2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நடுவீதியில் எரி(றி)ந்த சிவப்பு விளக்கு

Gavitha   / 2014 ஒக்டோபர் 09 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கவிதா சுப்ரமணியம்

'மனிதாபிமான போர்' என அரசாங்கத்தால் சொல்லப்பட்ட 'மனிதாபிமான நடவடிக்கை' 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவடைந்ததன் பின்னர், நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களை பார்க்கையில் 'மனிதாபிமானம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடவேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.

தெய்வம் தேரேறி பவனி வருகையில் கரங்களை தலைக்குமேல் கூப்பி வணங்கவேண்டிய பக்தர்கள், அலைபேசியை அப்படியே தலைக்குமேல் தூக்கி படம்பிடிக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்து வரும் விஞ்ஞானயுகம், சில மனிதர்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றது எனலாம்.

ஒரு மனிதன் துடித்துக்கொண்டிருக்கையில், அவனுக்கு உதவிசெய்ய வேண்டும் என்பது மனிதாபிமானத்தின் சிறு துளியாகும். எனினும் இந்த யுகத்தில் மனிதாபிமானமிக்க மனிதர்களை தேடுவது பெரும் சிரமமாகதான் இருக்கின்றது.
 
இது இங்குமட்டுமல்லாது இந்தியாவிலும் இடம்பெற்றுள்ளது. புதுடெல்லியிலுள்ள தேசிய உயிரியல் பூங்காவில் 'விஜய்' என பெயரிடப்பட்ட வெள்ளை புலி இருக்கும் குழிக்குள், செப்டெம்பர் 23ஆம் திகதி, தவறிவிழுந்த இளைஞனை அப்புலியிடமிருந்து காப்பாற்ற
முயற்சிக்காமல், புலிக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அதன்மீது கற்கள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தாக்கியது மட்டுமல்ல, அவற்றை படம்பிடித்துக் கொண்டிருந்த 'மனிதாபிமான' மனிதர்களை அங்கு கண்டோம்.

புலி, தன் இரைக்காக அவ்விளைஞனை கொல்லவில்லை. அப்படியிருந்தால் அது சாப்பிட்டிருக்கும். அச்சத்தினால் இளைஞனின் கழுத்தை பிடித்து (தன் குட்டிகளை தூக்குவதை போல) தூக்கியுள்ளது. மனிதனின் கழுத்து சதை, புலி குட்டியின் கழுத்து சதையை விட மென்மையானது என்பதை புலி அறிந்திராமையினால், தன் குட்டியை தூக்குவது போலவே இளைஞனையும் தூக்கியுள்ளது. அவ்வாறு தூக்கியமையால், புலியின் பற்கள் கழுத்தை பதம்பார்த்துள்ளன. அதனால் அவ்விளைஞன் இறந்துவிட்டான் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இங்கு 'மனிதாபிமானம்' கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.

எனினும், இலங்கையில் இடம்பெறுகின்ற சம்பவங்களில், ஒருசில சம்பவங்கள் தொடர்பிலான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தரவேற்றம் செய்யப்படுவதனால் அவை இலங்கை அரசாங்கத்தையும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸ் திணைக்களத்தையும் கேள்விக்கு மேல் கேள்விகளுக்கு உட்படுத்தி விடுகின்றது.

கொழும்பு, பம்பலப்பிட்டி கடற்கரையில் வைத்து 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி,  இரத்மலானைப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான சிவகுமார் என்ற இளைஞன், கைக்கூப்பி கும்பிட்டும் அவரை கடலுக்குள்ளே வைத்து தாக்கி, நான்கு பொலிஸார் தாழ்த்தினர்.
அதன்பின்னர் பொலிஸாரின் அடாவடித்தனங்கள் வெளிவரவில்லை. ஆதலால், சம்பவங்களே இடம்பெறவில்லை என்று அர்த்தமல்ல.

இந்நிலையில், வாரியபொலவில் யுவதியொருவர், இளைஞனின் கன்னத்தை ஒக்டோபர் 18ஆம் திகதி பதம் பார்த்த சம்பவம் மற்றும் இரத்தினபுரி பஸ் நிலையத்தில் வைத்து யுவதியொருவரை, பொலிஸ் ஒருவர் புரட்டி புரட்டிபோட்டு தாக்கிய வீடியோ, சமூக இணையத்தளங்களில் பிரபல்யமடைந்து பொலிஸ் திணைக்களத்தை கேள்விக்குட்படுத்த செய்தது.

சரி, இரத்தினபுரி பெண்ணுக்கு நடந்தது என்ன?...


1994ஆம் ஆண்டு திருமணம் முடித்து கொண்ட 'பட்டி' என்று ஊரவர்களால் அறியப்பட்ட வீரசிங்கம் ஆராச்சிகே காந்தி லதா, இரண்டு குழந்தைகளின் தாயாவார். கணவன் விட்டுச்சென்றுள்ள நிலையில் அவர், தன் இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான தாயுடன் இரத்தினபுரி கஹாதொல எனுமிடத்தில் வசித்து வருகின்றார்.

தான் ஒரு விலைமாது என்றும் வீட்டு கஷ்டத்தினால் குடும்பத்தை கொண்டு நடத்துவதற்காகவும் விரும்பியோ, விரும்பாமலோ இத்தொழிலை தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த பெண், தன் சட்டத்தரணியினூடாக பொலிஸ் மா அதிபரிடம் கையளித்துள்ள முறைப்பாடு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டின் பிரகாரம் இரத்தினபுரி பெண் மீதான தாக்குதல் சம்பவம் செப்டெம்பர் 14ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
 
விலைமாதான தன்னை, தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் அடிக்கொருதடவை தன்னை அழைப்பதாகவும் வயிற்றுப் பிழைப்புக்காக இத்தொழிலை செய்கின்ற நான், பணமின்றி வரமாட்டேன் என்று தெரிவித்துவிட்டதாகும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஒருநாள் அதே சார்ஜன்ட் 500ரூபாய் பணம் கேட்டதாகவும் அதனை கொடுக்க மறுத்ததையடுத்தே, தன்மீது வைராக்கியம் கொண்டு, என்றோ ஒருநாள் பார்த்துக்கொள்வேன் என்று அவர் சவால்விடுத்ததாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று கங்கா என்ற மற்றொரு பெண்ணை ஏவிவிட்டு தன்னுடன் சண்டையிட வைத்ததாகவும் அதன்பின்னரே, பொலிஸ் சார்ஜன்ட் தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும் அந்தபெண் தன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதிலும் அம்முறைப்பாட்டை பதிவு செய்துகொள்வதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தபோதிலும் அம்முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டவில்லை.

தன்னை ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்ற பொலிஸார் இந்த பிரச்சினை இத்தோடு விட்டுவிடும் படி, 3,000 ரூபாய் பணத்துடன், இரண்டு ஹெரோயின் பக்கற்றுகளையும் கொடுத்ததாகவும் அவற்றை வாங்காமல் அங்கியிருந்து தப்பிவந்து விட்டதாகவும் அப்பெண் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

சார்ஜன்டினால் அப்பெண் தாக்கப்படும் போது, பஸ் தரிப்பிடத்திலிருந்தவர்களில் ஒருவர், தனது அலைபேசியில் அச்சம்பவத்தை பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருந்திருந்தால், அச்சம்பவம் பெரும் விவகாரமாக மாறியிருக்காது.

முறைப்பாடு செய்வதற்கு முன்னர், அந்த பெண் முறைப்பாடு செய்யவில்லை என்று மழுப்பிய பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண, காக்கி சீருடை அணிந்திருந்தமையினால் அவரை பொலிஸார் என்று கூறமுடியாது என்றார். எனினும், பெண்ணின் முறைப்பாட்டை தொடர்ந்து தாக்குதல் நடத்தியது சார்ஜன்ட் பிசாந்த திசேரா என்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தன் மீதான தாக்குதலுக்கு எதிராக 50 மில்லியன் ரூபாவை நட்டஈடாக கோரி, உயர் நீதிமன்றத்தில் ஒக்டோபர் 3ஆம் திகதி மான நஷ்ட வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்தப்பெண் விபசாரி என்று தெரிந்திருந்தால், தனது அலைபேசியில் குறித்த நபர் அச்சம்பவத்தை பதிவு செய்திருக்கவும் மாட்டார், இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கவும் மாட்டார்.

அப்பெண், பாலியல் தொழிலாளி என்பதற்கு அப்பால் ஒரு பெண் என்ற மனிதாபிமானதுடன் பார்க்கவேண்டும் என்பது, அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியானதன் பின்னரே சகலருக்கும் புலனானது.
ஆனால், நெதர்லாந்தின் அம்ஸ்ரர்டாம் நகரின் டிவலன் சிவப்பு விளக்குப் பகுதிக்கு முன்னால் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த விபசாரி ஒருவரின் உருவச் சிலைக்கு கீழ் 'பாலியல் தொழிலாளர்களுக்கு உலகெங்கும் மதிப்பளியுங்கள்' என்று எழுதப்பட்டுள்ளதை யாவரும் நினைவில் கொள்ளவேண்டும்.

விபசாரம், இலங்கைச் சட்டத்தில் குற்றமாகக் காணப்படினும் அத்தொழில்
சட்ட அங்கிகாரத்துடன் நடப்பது போன்றே பகிரங்கமாகவும் பரபரப்பாகவும் நடக்கிறது.

நம்நாட்டுப் பெண்கள் மட்டுமின்றி, ஜப்பான், தாய்லாந்து, சீனா, ரஷ்யா, உக்ரைன்,  இந்தியா, பிலிப்பைன்ஸ், கொரியா நாட்டு பெண்கள் கூட இங்கு வந்து விபசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

விபசாரத்தை முற்றாக தடை செய்வதற்கு பொலிஸார், பாலியல் தொழிலாளிகளை கைது செய்தாலும் தண்டப்பணம் எனும் ஒரு காரணத்தை காட்டி வெளியில் வந்துவிடுகின்றனர்.வீட்டுக்குள் மிகவும் இரகியமாகவும் வீதிகளிலில் நின்று சைகையால் அழைத்து விபசாரம் செய்தல், நடமாடும் விபசாரம், நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறுகின்ற விபசாரம் என்று  விபசாரத்தை வகைப்படுத்திகொண்டே போகலாம்.

இது இவ்வாறிருக்கையில் இணையத்தளம் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றுக்கு அமைய  35,000 முதல் 45,000 பாலியல் தொழிலாளர்கள் நாட்டில் இருப்பது இனங்காணப்பட்டதாகவும் அதேவேளை 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பாலியல் தொழிலாளர்கள் 20,000 ஆக குறைவடைந்துள்ளதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளதாக,  பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய்த்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சிசிர லியனகே தெரிவித்தார். இலங்கையில் மூன்று வருடங்களுக்குள் பாலியல் தொழிலாளர்களில் குறைவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் அதனையும் விட அதிகரித்திருக்கவே வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பாலியல் தொழிலாளர்கள் சமூகவலைத்தளங்கள், இணையத்தளம் ஊடாக தமக்கான வாடிக்கையாளர்களை பெற்றுக் கொள்வதனாலேயே, 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறைவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்தே இணையத்தளம் மற்றும் சமூகவலைத்தளங்களினூடாக இவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்  கூறினார்.

இவ்வாறு தகவல்களை பெறுவதன் நோக்கம் இவர்கள் பாதுகாப்பான முறையில் பாலியல் உறவுகளை மேற்கொள்கின்றனரா, எயிட்ஸ் தொற்று  ஏற்பட்டுள்ளதா போன்ற தகவல்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு உரிய சிகிச்சைகளையும் பெற்றுக் கொடுக்கும்  நோக்கிலேயே இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது. எமது இணையத்தளம், எம்மால் முன்னெடுக்கப்படவுள்ள சமூகவலைத் தளக் கணக்குகள் ஊடாக  கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.  இந்த ஆய்வின் போது பாலியல் தொழிலாளர்கள் தம்மை அடையாளப்படுத்தக் கொள்ள வேண்டியதில்லை. ஆய்வுக்காக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை அளிப்பதனூடாக எமது ஆய்வுக்கு ஒத்துழைக்கலாம்.

இதுவரையில் நாம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து பெற்றுக் கொண்ட தகவல்களுக்கு அமைய பெண் பாலியல் தொழிலாளர்களின் தரவுகளே உள்ளன. ஆனால்  நாட்டில் ஆண் பாலியல் தொழிலாளர்களும் உள்ளனர். அவர்களும் இந்த ஆய்வுக்கு ஒத்துழைப்பதனூடாக, பாலியல் மற்றும் எயிட்ஸ் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளை செய்யமுடியும் என அவர் தெரிவித்தார்.

2 கோடி மக்கள் தொகையை கொண்ட இலங்கையில், கணக்கெடுப்பின்படி 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலைமாதர்களும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களும் 30 முதல் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் பாலியல் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள். பார்த்தோமேயானால் மேலைத்தேய நாடுகளையும் மீறிவிடும் போலிருக்கின்றது.

இவற்றை தடுப்பதற்கு பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அதனை தடைசெய்யமுடியாத நிலை காணப்படுகின்றது. அந்தளவு விலை மாதர்களுக்கு வெளியில் நடமாடுவது இலகுவானதொரு காரியமாகிவிட்டது. இத்தொழிலில் இருக்கின்ற பெண்களை அதிலிருந்து மீட்டு, அவ்வாறான  யுவதிகளுக்கு மறுவாழ்வளித்து சமூகத்தில் சாதாரண பிரஜைகளாக இணைத்துகொள்ளவேண்டும் என்பதுடன், எதிர்காலங்களிலாவது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட கட்டாய விபசாரத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விபசாரிகள் நடமாட்டம் கொண்ட இடத்தை, ஆங்கிலத்தில் ரெட் லைட் ஏரியா (சிவப்பு விளக்கு) என்பர். அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் இலங்கையில் சிவப்பு விளக்கு பகுதி இல்லாமல் இல்லை. அவ்வாறான பகுதிகளும் விபசாரமும் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்படவேண்டும்.

எவ்வாறாயினும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று 1994இன் சித்திரவதைக்கு எதிரான சமவாயம் இல22 (ஊயுவு) சட்டத்தின் கீழ் வருகின்றது. இந்த சட்டத்தின் பிரகாரம் சித்திரவதையில் ஈடுபட்ட எந்தவொரு அரசாங்க ஊழியருக்கும் 7வருட கடூழிய சிறை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அல்லது இரண்டு விதத்திலும் தண்டிக்கப்படலாம்.

இரத்தினபுரி விவகாரத்துடன் தொடர்புடைய அந்த பொலிஸ் சார்ஜன்டுக்கு எவ்வாறான தண்டனை கிடைக்கும் என்பதெல்லாம்
நீதிதேவதையின் முன்னால் விடப்படுகின்ற வினாவாகும்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X