2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நம்பகம் இழக்கும் விசாரணை

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

வடக்கு, கிழக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்கின்ற நிலையில், அது பற்றிய சர்ச்சைகளும் சந்தேகங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டபோதே, இது பக்கச்சார்பற்ற வகையில் நம்பகமான முறையில் செயற்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், இதற்கு முன்னர் இலங்கையில் அமைக்கப்பட்ட எந்தவொரு விசாரணை ஆணைக்குழுவுமே, தமிழ் மக்களின் நம்பகத்தன்மையை  பெற்றிருக்கவில்லை.

எனவே, இது நியாயமான முறையில் விசாரணைகளை நடத்தி, உரிய தீர்வை வழங்குமா என்ற கேள்வி எழுந்தது.

எனினும், ஆணைக்குழுவொன்றின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்படும்வரை, நம்பகத்தன்மையை முற்றிலுமாக கேள்விக்குட்படுத்துவது நியாயமற்றதே.

என்றாலும், காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள், பல்வேறு கட்டங்களை தாண்டியுள்ள நிலையிலும், பொதுமக்களினது நம்பிக்கையை பெறுமளவுக்கு நடந்துகொள்ளவில்லை என்பது முக்கியமானது.

அதிலும், அண்மைக்காலமாக காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகளின் போக்கில் மாற்றங்கள் இருப்பதாகவும் குறைபாடுகள் அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடைசியாக கடந்த மாத இறுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில்  04 நாட்கள் நடந்த விசாரணையின்போது அதிகளவு மொழிபெயர்ப்புக் குறைபாடுகள் இருந்தன என்ற குற்றச்சாட்டும் படையினரின் தலையீடுகள் இருந்தன என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன், முழங்காவில் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, ஆணைக்குழுவின் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைக்கக்கூடியளவுக்கு செயற்பாடுகள் அமையவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாகவே இருக்கிறது.

முழங்காவிலில் நடத்தப்பட்ட விசாரணை அமர்வில், இராணுவத்தினருக்கு சொந்தமான  கோப்பைகளில் அதுவும் இராணுவச்சின்னம் பொறிக்கப்பட்ட கோப்பைகளில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கும் தேநீர் விநியோகிக்கப்பட்டது.

பொதுப்படையான, பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை நடத்தும் ஆணைக்குழுவினர், குற்றச்சாட்டுக்குள்ளான ஒரு தரப்பினருடன் உறவைப் பேணுவதோ, அவர்களின் எந்தப் பொருளையும் நுகர்வதோ தவறானது.

உதாரணத்துக்கு, நீதிமன்றத்தில் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவரின் உடைமையில், விசாரணையை மேற்கொள்ளும் நீதிபதி ஒருவர், தேநீர் அருந்தினால் அதை எந்த நாட்டின் நீதித்துறையாவது ஏற்றுக்கொள்ளுமா?

அதுபோலவே, முழங்காவிலில் விசாரணை அமர்வின்போது ஆணைக்குழு, தேநீருக்குக் கூட இராணுவத்தினரின் தயவிலேயே தங்கியிருந்தது. தமக்கான தேநீரைக் கூட, சுதந்திரமான ஒரு தரப்பிடமிருந்து பெற்றுக்கொண்ட ஒரு ஆணைக்குழு, சுதந்திரமான தீர்ப்பை மட்டும் எவ்வாறு வழங்குமென்பது முக்கிய கேள்வி.

பூநகரியில் இடம்பெற்ற அமர்வின்போது, ஆணைக்குழுவின் விசாரணைகளில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகளவில் இருந்தன.
வீடு வீடாகச் சென்ற படையினர், புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியதுடன், அவர்களை வாகனங்களில் ஏற்றிவந்து இறக்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அதுமட்டுமன்றி, விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பொதுமக்களோடு பொதுமக்களாக இராணுவப் புலனாய்வாளர்களும் கலந்திருந்தனர். அதேவேளை, வெளியே சீருடையணிந்த படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். இது சாட்சியமளிக்க வந்தவர்களை கலக்கமடையச் செய்திருந்தது.

இது தொடர்பாக, ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் அதிகாரியொருவரை அழைத்து, படையினரை விலகிச் செல்லுமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கான ஒளிப்பட ஆதாரங்கள் அங்கிருந்த ஊடகவியலாளர்களால் வெளியிடப்பட்டன.

ஆனால், ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, விசாரணையின்போது படையினரின் தலையீடு இருந்ததான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார். அதற்கு அவர் கொடுத்துள்ள விளக்கமும் விந்தையானது.

அங்கு நின்ற படையினர் ரோந்து சென்றவர்கள் என்றும் அவர்கள் விசாரணையில் குறுக்கிடவில்லையென்றும் அவர் கூறியிருப்பதுடன், பொதுமக்களை சாட்சியமளிக்குமாறு படையினர் நிர்ப்பந்திக்கவில்லை,  ஊக்கமளித்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பொதுமக்களை சாட்சியமளிக்குமாறு ஊக்குவிக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளவேண்டிய தேவை படையினருக்கு இல்லை.  அதுவும், குற்றஞ்;சாட்டப்படும் ஒரு தரப்பாக இருப்பவர்கள், பொதுமக்களை சாட்சியமளிக்க செல்லுமாறு ஊக்கமளிப்பதென்பது நியாயமான விசாரணைகளை எடுத்துக்காட்டாது.

விசாரணைகளில் பக்கச்சார்பின்மையும் நேர்மையும் இருக்கவேண்டுமானால், அதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் தலையீடுகள் எந்தவொரு கட்டத்திலும் இருக்கலாகாது.

ஆனால், காணாமல் போனோர் குறித்த விசாரணை அமர்வுகளில் அத்தகைய தலையீடுகள் மிகையாக உள்ளதென்றே கருதப்படுகிறது.
மேலும், இந்த ஆணைக்குழு சுதந்திரமானதாக இருந்தால், படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்த வேண்டிய தேவையில்லை. இதன் செயற்பாடுகளை அவதானிக்கின்றபோது, படையினரின் செயலை நியாயப்படுத்துவதற்காக செயற்படும் ஒரு ஆணைக்குழு போலவே செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

விசாரணைகளின்போது, ஏராளமான மொழிபெயர்ப்பு தவறுகள் நிகழ்வதாக ஊடகங்களால் குற்றம் சுமத்தப்பட்ட அதேவேளை, மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையமும் அதைச்; சுட்டிக்காட்டியிருந்தது. அதையும் கூட ஆணைக்குழுவின் தலைவர் நிராகரித்திருந்தார்.
ஆணைக்குழுவின் தலைவர் மொழிபெயர்ப்பு தவறு நேரவில்லையென்று உறுதிபடக் கூறுவதற்கு அவர் ஒன்றும் தமிழரல்ல.

ஆணைக்குழுவில் இடம்பெற்றிருந்த 03 உறுப்பினர்களில் ஒருவரான மனோ இராமநாதன் கிளிநொச்சி அமர்வுகளில் பங்கேற்றிருந்தால், உறுதியாக அத்தகைய தவறுகள் நிகழவில்லையென்று நிராகரித்திருக்கலாம். ஆனால், அவர் பங்கேற்காத சூழலில், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் முன்வைத்த குற்றச்சாட்டை ஆணைக்குழு எந்த அடிப்படையில் நிராகரித்துள்ளது என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

அதை விட, ஆணைக்குழுவின் அமர்வுகளில் அண்மைக்காலமாக காணாமல் போனவர்கள் விவகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதாவது போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலான கேள்விகளையும் ஆணைக்குழுவினர் எழுப்பி வருகின்றனர். அண்மையில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இடம்பெற்ற அமர்வுகளின்போது இத்தகைய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

புலிகள் மனித கவசங்களாக பயன்படுத்தினரா, பொதுமக்களை நோக்கி படையினர் ஷெல் தாக்குதல் நடத்தினரா, தப்பிவரும்போது புலிகள் சுட்டனரா என்பன போன்ற கேள்விகளும் ஆணைக்குழுவினரால் எழுப்பப்படுகின்றன.

காணாமல்போன சிலருடைய சம்பவங்களுடன் இத்தகைய கேள்விகளுக்கு தொடர்பிருந்தாலும், இன்னும் பலருடைய காணாமல்போன சம்பவங்களுக்கும் இத்தகைய கேள்விகளுக்கும் தொடர்புகளில்லை.

சாட்சியமளிப்போரிடம் ஆணைக்குழு எழுப்பும் இத்தகைய கேள்விகள், அடுத்த கட்ட விசாரணைக்கான அவர்களின் முன்னோட்டமாகவே கருதப்படுகிறது.

இதே ஆணைக்குழுவிடம்தான், போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்று  விசாரிக்கும் பொறுப்பையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒப்படைத்திருக்கிறார். அந்த வகையில், இந்தக் கேள்விகள் பொருத்தமுடையதாக இருந்தாலும், காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணையில், இத்தகைய கேள்விகளால் பயனேற்படப்போவதில்லை. அது நேரத்தை வீணடிப்பதற்கே பயன்படும்.

ஏனென்றால், ஆணைக்குழுவிடம் காணாமல் போனவர்கள் குறித்த சுமார் 20 ஆயிரம் முறைப்பாடுகள் உள்ளன. இவற்றில் சுமார் ஆயிரம் வரையான முறைப்பாடுகள் குறித்தே சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.

இதேகதியில் சாட்சியங்களை பதிவுசெய்யும் பணி முன்னெடுக்கப்பட்டால், இன்னும் இரண்டு ஜனாதிபதிகளின் பதவிக்காலம் முடிந்தாலும்கூட, இந்த ஆணைக்குழுவின் விசாரணை முடிவுக்கு வராது. இத்தகைய நிலையில், தேவையற்ற கேள்விகளுக்கு நேரத்தை வீணடிப்பது பொருத்தமுடைய செயலாக பார்க்கப்படவில்லை.

அத்துடன், இவ்விசாரணைகளின்போது போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டாலும், அவற்றுக்குரிய பதில், போர்க்குற்றம் குறித்த விசாரணை அறிக்கையில் இடம்பெறப்போவதில்லை. ஏனென்றால், ஜனாதிபதியின் அந்த ஆணையின் மீது விசாரணையை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவேயில்லை.

இந்த ஆணைக்குழுவே போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்றும் விசாரிக்கப்போகிறது என்றாலும்கூட, அதுபற்றிய வினாக்களை தொடுக்கவேண்டிய தேவை இவ்விசாரணையில் எழவில்லை.

மேலும், காணாமல் போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவுக்கு, போர்க்குற்றங்கள் குறித்தும் விசாரிக்கும் ஆணையை அரசாங்கம் பிறப்பித்தபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் ஆலோசனை நிபுணர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

முதலில் அமெரிக்க, பிரித்தானிய நிபுணர்களைக்கொண்ட 03 பேர் இந்த ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டனர். சேர் டெஸ்மன்ட் டி சில்வா தலைமையிலான இக்குழுவில், பின்னர் இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷலும் பாகிஸ்தான் சட்டநிபுணர் அஹ்மர் பிலால் சூபியும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இந்த நிபுணர்குழுவினர், இலங்கைக்கு வந்து ஆணைக்குழுவுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவர் என்றும் கூறப்பட்டது. அத்துடன், காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் அமர்வுகளில் பார்வையாளராக பங்கேற்பர் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இதுவரையில் இந்த ஆலோசனைக்குழுவின் தலைவர் சேர் டெஸ்மன் டி சில்வா மட்டுமே இலங்கை வந்து ஆலோசனை வழங்கும் பணிகளில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷலும் பாகிஸ்தான் சட்டநிபுணர் அஹ்மர் பிலால் சூபியும் சேர் டெஸ்மன்ட் டி சில்வாவுடன் இணைந்து அண்மையில் தம்மை சந்தித்ததாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

அந்த நிபுணர்குழுவினர், ஆணைக்குழுவின் சாட்சிய அமர்வுகளில் பங்கேற்க விரும்பவில்லையென்றும் அது தமக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறுகின்ற செயலென்று அவர்கள் தெரிவித்துவிட்டதாகவும் மக்ஸ்வெல் பரணகம கூறியிருந்தார்.

ஆனால், இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷல், ஏற்கெனவே தமக்கு கூடுதலான பணி ஒதுக்கப்படுமென்று எதிர்பார்ப்பை வெளியிட்டிருந்தார். இலங்கைக்கு வந்துசென்ற பின்னரே,  அவருக்கு தாம் ஒரு வட்டத்தினுள் மட்டுமே நிற்கவேண்டுமென்பது புரிந்தது. அது மட்டுமன்றி, நிபுணர்குழு வழங்கும் யோசனைகளை ஆணைக்குழு தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்தப்படுமென்றும், இல்லையேல் அவை தூக்கி வீசப்படுமென்றும் உண்மை புரிந்தது.

அதனாலேயே அவர், கொழும்பு வந்து சென்ற பின்னர், தமக்கு அதிகமான பணி ஒதுக்கப்படவேண்டுமென்றும் தமது யோசனைகள் நிராகரிக்கப்பட்டால் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதில் அர்த்தமில்லையென்றும் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் சட்டநிபுணர் பிலால் சூபியும் கூட, தமக்கான பணி வரையறுக்கப்பட்டதாக உள்ளதென்றே குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியங்களை அவதானிக்கவோ, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவோ, விசாரணையில் தலையிடவோ தமக்கு உரிமை இல்லையென்றும் அவர் கூறியிருப்பது அதிருப்தியையே வெளிப்படுத்துகிறது.

ஒருபக்கத்தில் மக்ஸ்வெல் பரணகம, ஆணைக்குழு விசாரணைகளில் பங்கேற்க விரும்பவில்லையென்று கூறியிருக்கிறார்.
ஆனால், இந்திய, பாகிஸ்தான் நிபுணர்களோ அதற்கான உரிமை தமக்கு வழங்கப்படவில்லையென்று கூறியிருக்கின்றனர். இவை முரண்பட்ட கருத்துக்களாகவே தோன்றுகின்றன.

இவற்றின் மூலம், வெளிநாட்டு நிபுணர்குழுவை வெறும் கறிவேப்பிலையாகவே ஆணைக்குழுவும் அரசாங்கமும் பயன்படுத்த எத்தனிக்கின்றன என்பது புலனாகிறது.

முன்னதாக, சர்வதேச சட்டங்கள் குறித்து தமக்கு எல்லா அறிவும் கிடையாதென்பதால், அதுபற்றி ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவை நியமிக்குமாறு தாமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியதாக குறிப்பிட்டிருந்தார் மக்ஸ்வெல் பரணகம. இப்போது என்னவென்றால், நிபுணர்குழுவின் ஆலோசனைகள் பொருத்தமானவையென்றால் மட்டுமே கருத்திற்கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.

இது மட்டுமன்றி, ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்றைய 02 நிபுணர்களான பேராசிரியர் கிறேன் மற்றும் சேர் ஜெப்ரி நைஸ் ஆகியோர்
இன்னமும் இலங்கைக்கு வரவுமில்லை. அவர்களை வரவழைக்க முயற்சிக்கவுமில்லை. ஆனால், அரசாங்கம், வெளியுலகில் காணாமல் போனோர் குறித்து விசாரிக்க சர்வதேச நிபுணர்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறிக்கொள்கிறது.

எனினும், அவ்வாறு நியமிக்கப்பட்ட நிபுணர்குழு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு எப்பதிலும் இல்லை. இவ்வாறாக காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையையோ, பக்கச்சார்பின்மையையோ கொண்டிருப்பதாக கூறமுடியாத நிலையேயுள்ளது.

பொறுப்புக்கூறல் சம்பந்தமான எந்தவொரு விசாரணையும் நடுநிலையாக, பக்கச்சார்பின்றி, சுதந்திரமாக, வெளிப்படையானதாக இடம்பெறவேண்டுமென்பதே, சர்வதேச சமூகத்தினது இறுக்கமான நிலைப்பாடாக உள்ளது. இந்நிலையில், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறுவதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், அத்தகைய எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால், இத்தகைய ஆணைக்குழுக்களை அரசாங்கம் நியமித்ததன் நோக்கமே, சிதைந்துபோய்விடும்.

அதுபோலவே, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பகத்தன்மையையும் ஆணைக்குழு இழந்துவிடுமானால், அது நல்லிணக்கத்துக்கு உதவுமொன்றாகவும் அமையப்போவதில்லை.

அத்தகைய சூழ்நிலையொன்று தோன்றுவதற்கான அறிகுறிகளையே ஆணைக்குழுவின் அண்மைய செயற்பாடுகள் குறிப்புணர்த்தி நிற்கின்றன என்பது கவலைக்குரிய விடயமே.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X