.jpg)
எதிரும் புதிருமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும் நெருங்கி வருகின்ற அரசியல் சூழ்நிலை மலர்ந்திருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்கு முப்பெரும் விழா என்பது முக்கியமான விழா. பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, தி.மு.க. தோன்றிய நாள்- என்று மூன்று முக்கிய நிகழ்வுகளும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முக்கியம். ஒவ்வொரு வருடமும் பெரியார் விருது, அண்ணா விருது, பாவேந்தர் பாரதி தாசன் விருது, கலைஞர் விருது என்று அறிவித்து செப்டம்பர் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கொண்டாட்டங்கள் நடக்கும். குறிப்பாக செப்டம்பர் 15-ஆம் தேதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அந்த விருதினை வழங்கி விழாவினை கொண்டாடுவார்கள்.
தி.மு.க. சில நேரங்களில் இந்த முப்பெரும் விழாவை மாநாடு போல் கொண்டாடுவார்கள். பல நேரங்களில் அண்ணா அறிவாலய விழாவாக முடித்துக் கொள்வார்கள. இந்த முறை அப்படித்தான் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்திலேயே “முப்பெரும் விழாவினை” முடித்துக் கொண்டார்கள். விழாவினை சிம்பிளாக முடித்தாலும், விழாவில் ஆற்றிய உரைகள் புதிய அரசியக் கூட்டணிக்கு விதை போட்டிருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பட்ட படு தோல்வியை மாற்றிக் காட்டுவதற்கு அக்கட்சிக்கு பலமான அணி தேவை. ஆனால் அந்த அணி உருவாவதில் சிக்கல் நீடித்தது. அதற்கு முக்கியக் காரணம் தி.மு.க.விற்குள் நடைபெற்ற உள்கட்சி பிரச்சினை. தயாநிதி மாறன், மு.க. அழகிரி ஆகியோரெல்லாம் தி.மு.க.விற்குள் நடக்கும் “அதிகாரப் போட்டியில்” இருந்து விலகி இருக்கும் போது, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகிய இருவருக்கு இடையில் அந்தப் போட்டி உருவானது. அதுவே பிறகு மு.க. ஸ்டாலினுக்கும், கலைஞர் கருணாநிதிக்குமான போட்டி என்றானது. “2016ல் முதல்வர் ஸ்டாலின்” என்று சமூக வளைதளங்களில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் துவங்கிய பிரச்சாரமே இது மாதிரி பனிப்போர் பத்திரிக்கைச் செய்தியாவதற்கு காரணம்.
“எனக்கும், தலைவருக்கும் போட்டி இல்லவே இல்லை” என்று மு.க. ஸ்டாலின் தனியாக ஒரு அறிக்கை விட்டு நிலமையை விளக்கியிருந்தாலும், “கலைஞர் கருணாநிதிதான் அடுத்த முதல்வர் என்று அவர் இன்னும் அறிவிக்கவில்லை” என்ற குற்றச்சாட்டு ஸ்டாலின் மீது சுமத்தப்பட்டது. அதை நீக்க முப்பெரும் விழாவினைப் பயன்படுத்திக் கொண்டார் ஸ்டாலின். அக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், “பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் கற்பனைச் செய்திகளை யாரும் நம்பிட வேண்டாம். நமக்கு இன்று மட்டுமல்ல. என்றும் “நம்முடைய தலைவர்” கலைஞர் அவர்கள்தான்.
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினை தலைவர் கலைஞர்தான் முதல்வராக இருந்து நடத்துவார். வருகின்ற 2016ல் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில்தான் ஆட்சி அமையப் போகிறது” என்று அழுத்தம் திருத்தமாக மட்டுமின்றி சற்று ஆவேசமாகவே பேசினார். இந்தப் பேச்சு கட்சிக்குள் நிலவிய “அடுத்த முதல்வர் ஸ்டாலினா, கலைஞர் கருணாநிதியா” என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து, “அடுத்த முதல்வர் கலைஞர் கருணாநிதிதான்” என்பதற்கான அறிவிப்பு வெளியிட முப்பெரும் விழா அமைந்தது. அரங்கத்திற்குள் இருந்த அத்தனை தி.மு.க. தொண்டர்களையும் இப்பேச்சு உற்சாகப்படுத்தியது ஒரு புறமிருக்க, மற்ற கூட்டணிக் கட்சிகள் அல்லது கூட்டணிக்கு வர விரும்பும் வேறு கட்சிகள் அனைத்திற்குமே, “தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதிதான்” என்ற செய்தியைச் சொன்னது.
இதே விழாவில் பேசிய தி.மு.க.வின் பொதுச் செயலாளர் அன்பழகன் எப்போதுமே இப்படிப் பேசியதில்லை. இருபது வயது இளைஞன் போல் அவர் ஆற்றிய உணர்ச்சி மிகு உரை ஸ்டாலின் போன்றவர்களுக்குக் கூட பாடமாக அமைந்தது. குறிப்பாக அவர் தனது உரையில், “எல்லோரும் கலைஞருடைய குடும்பம். திராவிட முன்னேற்றக் கழகத்தில் கலைஞரை மிஞ்சியவன் எவனும் இல்லை. கலைஞரை விடப் பெரிய தியாகி எவரும் இல்லை. கலைஞரை விட மிகப்பெரிய எழுத்தாளன் யாருமில்லை. கலைஞரை விட அரசியல் யூகி, முதலமைச்சராக ஐந்து முறை இருந்தவர்கள் யாரும் இல்லை. கலைஞரை விட நாடகங்கள் எழுத வல்லவர்கள் யாருமில்லை. கலைஞரைப் போல் போராட்டங்களைக் கண்டு, அந்த போராட்டங்களை நடத்தியவர் யாரும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இன்று தமிழகத்திலே கலைஞரைத் தவிர தலைவராக இருப்பவர்கள் வேறு யாருமில்லை” என்று ஆணித்தரமாகப் பேசினார்.
பொதுச் செயலாளர் அன்பழகனின் இந்தப் பேச்சை கலைஞர் அரங்கில் இருந்த கட்சி முன்னனித் தலைவர்கள் அனைவரும் வாயில் விரல் வைத்தவாறு அதிர்ச்சியில் உறைந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். “அடுத்த தலைவர் ஸ்டாலின்” என்ற பிரச்சாரம் கட்சிக்குள் நடைபெற்று, அதனால் குழப்பங்கள் எழுந்த சூழலில், “தி.மு.க.வில் கலைஞரை மிஞ்சியவன் எவனும் இல்லை” என்ற கோபக்கணல் தெரிக்கும் அன்பழகனின் பேச்சில் ஆயிரத்தெட்டு அர்த்தங்கள் மறைந்து கிடக்கின்றன என்று கூறும் தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர், “தலைவர் கலைஞருக்கோ, பேராசிரியர் அன்பழகனுக்கோ ஸ்டாலினுக்கு கட்சித் தலைவர் பொறுப்பைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணம் இல்லை. ஸ்டாலினுக்கு அதிகாரம் கொடுக்கக் கூடாது என்றும் நினைக்கவில்லை. ஆனால் கடந்த பாராளுமன்றத்தில் ஸ்டாலினுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. பிரமாதமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் கூட்டணி விஷயத்திலும், வேட்பாளர் தேர்விலும் அவர் செய்த குழப்பம் தி.மு.க.விற்கு பொல்லாத தோல்வியை கொடுத்து விட்டது. அது பரவாயில்லை. தோல்வி பற்றி கலைஞரே கருத்துக் கூறாமல் இருந்த நேரத்தில் “தோல்விக்கு பொறுப்பேற்று என் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று ஒரு டிராமா நடத்தியதை கலைஞரும் ரசிக்கவில்லை. அன்பழகனும் ரசிக்கவில்லை. அது மட்டுமின்றி தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் தலைவர் ஏற்படுத்த விரும்பிய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் ஸ்டாலின் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. அதை விட முக்கியமாக ஸ்டாலின் போகிற மாவட்டங்களில் எல்லாம் இரு கோஷ்டிகளை உருவாக்கி விட்டு வந்து விடுகிறார் என்ற கோபம் கலைஞருக்கும் இருக்கிறது. பொதுச் செயலாளர் அன்பழகனுக்கும் இருக்கிறது. அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் முப்பெரும் விழாவில் அன்பழகன் அவ்வளவு ஆத்திரமாக பேசினார்” என்றார்.
இவர்களுக்குப் பிறகு பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி அன்பழகன் பேசியது பற்றியோ, கருணாநிதிதான் அடுத்த முதல்வர் என்று ஸ்டாலின் அறிவித்தது பற்றியோ கருத்துச் சொல்லவில்லை. ஏனென்றால் தி.மு.க.வில் தன்னைத் தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளர், தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஸ்டாலின் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்பதெல்லாம் கலைஞர் கருணாநிதிக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் அன்பழகன் சொன்ன “கலைஞரைத் தவிர வேறு தலைவர் இல்லை” என்பதையும், ஸ்டாலின் சொன்ன “கலைஞர்தான் அடுத்த முதல்வர்” என்பதையும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர தன் பேச்சில் அதற்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு பிரச்சினைக்கு அவர் தன் பேச்சில் முக்கியத்துவம் கொடுத்தார். அது “பாராளுமன்றத் தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்று ஜனநாயகம் தோற்று விட்டது. ஆகவே ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபடுவோம்” என்று பேசியது. இந்த “அனைவரும் ஒன்றுபடுவோம்” என்ற பேச்சு தி.மு.க. தொண்டர்களுக்கு என்பதை விட, வேறு கட்சிகளுக்குத்தான் முக்கியமாகச் சொல்லப்பட்டது.
இதை முதலில் புரிந்து கொண்டவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ. கலைஞர் கருணாநிதியிடம் அரசியல் செய்தவர் என்பதால் கருணாநிதியின் பேச்சை நன்றாகவே புரிந்து கொண்டார். “அண்ணா அறிவாலயத்தில்” இந்த கூட்டம் முடிந்த பிறகு பூந்தமல்லியில் நடைபெற்ற ம.தி.மு.க.வின் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, “ஜனநாயத்தைக் காப்பாற்ற அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் சேர வேண்டிய சூழ்நிலை வரலாம்” என்று பொடி வைத்துப் பேசினார். அத்துடன் விடவில்லை. “எதிரிகளை வீழ்த்த எந்த நண்பனுடனும் சேருவோம்” என்று அறைகூவல் விடுத்தார். அதைவிடவெல்லாம் முக்கியமாக தென்றல் புயலானது போல் அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை, குறிப்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தார். கடந்த மூன்று வருடங்களில் வைகோ அ.தி.மு.க. அரசை சாடியது போல் எந்த கட்சியும் இதுவரை சாடவில்லை. ஏன் முக்கிய எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமே அப்படிப் பேசவில்லை. ஒட்டுமொத்த “அ.தி.மு.க. எதிர்ப்பு” பேச்சை அலைகடல் போல் வைகோ பூந்தமல்லிப் பொதுக்கூட்ட மேடையில் நின்று கொண்டு பெரும் இரைச்சல் போட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு ஆவேசம் கொப்பளிக்கும் உரை அது. அதுவும் குறிப்பாக கொட்டும் மழையில் கோடை வெயில் வெப்பம் போல் அமைந்தது அந்த உரை.
இப்படி அ.தி.மு.க.விற்கு எதிராக பேசிய அதே நேரத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது என்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார் வைகோ. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இப்படியொரு சான்றிதழுக்காகவே தி.மு.க காத்திருக்கிறது. அதுவும் அந்தக் கட்சி தவிர வேறு கட்சித் தலைவர்களிடமிருந்து அந்த பாராட்டு வர வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது. இப்போது முதன் முதலாக வைகோவிடம் இருந்து தி.மு.க.விற்கு பாராட்டு கிடைத்திருக்கிறது.
அண்ணா பிறந்த நாள் தி.மு.க.வையும், ம.தி.மு.க.வையும் ஒரே கோட்டில் பயணிக்க வைக்க முயற்சித்திருக்கிறது. “ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் ஒன்று படுவோம்” என்ற கலைஞர் கருணாநிதியின் கருத்தை முதலில் உள்வாங்கி, “ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஓரணியில் சேர வேண்டிய சூழல் எழலாம்” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் வைகோ. “கலைஞர்தான் அடுத்த முதல்வர்” என்று ஸ்டாலின் அறிவித்த பிறகு வந்துள்ள முன்னேற்றம் இது. ஏனென்றால் கலைஞரை விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஆனால் ஸ்டாலினை இவர்கள் மூன்று பேருமே ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டுவார்கள். அது இப்போது மட்டுமல்ல. கடந்த காலங்களிலேயே அப்படி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இது போன்ற சூழ்நிலையில் வைகோவின் பேச்சும், கலைஞர் கருணாநிதியின் பேச்சும் ஒரே தொணியில் ஒலிக்கிறது.
அதுவும் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வினரின் அராஜகம் எதிர்கட்சிகளை மிரள வைத்துள்ளது. அ.தி.மு.க.வை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்ற சிந்தனைத் தெளிவு உருவாகியிருக்கிறது. அப்படியொரு ஒருங்கிணைப்பு கலைஞர் கருணாநிதி தலைமையில்தான் நடக்க முடியும் என்று வைகோ நினைக்கிறார். அதுதான் “ அண்ணா அறிவாலயம்” (தி.மு.க.வின் தலைமை அலுவலகம்) தெரிவித்த கருத்துக்களுக்கு “தாயகம்” (ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகம்) வரவேற்பு கொடுத்திருக்கிறது. இது முன்னெடுத்துச் செல்லப்பட்டால், தமிழகத்தில் 2001, 2004 ஆகிய தேர்தல்களில் ஏற்பட்டது போன்ற “ஜம்போ கூட்டணி” 2016 சட்டமன்றத் தேர்தலிலும் உருவாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக செப்டம்பர் 27-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்புக் கூறவிருக்கிறது. அந்தத் தீர்ப்பின் சாதக பாதகங்களும் தமிழக அரசியலை உலுக்கும். அதற்கு முன்பு வைகோவும், கலைஞர் கருணாநிதியும் ஒரே திசையில் பயணிப்பது மற்ற கட்சிகளும் இந்த திசை நோக்கி வருவதற்கு ஒரு பாலமாக அமையும் என்பதே இன்றைய நிலை.