2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மோடிக்கு சவாலா?

Thipaan   / 2014 ஒக்டோபர் 14 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றதன் பிறகு நடைபெறும் இரு மாநில சட்டமன்றத்துக்;கான இடைத் தேர்தல்கள் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை மீண்டும் பரிசோதனை செய்யவிருக்கிறது. அகில இந்திய கட்சிகளில் பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் முக்கியமானவை.

இவை இரண்டில், ஒன்று ஆட்சியிலிருக்கும் போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலோ, இடைத் தேர்தல்களோ பிரதமர்களாக பொறுப்பேற்று உள்ளவர்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை வெளிப்படுத்தும் தேர்தல் என்றே பிரசாரம் நடக்கும்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன்சிங் போன்ற பிரதமர்களின் காலகட்டத்திலும் இப்படித்தான் எடை போடப்பட்டது. அதேமாதிரி இப்போது பா.ஜ.க.வின் செல்வாக்கு மற்றும் அதை வழிநடத்தும் பிரதமர் நரேந்திரமோடியின் செல்வாக்கு போன்றவை ஒக்டோபர் 15ஆம் திகதி நடக்கப் போகும் இரு சட்டமன்றத் தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்தப்படும்.

அந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் முதலாவது மஹாராஷ்டிரா மாநிலம். இங்கு 288 சட்டமன்ற தொகுதிகள். இங்கு காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து 1999ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் முதலமைச்சரும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சார்பில் துணை முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் என்ற அளவில் இந்தக் கூட்டணி அரசு நடைபெற்று வந்திருக்கிறது.

எதிரே இக்கூட்டணியை எதிர்த்து நிற்க, பால்தாக்ரே உருவாக்கிய சிவசேனாவை தற்போது அவரது மகன் உத்தவ் தாக்கரே வழி நடத்துகிறார். அக்கட்சியுடன் இதுவரை கூட்டணியாக இருந்த பாரதிய ஜனதாக் கட்சி இந்த முறை சிவசேனாவுடனான 25 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொண்டு தனியாக போட்டியிடுகிறது. அதே போல் 15 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொண்டு, தேசிய வாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனியே காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. காங்கிரஸும், பா.ஜ.க.வும் தங்கள் முதுகில் ஏறி சவாரி செய்ய நினைக்கின்றன என்று சரத்பவாரும், உத்தவ் தாக்கரேயும் முடிவு செய்ய, இருவருமே அதிக தொகுதிகளைக் கேட்டு வம்புக்கு நின்றார்கள்.

சரத்பவார் தங்களுக்கு சரி பாதி தொகுதிகள் வேண்டும் அதாவது 144 சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். அதேபோல் உத்தவ் தாக்கரே தனக்கு 150க்கும் மேற்பட்ட தொகுதிகள் வேண்டும் என்பதில் கறாராக இருந்தார். இரு தரப்புமே இந்த முறை முதல்வர் பதவியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் கவனமாக காய் நகர்த்தின.

அதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனாவின் உதவியால் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது என்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தயவால்தான் காங்கிரஸ் கட்சி ஓரளவு வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்றும் இரு கட்சிகளுமே கருதியனன் விளைவே! சென்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும் சிவசேனாவும் சேர்ந்து இந்த மாநிலத்தில் பெற்ற வாக்கு 30.28 சதவீதம். ஆனால், காங்கிரஸ் கட்சியும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து பெற்ற வாக்குகள் 37 சதவீதம்.

அதே நேரத்தில் தனிப்பட்ட கட்சிகளின் வாக்கு வங்கி என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சி 21 சதவீதத்தைப் பெற்று முதலிடத்திலும் தேசிய வாத காங்கிரஸ் கட்சி 16.37 சதவீதத்தைப் பெற்று இரண்டாவது இடத்திலும் இருந்தது. சிவசேனா 16.26 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் பா.ஜ.க. 14 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்திலும் இருந்தன. இதுதான் மஹாராஷ்டிரா மாநிலத்தைப் பொறுத்தமட்டில் கட்சிகளின் பலம்.

அதேநேரத்தில் இந்த வாக்கு சதவீத நிலை, பா.ஜ.க. கூட்டணி ஆதரவாகவும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்தாலும் அது மோடி அலையின் விளைவு என்றே பா.ஜ.க. கருதுகிறது. ஆனால் சிவசேனாவோ, எங்கள் ஆதரவால்தான் இங்கு மோடி அலை வந்தது என்று கூறுகிறது. இரண்டாவது இடத்தில் இருந்த தேசிய வாத காங்கிரஸ் கட்சியும் நான்காவது இடத்தில் இருந்த பா.ஜ.க.வும் மஹாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டதன் விளைவாகவே இப்போது அங்கே அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன.

தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், நான் மறைந்த பால்தாக்கரே மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக சிவசேனா பற்றி விமர்சிக்க விரும்பவில்லை என்று மோடி கூறினார். இதற்கு மஹாராஷ்டிரா மாநிலத்தில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதை கூட்டணியை உடைக்கும் போது இந்த மரியாதை எங்கு போனது என்று சிவசேனா பதிலடி கொடுத்தாலும் சிவசேனா வாக்காளர்களும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று மோடி உருவாக்கிய அந்த வியூகம் சிவசேனாவை கலங்கடித்துள்ளது என்பதே உண்மை.

காங்கிரஸுக்கு சவான் போலவும் தேசிய வாத காங்கிரஸுக்கு சரத்பவார் போலவும் சிவசேனாவுக்கு உத்தவ் தாக்கரே போலவும் பா.ஜ.க.வுக்கு அங்கு மாநிலத் தலைவர் இல்லை. நிதின்கட்கரி மட்டும் இருக்கிறார். ஆனால், அவர் மாஸ் லீடர் அல்ல. கோபினாத் முண்டே டெல்லியில் கார்விபத்தில் இறக்காமல் இருந்திருந்தால், பா.ஜ.க.வுக்கு இன்று அங்கு செல்வாக்குள்ள மாநிலத் தலைவர் இருந்திருப்பார்.

ஆகவே பா.ஜ.க.வுக்கு மோடி தான் மாநில தலைவர் அந்தஸ்தில் இந்த சட்டமன்றத் தேர்தலில் மஹாராஷ்டிர மாநில பிரசாரத்தில் தென்படுகிறார். மாநிலம் முழுவதும் வளைத்து வளைத்து பிரசாரம் செய்கிறார். காங்கிரஸ்- தேசிய வாத கூட்டணி அரசு, ஊழல் அரசு என்று பிரசாரத்தை சூடுபறக்கச் செய்கிறார். ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர், மோடி பணக்காரர்களுக்காக அரசாங்கம் நடத்துகிறார் என்று கூறினாலும் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்களை மோடி அரசாங்கம் கையாண்ட விதம் இந்த இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் அக்கட்சிக்கு வாக்கு வங்கியை உயர்த்தும் காரணியாக திகழும் என்றே தெரிகிறது.

மஹாராஷ்டிராவின் நிலைமை இப்படியென்றால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் முதலமைச்சர் ஹோடாவுக்கு, பா.ஜ.க. சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ஆசிரியர்கள் நியமன ஊழலில், அந்த மாநில முன்னாள்; முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தலைமைதாங்கும் இந்திய தேசிய லோக்தள் கட்சி ஹரியானாவில் திணறிக் கொண்டிருக்கிறது.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 90 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மாநிலத்தில் 46 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று ஆட்சியமைத்தது. அதற்கு எதிர்கட்சியாக சவுதாலாவின் கட்சி 31 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று எதிர்கட்சியாக அமைந்தது. ஆனால், ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சிக்கிய சவுத்தாலா கட்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதேவேளை, அந்த வாக்கு வங்கி தங்களுக்கு வரும் என்ற நினைப்பில்தான் பா.ஜ.க.வும் அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அங்கு பெற்ற வெற்றி அவர்களை தனித்துப் போட்டியிட வைக்கிறது. இந்த நேரத்தில் பிணையில் வெளிவந்த ஓம் பிரகாஷ் சவுதாலா பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உடல்நலம் சரியில்லை என்று காரணம் காட்டி பிணையில் வெளிவந்த அவர், எப்படி தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜரான அவரின் பிணை இரத்து செய்யப்பட்டு மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், சவுதாலா கட்சியின் பிரசாரம் முடங்கிப் போனாலும் மக்கள் மத்தியில் குறிப்பாக அவருடைய வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு அனுதாபம் ஏற்பட வழியிருக்கிறது.

ஏற்கெனவே காங்கிரஸுக்கு இங்கு 35 சதவீத வாக்குகளும் இந்திய தேசிய லோக்தளுக்கு 25 சதவீத வாக்குகளும் உண்டு. பா.ஜ.க.வுக்கு 9 சதவீத வாக்குத்தான். நாடாளுமன்றத் தேர்தலில் வட மாநிலங்களில் வீசிய மோடி அலை பா.ஜ.க.வுக்கு அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. ஆனால், அந்த அலை இப்போது நீடிக்குமா 9 சதவீதத்தில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி அமைக்குமா என்பதுதான் பெரும் கேள்விக்குறி.

இரு சட்டமன்றத் தேர்தல்களிலுமே மீண்டும் பா.ஜ.க.வும் அதன் தலைவர் நரேந்திரமோடியும் ஊழலை பிரதானமாக முன் வைத்து பிரசாரம் செய்துள்ளனர். வருகின்ற ஒக்டோபர் 15ஆம் திகதி இரு மாநிலங்களிலும் வாக்குப் பதிவு. 19ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை.

அன்றைய தினம் மஹாராஷ்டிரத்திலும் ஹரியானாவிலும் யார் ஆட்சியைப் பிடிப்பது என்பது தெரிந்து விடும். பா.ஜ.க. இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், மோடியின் செல்வாக்கு மேலும் உயர்ந்த ஒரு இமேஜ் உருவாகும்.

ஏனென்றால் இதற்கு முன்பு உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பா.ஜ.க. படு தோல்வி அடைந்தது. குறிப்பாக அமோக வெற்றி பெற்ற உத்தரபிரதேச மாநிலத்திலும் பீஹாரிலும் பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்து. அதனால் மோடிக்கு செல்வாக்கு இல்லை என்ற பேச்சு எழுந்தது. காங்கிரஸும் அதையே சுட்டிக்காட்டி பேசியது.

ஆகவே, இந்த முறை வெற்றி பெற்றால் மோடி செல்வாக்கு உயர்ந்து விட்டது. மத்தியில் எங்கள் ஆட்சிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு என்று பா.ஜ.க.வினர் சொல்லிக் கொள்ளலாம். காங்கிரஸ் கட்சியும் இனி தேறாது என்ற பிரச்சாரம் தலை தூக்கும்.

அதேநேரத்தில் திரும்பத் திரும்ப ஊழலை மட்டுமே முன் வைத்து பா.ஜ.க. தேர்தல்களை சந்தித்து வருவதால், இரு மாநில தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்தால் பா.ஜ.க.விற்கு தலைவலி பிறக்கும். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தீட்டிய திட்டங்கள் என்ன, அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா என்ற கேள்வி எழும். அது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளால் மட்டுமல்ல.

பா.ஜ.க.வுக்குள் உள்ள தலைவர்களே அக்கேள்வியை எழுப்புவார்கள். எப்படிப் பார்த்தாலும் இந்த இரு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் - குறிப்பாக 378 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறப் போகும் தேர்தல் பிரதமர் நரேந்திரமோடியின் செல்வாக்கு குறித்தும், அவர் தலைமையில் பா.ஜ.க.வின் எதிர்காலம் குறித்தும் முடிவு செய்யும் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும்! 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X