2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஈழமும் தேர்தலும்

Thipaan   / 2014 ஒக்டோபர் 15 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 12) கிளிநொச்சியிலிருந்து ஆரம்பித்திருக்கிறார். அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் அவர், ஆற்றிய உரையினூடு தெற்கிலுள்ள சிங்களப் பெரும்பான்மை மக்களை நோக்கி முக்கிய செய்தியொன்றைச் சொல்லியிருக்கிறார்.

அது என்ன செய்தி என்றால், 'தனி ஈழத்துக்கான கோரிக்கைகள் நிறுத்தப்பட்டால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு தயாராக இருக்கின்றேன்' என்பது.

தனி ஈழக் கோரிக்கைகளுக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது என்ற கேள்வி எழுவது இயல்பானது. ஆனால், ஈழமும் அதற்கான கோரிக்கைகளும் இலங்கைத்  தேர்தல்களில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் சிந்தித்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூற்று மிகவும் திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்பட்டதாகக் கொள்ள முடியும்.

அதுவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், தமிழ் ஈழத்தின் நிர்வாக தலைநகரமாக முன்னிறுத்திய கிளிநொச்சியில் இருந்து விடுக்கப்பட்ட செய்தி முக்கியத்தும் வாய்ந்தது தான். 

இலங்கையில் தேர்தல்களையும் ஈழத்தையும் பிரிக்க முடியாது. அதுவும், தனி ஈழத்துக்கான கோரிக்கை தமிழ் அரசியல் கட்சிகள், ஆயுத போராட்ட இயக்கங்களால் அதிகமாக முன்னிறுத்தப்பட்ட கடந்த முப்பது ஆண்டுகளில், இலங்கையில் ஈழம் என்கிற வார்த்தை தேர்தல்களின் பெரும் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கின்றது.

அது, ஈழத்துக்கான கோரிக்கைக் கோஷங்கள் நீர்த்துப் போயிருக்கின்ற இன்றைய நாட்களிலும் தேர்தல்களின் தீர்மானிக்கும் சக்தியாக முன்னிறுத்தப்படுகின்றது. அதற்கு, அரசாங்கம் எதிர்க்கட்சிகள் என்கிற வித்தியாசம் எல்லாம் இல்லை.  அதனைத் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கையில் எடுத்திருக்கின்றார். அதுவும், தன்னுடைய எதிர் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்ரமசிங்கவின் மீது தனி ஈழத்துக்கான ஆதரவாளர் என்ற வகையிலான தோற்றப்பாட்டையும் கட்டமைக்க மீண்டும் முயற்சித்திருக்கிறார்.

நாடு கடந்த தமிழீழ அரசுடன், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேசியதாகவும் யார் எங்கு சென்று கதைத்தாலும் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தவோ அல்லது தனி ஈழத்தை ஏற்படுத்தவோ ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்றும் கிளிநொச்சியில் அவர் பேசியிருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது தவிர்க்க முடியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்கும் அல்லது அமைதி காக்கும். ஆனால், நிச்சயமாக மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும். இவ்வாறான நிலையில், தவிர்க்க முடியாமல் இனமான கோஷங்களும், தூண்டல்களும் தேர்தல்களில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது இயல்பானது. அதன், வீச்சம் பெற்ற ஒன்றாகவே ஈழத்துக்கான கோரிக்கை பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்.

ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட்டாலும் ஈழத்துக்கான கோரிக்கைகளை ஆதரிக்கப் போவதில்லை. மாறாக, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தசட்டத்துக்கு அப்பால் சென்று தன்னால் தீர்வு காண முடியாது.

13க்குள்ளேயே தீர்வு என்ற செய்தியையும் அவர் சொல்லிவிட்டார். இப்படியான நிலையில் தான், நீர்த்துப் போன ஈழக் கோரிக்கையை மஹிந்த ராஜபக்ஷ தோண்டி எடுத்து வைத்திருக்கின்றார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் எதிராக செயற்படுகின்றது என்ற கருத்தும் பிரதிபலிப்புக்களும் மேலெழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள், பௌத்த மதத்தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்று நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான சக்திகளின் பலம் ஆளும் கட்சிக்குள் இருக்கின்ற இடதுசாரிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளினாலும் வலுப்பெறுகின்றது.  இது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி வருகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முன்னால், கௌரவம் மிக்க நாடாளுமன்றமே ஒன்றுமே செய்ய முடியாத நிலை
காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களைப் பாதுகாப்பது தொடர்பில் புத்திஜீவிகளும் அரசியல் தலைவர்கள் பலரும் தமது கருத்துக்களை மக்களிடத்தில் பலமாக முன்வைத்து வருகின்றனர்.

சட்டத்தின் ஆட்சி, ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கை, மக்களுக்கான நீதி என்பன தொடர்ந்தும் மீறப்படுகின்ற நிலையில் அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதி மீதும் மக்களுக்கு இயல்பிலேயே வெறுப்பு எழும். சுமார் 10 வருடங்களை நிறைவு செய்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மக்கள் வெறுப்புக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அது, அதிகாரத்தின் அதியுச்ச பேயாட்டம் தொடர்பில் எழும் அதிருப்தி. அதுதான், ஊவா மாகாண சபைத் தேர்தலில் பிரதிபலித்தது.

இவ்வாறான நிலைகள் இயல்பிலேயே எதிர்க்கட்சி(கள்) மீது மக்களை திசை திருப்பி விடும். அது, தேர்தல்களின் போது வாக்குகளாக மாறி அதிகாரத்தைத் தீர்மானிக்கும். அவ்வாறான நிலையில் தான், மீண்டும் மீண்டும் இனவாத அல்லது இனமான கருத்துக்களை முன்வைக்கும் அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, அந்தக் கட்சியை வேட்டையாடிய வரலாற்றை கடந்த பத்து ஆண்டுகளில் கண்டிருக்கின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் மேலெழுவது தொடர்பில் சிந்திக்கவே முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் மீள் எழுச்சி பற்றிய நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது.

அப்படியான நிலையில்தான், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிரான கோஷத்தை பெரும்மெடுப்பில் முன்னெடுக்க வேண்டிய தேவையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டது. அதற்கு மக்களும் ஆதரவு வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்க வாதம்.

அதன் விளைவு தான், மஹிந்த ராஜபக்ஷவின் ஈழக் கோரிக்கைகள் தொடர்பிலான கருத்துக்களும், பிரதிபலிக்கும்.

இன்னொரு பக்கத்தில் 'ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கத்தினூடு தீர்வு' என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டு தன்னுடைய அரசியலின் அடுத்த கட்டமாக அறிவித்துவிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைபபை நோக்கி, தனி ஈழக் கோரிக்கைகளுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கின்றது என்ற ஜனாதிபதியின் குற்றச்சாட்டும் சிங்கள மக்களை நோக்கிய தேர்தலுக்கான அழைப்பாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது.

அதுவும், ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வட மாகாண சபையும் முற்றாக புறக்கணித்த விடயம் தெற்கில் இனவாத அல்லது தமிழ் விரோத அரசியலுக்கு வலுச்சேர்க்கும் காரணிகளாக முன்னிறுத்தப்படும்.

அதை, அரசாங்கமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் செய்யும். இது, இனநல்லிணக்கம் பற்றிய உரைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஜனாதிபதியின் சரியான செயற்பாடாகக் கொள்ள முடியாது.

இன்னொரு புறம், மோதல்களுக்குப் பின்னரான இலங்கையில் நீறுபூத்த நெருப்பாக காணப்படும் இனமுறுகல்களையும், குரோத எண்ணங்களையும் மேலும் எரியவிட்டு நாட்டில் பேரழிவை ஏற்படுத்துவதற்கான மறைமுக தோற்றங்களை ஏற்படுத்திவிடும்.

ஏனெனில், தமிழ் மக்கள் ஈழக் கோரிக்கையை கைவிட்டாலும், அப்படியில்லை, ஈழக் கோரிக்கை இன்னமும் நிலுவையில் இருக்கின்றது என்ற தோற்றப்பாட்டை அரசாங்கமும் கூட்டணிக் கட்சிகளும் மீண்டும் மீண்டும் உருவாக்குகின்றன. ஜனாதிபதியின் கிளிநொச்சி உரையையும் அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமை மற்றும் சுதந்திரம் குறித்து அக்கறை கொண்டிருக்கிறார்கள். அது, 60 ஆண்டுகளுக்கும் அதிக காலமாகத் தொடரும் போராட்டம்.

ஆனால், ஆயுத மோதல்களின் முடிவுக்குப் பின்னர் ஈழக் கோரிக்கை தொடர்பில் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. அதன் யதார்த்தம் பற்றி பெரும்பான்மையான வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கும் தெளிவு இருக்கின்றது.

அப்படியான நிலையில் தான், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வோம் என்ற தம்முடைய நிலைப்பாட்டை பெருவாரியாக ஆதரித்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதில், அவ்வளவு மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

தமிழ் மக்களின் மனங்களை வெல்வது தொடர்பிலான ஆசை அரசாங்கத்திடமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் பலமாக இருக்கின்றது. ஆனால், அதற்கான அர்ப்பணிப்பு மற்றும் விட்டுக் கொடுப்புக்கள் தொடர்பில் எந்த அக்கறையும் இல்லை.

மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்துவிட்டோம். ஆக, தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் தீர்ந்து விட்டது என்பது மாதிரியான கருத்துக்களே அதிகமாக வெளிப்படுகின்றது.

இன்னொரு புறம், அபிவிருத்தி என்ற விடயத்தை முன்வைக்கும் புரிதலற்ற அரசியலை அரசாங்கம் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கின்றது. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும் அதன் தலைவரினதும் கடமை.

ஆனால், அதனை முன்னிறுத்திவிட்டு அரசியல் உரிமைகள் தொடர்பில் மறக்குமாறு மறைமுகமாக கோருவது எவ்வாறு சரியாகும்? அவ்வாறான சூழல் தான் இப்போது நிலவுகின்றது.

தமிழ் மக்களின் மனங்களை வென்று வாக்குகளைப் பெறுவது என்பது அரசாங்கத்துக்;கு இப்போதைக்கு சாத்தியமான ஒன்றல்ல.
அவ்வாறான நிலையில் தான், சம்பந்தமே இல்லாத விடயங்களை ஒன்றோடு ஒன்றாக கலந்து ஜனாதிபதியைக் கருத்து வெளியிட வைத்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி, வடக்கு, கிழக்கிலுள்ள ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் தனி ஈழம் தொடர்பிலான கோரிக்கைகளை இப்போது முன்வைப்பதில்லை.

புலிகள் மற்றும் ஈழம் தொடர்பிலான பேச்சுக்களை புலம்பெயர் தேசத்து தமிழ் மக்கள் மற்றும் சார் அமைப்புக்கள் சில முன்னெடுக்கின்றன.
ஆனால், அவற்றால் உள்நாட்டுக்குள் பெரும் எழுச்சியொன்றை ஏற்படுத்துமளவுக்கு சூழ்நிலைகள் ஏதும் இல்லை. அவ்வாறான நிலையில், புலம்பெயர் தேசத்து கோஷசங்களை முன்வைத்து அரசாங்கம் ஈழக் கோரிக்கை பற்றி அறிவித்தல்களை உள்நாட்டிலுள்ள தமிழ் மக்களின் தலைகளில் இறக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதுபோக, அது சார்பிலான முறையற்ற அரசியலையும் இனமான தூண்டல்களையும் செய்ய வேண்டியதில்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் என்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெற்றிகளை மீண்டும் பெற்றுக் கொடுக்கும் சாத்தியங்கள் உள்ளன.

ஆனால், கடந்த கால வெற்றிகள் போல இலகுவானதாக அது அமைய வாய்ப்பில்லை. அவ்வாறானதொரு நிலை உருவாகிவிடக் கூடாது என்பதற்கான நீர்த்துப் போன ஈழத்தை மீண்டும் முன்னிறுத்தி வாக்குக் கோர வேண்டிய அவசியமில்லை.

அது, மோதல்கள் முடிந்து இயல்பு வாழ்வு பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் நாட்டின் அனைத்து  மக்களையும் பதற்றமான சூழ்நிலைகளுக்குள் கொண்டு செல்லும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை என்பது நாட்டின் வளர்ச்சிக்கும்- சட்டத்தின் ஆட்சி பெறுகைக்கும் என்றைக்கும் உதவாது. ஏனெனில், அது, உச்சபட்ச அதிகாரத்தை ஒருவரிடத்தில் சேர்ப்பிக்கும் முறைமை.

அதனை இல்லாமற் செய்ய வேண்டியது நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும். முதலில், நியாயமான மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் கருத்திற்; கொண்டு ஆட்சியை முன்னெடுத்தாலே மக்களின் மனங்களை வெல்ல முடியும். அதைத் தான் யார் ஆட்சியில் இருந்தாலும் செய்ய வேண்டும்.

மாறாக, தேர்தல்களை வெற்றி கொள்வதற்காக, இனவாத, மதவாத தூண்டல்களைச் செய்வது என்றைக்கும் நல்லதல்ல.  இலங்கை ஏற்கனவே கற்றுக் கொண்ட பாடங்கள் அதிகம்.

அந்த அனுபவங்களிலிருந்து பாடங்களைப் படிக்கவில்லை என்றால், மீள்வதற்கான வழிகள் இன்றி இறுதி வரை தவிக்க வேண்டியிருக்கும். இன்றைய சூழ்நிலையில் ஈழமும்- நிறைவேற்று அதிகாரமும் அவ்வளவுக்கு அவசியமற்றவை!


You May Also Like

  Comments - 0

  • Vasisuga Thursday, 16 October 2014 02:29 AM

    இந்தக்கட்டுரை கட்டாயமாகச் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டிய ஒன்று. ஆகக்குறைந்தது ஆங்கிலத்திலாவது மொழிபெயர்க்கப்பட்டு டெயிலி மிரர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டால் நல்லது. ஆனாலும் தமிழ் மிரர் ஆசிரிய பீடத்தின் கொள்கைகளிலும் அதன் சகோதர மற்றைய மொழி ஊடகங்களின் கொள்கைகளிலும் முரண்பாடுகள் இருப்பின், இது சாத்திமற்றது என்பதை நான் உணர்கிறேன். நன்றி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X