2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பேராபத்தின் அறிகுறி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

'பர்மாவின் பின்லேடன்' என்று வர்ணிக்கப்படும், மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான அஸின் விராது தேரருக்கு, இலங்கையில் அளிக்கப்பட்ட வரவேற்பு வெளியுலகில் கூடுதல் கவனத்தை பெற்றிருக்கிறது.

சர்வதேச ஊடகங்களில் அஸின் விராது தேரருக்கு இலங்கையில் அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் அவரது உரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

பொது பல சேனா அமைப்பு கடந்த 28ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அஸின் விராது தேரர் இலங்கை வந்திருந்தார்.

அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அறிந்து முஸ்லிம் அமைப்புகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அவரது வருகை இலங்கையில் இன ரீதியான பதற்றத்தை ஏற்படுத்துமென்று சுட்டிக்காட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியிருந்தது.  ஆனால், அக்கடிதம் எடுபடவில்லை.

அப்போது தாம் கொழும்பில் இல்லையென்றும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தேன் என்றும் ஜனாதிபதி தரப்பில் நியாயம் கூறப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

ஏனென்றால், அரசாங்கத்தின் முழுமையான ஆசீர்வாதத்துடனேயே அஸின் விராது தேரர் கொழும்பு வந்திருந்தார் என்பதை அவருக்கான வசதிகள், ஏற்பாடுகளிலிருந்து உணரமுடிகிறது.

யார் இந்த அஷின் விராது தேரர்?

மியன்மாரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் சூத்திரதாரியாக இருப்பவர்தான் அஸின் விராது தேரர். பங்களாதேஷிலிருந்து எல்லை கடந்துசென்று குடியேறிய ரொஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை இவரே வழிநடத்தி வருகிறார்.  இவரது 969 அமைப்பு, தம்மை தீவிரவாதத்துக்கு எதிரான அமைப்பாக காட்டிக்கொண்டபோதும், அங்கு நிகழ்த்தப்படுவது இனப்படுகொலை என்றே குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஈவிரக்கமின்றி பெண்களும் குழந்தைகளும் கூட கொன்று குவிக்கப்படுகின்றனர். முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிராக 969 அமைப்பால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளால் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இதுவரையில்  கொல்லப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் தாக்கம் இல்லாதபோதிலும், அதனையொரு கருவியாக பயன்படுத்திக்கொண்டு அல்லது அந்த நிழலில் நின்றுகொண்டு இன அழிப்பு ஒன்றை நடத்துகிறது 969 அமைப்பு. இந்த அமைப்பை வழிநடத்தும் அஸின் விராது தேரரை பர்மாவின் பின்லேடன் என சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் அஸின் விராது தேரரின் படத்துடன் டைம் சஞ்சிகை வெளியிட்ட முகப்புக் கட்டுரைக்கு 'தீவிரவாத பிக்கு' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. டைம் சஞ்சிகையின் அந்த இதழ், இலங்கைக்குள் அனுமதிக்கப்படாமல், சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இன்றைய நிலையில், உலகில் பௌத்த தீவிரவாதத்தின் ஆணிவேராக கணிக்கப்படுபவரே அஸின் விராது தேரர்.

அஹிம்சையையும் தர்மத்தையும் போதிக்கும் பௌத்த மதத்தில், இத்தகையதொரு கடும்போக்குவாத அமைப்பும் அதற்கான தலைமையும் தோன்றியிருப்பது துரதிஷ்டமென்றே கருதப்படுகிறது.

என்ன தொடர்பு?

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை 969 அமைப்பு தீவிரப்படுத்திய கட்டத்தில்தான், இலங்கையிலும் பொது பல சேனா உருவாகியது. பொது பல சேனாவின் ஊக்கசக்தியாக இருப்பது இந்த 969 அமைப்பும் அதன் தலைவர் அஸின் விராது தேரருமே.

பிற இன, மதத்தவருக்கு எதிரான போராட்டங்களின் மூலம் தம்மையே பௌத்தமதத்தினது காவலர்களாக காட்டிக்கொள்வதுதான், இந்த இரண்டு அமைப்புகளின் அடிப்படை நோக்கம். ஆனால், இரண்டு அமைப்புகளுமே பௌத்த மத அடையாளங்களை பாதுகாப்பதற்கு பதிலாக பிற மதங்களை மட்டுமன்றி, பிற இனத்தவருக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றன.

பொது பல சேனாவை பொறுத்தவரையில், ஒரு கையில் பௌத்தமும் மறு கையில் சிங்களத் தேசியவாதமுமே அதனிடம் குடிகொண்டிருக்கின்றன. அதுபோலவே, 969 அமைப்பு மற்றும் அஸின் விராது தேரரிடமும் பிற மத விரோத எண்ணம் மட்டுமன்றி, பிற இனவிரோதக் கருத்துக்களும் வேரோடியுள்ளன.

தெற்காசியாவில் கடந்த சில ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறைகளின் ஊடாகப் பிரபலம் பெற்றுள்ள பொது பல சேனா, மியான்மாரின் 969 அமைப்புடன் ஏற்கெனவே கைகோர்த்துவிட்டது.

மியான்மார் சென்றிருந்த பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அஸின் விராது தேரரை சந்தித்து பேச்சு நடத்தியதுடன், இலங்கைக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார். அது பற்றிய படங்கள் வெளியானபோதே, பொது பல சேனாவின் இலக்கு என்னவென்பது பற்றிய கேள்விகள் எழுந்திருந்தன.

இந்த உறவின் தொடர்ச்சியாகத்தான், அஸின் விராது தேரர் கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தார்.

செங்கம்பள வரவேற்பு

அஸின் விராது தேரர் பொது பல சேனாவின் மாநாட்டில் பங்கேற்கவே இலங்கைக்கு வந்திருந்தார். அடிப்படையாக பார்க்கப்போனால், அவர் ஒரு பௌத்ததுறவி. இவரை விடவும் மூத்த, மதிப்புமிக்க பௌத்ததுறவிகள் பலர், கிழக்காசிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத அமோக வரவேற்பு அஸின் விராது தேரருக்கு அளிக்கப்பட்டது.

ஒரு தனிப்பட்ட அமைப்பின் மாநாட்டுக்காக வந்திருந்த அஸின் விராது தேரருக்கு, ஒரு நாட்டின் அரசுத் தலைவருக்குரிய வரவேற்பும் பாதுகாப்பும் அளிக்கப்பட்டன. கறுப்பு உடையில் கொமாண்டோ பிரிவு பாதுகாவலர்கள் அவருக்கு பாதுகாப்பளித்தனர். ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரே பாதுகாப்பு ஒழுங்குகளை ஒருங்கிணைத்திருந்தார்.

அரசாங்கம் தனக்கு அளித்த பாதுகாப்பு ஒழுங்குகளை, மாநாட்டில் உரையாற்றியபோது அஸின் விராது தேரர் புகழ்ந்து பாராட்டியிருந்தார். இதிலிருந்து, அஸின் விராது தேரரின் வருகைக்கு அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பு இருந்தது என்பதில் சந்தேகமின்றி உறுதிசெய்துகொள்ளலாம்.

ஏற்கெனவே, பொது பல சேனாவுக்கு அரசாங்கத்தின் பின்புல ஆதரவு இருப்பதான குற்றச்சாட்டுகள் பரவலாக இருந்துவருகிறது.

அரசாங்கத்தில் செல்வாக்குமிக்க நபர்கள் – குறிப்பாக, பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்கள் பொது பல சேனாவுக்கு ஊக்கமளித்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவந்துள்ளன. ஆனால், அதனை அரசாங்கம் எப்போதும் நிராகரித்தே வந்துள்ளது.

எனினும், பொது பல சேனாவின் இம்மாநாட்டுக்கு அனுமதியளித்ததன் மூலமும் அஸின் விராது தேரருக்கு வீஸா வழங்கி அவருக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை அளித்ததன் மூலமும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது அரசாங்கம்.

பொது பல சேனா மாநாடு

பொது பல சேனாவின் மாநாட்டில் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றிய அஸின் விராது தேரர், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், மியன்மாரின் 969 அமைப்பு பொது பல சேனாவுடன் கைகோர்க்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த உரைக்கு சர்வதேச ஊடகங்களும் மத்திய கிழக்கு ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

இது மியன்மாரில், அஸின் விராது தேரரின் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாத செயற்பாடுகளின் தாக்கம் இலங்கையிலும் அதிகரிக்கப்போவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யுமென்பதே இம்முக்கியத்துவத்தின் அடிப்படை.

ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால வன்முறைகளின் பின்னணியில், பொது பல சேனாவே இருந்ததென்ற குற்றச்சாட்டு வலுத்துவருகிறது.

இப்பின்னணியில், அஸின் விராது தேரருடனான கூட்டு, பொது பல சேனாவை இன்னும் கடும்போக்கு நிலைக்கு கொண்டுசெல்லும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பொது பல சேனா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இலங்கையை ஒரு பௌத்த நாடு என்றும் இலங்கையின் பெயரை மாற்றி சிங்கள தேசம் என்று பெயரிட வேண்டுமென்றும் வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இலங்கையில் பௌத்த சிங்கள அடிப்படைவாதம் தழைத்தோங்கியுள்ளதை வெளிக்காட்டியுள்ளது.
அது மட்டுமன்றி, பௌத்த விகாரைகளின் ஊடாக நாட்டின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கின்ற சக்தியாக மாற்றம் பெறுவதும் கூட பொது பல சேனாவின் திட்டமாகும்.

இச்செயற்றிட்டம் வெற்றி பெறுமானால், அது பொது பல சேனாவுக்கு  ஊக்கமளிக்கும் நாட்டின் பிரதான அரசியல் சக்திகளையும் கூட விழுங்கிவிடக்கூடிய அபாயமுள்ளது.

வருகையின் விளைவுகள்

மியன்மாரின் அஸின் விராது தேரரின் வருகையால், மீண்டும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான உணர்வுகளுக்கு கூர் தீட்டி விடப்பட்டுள்ளது.

இது சிறுபான்மையினருக்கு ஆபத்தை ஏற்படுத்துமென்று முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ அமைப்புகள் பலவும் அச்சம் வெளியிட்டுள்ளன.
பொது பல சேனாவின் கடந்தகாலச் செயற்பாடுகளும் அஸின் விராது தேரரின் தீவிரவாதப்போக்கும் அவரது அமைப்புடன் பொது பல சேனா செய்துகொண்டுள்ள உடன்பாடுமே  இந்த அச்ச நிலைக்கு காரணம். இந்த அச்சத்தைப் போக்கவேண்டிய அரசாங்கமே, சிறுபான்மையினருக்கு அச்சநிலையை ஏற்படுத்த அவர்களுக்கு ஊக்கமளித்திருக்கிறது.

இலங்கையிலும் மியன்மாரிலும் பௌத்த அடிப்படைவாதிகளால், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை, திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய்லாமாவே அண்மையில் கண்டித்திருந்தார். அவ்வாறு கண்டித்ததால், தலாய்லாமாவையே பொது பல சேனா கடுமையாக விமர்சித்திருந்தது.

தலாய்லாமா அளவுக்கு அஸின் விராது தேரர் ஒன்றும் பெருமைமிக்கவரல்ல. அஸின் விராது தேரர் ஒரு தீவிரவாதியாகவே ஊடகங்களால் சித்திரிக்கப்படுகின்ற நிலையே உள்ளது. பொது பல சேனாவின் நிலையும் அதுபோலத்தான்.

பௌத்தமதத்தை பாதுகாப்பதற்கு வன்முறைகளை கையில் எடுத்துள்ளதன் விளைவே இது. ஆனால், தலாய்லாமா போன்றவர்கள் பௌத்தமதம் போதித்துள்ள அன்பு, அறம், தர்மத்தின் வழியில், தமக்கான நீதியைப் பெற முனைகின்றனர்.

இலங்கையில் கூட தலாய்லாமா போன்றவர்களின் தத்துவம் எடுபடவில்லை. அஸின் விராது தேரர் போன்ற கடும்போக்காளர்கள் மட்டும் கௌரவிக்கப்படும் நிலையே  உள்ளது.

சர்வதேசத்தின் பிரதிபலிப்பு

அஸின் விராது தேரரின் இலங்கை பயணத்தை சர்வதேச முஸ்லிம் ஊடகங்கள் சந்தேகக்கண்ணுடனேயே பார்க்கின்றன. இந்தச் செய்திக்கு அதிக முக்கியத்துவத்தையும் கொடுத்திருந்தன.

ஏற்கெனவே, முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனால்தான், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவரான மதானியிடம், முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக உறுதி கூறவேண்டிய நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டது. ஆனாலும், அந்த உத்தரவாத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில்தான் அஸின் விராது தேரருக்கு இலங்கையில் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பௌத்த தீவிரவாதம் தலையெடுப்பதை இந்தியாவும் கூட கடுமையாக எச்சரித்திருந்தது. ஏனென்றால், அதன் விளைவாக இஸ்லாமிய தீவிரவாதப்போக்கு கூர்மையடையும் என்றும் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமென்று இந்திய பாதுகாப்புத்தரப்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஏற்கெனவே அல்கெய்தா, இந்திய துணைக்கண்டத்தில் கால் பதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இஸ்லாமிய தீவிரவாதம் தெற்காசியாவில் தலையெடுப்பதற்கு பௌத்த தீவிரவாதம் காரணமாகிவிடக் கூடாதென்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பலவும் கருதுகின்றன. ஆனால், இதையெல்லாம் அரசாங்கம் கருத்திற்கொள்வதாக தெரியவில்லை.

பொது பல சேனா விடயத்தில் அரசாங்கம் கைக்கொள்ளும் மென்போக்கு, சர்வதேச அளவில், இலங்கையின் மதிப்பை இன்னும் சீர்குலைத்துவிடும் ஆபத்துள்ளது. அது மட்டுமன்றி, முஸ்லிம் நாடுகளினது சந்தேகப் பார்வை ஏற்கெனவே அரசாங்கத்தின் மீது விழுந்துள்ளது.
இந்நிலையில், பொது பல சேனா மற்றும் 969 அமைப்புக்கு இடையிலான கூட்டுக்கு அரசாங்கம் காட்டியிருக்கும் பச்சைக்கொடி, அந்த நாடுகளை இலங்கையிடமிருந்து இன்னமும் தூர விலக்கிவைக்கக்கூடும்.  இதன் விளைவுகளை அரசாங்கம் அடுத்தடுத்த ஆண்டுகளில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அனுபவிக்கும் நிலையேற்படலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X