2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஓரக்குழியை நக்கும் ஒலக்கை

Thipaan   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா திபான்

ஒலக்கை ஓரக்குழிய நக்குதாம்.. லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டுச்சாம்... என்பது கிராமங்களில் சொல்லப்படுகின்ற பழமொழியாகும்.

கோயிலில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதற்காக ஓர் உரலில் பழங்களை இட்டு உலக்கையால் இடித்து பஞ்சாமிர்தம் தயார் செய்வார்கள்.

முதலில் அந்த பஞ்சாமிர்தத்தை ருசிப்பது உரல் மற்றும் உலக்கை தான். அதன் பிறகே சிவலிங்கத்துக்;கு அபிஷேகம் செய்யப்படும்.

ஒரு திட்டத்தை நிறைவேற்றும்போது அந்த திட்டமிடலில் பங்குகொண்டவர்கள்தான் முதலில் பலன் அனுபவிப்பார்கள். அதன் பிறகே மற்றவர்களுக்கு...  அப்படி திட்டமிடலோ- உருவாக்கமோ இல்லாத காலத்தில் பயனாளிகள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்பதே அர்த்தமாகும்.

நமது நாட்டை பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட அர்த்தத்தை உறுதிப்படுத்துவதற்கான  திட்டங்களே தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று எதிரணியினர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கின்றனர்.

நாட்டை சீனாவுக்கு தாரைவார்த்து விட்டதாக குற்றஞ்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில் இங்கு இடம்பெறுகின்ற சிறு சிறு சம்பவங்களும் அவற்றை நியாயப்படுத்துவதாக அல்லது அவற்றுக்கு அர்த்தம் கற்பிப்பதாகவே அமைந்து விடுகின்றன எனலாம்.

மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும், பூரணை (போயா) தினங்களில் இறைச்சி விற்பனை செய்வதை தடுக்கவேண்டும் என்று பௌத்தர்கள் குரல் கொடுக்கும் அதேநேரத்தில் இந்து காவல் தெய்வங்களுக்கு மிருக வேள்வி கொடுப்பதற்கு பிரதேச சபையின் அனுமதியை கோரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இறைச்சிகளுடன் நாய் இறைச்சி கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது ஹம்பாந்தோட்டை, அப்பலாந்தோட்டை, ஹுணுகம ஆகிய பிரதேசங்களில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னர் போயா தினத்தன்று இரத்தினபுரி பகுதியில் வைத்து இறைச்சி எனும் போர்வையில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமாகும்.

உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் எந்தளவுக்கு அமுல்படுத்தப்படுகின்றன என்பதெல்லாம் விடைதெரியாத வினாக்களாகும். ஆனால், சட்டங்களை விஞ்சும் வகையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன.

சாப்பிடக்கூடிய பறவை கூடுகள், வல்லப்பட்டை, கறுப்பு கற்றாளை, அரிய வகையிலான பல்லிகள், வாசனை திரவியங்களை தயாரிக்க கூடிய அரிய வகையிலான மரங்கள், மூலிகைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் நமது நாட்டிலிருந்து சுரண்டப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் இயற்கை சமநிலையை என்றோ ஒரு காலக்கட்டத்தில் சீர்குலைத்துவிடும். பொலிஸார் மற்றும் சுங்கத்திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம் இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களில் பெரும்பாலானோர் சீனப்பிரஜைகளாவர்.

வடக்கில் சீனப்பிரஜைகளால் கடல் வளம் அழிக்கப்படுவதாக வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவை இவ்வாறிருக்க நாய் இறைச்சியை உணவாக உட்கொள்ளாத இலங்கை போன்ற நாடுகளில் இறைச்சிக்குள் நாய் இறைச்சி கலப்படும் என்பது நினைத்து கூட பார்க்கமுடியாது நாவை கூச்செறிய செய்வதாகவே அமைந்துள்ளது.

சீனா, இந்தோனேசியா, தாய்வான், கொரியா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பொலினேசியா, வியட்னாம், சுவிட்சர்லாந்து, ஆட்டிக் மற்றும் அந்தாட்டிக் கண்டங்களின் அலாஸ்கா, சைபீரியா, வடக்கு கனடா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் தற்போதும் நாய் இறைச்சி உண்ணப்படுகிறது.
சீனா, இந்தோனேசியா, தாய்வான், கொரியா, மெக்ஸிகோ, வியட்னாம் ஆகிய நாடுகளைப் பொறுத்தவரை நாய் இறைச்சி உண்பது சாதாரணமாக காணப்படுகிறது. அவற்றை சந்தைகளிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

எனினும், கிழக்காசியாவில் பிலிப்பைன்ஸை பொறுத்தவரை தலைநகர் மனிலாவில் நாய்களை கொல்வது தடைசெய்யப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமான முறையில் நாய்கள் கொல்லப்படுகின்றன.

அலாஸ்கா, சைபீரியா, வடக்கு கனடா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் எந்த உணவும் கிடைக்காத வேளையிலேயே சவாரி செய்யும் நாய்களைக்கொன்று உணவாக உட்கொண்டனர்.

இந்துக்கள் வாழ்கின்ற நாடுகளில் நாய் தெய்வமாக வணங்கப்படும். சைவ சமயத்தை பொறுத்தவரையில் ஆகமம் சார்ந்த வழிபாட்டு முறைப்படி கோவில்களில் பாதுகாப்பு தெய்வமாக(சேத்திரபாலர்) வடகிழக்கு மூலையில் இருப்பவர் பைரவர், இவர் ஆகமம் சாராத வழிபாட்டு முறைப்படி காவல், குல, தெய்வமாக வணங்கப்படுகின்றார். இவருடைய வாகனமாக, நாய் காணப்படுகிறது.

இதேவேளை, இலங்கை வரலாற்றுடன் பார்க்கும் போது இலங்கையில் வரலாற்று தகவல்களை கூறும் நூலான மகாவம்சத்தில் விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் தம்பபன்னிக்கு (புத்தளத்தின் கற்பிட்டி பகுதி) வந்திறங்கிய போது ஒரு கிராமமும் அங்கே நாயும் இருந்ததாக கூறப்படுகிறது.

அது இலங்கையில் விஜயனின் வருகைக்கு முன்பே நாயை வீட்டு வளர்ப்பு மிருகமாக வளர்த்துள்ளமையை காணமுடிகிறது.
நாய்கள், சாம்பல் நிற ஓநாய் (Wolf) இனத்தின் வழி வந்தவை என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்து, நாய்கள் முதலில், சீன நாட்டிலா, தூரகிழக்கு நாட்டிலா, ஆப்பிரிக்காவிலா செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. புதிய கற்காலத்தில்  நாய்கள் முக்கிய பங்கு வகித்தன.

10,000 ஆண்டுகளுக்கு முன்னதாக, மனித வாழ்க்கையில், நாய்கள் சிறந்த காவலாளியாகவும் உடலுக்குத் தேவையான புரதச்சத்தை பெறுவதற்கான மிருகம் என்ற பங்கையும் வகித்து வந்தன. இத்தகவலானது, சீனா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் வாயிலாக அறியப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் ஓநாய் (Wolf)   இன வழியாக இவை உற்பத்தியாகின என்றும் விவசாயம், வேட்டையாடுதல் என்பவற்றில் ஈடுபட்டவர்களிடையே நாய்கள் வளர்ச்சியடைந்திருக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வேட்டைக்காக நாய்களைப் பழக்கப்படுத்தினார்கள். அப்போதைய நாய்கள் வேட்டைக்கு பார்வையைத்தான் அதிகம் பயன்படுத்தின. இப்போதைய வேட்டை நாய்களோ பார்வையைவிட மோப்ப சக்தியைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றன.

ஓநாய்களைப் போலவே நாய்களும் சேர்ந்து வாழ்வதில் விருப்பமுள்ளவை. தங்கள் குழுத் தலைவர் சொன்னபடி கேட்கும் இயல்புடையவை. மனிதர்களுடன் வாழ்வதால், தன் எஜமானர் சொல்வதை அப்படியே செய்யும் குணம் கொண்டதாக காணப்படுகிறது.

வளர்ப்பு நாய்களைப் பொறுத்தவரை ஜேர்மன் ஷெப்பர்ட், பொமரேனியன், டால்மேஷன், பிரிட்டிஷ் புல்டாக், பூடுல், டோபர்மேன், டாஷென்ட், லாப்ராடார் போன்றவை பிரபலமானவை.

வேட்டைக்காரர்கள் தொடக்கம் செல்வந்தர்களின் செல்லப்பிராணி எனும் பலவேடங்களை கொண்டுள்ளது நாய் என்பதில் எதுவித ஆச்சரியமும் இல்லை.

நாய்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்களது இனத்தைப் விருத்தி செய்வதற்காக இனப்பெருக்கம் செய்து வருகின்றன. சில நேரங்களில் வேறு இன நாய்ளுடன் கலப்பு இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த முறை இன்றும் தொடரப்படுகின்றது.

இதன் விளைவாக பல வகையான நாய் இனங்கள், கலப்பின வகைகளாக உள்ளன. தோற்றத்தில் மிகவும் அதிகமான வேறுபாடுகளுடன் இருக்கும் ஒரே விலங்கினம் நாய் மட்டுமே. ஏனெனில், மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் அதனுடைய DNAவில் கிட்டதட்ட இருமடங்கு அதிகமான நிறமூர்த்தங்கள் உள்ளன. இதனால் அது உடல் அமைப்பிலும் தோற்றத்திலும் மிகவும் அதிகமான வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது.

இனப்பெருக்க முறைகளின் அடிப்படையில், நாய்களின் இனங்கள் பொதுவாக வகைப்படுத்தப்படுகின்றன. நாய்களில் பல வகையான இனங்களும் துணைவகைகளும் இருப்பினும் அவற்றின் பொதுவான வகைகளாக தோழமை நாய்கள், பாதுகாவல் நாய்கள், வேட்டை நாய்கள், மந்தை நாய்கள் மற்றும் சவாரி நாய்கள் ஆகியவை காணப்டுகின்றன.

நாயை பொறுத்தவரை அதனுடைய சிறப்பியல்புகளின் அடிப்படையில் உதாரணமாக மோப்ப சக்தி, அறிவுத்திறன், கேள்தகமை என்பன காணப்படுகிறது. மனிதனின் குறைந்த கேள்தகு எல்லையான 20 Hz(ஹேட்ஸ்) இலும் குறைவான அதிர்வெண்ணுடைய ஒலியை நாய்களால் கேட்கமுடியும்.

மேற்கத்தேய நாடுகளில் செல்லப்பிராணி என்ற வகையில் நாய்களுக்கு வழங்கப்படும் இடம் தனித்துவமானது. வீட்டிலுள்ள அங்கத்தவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துவித சலுகைகளும் நாய்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் நாய்களின் பராமரிப்புக்கென பெருந்தொகை பணமும் உரிமையாளர்களால் செலவிடப்படுகிறது.

எவ்வாறாயினும் ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்தில் இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவது ஆச்சரியத்துக்குரியதொன்றாகும்.
பசுபிக் சமுத்திரத்திலுள்ள பிரான்ஸுக்கு சொந்தமான பொலினேசியா தீவிலும் நாய்கள் கொல்லப்படுகின்றன.

இவ்வாறு தமது விருப்பின் பேரிலும் சந்தர்ப்ப சூழலாலும் நாய் இறைச்சியை உண்பது சரியானதொன்றாக இருந்தாலும் தெரியாமல் கலப்படம் செய்யும் நடவடிக்கைகளும் இடம்nறுகின்றன.

அதேவேளை, மேற்கத்தேய நாடுகள், தென் ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என்பவற்றை பொறுத்தவரை நாய் இறைச்சியை  உணவாக உண்பது விலக்கப்பட்ட ஒன்றாக காணப்படுகிறது. ஏனெனில் நாய் இறைச்சி உண்பதை அருவருப்பாக நினைக்கின்றனர்.

எனினும் நாய் இறைச்சியை உணவாக உட்கொள்ளாத இலங்கை போன்ற நாடுகளில் மக்களுக்கு தெரியாமல்  கலப்படம் செய்து விநியோகிக்கும் சம்பவங்களும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இதேவேளை, நாய்கள் வளர்க்கப்பட்டாலும் உணவாக்கப்பட்டாலும் நாய்களால் பரவும் நோய்களில் ரேபிஸ் (நீர் வெறுப்பு நோய்)  எனப்படுவது ஒரு கொடிய வைரஸ் நோயாகும். இந்நோய் நாய்களாலேயே அதிகளவில் பரப்பப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதனுக்கு இந் நோய் தொற்று ஏற்படுகிறது.

நாய் கடித்தால் தான் ரேபிஸ் தொற்றும் என்பது இல்லை. பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும் நகத்தால் பிராண்டினாலும் ஏற்படலாம். நம் உடலில் சிறுகீறல் இருந்து அதில் நாயின் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் வைரஸ் தாக்கும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வாந்தி, தண்ணீர் விழுங்க சிரமம் மற்றும் இரண்டாம் நிலையில் நரம்பு சம்பந்தப்பட்ட அறிகுறிகள், பக்கவாதம், உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும். இதன் பின்னர்  நினைவிழப்பு நிலை(கோமா) ஏற்பட்டு மரணம் ஏற்படும். ரேபிஸ் இறப்புகளில், 85 சதவீதமானவை  தெற்காசிய நாடுகளில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையைப்பொறுத்தவரை இந்நோயால் 30 பேர் தொடக்கம் 40 பேர் வரை மரணிக்கின்றனர். இலங்கையை பொறுத்தவரை இந்நோயானது தடுக்கப்படக்கூடிய ஒன்றாக காணப்படுகிறது. நாய்கள் தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்த ‘No-Kill’  கொள்கை இன்னும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைதிப்படையினர் 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தபோது தம்முடன் அழைத்துவரப்பட்ட செம்மறி ஆடுகளின் தோல்களில் ஒட்டப்பட்டிருந்த விதைகள் கொட்டியமையால் வடக்கில் பார்த்தீனியம் பரவியது. அவற்றை அழிப்பதற்கு வடமாகாண சபை பல்வேறான முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றது.

இவ்வாறான நிலையில், இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்பட்டால் எதிர்காலத்தில் இயற்கை சமநிலை சீர்குலைந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற சீன அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனப்பிரஜைகளே பயன்படுத்தப்படுகின்றனர். அவர்கள் விரும்பி உண்ணுவதற்காக நாய்கள் இறைச்சியாக்கப்பட்டிருக்கலாம் மிகுதி இறைச்சியுடன் இறைச்சியாக கலப்படம் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஒலக்கை ஓரக்குழிய நக்குதாம்... லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டுச்சாம் என்ற பழமொழிக்கு சான்று பகிர்வதாய் வளங்கள் சுரண்டப்பட்டு சக்கைகளுக்கு மேல் நாமெல்லாம் எதிர்காலத்தில் சம்மனம் போட்டு அமர்வதாய் அமையும் என்றால் அதில் தவறிருக்காது.

இது நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதுடன் நாட்டின் எதிர்காலத்தையும் எதிர்கால சந்ததியினரையும் கவனத்திற்; கொண்டு உணவு பாதுகாப்பு தர நிர்ணயத்தை முறையாக அமுல்படுத்துவது உசிதமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X