில் பெற்ற மயிரிழை வெற்றிக்கு போர் வெற்றிதான் காரணமென்று காண்பிக்க முற்பட்டதைக்கொண்டே, இவற்றுக்கு முடிவு கட்ட அரசாங்கம் இன்னமும் தயாராக இல்லையென்பதை  உறுதிசெய்ய முடிகிறது.

எனவே, இந்த அரசாங்கத்தை எந்த வெற்றி வாதம் உச்சத்துக்கு கொண்டுசென்றதோ, அதே வெற்றி வாதம்தான் அதனைக் கீழிறக்கவும் காரணமாகப் போகிறது போலவே தென்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X